காவல்கோட்டம் வாசிக்க வாசிக்க வரிகளினூடாக இறங்கி மதுரைக்குள் அலையத்தொடங்கினேன். சித்திரவீதிகள், புதுமண்டபம், திருப்பரங்குன்றம், அமணமலையென சுற்றித்திரிந்த இடங்களுக்கெல்லாம் நாவலினூடாகப் பயணித்து காவல்கோட்டத்தில் அலைந்தபோது மற்ற ஊர் நண்பர்களையும் அந்த இடங்களுக்கு அலைத்துச் செல்லலாமே என்ற எண்ணத்தில்தான் இந்தப்புகைப்படப்பதிவு. நாவல் வாசித்த நண்பர்களுக்கு இந்தப் பதிவு மிகவும் பிடிக்கும், வாசிக்காத நண்பர்களை வாசிக்கத்தூண்டும் பதிவாக அமைய காவல்கோட்டமான மதுரை அருளட்டும்.

அமணமலை

பதுங்கி நிற்கும் வேட்டை நாயைப் போல முன்பக்கம் பாறைகள் சரிந்து, குதிங்காலை பூமிக்குள் நுழைத்து, முகம் தூக்கி மூன்று மைல் தொலைவையும் ஒரே தாவில் தாவி மதுரைக்குள் நுழைந்துவிடுவது போலத் தயார் நிலையில் இருக்கிறது அமணமலை. செம்பாறைகள் பொறுமி நிற்கும் அந்தக் கல்மலையின் உச்சியில்தான் பேச்சிப்பள்ளம் உள்ளது. சமணர்கள் பாறைகளின் மர்மமுடிச்சுகளை அவிழ்த்த இடங்களில் இதுவும் ஒன்று. சுனை நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும் அந்தப்பள்ளத்தின் மேல்பகுதியில் பாறையில் பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர் என தீர்த்தங்கரர்களின் பல திருவுருவங்கள்! அவர்களே நீருக்குள் நிழலாகி மேல் நோக்கிப் பார்த்தவண்ணமும் இருப்பார்கள். அங்கு நிற்கும் அரசமரம் வெளியைத் துழாவி காற்றின் ஈரத்தை சுவாசித்தபடி இருக்கும். மலையின் கீழ்தான் கருப்பு நிற்கிறான். அவன்தான் மலையையும் மக்களையும் காக்கிறவன்.

இந்நாவலில் வரும் தாதனூர் அமணமலை அடிவாரத்தில்தான் உள்ளது. சடச்சி அமணமலையிலுள்ள செட்டிப்பொடவில்தான் வந்து தங்குகிறாள். படையெடுப்பு, சண்டை போன்ற காலங்களில் மலைகளில் ஏறி மக்கள் இருந்துகொள்வார்கள். தாதனூர்க்காரர்களுக்கு அரணாக அமணமலை இருக்கிறது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோயில் பூஜையை ஏற்றுக்கொள்வதற்கு வடக்கே மலை அடிவாரத்தில் வந்து நிற்கும்போது நன்றாக விடிந்திருந்தது. கோவிலின் கீழே குன்றை ஒட்டியிருந்த தோப்பெல்லாம் பெருமரங்கள் வளர்ந்திருந்தன. தோப்புக்கும் வடக்கே சந்நிதித்தெருவில் தெருவில் ஆறு வைதிக வீடுகளும் சுற்றிலும் நூறு குடிசைகளும் இருந்தன. சுப்பிரமணியர் சந்நிதியின் கீழ் கம்பீரமாக நின்றிருந்த கஜகேசரி கோவிந்தன் மேல் மீனாட்சி எழுந்தருளியிருந்தாள்.

மீனாட்சியைத்  தென்பாண்டிநாட்டிலிருந்து மதுரைக்கு கொண்டு வரும் போது திருப்பரங்குன்றத்திலிருந்துதான் யானை மீதேறி இருபது யானைகள் சூழ வருவாள். மேலும், திருப்பரங்குன்றத்திற்கு ராணிமங்கம்மாள் வருவது, பங்குனித்தேரோட்டம் எல்லாம் இந்நாவலில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

சிக்கந்தர்பள்ளிவாசல்

 

 

 

 

விஜயநகர குமாரகம்பணனின் படையெடுப்பின் போது திருப்பரங்குன்ற மலையின் மீது அப்போதிருந்த சுல்தான் சிக்கந்தர் ஒளிந்து கொண்டார். அவர் சமாதியடைந்த இடத்தில் அவருக்கு பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

