மனதைக் கவர்ந்த காவல்கோட்டக்காரர்கள்

Posted: ஏப்ரல் 11, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

காவல்கோட்டம் மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லும் ஆயிரம் பக்க நாவல். நாவலினூடாக வரும் கதாமாந்தர்கள் ஒவ்வொருவரும் தம் ஆளுமையால் நம்மை ஈர்க்கிறார்கள். வாசித்து முடித்தபின்னும் சில கதாமாந்தர்கள் நெஞ்சைவிட்டு அகலாமல் நமக்கு மிகவும் நெருக்கமாகிவிடுகிறார்கள்.

காவல்கோட்டத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே முக்கியமான ஆளுமைகள்தான். யாரும் ஆணுக்கு கொஞ்சமும் சளைத்தவர்களல்ல. சடச்சி, கங்காதேவி, குஞ்சரம்மா, வீராயி என வாசித்து முடித்த பின்பும் நெஞ்சில் நிலைத்துநின்றவர்கள் ஏராளம்.

சடச்சி தாதனூரின் ஆதித்தாய். பட்டாணிப்படையால் கட்டிப்போடப்பட்டு கிடக்கும் காவக்காரனான தன் கணவனின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டு ‘உசுரு இருக்கிற வரைக்கும் கருப்பு காவல்ல களவு போகக்கூடாது’ என வேல் கம்பை கொடுக்கும் சடச்சி மூலம் அன்றைய தமிழச்சிகளின் உணர்வுகளை அறியலாம். கருப்பணன் போராடி மடிகிறான். தன் கணவன் இறந்தபிறகு நிறைமாத கர்ப்பிணியான சடச்சி அமணமலைப்பொடவில் வந்து தங்குகிறாள். அங்கு அவளுக்கு குழந்தைகள் பிறக்கின்றன. அவளது சந்ததி இம்மலையைச் சுற்றி செழிக்கிறது. அமணமலை அடிவாரத்தில் பெரும்விழுதுகளைக் கொண்ட ஆலமரமாக சடச்சி இருப்பதாகவே அவளின் சந்ததிகள் நம்பி வழிபடுகிறார்கள்.

மலைகளில் ஏறி மதுரையைக் காணவும், அங்கு உள்ள சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் காணவும் விரும்பும் கங்காதேவியைப் பிடிப்பதற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன? விஜயநகரத்தைச் சேர்ந்த குமாரகம்பணனின் மனைவியான கங்காதேவி படைநடத்தும் ஆற்றல் கொண்டவள். மதுராவிஜயம் என்னும் நூலை எழுதி அரங்கேற்றுகிறாள். முகமதியப்படையெடுப்பால் தென்பாண்டி நாட்டிலிருக்கும் மீனாட்சி சிலையை குதிரையில் வைத்துக் கொண்டு வந்து விடலாம் என்று குமாரகம்பணன் சொல்ல கங்காதேவி மறுத்து ‘’வழிநெடுக மக்கள் வணங்கி நிற்க, ஒவ்வொரு ஊராக, கோவில் கோவிலாக எழுந்தருளி யானை ஏறி மீனாட்சி மதுரை வர வேண்டும். இது ஒரு உற்சவம். தென்பாண்டி நாட்டில் பதினைந்து நாள் நிகழப்போகும் பெருவிழா’’ என்கிறாள். மாசித்திருவிழா உண்டாக்கிய கங்காதேவி மறக்கமுடியாத பெண்.

