மகுடேசுவரன் கவிதைகள்

Posted: மே 20, 2012 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

மகுடேசுவரனின் கவிதைகள் வாசிப்பு சுவாரசியம் கொண்டவை. வெளிப்பாட்டுச் சிக்கல்கள் இல்லாதவை.  இயல்பு நவிற்சி கொண்டவை.  

– நாஞ்சில்நாடன்

கவிதைகள் வாசிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், நாவல்கள், சிறுகதைகளைவிட கவிதைகளை வேகமாக வாசித்து விடலாம். மேலும், பலமுறை வாசிக்கலாம். நிறைய கவிதைகள் வாசித்த பிறகும் அந்த வரிகள் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கும். அதையெல்லாம் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் குணா கமல் மாதிரி இந்த வார்த்தைதான் வரமாட்டேன்கிறது.

நாஞ்சில்நாடனின் “நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” கட்டுரைத் தொகுப்பில் மகுடேசுவரனின் காமக்கடும்புனல் கவிதைத் தொகுப்பின் முன்னுரையை வாசித்தேன். அதை வாசித்தபின் மகுடேசுவரனின் ‘மண்ணே மலர்ந்து மணக்கிறது’ வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் படித்தவுடன் புரிந்தது. சில கவிதைகளை அடிக்கடி மற்றவர்களிடம் சொல்லும்படி மனப்பாடமாகிப்போனது. அந்தக் கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தினமும் நூறு, இருநூறுக்கு அலைந்து கொண்டிருக்கும் போது கீழ்உள்ள கவிதையை வாசித்தால் கவிஞரின் கோபம் நமக்கும் வரும்.

யார் வசதிக்கு

ஆயிரத்தை அறியார் தேசத்தில்

ஆயிரம் ரூபாய் நோட்டு.

+++

இறந்தபின்னும் நாம் பிறர்க்கு பயன்படும்படி வாழ்வதுதான் வாழ்க்கையென்றால் கீழ்உள்ள கவிதையும் அதைத்தான் அழகாய்ச் சொல்கிறது.

ஆட்டுக்குட்டிகள்

முதுகு தேய்த்துரச உதவட்டும்

என் கல்லறைச் சுவர்.

+++

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் என்கிறார் புத்தர். அதையே மகுடேசுவரனும் தன் கவிதை நடையில் அருமையாகச் சொல்கிறார்.

ஊர்தோறும் சுடுகாடு

ஒருபோதும் குறையலியே

வாழ்க்கைப் பற்று.

+++

மரங்களில் இலை உதிர்வதைக் காணும் போதெல்லாம் மறக்காமல் ஞாபகம் வரும் கவிதையிது.

சாவதும் ஒரு கலைதான்

யாருக்கும் தொந்தரவில்லாமல்

உதிரும் இலை.

+++

டிப்ளமோ முடித்து இன்று அதற்குச் சம்மந்தமில்லாமல் பணிபுரியும் என்னைப் பற்றி எப்படிச்சொல்வது? இந்தக் கவிதையை வாசியுங்கள்.

என்னை

ஒரே வரியில்

சொல்வதென்றால்

மருத்துவராக முயன்று 

நோயாளி வரிசையில்

குற்றுயிராக அமர்ந்திருப்பவன்.

+++

விளையாடப்பள்ளி சென்றேன் உபரி அறிமுகந்தான் இந்த எழுத்து, வாசிப்பெல்லாம். பசிக்கு பள்ளி சென்றதை அழகாய் சொல்வது இந்தக்கவிதை.

சோற்றுக்குப் பள்ளி சென்றேன்

உபரி அறிமுகந்தான்

உயிரெழுத்து.

+++

எனக்கென்று என்ன இருக்கிறது ஒன்றுமேயில்லை என எண்ணுபவர்கள் இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்.

என் ஒரே உடைமை

அடிவானை குடைந்து செல்லும்

அந்தப் பாதை

என் ஒரே சொத்து

ஓரிடம் நில்லா மனது

என் ஒரே அறிவு

நடைபோட வேண்டிய திசை 

என் ஒரே பற்று

என் கால்கள்.

+++

குதிரை நரியான கதை மதிரையில் நடந்தது. கூதல் நரியான கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

என் போர்வை

மிகவும் கிழிந்துவிட்டிருக்கிறது

அதன் துவாரக் குகை வழியில் நரியாய் நுழைந்து

கதகதப்பின் குட்டிகளைக்

கவ்விச் சென்று கொண்டிருக்கிறது

கூதல்.