கிழக்குச்சித்திரைவீதி

சுபவேளை நெருங்கியதும் கிழக்கு மதில் மேலிருந்த நூற்றுக்கணக்கான எக்காளங்களும் கொம்புகளும் ஒருசேர முழங்கின. தாலப்பொலி வழி விரிக்க, ஆரத்திச்சுடர்கள் நிரையில் நின்றெரிய அன்னை மதுரையில் நுழைந்தாள். நகரமக்கள் கோவிலுக்கு செல்லும் இருமருங்கிலும் நின்றிருந்தனர். மீனாட்சியைக் கண்டதும் அழுகையும் புலம்பலும் வாழ்த்தொலியும் சரணவிளியுமாக மக்கள் கூட்டம் சன்னதம் கொண்டது. கண்ணீர் வெள்ளத்தில் மிதந்து மிதந்து வந்து கிழக்குக் கோபுர வாசலின் முன்னே நின்றாள். மாறவர்மன் சுந்தரபாண்டியனின் நெடுங்கோபுரம் தலை தாழ்த்தி வணங்கியது போலிருந்தது.

தென்பாண்டிநாட்டிலிருந்து வரும் மீனாட்சி உள்நுழையும் காட்சியை வாசிக்கும் போது நமக்கும் கண்கள் குளமாகிவிடுகின்றன. கீழச்சித்திரை வீதியில்தான் மதுரைவீரன் கோயில் உள்ளது.  இந்நாவலில் தமுக்கடிப்பவர் இந்த வீதியின் கோபுரத்தடியிலிருந்து தொடங்கி நான்கு சித்திரைவீதிகளையும் சுற்றிபின் ஆவணிவீதி, மாசிவீதி, வெளிவீதியென சுற்றி வருகிறார். அம்மன்சன்னதி அஷ்டசக்தி மண்டபத்தை திருமலைநாயக்கரின் மனைவியர் கட்டினர்.

கொத்தளம்

கொத்தளத்து முனியும், மொட்டைக்கோபுர முனியும் இரட்டைப் பிறவிகள். இவர்கள் ஆடினால் மதுரை தாங்காது. மொட்டைக்கோபுரத்தில் ஒரு காலும் மேற்குக் கோட்டையில் ஒரு காலும் வைத்து இரண்டு முனிகளும் ஆடும் ஆட்டம்தான் மதுரையின் இரவுகளைப் பீடித்திருக்கிறது.

மதுரை கோட்டையை இடிக்க எண்ணிய போது மேற்கில் உள்ள இந்தக் கொத்தளத்தில் முனி இருக்கிறதென்ற நம்பிக்கையால் இதை மட்டும் இடிக்காமல் விட்டுவிட்டனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரில் உள்ள காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய நுழைவாயிலருகில் கொத்தளத்தை இன்றும் பார்க்கலாம்.

செல்லத்தம்மன் கோயில்

நல்ல நாளில் கருப்பு கோவிலில் விளக்குப்போடுவதற்கான எண்ணெய் ‘வடக்கு வா செல்லி’தான் தர வேண்டும். வடக்கிருந்துதான் எல்லாப் படையெடுப்பும் மதுரை நோக்கி வந்ததாம். எனவே, வடக்குவாசல்தான் மிக முக்கியமான வாசலாகக் கருதப்பட்டது. அந்த வாசலைத்தான் துடியான செல்லத்தம்மன் காத்துவந்தாள்.

செல்லத்தம்மன் கோயில் வடக்குபெருமாள் மேஸ்திரிவீதியில் உள்ளது. காவல்கோட்டம் வாசித்த பின்புதான் இக்கோயிலுக்கு சென்றேன். மதுரையின் பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்று.

விளக்குத்தூண்

 

மார்ச் 31, 1847. இன்று மாலை என்னை வழியனுப்பி வைப்பதற்கான விழா. என்னுடைய செயல்களைப் பாராட்டி, என் நினைவாக என்றென்றும் இருக்கக்கூடிய விளக்குக்கம்பம் ஒன்றில் விளக்கேற்றி வைக்கும் நிகழ்ச்சியை விசுவாசமுள்ள மதுரைமக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மிகக்குறுகிய வீதிகளையும், நெருக்கமான தெருக்களையும் கொண்டிருந்தது மதுரை. இந்நகரின் தெருக்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு மிகச் சிரமம் ஏற்படுத்துவதாக இருந்தன. நான் கோட்டையை அகற்றச்சொன்னதால் சிலர் என் மீது கோபத்தில் உள்ளனர். நான் செய்துள்ளது இந்நகருக்கு எவ்வளவு நன்மை பயக்கும் காரியம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அறியாமையில் அவர்கள் இருக்கிறார்கள். இன்றில்லாவிட்டாலும், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின் செய்தே ஆகவேண்டிய ஒரு செயலை நான் முன்கூட்டியே நான் செய்து முடித்துள்ளேன்.              – ப்ளாக்பர்ன்

