பச்சரிசி மாவிடிச்சி (மாவிடிச்சி)

பக்குவமா மாவரைச்சு (மாவரைச்சு) 

சுக்கிடுச்சு மிளகிடுச்சு (மிளகிடுச்சு) 

பக்குவமா கலந்துவச்சு (கலந்துவச்சு)  

 அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் (எடுத்து வந்தோம்)  

அம்மன் அவ(ள்) எங்களையும் காக்க வேண்டும் காக்க வேண்டும் தாயே!    

மதுரை மரிக்கொழுந்து வாசம் என்ற பாடலில் முதலில் வரும் வரிகள்தான் மேலே உள்ளவை. ராமராஜனின் திரைப்படங்களின் மூலம் கிராமிய மண்வாசனை உலகமெங்கும் பரவியது. நாட்டுப்புறவியல் துறையிலிருந்து ராமராஜனுக்கு முனைவர் பட்டமே வழங்கலாம். நகைச்சுவைக்காக இதைச் சொல்லவில்லை.  அது நிற்க.

சமீபத்தில் தன்னனானே பதிப்பக வெளியீடாக வந்த ‘மதுரை நாட்டுப்புறவியல்’ என்ற புத்தகம் வாசித்தேன். அதில் விக்டர் டர்னரின் மீவியல் கோட்பாடுகளை பற்றிய கட்டுரையொன்றை வாசித்தேன். அதில் அவ்வை நோன்பை பற்றி எழுதியிருந்த வரிகள் செவ்வாய்க்கிழமை கொழக்கட்டையை ஞாபகப்படுத்தியது. ரொம்ப நாளைக்கு முன்னாடி காலையில் வேலைக்கு கிளம்பும்போதே அம்மா “சாயந்திரம் சீக்கிரம் வந்திரு, இல்லேன்னா நான் சாமிகும்பிட போயிருவேன்”னு சொன்னதும் ‘ஓ செவ்வாய்க்கிழமையா!’ என்று சொல்லிக்கிளம்பினேன்.

தை, மாசி, ஆடி மாதங்களில் செவ்வாய்க்கிழமைகளில் அவ்வை நோன்பை பெண்கள் கடைப்பிடிக்கிறார்கள். அன்று இரவு சாமிகும்பிட்டு கொழக்கட்டை செய்து வழிபடுவர். மேற்கொண்டு வழிபாட்டு முறை குறித்து எனக்கெதுவும் தெரியாது. சாதி, வயது வித்தியாசமில்லாமல் பெண் என்ற அடிப்படை தகுதி ஒன்றோடு அவ்வை நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். நல்ல கணவன் அமைய, திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் தீர, குழந்தைப்பேறு போன்ற காரணங்களுக்காக வழிபடுகின்றனர்.

அண்ணாநகரில் நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில் உள்ள பெண்கள் எல்லாம் எங்கள் வீட்டில்தான் சாமிகும்பிட வருவார்கள். ஒரு அறை கொண்ட சிறிய வீடு. எனவே, அவர்கள் சாமிகும்பிடும் வரை இரவு வீட்டிற்கு வெளியே படுக்கச் சொல்லிவிடுவாங்க. மறுநாள் நீங்க மட்டும் கொழக்கட்டை செஞ்சி திங்கிறீங்க எனக்கு இல்லையான்னு கத்துவேன். அதனால் மறுநாள் எனக்கு இனிப்பான பால்கொழக்கட்டை அம்மா செஞ்சு தருவாங்க.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் இடைவேளையின்போது நான் மட்டும் அமர்ந்து என்னமோ எழுதிக்கொண்டிருந்தேன். வகுப்பில் இருந்த ஆறேழு மாணவிகள் ‘அவெம்போகட்டும் அப்புறம் எடுப்போம்’ என பேசியது காதில் விழந்தது. தூக்குச்சட்டியை வைத்திருந்த அந்தப்பிள்ளைகளை பார்த்ததும் ‘ஓ நேத்து செவ்வாய்க்கிழமைல’ன்னுட்டு வெளியில வந்தேன். மதியம் உணவு இடைவேளையின் போது உனக்கெப்படி தெரியும் எனக்கேட்டு பெரிய இம்சைய கொடுத்துருச்சுங்க. எங்க வீட்டிலயும் கும்பிடுவாங்க அதுனால தெரியும்ன்னு சொன்னேன். அதை இன்று நினைக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. அவ்வை நோன்பன்று இரவு சாப்பாடு ஒழுங்கா கிடைக்காது. ஒருமுறை நான், எங்க மாமா எல்லாம் சேர்ந்து அன்று இரவு பலகாரம் வாங்கிவந்து வைத்து போட்டிக்குத் தின்றோம். பிறகு போட்டியாத் தொடரமுடியவில்லை.