தாதுவருஷப்பஞ்சத்தில் மக்களெல்லாம் உணவில்லாமல் செத்துச்சுருளும் போது தாசி குஞ்சரம்மா பத்தாண்டுகளாக சேர்த்த தன் செல்வங்களை எல்லாம் விற்று கூழ் காய்ச்சி ஊற்றுகிறாள். அவள் இறந்தபிறகு மக்கள் நல்லதங்காளைப் போல் குஞ்சரம்மாவிற்கு கோயில் கட்ட முயல எச்சில் கையால் காக்கா ஓட்டத்துணியாத பெருஞ்செல்வந்தர்களெல்லாம் கோயிலுக்கு பொட்டுக்கட்டியவளுக்கு  கோயில் கட்டக்கூடாது என்று தடுக்கிறார்கள். கதைப்பாடல்களின் மூலமாக அவளுடைய புகழ் பரவுவதைக் கண்டு அதைக்தடுக்க பெருஞ்சூழ்ச்சி செய்கிறார்கள். ஆனாலும், மக்களெல்லாம் மனதில் அவளைத் தெய்வமாகத்தான் வழிபடுகிறார்கள்.

தாதனூர்காரர்களை கச்சேரிப்போலிசார் கைது செய்து போகும் போது ஒருவன் தவித்து தண்ணி கேட்கிறான். யாரும் தண்ணீர் கொடுக்கக் கூடாது, மீறிக்கொடுப்பவரைக் கைது செய்வோமென போலிசார் சொல்ல வழிநெடுக மக்கள் பரிதவித்து நிற்கிறார்கள். விராட்டிப்பத்தைக் கடக்கும் போது விராட்டிப்பத்தைச்சேர்ந்த வீராயி தவித்தவனுக்கு தண்ணீர் கொடுக்க பானையோடு போகிறாள். பானையைத்தட்டிவிட்டு அவளைத் தடுக்கும் போலீஸ்காரனை கோபத்தில் வீராயி கையிலிருந்த பன்னரிவாளால் சங்கருக்கிறாள். மற்ற போலீஸ்காரன்கள் துப்பாக்கியால் அடித்து அவளைக் கொல்கிறார்கள். அத்தனை பேருக்கு மத்தியில் தவித்த வாய்க்கு தண்ணிகொடுக்க ஓடி வந்து அதைத் தடுத்தவனைக் கொன்ற வீராயி எனக்கு மிகவும் உயர்வாகத்தெரிகிறாள்.

காவல்கோட்டத்தில் வரும் ஆண் கதாபாத்திரங்களில் பலரும் நம்மைக் கவர்ந்து சென்றாலும் கொஞ்சப்பேர் நெஞ்சைவிட்டு நீங்காமல் நின்றுவிட்டார்கள். விஸ்வநாதன், கழுவன், மாயாண்டி, ப்ளாக்பர்ன், நேமிநாதசெட்டியார், பாதிரியார் ஜேம்ஸ், டேவிட்சாம்ராஜ் இவர்கள் எல்லோரும் நாவலில் எனக்கு பிடித்த நாயகர்கள்.

விஸ்வநாதன் பெரிய வீரன். கிருஷ்ணதேவராயரின் நண்பன். பல போர்களில் கலந்து கொண்டவன். ராயருக்காக தந்தையையே சிறைபிடிக்கச்சென்ற ராஜவிசுவாசி. மதுரையிலும், திருச்சியிலும் பலமான கற்கோட்டைகளை கட்டியவன். பாளையங்களை உருவாக்கியவன். ‘தருமர் சூதாடினார், ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பினார்; ஆனால், விஸ்வநாதமகாராஜா எந்தத்தப்புமே செய்ததில்லை’ என இம்மிடிச்செட்டியார் சொல்லும் ஒரு விசயம் போதும் விஸ்வநாதனின் ஆளுமையை அறிந்துகொள்ள!