படத்தில் விளக்குத்தூணுக்கு தொலைவில் திருமலை நாயக்கர் அரண்மனையும், அரண்மனையின் ஒரு பகுதியான ரங்கவிலாசம்  இடிந்துபோனதால் மீதமிருக்கும் பத்துத்தூண்களும் தெரிகிறது.

முல்லைப்பெரியாறு அணை

இன்று தென்தமிழகத்தையே காத்துக்கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு அணை கட்டிய போது எடுத்த படம். இந்நாவலில் அணைகட்ட பெருமுயற்சி எடுத்த பென்னிகுயிக், இந்த அணை கட்டியபோது அங்கு ஏற்பட்ட சிரமங்கள், அணைக்காக உயிர்துறந்த மக்கள் என எல்லாரைப்பற்றியும் நாவலில் வருகிறது.

திருமலைநாயக்கர் மஹால்

இத்தாலியக் கட்டிடக் கலைஞனின் வரைபடத்தில் இஸ்லாமிய கலைக்கூறுகளும் ஐரோப்பிய கலையம்சமும் நிரம்பப் பெற்ற அழகுப் பொக்கிஷமாக தனது அரண்மனையை உருவாக்கியிருந்தார் திருமலைநாயக்கர். மிக கம்பீரமான நூற்றுக்கணக்கான தூண்கள், இரும்பும் மரமும் இல்லாத இந்த பிரமாண்டமான அரண்மனையின் குவிமாடங்கள் முழுவதையும் தாங்கிப்பிடித்தபடி இருந்தன. நுட்பமான சுதை வேலைப்பாடுகளும் சிற்பமும் ஓவியமுமாக அரண்மனை பேரழகை அடைகாத்தபடியே இருந்தது. காட்சிகள் மாறத் துவங்கின. விஜயநகரத்திலிருந்து வந்தவர்கள் கட்டிய அரண்மனையில் இருந்து, இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் ஆளத்துவங்கினார்கள். அபூர்வமான கலை வேலைப்பாடுகளுடன் கூடிய நாடக சாலையில் இப்பொழுது உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்களும், முதன்மை சர்தார் அமீன் நீதிமன்றமும் இருந்தது.

இன்று திரைப்படங்களில் பாடல் பெற்ற ஸ்தலமாக திருமலைநாயக்கர் மஹால் விளங்குகிறது. மஹாலில் தொன்மையான சிலைகள் அடங்கிய காட்சிக்கூடமும், இரவில் ஒலிஒளிக்காட்சியும் நடைபெறுகிறது.

புதுமண்டபம்

திருமலைநாயக்கர் கட்டிய வசந்த மண்டபம். தற்போது புதுமண்டபம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நாவலில் நகரில் உள்ள பெரியவர்கள் இரவு இங்குதான் தங்குவார்கள். கோட்டையை இடிக்க முடிவெடுத்த கலெக்டர் ப்ளாக்பர்ன் மக்களை அழைத்து பேசியதும் புதுமண்டபத்தில்வைத்துத்தான். புதுமண்டபத்தில் மியூசியம் ஒன்று ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. இப்பகுதிக்கு வரும் ஆங்கிலேயர்கள் இந்த மியூசியத்தைக் காணாமல் செல்லமாட்டார்களாம். அவ்வளவு சிறப்பாக இருந்ததாம். இன்று புத்தகக்கடைகளும், பாத்திரக்கடைகளும், தையக்கடைகளுமாக புதுமண்டபம் விளங்குகிறது.