அவ்வைநோன்பு போலவே ஆண்களுக்கு முனியாண்டி கோயிலில் கனிமாற்றுவது. வெள்ளி, செவ்வாய்க்கு முனியாண்டிக்கு கனிமாற்றுவதாக வேண்டியவர்கள் ஒற்றைப்படையில் ஐந்து அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை வாங்கி கோயிலில் வைத்து வழிபடுவர். முனியாண்டி முன் வாழைப்பழங்களை வைத்து சூடம், பத்தி பொருத்துவார்கள். சூடம் அமரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் நிறைய சூடம் வைக்காமல் ஒண்ணு மட்டும் வைப்பாங்க. இரண்டு சூடம் வச்சாலே முணங்குவாங்ங. சூடம் அமந்ததும் ஒரு பழத்தை பிச்சு நாளு திசைகளிலும் வீசுவாங்க. பிறகு மீதமுள்ள பழங்களை அங்கேயே வைத்து தின்றுவிடுவோம். வீட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது. கனிமாற்றும் போது முனியாண்டிகோயில் வழியாக பெண்கள் வந்தாலும் வேகமாக கடந்துவிடுவர். நிறைய வாழைப்பழங்கள் இருந்தால் தின்ன முடியாமல் தின்போம். யாராவது ஆண்கள் அந்தப்பக்கம் வருவார்களா என்று பார்த்து அவர்களுக்கும் கொடுப்போம். கிராமங்களில் இந்தப் பழக்கம் உள்ளது. நான் எங்க அம்மா பிறந்த கிராமத்திற்கு செல்லும்போது கனிமாற்றும்போது உடன் சென்றிருக்கிறேன்.

இயல்பான நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு சிக்கல் வரும் போது அதற்கு தீர்வாக நாம் மேற்கொள்ளும் சில சடங்கு அல்லது வழிபாட்டு முறைகளைத்தான் மீவியல் என்கிறார்கள். மீவியல், மீவியல் வெளி, மீசமூகம் எனப் பல சொற்களால் சொன்னாலும் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. பழனிபாதயாத்திரை செல்லும் போது மதுரைக்கும் பழனிக்கும் இடையேயான பாதை மீவியல் வெளியாகிறது. பாதயாத்திரை செல்பவர்கள் மீவியலர்கள்.

“மீசமூகம் என்பது இயல்பான சமூகத்திலிருந்து விலகிச்சடங்குக் களத்தில் ஒன்று சேரும் மீவியலர்கள் உருவாக்கும் ஓர் இயல்பு மீறிய சமூகத்தன்மையைக் குறிக்கும்” என்கிறார் மானுடவியலாளர் சி.பக்தவத்சலபாரதி.

எளிய மக்களின் நம்பிக்கைகள் எல்லாமே மூடத்தனமானவை அல்ல. அதற்குள் இதுபோன்ற சில விசயங்களும் இருக்கின்றன. வெளியிலிருந்து பார்ப்பதை விட அவர்களோடு ஒன்றி கவனிக்கும் போதுதான் இதுபோன்ற விசயங்கள் தெரியும். மதுரை நாட்டுப்புறவியல் புத்தகத்தைத் தொகுத்த இ.முத்தையா அவர்களுக்கு நன்றி.

நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும்

மழையோடு பாதயாத்திரை

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  அசந்தா ஆடி, தப்பினா தை, மறந்தா மாசி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்லதங்காள் கதைதான் பேசுவார்களோ? கதையில் வரும் சம்பவங்களை நினைவுப்படுத்தும் வடிவங்களில்தான் கொழுக்கட்டை இருக்குமாம். பால் கொழுக்கட்டையில் உருண்டை, குச்சி என இரண்டே வடிவங்கள்தான் கண்ணுக்குக் காட்டுகிறார்கள். “ச்சீ..ச்சீ.. இதில் உப்பே இருக்காது!” என்று திருப்திகொள்ளவேண்டியதுதான்.

  என்னதான் எங்களுக்குத் தருவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டாலும் விவரமறியா சிறுவயதில் அக்காவோ, ஆச்சியோ நம்மை விட்டுச்சாப்பிட மனமில்லாமல் நள்ளிரவில் நல்ல தூக்கத்தில் எழுப்பிக் கொடுத்துவிட்டு மறந்துவிடச் சொல்லி மிரட்டி இருக்கவே செய்வார்கள்.

  ஒன்றுக்கும் மேல் சூடம் வைத்துவிட்டால் ஒரு வழி இருக்கிறது. ஒத்தி கண்ணில்வைக்கும் சாக்கில் அணைத்துவிடுவது.

