அழகர்மலையில் ஆதிகாலக் குகைஓவியங்கள்

Posted: மே 1, 2012 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், மதுரையில் சமணம்

இயற்கையைப் போலி செய்வதில்தான் கலை வரலாற்றின் ஆரம்பகால முயற்சிகள் இறங்கின. தமிழகத்தின் பழங்குகை ஓவியங்களில் ஒன்றான கிடாரிப்பட்டி ஓவியங்களை எடுத்துக்கொண்டால், புதர்ச் செடிகளின் பக்கத்தில் தலையில் கிளைகிளையாகப் பிரிந்த கொம்புகளுடன் கலைமான் ஒன்று நிற்பதைப் போலி செய்ய முயன்றிருப்பது தெரியும். ஆனால், வெறுமனே இயற்கையைப் பிரதிபலிப்பதில் முழுதிருப்தி அடையவில்லை மனிதன்.      

– இந்திரன், கலைவிமர்சகர்

மதுரை உலகின் தொன்மையான நகரம். தமிழ்நாட்டிலுள்ள பழமையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை மதுரையிலும், மதுரையைச் சுற்றிய இடங்களிலும் காணப்படுகிறது. சமீபத்தில் கூட சமணமலையில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மதுரை அழகர்கோயில் அருகிலுள்ள கிடாரிப்பட்டி குன்றில் காணப்படும் கல்வெட்டுக்களும், குகைஓவியங்களும் மதுரையின் தொன்மையை அறிய உதவுகின்றன. இங்குள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்பிராமிக் கல்வெட்டில் ‘மதிரை’ என்ற பெயர் காணப்படுகிறது. மேலும், இங்கு சமணர்கள் வருவதற்கு முன் ஒரு இனக்குழுச்சமூகம் இருந்துள்ளதை இங்குள்ள பாறை ஓவியங்களின் மூலம் அறியலாம்.

 

இம்முறை பசுமைநடைப் பயணமாக அழகர்கோயில் அருகிலுள்ள கிடாரிப்பட்டி குன்றிற்குச் சென்றிருந்தோம். குகைத்தளத்தில் காணப்படும் ஓவியங்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவும், பேராசிரியர் கண்ணனும் சுட்டிக்காட்டினர். சிவப்பு வண்ணத்தில் நிறைய உருவங்கள் தீட்டப்பட்டிருந்தது. குதிரைமேல் அமர்ந்திருக்கும் மனித உருவம், கலைமான், தனியாக நிற்கும் மனித உருவம் என அங்கிருந்த ஓவியங்களைப் பார்த்துப் படமெடுத்துக்கொண்டோம். இவை வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். குகை ஓவியங்களை குறித்து பேராசிரியர் கண்ணனும், ஓவியர் பாபுவும் பேசினர்.

 பேராசிரியர் கண்ணன் அவர்கள் பேசியதன் சாரம்:

இங்குள்ள பாறை ஓவியங்கள் சமணர் வருகைக்கு முன்பே இப்பகுதியில் இனக்குழு சமுகங்கள் வாழ்ந்துவந்ததைக் காட்டுபவை. இங்கு மொத்தம் 13 இடங்களில் பாறை ஓவியங்கள் இருந்தன. அவற்றுள் சில சிதிலமடைந்துவிட்டன.  

கலைமான் உருவம் இரண்டு இடங்களில் காணப்படுகிறது. இது வேட்டைச் சமூகத்தை உணர்த்துகிறது.

இப்பாறை ஓவியங்களுக்கு கரிம முறையில் வயதுக்கணிப்பு (carbon dating) இன்னும் செய்யப்படவில்லை. என்றாலும் குதிரை அல்லது யானை போன்ற ஒருவிலங்கின்மீது அமர்ந்து கோடரியேந்திய நிலையில் மனித உருவம் காணப்படுகிறது. இது விலங்குகள் பழக்கப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய  பெருங்கற்காலம் அல்லது இரும்புக்காலத்தைச் சேர்ந்த (கிமு மூன்றாம் நூற்றாண்டு – 2400 ஆண்டுகளுக்கு முன்பு) ஓவியங்களாக இவற்றை வகைப்படுத்த உதவுகிறது.

இத்தகு ஓவியங்கள் செம்பாறையைப் (laterite stone)  பொடியாக்கிக் கிடைத்த  செங்காவிப்பொடியுடன் (red ochre) இலைச்சாறும் பிசினும் சேர்த்து வரையப்பட்டவை. விலங்கு மயிரால் அல்லது கையால் வரையப்பட்டவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டும் மிக அண்மையில் வரையப்பட்டவைபோன்று தோற்றமளிப்பவை.