காந்தி அருங்காட்சியகம்

மதுரைக் கோட்டையின் வடகிழக்கே வைகையின் வடக்குக் கரையில் பேரழகோடு வடிவமைக்கப்பட்ட மாளிகை அது. அதன் நீண்ட படிக்கட்டுகளின் மேலேறி உள்ளே நுழைபவனின் கண்கள் அதிசயித்து அலைபாய்ந்து மயங்கும். காலத்தின் வலிய கரங்கள் தடவித் தடவிக் மெருகேறிய தூண்கள்! மாளிகையின் மொத்த அழகும் மைய மண்டபத்தில் குவிந்திருந்தது. அதன் விதானக் கூரையில் வரையப்பட்ட ஓவியங்களில் வண்ணக் கலவையினாலான ராஜரீக உலகம் விரிந்து கிடந்தது. நுட்பமான சுதை வேலைப்பாடுகள் மனதை மயக்கின. உயர்ந்த விதானங்கள் மிதமான குளுமையூட்டின.

ராணிமங்கம்மாளின் அரண்மனை ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆட்சியாளர்கள் தங்கும் இடமானது. இப்படத்தில் ஆங்கிலேயர் ஒருவர் தன் துணையுடன் இருப்பதைக் காணலாம். இப்பொழுது இந்த அரண்மனை காந்தி அருங்காட்சியமாக இருக்கிறது.

மதுரை கீழமாசிவீதி காவல்நிலையம்

நகரின் முதல் கச்சேரி (போலீஸ் ஸ்டேசன்) கீழமாசி வீதியில் பிளாக்பர்னின் விளக்குத்தூணுக்கு நூறு கெஜ தூரம் வடக்கே தள்ளி கட்டி முடிக்கப்பட்டது. ஒரு பகுதி போலீஸ் ஸ்டேசனுக்காகவும், ஒரு பகுதி கொத்தவால் சாவடிக்காகவும் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. மதுரையில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டிடம் இதுதான். அந்த ஐரோப்பிய பாணி கட்டிடத்தில் இருந்த கவர்ச்சி, செல்வர்களை ஈர்த்தபடி இருந்தது. இரும்பு ராடர்கள் போட்டு, நிறைய ஜன்னல்கள் வைத்து காற்றோட்டமான முறையில் கட்டப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தை மக்கள் தினமும் வந்து பார்த்துவிட்டுப் போயினர்.

ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை நிலைநாட்ட உதவிய காவல்நிலையத்தை தற்போது இடித்து புதுப்பித்துக்கட்ட உள்ளார்கள். உள்படத்தில் காவல்நிலையம் இடிந்துகிடப்பதைப் பார்க்கலாம்.

இராமாயணச்சாவடி

ராமாயணச் சாவடி இரவெல்லாம் குடிக்காவலர்கள் கிடை போட்டுக் கிடக்கும் இடம். மதுரையின் இருள் வடம் அங்குதான் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. குடிக்காவலர்களும், சீய்யான்மார்களும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிடித்து வடத்தை இரவெல்லாம் இழுக்கின்றனர். நான்மாடக்கூடலின் வீதிகளில் திரிகிற இருளின் கழுத்தில் வடம்போட்டு சாவடியின் தூண்களில் தாதனூர்க்காரர்கள் கட்டி வைத்திருந்தனர்.

இந்நாவலில் இரவில் தாதனூர் காவக்காரர்களும், இப்பகுதியில் உள்ள சீய்யான்மார்களும் இங்குதான் தங்குவார்கள்.

மதுரை ரயில்நிலையம்

நம்ம பதினெட்டாம்படி கருப்பு காலுல சங்கிலி போட்டுக் கட்டியிருக்க மாதிரி அதோட கால் சக்கரத்திலேயும் இரும்புக் கம்பியப் போட்டுக் கட்டியிருக்கானுகளாம். அந்தக் கம்பிகளைத் தான் இது வரைகும் இழுத்துட்டு வந்து பதுச்சு வைக்கிறாங்கெ. அது கம்பி இழுவையிலே பெருஞ் சத்தம் கொடுத்து பேக்கூச்சல் போட்டுக்கிட்டு வருமாம். தப்பித்தவறி கம்பி அந்துச்சு, அவ்வளவுதான். நாடு நகரமெல்லாம் நாசந்தான். நாம்ம காத தூரத்துக்கு அங்கிட்டு ஓடி கள்ளிச் செடிக்குப் பின்னாடி மறஞ்சிக்கிறணும்.

மதுரைக்கு முதல்முதலாக ரயில் வந்தபோது மக்கள் ரயிலைப்பார்த்து மிகவும் பயந்து உள்ளனர்.