  சோணையாவுக்கு கனிமாற்றுபவர்கள் விட்டெறிந்த பழங்களைத் தவிர மற்றவற்றை வீட்டுக்கு எடுத்துச்சென்றுவிடுகிறார்கள்?! வெள்ளிக்கிழமை இரவுச்சாப்பாடே இதுதான் என்ற ஒருகாலம் இருந்தது. கோயிலில் விளக்குகளை போட்டுவிடச் செல்லும்சாக்கில் ஊரில் உள்ள கடைக்காரர்கள் மாற்றிய கனிகளே தொப்பையையும், தொப்புளானையும் உருவாக்கின.

 2. vivek சொல்கிறார்:

  அசந்தால் ஆடி, தப்பினால் தை, மறந்தால் மாசி இப்படி ஏதாவது ஒரு மாதத்தில் பெண்கள் இந்நோன்பை தவறாது கடைப் பிடிக்க வாய்ப்பாடாக நினைவில் வைத்திருப்பதையும், இன்றளவும் சில பெண்கள் கடைப்பிடிப்பதையும்
  பார்த்திருக்கிறேன். நல்ல பதிவு. தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். நன்றி..

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

 4. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார

  அவ்வை நோன்பு என்ற பெயரினை இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். பெண்கள் அவர்களுக்கு மட்டுமான இந்நோன்பினைக் கொண்டாடுவது தெரியும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்நோன்பு இப்பொழுதும் நடக்கிறதா என்ன ? கனி மாற்றும் விழாவும் நன்று. வாசிப்பனுபவம் பிரமிக்க வைக்கிறது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா.

 5. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார

  அவ்வை நோன்பு என்னும் பெயரை இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். இருப்பினும் பெண்கள் அவர்களுக்காக நடத்தும் இந்நோன்பினைப் பற்றி அறிந்திருக்கிறேன். வாசிப்பனுபவம் பிரமிக்க வைக்கிறது. கனி மாற்றும் நிகழ்வும் நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 6. அப்பாதுரை சொல்கிறார்:

  மீவியல் – அருமையான சொல்.
  சுவையானக் கட்டுரை.
  கிராமியம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தது சுருக்கென்று தைக்கிறது.

 7. ஆருத்ரா சொல்கிறார்:

  அவ்வை நோன்பை முதன்முதலாக அறிந்து கொண்டேன். கனிமாற்றுவது-ஆண்களுக்கு அவ்வை நோன்பு-பெண்களுக்கு கிராமியச் சடங்குகள் பிரமிப்பானவை. ” அவெம் போகட்டும். அப்புறம் எடுப்போம்”.–உங்கள் பாடசாலை நினைவுகள். மீசமூகம், மீவியலாளர்கள் – அறிமுகத்திற்கு நன்றி. தொடர்க. “கூடவே வரும் ‌ தெய்வம்” பதிவிற்காக காத்திருக்கின்றேன்.

 8. துளசி கோபால் சொல்கிறார்:

  அடடா…… இப்போதான் நினைவுக்கு வருது வத்தலகுண்டு என்ற ஊரில் இருந்தபோது அக்கா பக்கத்து வீட்டுக்கு இரவில் போய் அவ்வை நோம்பு என்னும் செவ்வாப்புள்ளையார் நோம்பு கும்பிட்டு வருவார்கள். காலையில் அண்ணனுக்குத் தெரியாமல் எனக்கு மட்டும் கொழுக்கட்டைகள் விசித்திர வடிவில் தின்னக்கிடைக்கும்.

 9. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  அவ்வை நோன்பு நான் அறியாதது.
  சடங்ககள் சம்பிரதாயங்கள் பற்றி பல புதிய செய்திகளை அறிந்து கொண்டேன.
  இங்கு புரட்டாதிச் செவ்வாய் இங்கு பிரபலம்.

 10. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  சடங்குகளை அனுசரிப்பதால் மனதிற்கு மிக்க நம்பிக்கையையும், தைரியத்தையும்
  அளிக்கிறது.எளியமக்கள் எல்லாகஷ்டங்களுக்கும்மனோத்தஃதுவ டாக்டரையா
  பார்க்க முடியும்.நம் முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல.நல்ல பதிவு. நன்றி
  வாழ்த்துக்கள்

 11. கு.வேல்முருகன் சொல்கிறார்:

  நல்ல தொரு பதிவு மறைந்து வரும் கலை மறக்ககூடாது என சுட்டிகாட்டியது.

 12. siva சொல்கிறார்:

  எங்கள் வீட்டில் செவ்வாய்ப் பிள்ளையாய் கும்பிடுவது என்பார்கள்

  பகிர்வுக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s