கதைதான். இந்தக் கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல. கதை மறந்த பொழுது உயிர்களெல்லாம் அழிந்ததால் கதையே உயிரென்றானது. கதை மண்ணிலிருந்து துவங்குகிறது. மண்ணைப் பற்றியே பேசுகிறது. இந்த மண்ணின் தலைவிளைச்சல் கதைதான்.

– சு.வெங்கடேசன் (காவல்கோட்டம்)

அழகர்கோயில் அருகிலுள்ள வல்லாளபட்டியில் புரவியெடுப்புத் திருவிழா என தினத்தந்தியில் வாசித்ததும் கட்டாயம் போகவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டேன். மே மாதம் 23ம் தேதியே அழகர்கோயிலில் தீர்த்தமாடி காப்புக்கட்டி விட்டார்களாம். ஜூன் ஒன்னாம் தேதி பெரியபுலி அய்யனாருக்கு புரவியெடுப்பு, ஜூன் இரண்டாம் தேதி சனிக்கிழமை சின்னப்புலி அய்யனாருக்கு புரவியெடுப்பு.

பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு இத்திருவிழா நடைபெற்றது.

ஒரு காலத்தில் இந்தப் பகுதியை வல்லாளத்தேவன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகுந்த பலசாலி. அப்போது பக்கத்து நாட்டைச் சேர்ந்த அரசன் இந்த ஊருக்குள் வந்து ஒரு பெண்ணை தூக்கிச் சென்றான். இதனால் ஆத்திரம் அடைந்த வல்லாளத்தேவன் வெகுண்டு சென்று அந்தப் பெண்ணை மீட்டு வந்தான். ஆனாலும் அந்த பக்கத்து நாட்டு மன்னன் அந்த பெண்ணை சிறைபிடிக்க வந்தான். அப்போது இந்த பகுதியில் உள்ள பொட்டல் என்ற இடத்தில் கடும் போர் மூண்டது. அந்த நேரத்தில் சின்னப்புலி, பெரியப் புலி ஆகியோர் எதிரி நாட்டு மன்னனை அடித்து துரத்தி இந்த பகுதி மக்களை காப்பாற்றினார்கள். இதனால் அவர்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். சின்னபுலி அய்யனாருக்கு ஊரின் தெற்குப்பகுதியிலும், பெரியபுலி அய்யனாருக்கு வடக்குப்பகுதியிலும் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
– தினத்தந்தி

சனிக்கிழமை மத்தியானம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வல்லாளப்பட்டி செல்ல நானும், நண்பன் பெரியசாமியும் காத்துக்கொண்டிருந்தோம். வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெந்நீர் ஊற்றுப் போல வியர்வை பொங்கிக் கொண்டிருந்தது.

அழகர்கோயில் பேருந்துவர அதில் ஏறிச்சென்றோம். அழகர்கோயிலில் இறங்கி அங்கிருந்து மேலூர் செல்லும் பேருந்தில் ஏறி வல்லாளப்பட்டி சென்றோம். சுற்றிலும் நிறைய மலைகள் தென்பட்டன.

அழகர்கோயிலுக்கும் மேலூருக்குமிடையில் வல்லாளப்பட்டி அமைந்துள்ளது. வல்லாளப்பட்டியில் இறங்கினால் ஊரே திருவிழாக் கொண்டாட்டத்தில் இருந்தது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான குதிரைகள் எனும் போது மக்கள் எத்தனை ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்தப் புரவியெடுப்பைக் காண இஸ்லாமியர்களும் வந்திருந்தனர் என்பது இன்னும் சிறப்பான விசயம்.

தொலைவில் பெரிய புரவி கிளம்பி வருவது தெரிந்தது. மக்கள் வெள்ளத்தில் பெரியகுதிரையொன்று மிதந்துவருவது போல வந்து கொண்டிருந்தது. குச்சிஐஸ் வாங்கித் தின்று கொண்டே குதிரையை நோக்கி வேகமாக நடந்தோம். அடிக்கிற வெயிலுக்கு ஐஸ்பெட்டி முழுக்கத்தின்னலாம் போலிருந்தது. பெரிய குதிரை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குதிரையைத் தூக்கி வந்தவர்கள் எல்லாம் ஆரவாரத்துடன் காணப்பட்டார்கள்.

பெரிய குதிரைக்குப் பின் சின்னக்குதிரைகளை வரிசையாகத் தூக்கி வந்தார்கள். இரண்டு பெரிய கம்புகளுக்கு நடுவில் வைத்து குதிரையைக் கட்டி தூக்கி வந்தார்கள். தென்னங்குருத்து, பலூன், கண்ணாடி என பலவிதமான பொருட்களை வைத்து அழகழகாக தங்கள் கற்பனைக்கேற்ப குதிரைகளை அலங்கரித்திருந்தார்கள். இந்தக் குதிரைகள் எல்லாம் நேர்த்திக்கடனுக்காய் செய்யப்பட்டவை.