திருமலைநாயக்கர் அரண்மனையிலேயே நுழைந்து இராஜமுத்திரையை திருடிவந்த கழுவன் தாதனூர்க்காரன். திருமலைநாயக்கரிடம் அவனைக்கொண்டு வந்து பின்னத்தேவன் ஒப்படைக்க திருமலைநாயக்கர் ‘காவலை மீறி ராஜமுத்திரையை எடுத்த கழுவனுக்கு இந்த நிறைந்த சபையின் முன் மூன்று சவுக்கடிகள் கொடு. இவ்வளவு பெரிய காவலை மீறி ராஜமுத்திரையை எடுத்த கழுவனுக்கு மதுரையின் காவல் உரிமையைக் கொடு. அழைத்து வந்த பின்னத்தேவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமையைக் கொடு’ என்கிறார். அப்போது கழுவன் தான் கன்னம் போட்ட ஓட்டையை மட்டும் அடைக்கக்கூடாது என்று அவரிடம் கேட்டுக்கொள்கிறான். தாதனூர்க்காரர்கள் இப்படி மதுரைக்காவலைப் பெற கழுவனின் களவுதான் உதவியது.

மாயாண்டி இந்நாவலில் அதிகப்பக்கங்களில் இடம்பெற்று நம் மனதிலும் நீங்கா இடம்பிடிக்கிறார். இராஜகளவு செய்வதில் மாயாண்டியின் கொத்து அப்பகுதியில் பிரபலம். களவுக்கு சென்ற மாயாண்டி மதுரைக் காவக்காரராக மாறுகிறார். இறுதியில் போலீஸில் முன்பு வெள்ளைக்காரன் தங்கிய அரண்மனையில் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறை செல்கிறார். அதன்பின் அவரது நிலை என்னவென்றே தெரியாமல் போகிறது. அரவான் திரைப்படத்தில் மாயாண்டியின் பாதி ஆளுமையைத்தான் பசுபதி ஏற்று இருக்கிறார்.

மதுரையின் கலெக்டராக பொறுப்பேற்கும் ப்ளாக்பர்ன். நகர விரிவாக்கத்திற்காக விஸ்வநாதன் கட்டிய பலமைல் நீளமுள்ள கோட்டையை இடிக்க முடிவெடுக்கிறார். பலர் எதிர்த்தாலும் தன்னுடைய பதவி பரிபோய் மீண்டும் மதுரை கலெக்டராக பொறுப்பேற்று தன் முடிவை மாற்றாமல் கோட்டையை இடித்துவிடுகிறார். உயிர்பலியிடுவதை ப்ளாக்பர்ன் தனது காலத்தில் தடை செய்துவிட்டார். இன்னும் கீழமாசிவீதிமுக்கிலுள்ள விளக்குத்தூணைப் பார்க்கும் போது கலெக்டர் உதயசந்திரனும், ப்ளாக்பர்னும் நினைவுக்கு வருகிறார்கள்.

கிறிஸ்துவ பாதிரிகள் மதம் பரப்ப வந்தாலும் மக்களுக்கு கல்வி, மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். அதில் பாதிரியார் ஜேம்ஸ் மிகவும் நல்ல மனிதர். தாது வருஷப் பஞ்சத்தில் மதுரைப் பகுதிகள் திணறியதைக் கண்டு தன் பாதிரிப்பணியைத் துறந்த பிறகு மேலிடத்துக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு செல்கிறார். அதில் பாம்பனில் கடற்பணிக்காக அப்பகுதியில் சிறையமைத்து நிறைய பேரை பலி கொள்வதைக் கண்டித்தும், மதுரையில் நீர்நிலைகளை சரிசெய்யாததுதான் மக்கள் இறப்புக்கு காரணமென ஆங்கிலேயே அரசைக் குற்றம் சாட்டுகிறார். அதில் ‘ஐரோப்பிய கப்பல்களுக்கு முப்பத்தாறு மணி நேரத்தை மிச்சப்படுத்துவதில் உங்களுக்கு இருந்த கவனத்தின் சிறுபகுதிகூட லட்சக்கணக்கான மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதில் இல்லை’ என்று ஆங்கிலேய அரசை சாடும் வரிகள் இன்றுகூட பொருத்தமாகத்தான் உள்ளது.