வைகையாற்றின் குறுக்கே ரயிலுக்காக பாலம் அமைக்கப்பட்ட போது தாதனூர்காரர்கள் காவல் இருந்தனர். மேலும், மற்றவர்கள் ரயிலைக்கண்டு பயந்திருந்தபோது தாதனூர் கள்வர்கள் வடக்கேபோய் ரயில் மூலம் களவு செய்து வந்தனர். களவாணி படத்தில் விமல் உரமூட்டைகளை ஓடுகிற லாரியின் மீதேறி திருடுவது போல ரயிலில் ஏறி அதிலுள்ள மூட்டைகளைத் தள்ளிவிட்டு தாதனூர்க்காரர்கள் திருடுகிறார்கள். மேலும், இப்படத்தில் தொலைவில் தெரியும் இரண்டு கூம்புகளும் மெஜூரா கோட்ஸ் மில்லினுடையது. இந்நாவலில் இந்த மில் வந்த கதையும், அதனால் பொன்னகரம் பகுதி உருவான கதையும் விவரிக்கப்பட்டுள்ளது.

காவல்கோட்டத்தில் வரும் முக்கியமான இடங்களின் படங்களுக்கேற்ற  வரிகளை நாவலிலிருந்து எடுத்து உள்ளேன். சு.வெங்கடேசன் அவர்களுக்கும், தமிழினி பதிப்பகத்திற்கும் நன்றி.

 மதுரையின் அரிய புகைப்படங்களை கொடுத்து உதவிய நண்பன் ராஜ்குமாருக்கு நன்றி.

செல்லத்தம்மன்கோயில், இராமாயணச்சாவடி, கீழமாசிவீதி காவல்நிலையம் எனச் சுற்றிப்போய் படம் எடுத்தேன். காவல்நிலையத்தை நான் படமெடுக்கச் சென்றநாளில் இடிக்கத்தொடங்கிவிட்டார்கள். டெக்கான் கிரானிக்கிள் இணையதளத்திலிருந்து காவல்நிலையத்தின் பழைய படத்தை எடுத்தேன். மதுரையின் பழைய படங்களை எடுத்த முகமறியாத புகைப்படக்காரருக்கும் நன்றி.

மேலும், பழைய படங்களைப் பார்க்க உலகின் தொன்மையான நகரம் பதிவையும், மதுரையும் தொ.பரமசிவனும் பதிவையும் பார்க்கவும்.

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நேற்றே எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து விட்டேன். பின்னூட்டம் போடுவதற்குள் மின்சாரம் போய் விட்டது.
  வாழ்த்துகள்.

 2. ஸ்ரீ சொல்கிறார்:

  நல்ல பதிவு. பாராட்டுகள்.
  இன்னமும் காவல் கோட்டம் படிக்கவில்லை. படிக்க வேண்டும்.

 3. பாரத்...பாரதி.. சொல்கிறார்:

  உங்களோடு நேரில் சுற்றியலைந்தது போல இருக்கிறது உங்கள் எழுத்து. படங்களின் உதவியும் அருமை.

 4. தருமி சொல்கிறார்:

  பழைய மதுரையை ஒரு சுற்று சுற்றியது போலிருந்தது.

 5. தனபாலன் சொல்கிறார்:

  சிறந்த பதிவு ! படங்களுடன் அருமையான விளக்கங்கள் ! நன்றி நண்பரே !

 6. maduraisuki சொல்கிறார்:

  சிறந்த பதிவு ! படங்களுடன் அருமையான விளக்கங்கள் ! நன்றி நண்பரே !
  மதுரையை ஒரு சுற்று சுற்றியது போலிருந்தது.

 7. saainath சொல்கிறார்:

  migavum arumai

 8. lakshmanakumar சொல்கிறார்:

  மிக்க பயனுள்ள பதிவு…உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  லக்ஷ்மணகுமார் மதுரை

 9. Prasanna சொல்கிறார்:

  Indha thalatthin miga arpudamaana pathivu ithuve..

 10. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  நாவல் படிக்கவில்லை.
  உங்கள் கட்டுரை பல தகவல்களை
  சுவாரஸ்மாகத் தருகிறது.

 11. perumalrajdpr சொல்கிறார்:

  நண்பரே. பதிவு மிக அருமை. இந்த இடங்களைப் பார்ப்பதற்காகவே விரைவில் மதுரைக்கு வரவேண்டும்.

 12. veerapandiang சொல்கிறார்:

  நான் இன்னும் நாவலை வாசித்து முடிக்கவில்லை. மதுரைவீரன் குறித்த பகுதிகள் நாவலில் எங்கேனும் வருகின்றனவா? அந்தப் பகுதிகள் குறித்து தகவல் தரவும். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s