ஆதிமனிதனால் தன்னுடைய வாழ்க்கையை வெளிப்படுத்துகிற நோக்கத்துடனோ அல்லது வேட்டையில் அதிக விலங்கு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் ஒரு சடங்குக் குறியீடாகவோ பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம்.

செங்காவிப் பொடியால் வரையப்பட்ட சிவப்புநிற ஓவியங்கள் இங்கு இருப்பதைப்போல வாசுதேவநல்லூர் அருகில் உள்ள பாணர் பறம்பு போன்ற இடங்களில் கருநிற ஓவியங்கள் உள்ளன.

 

ஓவியர் பாபு பேசியதன் சாரம்:

கடந்த 2300 ஆண்டுகளாக காலத்தால் அழியாது இருந்துவந்தவை கடந்த 30 – 50 ஆண்டுகளாகத்தான் அதிக சிதைவுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கத் தட்டை ஓவியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தக்க வகையில் அமைந்துள்ள இவ்விடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிலிருந்தே தொடங்குகிறது.

பசுமைநடையை சிறப்பாக நடத்தி வரும் அ.முத்துக்கிருஷ்ணனுக்குத்தான் நிறைய நன்றி சொல்ல வேண்டும். பசுமைநடை குறித்து திருமங்கலம் கிருஷ்ணகுமார் தினகரனில் ஒருபக்க அளவில் எழுதிய கட்டுரை நிறைய பேரை சென்றடைய உதவியது. பசுமைநடை குறித்து இளஞ்செழியன்  எழுதிய கட்டுரையை கதிர்வலைப்பூவில் வாசித்துப்பாருங்கள். 

இந்த ஓவியங்களின் தொன்மை தெரியாமல் இந்த இடத்தில் கண்டதைக் கிறுக்கி வைப்பதிலிருந்து  காப்பாற்ற வேண்டும். அதிலும் இதுபோன்ற இடங்களுக்கு வருபவர்கள் சரித்திரத்தில் இடம்பெறும் நோக்கில் பெயிண்ட், ப்ரஷூடன் வந்து தங்கள் பெயர்கள் மற்றும் காதல் சின்னங்களை பதிந்து செல்கின்றனர். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற கிறுக்கல்களைக் காண முடியும். இப்படி கிறுக்கிச் செல்பவர்களை குறை கூறுவது ஒரு புறமிருக்கட்டும். இதுபோன்ற இடங்களின் முக்கியத்துவம் குறித்து அப்பகுதி மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள முக்கியமான இடங்களைக் குறித்து அந்தந்த ஊர்க்காரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்விக்கூடங்களில் சொல்லித்தருவது, விளம்பரம் செய்வது என பல நடவடிக்கைகளை அரசு சுற்றுலாத்துறை மூலம் எடுக்க வேண்டும். ஊடகங்களில் ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் இதுபோன்ற விசயங்களைக் குறித்து விளம்பரம் போடும் போதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

பள்ளிகளை ஏற்படுத்தி கல்வியளித்த சமணர்களைக் குறித்து பள்ளிகளில் எங்காவது சொல்லிக்கொடுத்திருக்கிறார்களா? அரசு இவைகளைச் செய்யும் என்று நாம் முழுமையாக நம்பியிருக்க முடியாது. பசுமைநடை போல ஒவ்வொரு ஊரிலும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி பயணிப்பது ஓரளவு பயனைத் தரும். பேராசிரியர் கண்ணன், ஓவியர் பாபு பேசியதை தொகுத்து எழுதித் தந்த சகோதரர்க்கு நன்றி.

மதுரை, சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், திருநெல்வேலி, கொங்குநாடு என பலப்பகுதிகளிலும் உள்ள சமணத்தின் சுவடுகளைக் குறித்து அறிய தமிழறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி அய்யா எழுதிய சமணமும் தமிழும் என்ற நூலை வாங்கி வாசியுங்கள். உங்கள் ஊரிலுள்ள தொன்மையான இடங்களை நோக்கிப் பயணியுங்கள்.

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  உங்களை பின் தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன். இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  இந்த் அருமையான சேவைக்கு உங்களுக்கும், உங்கள் அணியினருக்கும் எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.