 

குதிரைகள் கிளம்பி வருமிடத்தைக் காண நானும், நண்பரும் ஊருக்குள் சென்றோம். வல்லாளபட்டி கண்மாய் அருகிலுள்ள பொட்டல் திடலிலிருந்துதான் குதிரைகளை மொத்தமாய் செய்துவைத்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஊருக்குள் நுழைந்தால் வழிநெடுக மக்கள் புரவியெடுத்து வருபவர்களுக்கும், திருவிழாவிற்கு வந்தவர்களுக்கும் அண்டா மற்றும் குடங்களில் வைத்து குடிக்க நீர் வழங்கிக் கொண்டிருந்தனர். நானும் வாங்கிக் குடித்தேன். எவ்வளவு தண்ணி குடித்தாலும் தாகம் அடங்கவில்லை.

திடலில் இராட்டினத்தில் ஏறி மகிழ்ச்சியாய் சுற்றிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்க்கப் பொறாமையாயிருந்தது. நாங்கள் சென்ற போது சில புரவிகள்தான் கிளம்பாமல் காத்திருந்தன. மற்ற புரவிகளெல்லாம் புறப்பட்டுவிட்டன. இன்று இரவு இன்னிசைக்கச்சேரி என ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்துகொண்டிருந்தார்கள்.

பொட்டல் திடலிலிருந்து நானும் நண்பனும் சின்னப்புலி அய்யனார் கோயிலை நோக்கி புரவிகளுடன் நடந்தோம். இளைஞர்கள் உற்சாகமாகத் தூக்கிக்கொண்டு ஆரவாரம் செய்தபடி வந்தனர். நாங்கள் முன்னே செல்லும் பெரியபுரவியை நோக்கி வேகமாக நடந்தோம். அதுரொம்பத் தொலைவில் சென்று கொண்டிருந்தது. வழியில் மக்கள் வயக்காட்டில் இறங்கி கோயிலை நோக்கி குறுக்குப் பாதையில் சென்றனர். நாங்களும் அந்தப் பாதை வழியாக இறங்கி நடந்தோம். அறுவடை முடிந்த காலமாதலால் வயக்காட்டில் பயிர் எதுவும் செய்யவில்லை. கண்ணுக்கெட்டியதூரம் வரை புரவியெடுத்துச் செல்வோர்தான் வந்து கொண்டிருந்தனர்.

கோயிலை நெருங்கும்போதே பெரியகுதிரை வந்துவிட்டது. வேகமாக வயக்காட்டு வரப்புகளுக்கிடையே ஓடினோம். பெரியகுதிரையை கோயில் வாசலில் சேமங்குதிரையிலிருந்த அய்யனாருக்கருகில் வைத்திருந்தனர். குதிரையை இறக்கிவைத்து கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். மற்ற குதிரைகளும் வரிசையாக வரத்தொடங்கின. கோயில் அருகிலிருந்த திடலில் அவைகளைக் கொண்டு வந்து வைத்தனர்.

மீண்டுமொரு ஐஸ் வாங்கி வயக்காட்டில் அமர்ந்து தின்றோம். குதிரைகள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. கோயில் அருகில் வரும்போது தோளில் வைத்து தூக்கி வந்த குதிரைகளை தோளுக்கு மேல் தூக்கி மகிழ்ச்சியாக இளைஞர்கள் வந்தனர். கோயிலுக்கருகில் ஆயிரக்கணக்கான மக்கள் வரும் குதிரைகளை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர். கோயில் முன் இரண்டு சேமங்குதிரையிலிருந்த அய்யனாரை வணங்கிக் கிளம்பினோம். வயல்களுக்கிடையே இறங்கி மீண்டும் சாலையை நோக்கி நடந்தோம்.

முதல்நாள் நடந்த பெரியபுலி அய்யனார் திருவிழாவிற்கு வர முடியவில்லையே என வருத்தமாயிருந்தது. அன்றும் ஆயிரம் குதிரைகள் கிட்ட வந்ததாம்.

மேலூர் செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிச்சென்றோம். மேலூரில் தேனீரும் வடையும் சாப்பிட்டு பெரியார் வந்தோம். பௌர்ணமி நிலவில் பெரியார் பேருந்து நிலையத்தை பார்த்ததும் மதியம் இங்கிருந்துதான் சென்றோமா என எண்ணும் அளவிற்கு வித்தியாசமாகத் தெரிந்தது. புரவியெடுப்பு பார்க்க வேண்டுமென்று வெகுநாளாய் இருந்த ஆவல் இன்று பூர்த்தியானது. புரவியெடுப்பைக் கண்ட மனது கொண்டாட்டமாக இருந்தது. மக்கள் நாளிதழ் தினத்தந்திக்கு நன்றி.

