அரவான் – காவல்கோட்டம் – அரிட்டாபட்டி

Posted: ஏப்ரல் 13, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

கரிச்சானை வெரட்டி பாயும் கண்ணாடி மயிலக்காளை

உள்ளானை ஓடிக்குத்தும் ஊசிக்கொம்பு வெள்ளக்காளை 

ஒண்ணு போயீ ஒண்ணா ரெண்டும் வரப்போகுது

உசுரு வேணும்றவெ ஓடிக்கோ…                                  

புடிச்சுப் பாக்கிறவெ நின்னுக்கோ…                

– காவல்கோட்டம்

அரவான் திரைப்படம் குறித்து ஆனந்தவிகடனில் வந்த படங்களையும்  செய்தியையும் பார்த்ததும் இந்தப்படம் வந்ததும் பார்க்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அரிட்டாபட்டி பசுமைநடையின்போது ஓரிடத்தில் பழைய காலத்தைப் போல கல்அடுப்புகளும் பழமையான ஒரு மரமும் நிற்பதைப் போலிருந்ததைப் பார்த்தபோது வித்தியாசமாகத் தெரிந்தது. பிறகுதான் அது அரவான் படத்திற்காக அமைக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன். மதுரையில் உள்ள அரிட்டாபட்டி மலையில் எடுத்த படம் என்றதால் அரவானைக் காண வேண்டுமென்ற ஆவல் அதிகமானது. காவல்கோட்டம் வாசித்த பின்பு கட்டாயம் அரவான் வந்ததும் முதல் நாளே பார்த்துவிட வேண்டுமென்று கங்கணங்கட்டிக்கொண்டேன். ஆனால், படம் வந்து பத்தாவது நாள்தான் பார்க்க முடிந்தது.

ஒரு நாவலை படமாக்குவது பெரிய சவால். அதுவும் காவல்கோட்டம் போன்ற வரலாற்று நாவலைப் படமாக்குவது மிகவும் கடினமானதொரு காரியம். அரவான் பட இயக்குனர் வசந்தபாலன் காவல்கோட்டத்தின் நாவலாசிரியர் சு.வெங்கடேசனுடன் இணைந்து பணியாற்றியிருப்பதால் படத்தின் கதை நாவலோடு நெருக்கமாய் பயணிக்கிறது. திரைப்படத்திற்கேற்ப நாவலில் உள்ள காட்சிகளை கொஞ்சம் மாற்றி மிகவும் சுவாரசியமாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் .களவுக்கு செல்லும் காட்சிகள், நாவலில் சொல்லாத சின்னானின் இரகசியம் எல்லாம் திரையில் பார்க்கும்போது நன்றாகயிருந்தது.

படத்தின் முன்னோட்ட காட்சிகளைப் பார்த்த போது பசுபதியின் கதாபாத்திரம் மாயாண்டியுடையது, ஆதியின் கதாபாத்திரம் சின்னானுடையது என்று கணித்துவிட்டேன். படத்தில் பசுபதியின் கதாபாத்திரத்தில் மாயாண்டி மற்றும் குமணாண்டி என்னும் இருவரின் கதையையும் சேர்த்தும், ஆதியின் சின்னான் கதாபாத்திரத்திற்கு அதிக வலுவும் சேர்த்திருக்கிறார்கள். அதே போல் ஆதியின் மனைவியாக வரும் தன்ஷிகாவும், மாத்தூர்க்காரனாக வரும் கரிகாலனும் நாவலில் இல்லாத கதாபாத்திரங்கள்.

நாவலில் சின்னான் மாயாண்டியின் கொத்தில் வந்து சேர்ந்த பிறகு ஒரு களவின்போது கிணற்றில் விழுந்த குமணாண்டியைக் காப்பாற்றிவருவான். குமணாண்டியின் தங்கை தன் மாமனைப் பிரிந்து சின்னானை விரும்பி கல்யாணம் செய்து கொள்வாள். மலையடிவாரத்தில் வசிக்கும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துவிடும். ஒருமுறை களவின் பெருமைகளை பேசிக்கொண்டிருக்கும்போது சின்னானை ஒருவன் சீண்ட தானும் தாதனூர்க்காரன்தான், சின்னிவீரன்பட்டியில் வாக்கப்பட்டுப்போன ஒச்சாயி மகன் என்ற உண்மையை சின்னான் உளறிவிடுகிறான். அதை திரைப்படத்தில் இன்னும் சுவாரசியப்படுத்த ஜல்லிக்கட்டின் போது இக்கட்டான சூழலில்  ஆதி சொல்லும்படியாக திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு பற்றி தனியொரு பதிவில் வாடிவாசல், காவல்கோட்டம், விருமாண்டி, அரவான் பற்றிக்காணலாம். பாளையராஜாவின் கதை போல கிருஷ்ணதேவராயரின் வாழ்விலும் ஒரு கதை காவல்கோட்டத்தில் வருகிறது. ராயர் ஒரு பெண்ணை மணக்கிறார், அவளோ ராயரைத் தொடக்கூட விடாமல் இருந்து துறவறம் மேற்கொள்கிறாள். அந்தக்கதையை படத்தில் சின்னானின் இரகசியத்தில் கொஞ்சம் மாற்றிச் சேர்த்திருக்கிறார்கள்.