அமணமலையிலுள்ள தீர்த்தங்கரர்களை வணங்க வரும் நேமிநாத செட்டியார் தாதனூர்க்காரர்களுக்கு உதவுகிறார். தாதனூர்காரர்களுக்காக அவருடைய மகன் குணசீலனை வழக்காடச் செய்கிறார். சமணம் குறித்து தாதனூர்க்காரர்களிடம் பேசினால் அசைவம் சாப்பிடாத சாமி என்ன சாமி என்கிறார்கள். கழுவேற்றப்பட்ட சமணர்களின் வலி இறுதியில் மலையில் அவர்களை கழுவில் ஏற்றும்போதுதான் உணர்கிறார்கள். ஒருமுறை திருடிவந்த கடிகாரத்தை பேச்சிப்பள்ளத்தில் உள்ள பார்சுவநாதர் சிலையடியில் தாதனூர்க்காரர்கள் வைத்திருக்கிறார்கள். நேமிநாதசெட்டியார் ஏன் அங்கு வைத்தீர்கள் என்று கேட்டதற்கு உங்க சாமிதான் படிச்சிருக்கு, அதான் அங்கு வைத்தோம் என்கிறார்கள். இப்படி அறியாமையில் உள்ள மனிதர்களுக்கு உதவும் நேமிநாதரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

தாதனூர் கழுவாயிமகன் பொன்னாங்கன் தாதுவருசப்பஞ்சத்தில் தாய்தந்தையை இழந்து கிறிஸ்துவ மிஷினரியில் வளர்கிறான். டேவிட்சாம்ராஜ் என்ற பெயரில் கிறிஸ்துவனாகிறான். தாதனூரின் மக்கள்தொகையை அறிய ஆங்கிலேயர்களின் சூதை அறியாமல் தன் சொந்த கிராம மக்களை கண்டு அவர்களை பற்றி அறிந்து சொல்கிறார். தன்னுடைய இந்த செயல்தான் அவர்கள் அழிவிற்கு காரணம் என்று அறிந்து மீதமுள்ள நாட்களை அந்தக் கிராம மக்கள் நலனுக்காக வாழ்கிறார். அவரது இறப்பின் பின் அவரது மனைவி டேவிட்சாம்ராஜின் நாட்குறிப்பேட்டை வாசித்து அவரது மனமறிந்து அழும்போது நாமும் நெகிழ்ந்துபோகிறோம்.

மேலும், இந்நாவலில் சடச்சியின் கணவன் கருப்பணன், அரியநாதன், திருமலைநாயக்கர், முத்துவீரப்பன், சின்னான்(அரவான்), மங்கம்மா சாலையை காவல்காத்த செம்பூரான்கள், விஸ்வநாதனின் மனைவி செல்லி, ராணிமங்கம்மாள், ராணிமீனாட்சி, தாதனூர் கழுவாயி, ஜல்லிக்கட்டு மாட்டை போலீஸ் மீது அவிழ்த்துவிடும் மாயாண்டிபெரியாம்பிளையின் மகள் அங்கம்மா என நிறையப் பேர் நாவலின் மூலம் மனதில் இடம் பிடித்தவர்கள். இந்நாவலை எழுதிய சு.வெங்கடேசனும் எனக்கு மிகவும் பிடித்த காவல்கோட்டக்காரர்தான். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி.

காவல்கோட்டத்திலிருந்து

வாழ்வு-வரலாறு-புனைவு

என்னைக் காக்கும் காவல்கோட்டம்

பின்னூட்டங்கள்
 1. veera சொல்கிறார்:

  keep it up the good works

 2. ஸ்ரீ சொல்கிறார்:

  நல்ல இடுகை. :-)))

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  காவல் கோட்டம் படித்துப் பார்க்கிறேன்.
  நன்றி.

 4. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  படிக்க வேண்டிய படைப்பு.
  சிறப்பாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.
  நான் இன்னமும் படிக்கவில்லை.

 5. அப்பாதுரை சொல்கிறார்:

  அவசியம் படிக்கப் போகிறேன்.
  இதை சினிமாவாக எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேனே?

 6. thiyagu சொல்கிறார்:

  arumai

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s