என்னைக் காக்கும் காவல்கோட்டம்

Posted: ஏப்ரல் 1, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

மண்ணானாலும் மதுரையிலே மண்ணாவேன் என்று வாழ்பவன் நான். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே மதுரையில்தான். மதுரையை விட்டு எங்கும் போய் அதிகநாட்கள் தங்கியதில்லை. அப்படியே தெரிந்தவர் வீடுகளுக்கு, சுற்றிப்பார்க்கவென எங்கு சென்றாலும் எப்படா தங்க மதுரைக்கு வருவோம் என்று மனசு கிடந்து துடிக்கும். டிப்ளமோ முடித்ததும் வெளியூர் சென்றால்தான் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்றார்கள். மதுரையைத் தவிர வேறு எதையும் என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. மதுரையே உலகமாக இருந்த எனக்கு வெளியூர் போகணும் என்றதும் மனதில் பயம் கவ்விக்கொண்டது. இந்தப்பயம்தான் இவ்வளவு நாள் எனக்கு காவலாக மதுரை இருந்ததை உணர்த்தியது. என்ன நேர்ந்தாலும் மதுரை என்னைக் காக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வருகிறேன். மதுரை இன்றுவரை என்னைக் கைவிட இல்லை. இப்படி என்னைக் காக்கும் காவல்கோட்டமான மதுரையைக் குறித்து பேசுவது, சிந்திப்பது, வாசிப்பது, எழுதுவது, சுற்றுவது எல்லாமே எனக்கு கொண்டாட்டமான விசயம்.

மதுரை புத்தகத்திருவிழா என்றால் காப்பு கட்டியது போல அங்கேயே திரிவேன். மதுரை இரண்டாவது புத்தகத்திருவிழாவில் நான்மாடக்கூடல் என்ற அரங்கைத் திறந்து வைத்த அன்று (15.08.2008) சங்ககால மதுரை குறித்து பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனும், நாயக்கர்கால மதுரை குறித்து தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலமும், ஆங்கிலேயர்கால மதுரை குறித்து கவிஞர் சு.வெங்கடேசனும், நான்மாடக்கூடல் குறித்து உதயசந்திரனும் பேசினர். 2008 டிசம்பரில்தான்  கவிஞர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் வெளிவந்தது. மதுரையைக் குறித்த நாவல் என்றதும் வாசிக்கணும் என்ற ஆர்வம் அதிகரித்தது. நாவலின் விலை என் ஒருமாதச் செலவுக்கு நிகராக இருந்ததால் வாங்கவில்லை. வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும் போதெல்லாம் அதன் விலை ஞாபகம் வந்துவிடும்.

சென்ற ஆண்டில் காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததும் அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் மீண்டும் அதிகமானது. ‘திரும்பிப்பார்க்கிறேன்’ என்ற பதிவில் அதைக்குறித்து எழுதியிருந்தேன். மறுமொழியிலேயே வாசிக்கத்தருவதாக சீனாஅய்யா கூறி என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டார். புத்தாண்டன்று சீனாஅய்யா வீட்டில் நடந்த மதுரைப் பதிவர்கள் சந்திப்பின் போது காவல்கோட்டத்தை சீனாஅய்யாவிடமிருந்து வாசிக்க வாங்கிவந்தேன். வழியில் பேருந்துக்கு காத்திருக்கையிலேயே நாவலாசிரியர் சு.வெங்கடேசனின் உரையை வாசிக்கத்தொடங்கியதும் மிகவும் நெருக்கமானதாகி விட்டது.

காவல்கோட்டம் எனக்கு மிகவும் பிடித்ததற்கு காரணம் பதிவில் உள்ள சு.வெங்கடேசன் அவர்களின் படங்களைப் பார்த்தாலே தெரியும். அமணமலை நாவலின் முக்கியமான மையம். கதை பெரும்பாலும் மதுரைவீதிகளுக்கும் அமணமலை அடிவாரத்திலுள்ள தாதனூருக்கும் இடையில்தான் பெரும்பாலும் பயணிக்கிறது. மதுரை வீதிகளிலும், மலைகளிலும், கிராமங்களிலும் சுற்றித்திரியும் எனக்கு இந்நாவல் மிகவும் பிடித்துப்போனதில் ஆச்சர்யப்படுவதற்கொன்றுமில்லை. பத்துஆண்டுகளாக அலைந்து திரிந்து சேகரித்த ஆவணங்களை எல்லாம் வைத்து அழகானதொரு நாவலாய் எழுதிய சு.வெங்கடேசனின் உழைப்பை எண்ணி வியக்கிறேன். சமீபத்தில்கூட மதுரை அமணமலையில் கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்பிராமிக்கல்வெட்டு கிடைத்துள்ளது.

காவல்கோட்டம் மதுரை மாநகரின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் நாவல். காவலும், களவுமாய் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கையைப் பேசும்  இனவரைவியல் நாவல். மதுரைக்கு அரணாக விஸ்வநாதன் கட்டிய கோட்டையை நகரின் விரிவாக்கத்திற்காக கலெக்டர் பிளாக்பர்னால் இடிக்கப்பட்ட  வரலாற்றைச் சொல்லும் நாவல். தாது வருசப்பஞ்சத்தில் மதுரையும் அதைச் சுற்றிய பகுதிகளும் சிக்கிச்சீரழிந்த கதையைச் சொல்லும் நாவல். ஆங்கிலேயர்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய கல்வி, காவல், நீதி முறைகளைக் கூறும் நாவல். தூங்காநகரமான மதுரையின் இரவை அற்புதமாய் பதிவு செய்த நாவல். காவல்தெய்வங்களான பட்டசாமிகளின் கதைகளைக் கூறும் நாவல். தென்தமிழகத்தை வாழ வைக்கும் முல்லைப்பெரியாறு அணை கட்டிய காலத்தைப் பதிவு செய்த நாவல். நம்ம மதுரையை மையமாகக்கொண்ட அற்புதமான நாவல்.