நாஞ்சில்நாடனின் அறிமுகத்தில்தான் மகுடேஸ்வரனின் கவிதைகளை வாசித்தேன். நாஞ்சில்நாடனின் தளத்திலிருந்துதான் மகுடேஸ்வரனின் தள முகவரியும் கண்டடைந்தேன். நாஞ்சில்நாடனுக்கு நன்றி. மகுடேஸ்வரன் தன் தளத்தில் திருக்குறளை அழகாக இருவரியில் எளிமையான கவிதை நடையில் எழுதிவருகிறார். வான்சிறப்பு அதிகாரத்திற்கு அவரது சிறப்பான கவிவரிகளை வாசித்துப்பாருங்கள்.         

மகுடேசுவரனின் தளத்தில் நிறையக் கட்டுரைகள், கவிதைகள் வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீங்களும் வாசித்துப் பாருங்கள்.

வாழ்க்கையை அதன் அத்தனை கசப்போடும் இனிப்போடும் எதிர்கொண்டவன். அவற்றில் பலவற்றைக் கவிதைகளின் வழியே கடந்தவன். சிலவற்றைக் கடக்கவே முடியாமல் தவித்திருப்பவன். சொந்த ரசனைகளின் உணர்கொம்புகள் கூர்மையடைந்ததால் இன்னும் உயிர்த்திருப்பவன். முழுமையை நோக்கி என்றும் முடிவடையாத யாத்திரையில் சென்றுகொண்டிருப்பவன்.

– மகுடேசுவரன்

 http://kavimagudeswaran.blogspot.com/

மண்ணே மலர்ந்து மணக்கிறதுதமிழினி பதிப்பகம்.

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை.
  வாழ்த்துகள்.

 2. மகுடேசுவரன் சொல்கிறார்:

  அன்பிற்கினிய தம்பி !
  நன்றி !

  என்னுடைய முதல் மூன்று கவிதைத்தொகுப்புகளான ‘பூக்கள்பற்றிய தகவல்கள்’, ‘அண்மை’, யாரோ ஒருத்தியின் நடனம்’ – ஆகியவை ‘இன்னும் தொலையாத தனிமை’ என்று ஒரே நூலாக தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தாங்கள் அதையும் வாசிக்கலாம். என் கவிதைகளை வாசித்தவர்களை நான் இணையத்தில் சந்திப்பது மகிழ்ச்சி.

  • சகோதரர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தங்கள் மறுமொழி கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் தொலையாத தனிமை’ விரைவில் வாசிக்கிறேன். தங்கள் அன்பிற்கு சித்திரவீதிக்காரனின் நன்றிகள் பல.

 3. அப்பாதுரை சொல்கிறார்:

  ரசித்துப் படித்தேன். ‘யாருக்கும் தொந்தரவில்லாமல் உதிரும் இலை’ ஷேக்ஸ்பியரும் கீட்சும் இந்தக் கருத்தை எழுதியிருக்கிறார்கள்.

 4. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  நான் அந்நூலைப் படிக்கவில்லை. ஆனால் நீங்கள் எடுத்துக் காட்டிய கவிதைகள் சுவையானவை சிந்திக்க வைத்தன.

 5. தொப்புளான் சொல்கிறார்:

  எனக்கு சட்டென்று நினைவுக்கு வரும் மகுடேசுவரன் கவிதை (சொற்கள் மாறியிருக்கலாம்):

  ஆடவர் விடுதிகளில்
  திரைப்பெண்டிர் சுவரொட்டி
  மகளிர் விடுதிகளில்
  முள்ளங்கி, வெள்ளரி, கத்தரி

  என்னைப் போன்ற சாக்கடைகளுக்கு வேறெது நினைவில் நிற்கும்?

 6. ஆருத்ரா சொல்கிறார்:

  மகுடேசுவரன் கவிதைகள் வாழ்வின் சாரத்திலிருந்து வடிக்கப்பட்டவை. அதனால் மிகுந்த உயிர்த்துடிப்பானவை.

  சோற்றுக்குப் பள்ளி சென்றேன்

  உபரி அறிமுகந்தான்

  உயிரெழுத்து.

  சாரம்: உயிர்வலி. சத்தான கவிதைகள். சித்திரவீதிக்காரனின் பகிர்வுக்கு நன்றி.

 7. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  அருமையான உரை – மகுடேஸ்வரனின் குறுங்கவிதைகள் அத்தனையும் அருமை. எளிமை- இயல்பாய உள்ளது. அத்தனையையும் படித்து எழுதியம நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 8. கு.வேல்முருகன் சொல்கிறார்:

  கவிதை அறிமுகம் நல்ல பதிவு

 9. விஜய் சொல்கிறார்:

  என் விகடனில் , தங்கள் வலைப்பூ அறிமுகப்படுத்தப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் .
  மேலும் தொடரவும் .

  இணையத் தமிழன் ,
  http://www.inaya-tamilan.blogspot.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s