 2. revaalike சொல்கிறார்:

  சகோதரர் சித்திரை வீதிக்காரருக்கு, சித்திரை வீதி தளத்திலும், சித்திரை வீதிகளிலுமாய் பொழுதைகழித்தவள் என்கிற முறையில் படிக்கையில் ஏதோ உந்துதல் வந்து மறுமொழி இடுகின்றேன், நான் வளர்ந்த மதுரையை நானே அறியக்காரணமானது உங்களின் தளம் தான்.. இப்போழுது தான் கொஞ்சம் கொஞ்சமாய் பதிவுகளை படித்து வருகின்றேன், இன்னும் இன்னுமாய் என்னுள் மதுரையின் மீதான காதல் அதிகமாகிறது என்று தான் சொல்லவேண்டும் அதை உங்கள் எழுத்துக்கு நான் கொடுக்கும் மரியாதையாய் கருதுகின்றேன்…எனக்கு சமணம் பற்றி அதிகம் தெரியாது ஆகையால் படித்துவிட்டு அதை பற்றி கருத்திடுக்கின்றேன், இங்கே குகை ஓவியங்கள் அனைத்தும் எம் முன்னோர்களின் அடையாளமாய் பாவிக்க பத்திரபடுத்தல் என்ற எண்ணம் நமக்கு இன்னும் வராமல் இருப்பது ஏனோ வருத்ததை தான் கொடுக்கின்றது… இன்னும் திருமலை நாயக்கர் மஹாலை கவுரவிக்கும் தூண்களில் நம் முன்னோர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனைபேருக்கு உரைக்கும்… இன்று இருக்கும் அறிவியல் சார் வளர்ச்சிகள் இல்லாத காலத்திலே எம் மக்கள் வாழ்வின் ஆதாரமாய் நமக்கு இருக்கும் பொக்கிஷங்களை பாதுக்காக்க இளமைகள் முன்வர வேண்டும். நம் பிறப்பின் நோக்கம் அடுத்த தலைமுறைக்கான விந்தை விட்டுச்செல்வது மட்டுமன்றி நம் அடையாளங்களாய் இருக்கும் வரலாற்றை பாதுக்காத்து கொண்டுசெல்வதும் தான், உங்களின் இந்த பதிவு மற்றும் இந்த தளம் தாங்கி நிற்க்கும் ஏனைய பதிவுகளும் வரலாற்றின் மீதான காதலை தான் கண்முன் நிறுத்துகிறது, முதல் முறை பொறாமை கொள்கின்றேன் உங்கள் பதிவுகளை படிக்கையில்…

  அதோடு, அந்த குகை ஒவியங்களை பார்க்கையில், சொல்ல முடியா உணர்ச்சிகள் மேலிடுகின்றது, அதோடு பெரும்பாலும் குகை ஓவியங்கள் பல வேட்டைக்கு செல்லும் மக்களின் நன்றி அறிவித்தலுக்காகவும், விலங்குகளை பழக்க படுத்துவதற்க்காகவும் வரையப்பட்டது என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்… இந்த கருத்துக்கள் பதிவிற்க்கு சம்மந்தமானவையா என்று தெரியாவிடினும், படிக்கையில் மறுமொழியிட உந்தித்தள்ளிய விஷயங்களை பகிர்ந்தேன், மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோ இதே போன்ற பதிவுகளின் மூலம் எம் வரலாற்றை பற்றி அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்…..

 3. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  அருமையான பதிவு. இவற்றைப் புகைப்படங்களோடு பகிர்ந்ததற்கு நன்றி.
  போற்றிப் பாதுகாக்க வேண்டிய குகை ஓவியங்கள்.

 4. ஆருத்ரா சொல்கிறார்:

  சித்திரவீதிக்காரனுக்கு சிரத்தையான வணக்கங்கள்.
  மதுரையை நினைவு மீட்கும் திடலாக மாற்றியதற்காக உங்கள் வலைத்தளம் மதிப்புடையதாகின்றது.
  சைவம், சமணம் குறித்த பாடங்களை எங்களது சிறுவயது பாடப்புத்தகங்களில் படித்த நினைவு. திருநாவுக்கரசர் பாண்டிய மன்னனின் வெப்பு நோயை தீர்த்ததாகவும் மன்னன் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதாகவும் பள்ளிக்கல்வி சொல்லிச் சென்றது.

  சமணம் குறித்த நெறியான பதிவுகளை உங்களது தளத்தில் காணக்கிடைக்கின்றது.முழுதாக எல்லாப் பதிவுகளையும்
  வாசித்திருக்கவில்லையாயினும் வாசித்தவைகள் எல்லாம் பாடங்கள்.

  “கடம்பவனத்தில்” எனது சைக்கிள்கள் பதிவை இணைத்ததற்காக எனது நன்றிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s