காவல்கோட்டம் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த இடங்களுக்கெல்லாம் கற்பனையில் பயணித்துக்கொண்டேயிருந்தேன். இதில் வரும் இடங்களெல்லாம் எனக்கு அதிகம் நெருக்கமானவை என்பதால் வாசிக்கும் போது அதிக நேரம் எடுத்துக்கொண்டேன். ஒரு பக்கம் வாசிக்கும்முன் மனசு பல வீதிகளிலும் அலைந்து திரிந்து வந்தது. எங்கப்பாவும் இந்நாவலை வாசித்துவிட்டு மிகவும் அருமையான நாவல், வாசிக்க வாசிக்க மிகவும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது என்றார். இந்நாவலை வாசித்துக்கொண்டிருக்கும்போது எங்கப்பாவிடம் மேங்காட்டுப்பொட்டல்னா கான்சாமேட்டுத்தெருப்பக்கம் இருக்கிறதுதானே என சிலஇடங்களைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டேன். கான்சாகிப் மருதநாயகத்தின் நினைவாகத்தான் கான்சாமேட்டுத்தெரு அவரது பெயரில் இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நாவலில் கொஞ்சப்பக்கங்களில் மருதநாயகமும் வந்து போகிறார்.

கோட்டை இடிக்கப்படும் முன் காவல்தெய்வங்கள் வெளியேறும் காட்சி மேனியை சிலிர்க்க வைத்துவிட்டது. அந்தப்பக்கங்களை கடக்கும் போது நல்லமாடனின் கண்ணீரும், ஆகாயமாடனின் தவ்வலும், சோணையின் சாட்டை ஒலியும், லாடசன்னியாசியின் கூச்சலும், பேச்சிகளின் ஆட்டமும், பெரும் வீச்சரிவாளோடு இறங்கிய கருப்பன்களும் கோட்டையைவிட்டு இறங்கும் காட்சி கண்ணைக் குளமாக்கி நெஞ்சைக் கனக்கச் செய்துவிட்டது.

மதுரையை மையமாகக் கொண்டு நாவல் எழுதிய சு.வெங்கடேசனை வாழ்த்தி மகிழ்கிறேன். அவரது உழைப்பு ஒவ்வொரு பக்கங்களிலும் மிளிர்கிறது. காவல்கோட்டம்    நாவலுக்கென்று  தனியொரு தளம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இந்நூலிலிருந்து சிலபக்கங்கள், விமர்சனங்கள், சு.வெங்கடேசனின் நேர்காணல்கள், புகைப்படங்கள் என நிறைய தகவல்கள் உள்ளன. இப்பதிவிற்கு சில படங்கள் இத்தளத்திலிருந்து எடுத்தேன். சு.வெங்கடேசனுக்கு நன்றி. இந்த தளம் குறித்த அறிமுகத்தை தமிழாசிரியை எம்.ஏ.சுசீலா  அவர்களது தளத்தில் பார்த்தேன். சுசீலாம்மாவும் காவல்கோட்டம் குறித்த அற்புதமான பதிவு எழுதியிருக்கிறார். இந்நூலை வாசிக்கத்தந்த  சீனா அய்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. சீனாஅய்யாவும், அவரது துணைவியாரும் நூல் வெளியீட்டு விழாவன்றே சென்று இந்நூலை வாங்கியுள்ளனர். உதயசந்திரன் இந்நூல் குறித்து சிறப்பாக உரையாற்றியதையும், மற்றவர்கள் ஒவ்வொரு பகுதியாக சிறப்பித்து பேசியதையும் கேட்டது இந்நூலை அப்போதே ஒருமுறை வாசித்ததற்கு நிகராக இருந்ததாக சீனாஅய்யா கூறினார். மனதைக் கவர்ந்த காவல்கோட்டம் குறித்து அடுத்த பதிவுகளில் அதிகப் படங்களோடு தொடர்கிறேன். மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  கோட்டம் சிலருக்கு வானளந்து திரிந்தாலும் வந்து சேரவேண்டிய கூடாகிறது. சிலருக்கு விட்டு விடுதல்பெற வேண்டிய கூண்டாகிறது. சிலருக்கோ அதுவே உலகமாகிறது. கோட்டம் காக்கிறது. கோட்டத்தைக் காக்கிறார்கள்.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்
  வாழ்த்துகள்.

 3. ஆருத்ரா சொல்கிறார்:

  இயல்பான எழுத்து நடையும் உண்மையின் பாங்கும் வெளிப்படைத் தன்மையும் சித்திரவீதிக்காரனை சிகரத்திற்கு இட்டுச் செல்லும். காவல் கோட்டம் மேலாண்மைப் பதிவு.

 4. தனபாலன் சொல்கிறார்:

  சிறப்பான பதிவு ! வாழ்த்துக்கள் !

 5. gopiabishek சொல்கிறார்:

  அடுத்தடுத்த பகுதிகளுக்காகக் காத்திருக்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s