தூங்காநகரில் உற்சவவிழா

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  மனிதன் ஒருநாள் குதிரைமேல் போவான்
  குதிரை ஒருநாள் மனிதன்மேல் செல்லும்.

  ஆயிரம் புரவி. ஆயிரமாயிரம் காலாள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

 2. வி.பாலகுமார் சொல்கிறார்:

  பயண அனுபவத்தை அழகாக தொகுத்துள்ளீர்கள். படங்களும் அருமை. செறிவாக உள்ளது, தொடருங்கள்… வாழ்த்துகள் 🙂

 3. மே.இளஞ்செழியன் சொல்கிறார்:

  முதலில் வாழ்த்துக்கள்… என் விகடனில் உங்கள் வலைபூவைப் பற்றிய செய்தியைப் படித்ததும். நண்பரின் வலைபூ தென்மாவட்ட மக்களிடம் சென்றடைய விகடன் மிகவும் உதவியுள்ளது. விகடனுக்கு நன்றிகள் பல. இந்த புதுஅறிமுகம் நண்பனை மேலும் பல செய்திகளைப் பற்றிய கட்டுரையை எழுத ஊக்குவிக்கும். மதுரையை பற்றிய செய்திகளை அதிகம் தர வாழ்த்துகிறேன். புரவியெடுப்பு பற்றி படித்தேன் … நேரில் சென்ற உணர்வுகள்… புகைப்படங்கள் அருமை. நண்பருக்கு ஒரு வேண்டுகோள் மதிரை என்ற பெயரை வழியுறுத்தி ஒரு கட்டுரைரை எழத வேண்டும். மதுரை என்ற பெயர் மாறி மதிரை என்று விரைவில் வர…. காத்திருக்கிறேன்.

 4. ஆருத்ரா சொல்கிறார்:

  கிராமத்து திருவிழாவொன்றை ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வுடன் அருமையான படங்களுடன் வயற்காடு, வைக்கோல்,ராட்டினம் என பாரதிராஜாவின் மீள் வருகையோ என எண்ண வைத்தது. சிறப்பான பதிவு “புரவியெடுப்பு”.
  உங்களுடன் சேர்ந்து ஊர்சுற்ற ஆசையாகவுள்ளது: தங்கள் பதிவின் காரணமாக.

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை நண்பரே.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

 6. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்காரன்,

  புரவி எடுப்பு – தினத்தந்தியில் படித்தது – ஆர்வத்துடன் நண்பனுடன் சென்றது – வென்னீர் ஊற்றாக வியர்வை – குச்சி ஐஸ் தின்றது – குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தது – வயக்காட்டில் குறுக்கு வழி – ஷேர் ஆட்டோ – வடையும் டீயும் – இனிதே மதுரை திரும்பியது – பயணக் கட்டுரை அருமை – மிக மிக இரசித்தேன். புகைப்படங்களும் அருமை.

  நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 7. kspalanisamy சொல்கிறார்:

  அழகிய கிராம திருவிழரவை பார்த்ததுபோல் இருக்கிறது..

 8. அப்பாதுரை சொல்கிறார்:

  முதலில் அசல் குதிரைகள் என்று நினைத்துவிட்டேன் 🙂
  படம் இன்னும் கொஞ்சம் அருகாமையில் பிடித்திருக்கலாமே? குதிரை வண்ணங்கள் பிரமாதம்.
  தாகம் அடங்கத் தண்ணீர் குடிப்பதோடு, திராட்சை அல்லது நெல்லிக்காய் போன்றவற்றை உட்கொள்வது அடிக்கடி தாகம் எடுப்பதை குறைக்கும். இந்திய வெயிலுக்கு எதுவும் அடங்காது என்பதையும் அறிவேன். தலையில் ஈரத்துண்டு கட்டி வயலில் உழும் ஆட்களைப் பார்த்திருக்கிறேன். ‘வெக்கை குறையும்’ என்பார்கள். உண்மையா தெரியாது. அடுத்தப் பயணத்தில் experiment செய்யுங்கள் 🙂

 9. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  பொறாமையாக இருக்கிறது.
  எமது பண்பாட்டு கலாசார சடங்கு சம்பிரதாயங்களை
  மறந்துவிடாமல் மக்கள்
  இவ்வளவு பெருவாரியாக
  இவற்றைச் செய்வதைப் பார்த்து…
  அத்துடன் அவற்றை ஆவணப்படுத்தி
  அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தும்
  உங்கள் பதிவுகள் அருமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s