களவுக்குச்செல்லும் போது நட்சத்திரங்களின் மூலம் காலத்தைக் கணித்து செல்வது, யாரும் துரத்திவந்தால் தப்பிப்பதற்கு வசதியாக கற்களை முதலிலேயே எடுத்து மடியில் கட்டிக்கொள்வது, சுவரில் கன்னமிடுவது, முதலில் ஆள் நுழையாமல் மொண்டிக்கம்பை உள்ளே விடுவது, வீட்டில் ஆள் இருக்கும் போதே சத்தமில்லாமல் உள்நுழைவது, , களவாடச்செல்லும் வீட்டில் பிரச்சனையிருந்தால் வெளியேறுவது என காவல்கோட்டத்தின் களவுக்காட்சிகளை அரவானில் மிகவும் அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள். நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தன்னைத்தானே பலிகொடுக்கும் ஆண், பெண் சிற்பச்சிலைகள் கூட படத்தில் வந்து விடுகிறது. அன்றைய மக்களின் நடுகல் வழிபாட்டை மிகவும் அற்புதமாக காட்டியிருகிறார்கள். இப்படி படம் முழுக்க நாவலோடு சேர்ந்து மிகவும் அற்புதமாய் பயணிக்கிறது.   படத்திற்காக எருமைக்கன்றைத் தூக்கி ஓடும் ஆதி, கொம்பூதியாகவே மாறிய பசுபதி, சிமிட்டியாக நடித்த அர்ச்சனாகவி, ஆதியின் காதல்மனைவியான தன்ஷிகா, ஆதியின் பலிக்கு காரணமாக வரும் பரத், ஆதிக்கு பதிலாக பலியாகும் திருமுருகன், மாத்தூர்க்காரனான கரிகாலன், பாளையராஜாவும், அவரைப் பழிவாங்கும் ராணியும் என படத்தில் வரும் எல்லாக்கதாபாத்திரங்களும் காட்சியோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார்கள்.

மதுரைக்கருகிலுள்ள அரிட்டாபட்டி கழிஞ்சமலையின் ஒருபுறம் கள்வர்கள் வசிக்கும் வேம்பூராகவும், மறுபுறம் காவக்காரர்கள் வசிக்கும் சின்னிவீரன்பட்டியாகவும் அரவானில் வருகிறது. அரிட்டாபட்டியில் பசுமைநடையின் போது நாங்கள் சுற்றித் திரிந்த மலைதான் படத்தின் பெரும்பாலான கதைக்களமாக வரும்போது படம் மிகவும் பிடித்துவிட்டது. படத்தில் வேம்பூர் கோயிலாக வருமிடத்தைத்தான் பசுமைநடையின் போது பார்த்தோம். அந்த ஊரின் குளம், மலைகள் எல்லாவற்றையும் அருமையாக பதிவு செய்திருக்கிறார்கள். சின்னிவீரன்பட்டியாக வரும் பகுதி அரிட்டாபட்டியின் ஆனைக்கொண்டான் கண்மாய் பகுதியில் உள்ளதுதான். அந்தப்பகுதியில் உள்ள வீடுகள் இன்னும் கூரைகளுடன் மிகவும் எளிமையாகத்தானிருக்கிறது.

அரிட்டாபட்டியில் சமணத்தீர்த்தங்கரர்களின் சிலையும், தமிழ்பிராமிக் கல்வெட்டும், பாண்டியர்கால குடைவரையும் இருக்கிறது. அரவானில் தாதனூர் பெயரை வேம்பூர் என்று வைத்திருக்கிறார்கள். காவல்கோட்ட நாவலில் சமணமலை அடிவாரம்தான் தாதனூர். தாதனூர்க்காரர்களுக்கு மலையில் உள்ள தீர்த்தங்கரர் சிலைகளைத்தெரியும். படத்தில் ஆதியும் பலி கேட்காத சாமியை பிடிக்கும் என ஒரு காட்சியில் சொல்லும்போது எங்கள் மலையில் அதுமாதிரி சாமி இருக்கு எனத் தீர்த்தங்கரரின் சிலையை காட்டியிருந்தால் மதுரையிலுள்ள சமணத்தின் சுவடுகள் திரைப்படத்தில் பதிவாகியிருக்கும்.

அரவானில் ஆதி பலியாளாவது போல இம்மலையையும் கிரானைட்டுக்காக பலி எடுக்கப்பார்த்தார்கள். அரிட்டாபட்டி மக்களின் விடாத போராட்டத்தால் மலையில் கொஞ்சம் வெட்டியது போக மீதமுள்ள மலை தப்பித்தது. மரணதண்டனையை தடை செய்யச் சொல்வது போல கிரானைட்டுக்காக மலைகள் அருக்கப்படுவதையும் தடை செய்ய வேண்டும். அரவானைப்போல மீதமுள்ள அரிட்டாபட்டி மலை பலியாகாமல் தடுப்போம். காவல்கோட்டமாய் நாமிருப்போம்.

நன்றி- விகடன்.காம்

தொடர்புடையவை: அரிட்டாபட்டி மலை எண்பெருங்குன்றங்களில் ஒன்றுபாண்டியர்கால குடைவரை, அரிட்டாபட்டியில் பசுமைநடை, அரிட்டாபட்டி மலை ஏன் பாதுகாக்கப்படவேண்டும்?

மனதைக்கவர்ந்த காவல்கோட்டக்காரர்கள்.

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

 2. அப்பாதுரை சொல்கிறார்:

  அரவான் என்பது காவல் கோட்டம் நாவலின் திரைப்பட வடிவமா? அறிமுகத்துக்கு நன்றி.

 3. ஆருத்ரா சொல்கிறார்:

  உங்களின் பதிவில் இருந்து அரவான் பார்க்க ஆசைப்பட்டு கடை, கடையாக ஏறி இறங்கியதில் Original DVD கிடைக்கவில்லை. கிடைத்ததும் பார்ப்பேன். பகிர்விற்கு நன்றி.

 4. ganesapandy சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s