நன்றி

Posted: ஜூலை 15, 2012 in பார்வைகள், பகிர்வுகள்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

– திருமந்திரம்

என்னை நன்றாக மதுரை காக்கிறது

தன்னை நன்றாகப் பதிவு செய்யுமாறே!

– சித்திரவீதிக்காரன்

மதுரை வீதிகளில் அலைந்து திரியும் புழுதியொன்று காற்றின் தீராத பக்கங்களில் மதுரையை வரைந்து செல்கிறது. (நன்றி: பிரமிள்) மதுரையைப் பற்றி எத்தனை ஆயிரம் பதிவுகள் எழுதினாலும் தீராது. சித்திரைவீதிகளில் தொடங்கி சித்திரவீதி வரை 99 பதிவுகள் வந்துவிட்டன. இந்தப் பதிவு நூறாவது பதிவு. மதுரையைப் போல மனசு முழுக்கக் கொண்டாட்டமாயிருக்கிறது. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

¤¤¤¤        ¤¤¤¤        ¤¤¤¤

தீர்க்கவே முடியாத நன்றிகளால்தான் நம் ஒவ்வொருவருக்குமான உலகம் உயிர்த்திருக்கிறது! யார் என்ன என்றே தெரியாமல் நம்மைத் தொட்டுத் தூக்கிய இதயங்கள் எவ்வளவு இருக்கின்றன. வலிகளோடும் தழும்புகளோடும் அணைத்துச் சிரித்த அண்ணன்கள் மட்டும் இல்லையென்றால் நானெல்லாம் என்னவாகியிருப்பேன்…? அன்பாலும் கண்டிப்பாலும் இந்தப் பாதையைப் போட்டுத்தந்த அண்ணன்களுக்கு என்ன நன்றி செய்துவிட முடியும்…? இந்த வாழ்க்கையே அவர்களுக்கான நன்றிதான் எனத்தோன்றுகிறது.

– ராஜூமுருகன் (ஆனந்தவிகடன்)

¤¤¤¤        ¤¤¤¤        ¤¤¤¤

திரும்பிப்பார்க்கும்போது நானும் எவ்வளவுபேருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று எண்ணத்தோன்றுகிறது. அவர்களிடம் எல்லாம் என் நன்றியை எப்படிச் சொல்வது? நன்றியை வார்த்தைகளில் சொல்லிவிட முடியுமா என்ன? இளம்பிராயத்தில் எனக்கு எழுதக் கற்றுத்தந்த சுந்தரி அக்காவிற்கு எப்படி நன்றி சொல்வது? வாசிக்க நல்ல புத்தகங்களை வாங்கித் தந்தும், இந்தப் பதிவுவரை என்னுடன் உறுதுணையாக நிற்கும் சகோதரர்க்கும்,  என்னை வழிநடத்தி வரும் சகோதர-சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும், பதிவுகளை வாசித்து மறுமொழியளித்து ஊக்கமளித்து வரும் தமிழ் நெஞ்சங்களுக்கும், மதுரைப் பதிவர்களுக்கும், பசுமைநடை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

¤¤¤¤        ¤¤¤¤        ¤¤¤¤

குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். என்னை குரு பார்த்ததோடு நில்லாமல் தன் வரவேற்பறையில் இடம் தந்து தெற்கு நோக்கும்போது தன் வலையோசையிலும் இடம் தந்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார். இன்னும் பதிவுகளை சிரத்தையோடு எழுதுவதே வியாழன்தோறும் வரும் குருபகவானுக்கு நான் செலுத்தும் காணிக்கையாகும். குருவே சரணம்.

¤¤¤¤        ¤¤¤¤        ¤¤¤¤

சேட்டைக்கார குரங்கொண்ணு சாராயத்தை தெரியாமக் குடிக்க, அந்நேரம் அதத் தேள் ஒண்ணு கொட்ட, மேலும், பேய் ஒண்ணு பிடிக்க அந்தக் குரங்கோட நிலை எப்படியிருக்குமோ அப்படியிருந்தது கொஞ்சநாளா என் மனசு. உடல்நிலை தளர்வு வர, மனதில் ஏற்பட்ட குழப்பம் உடலில் நடுக்கமாய் பரவ, சகல அணுக்களும் ஆட்டம் காட்டிவிட்டன. துயில் நாவல் பற்றிய பதிவுக்கு எழுதிய தலைப்பு இப்பொழுது ஞாபகம் வருகிறது. ‘வாதைக்கும் மீட்சிக்கும் இடையேயான பயணம்’. இனி தடையின்றி பயணம் இனிதே தொடர மதுரையும் தமிழும் அருளட்டும்.

¤¤¤¤        ¤¤¤¤        ¤¤¤¤

கமல்ஹாசன் படம் வருகிறதென்றாலே எதாவது விமர்சனம் செய்பவர்கள், விஸ்வரூபம் எடுத்து வருகிறார் என்றால் சும்மா விடுவார்களா? ஆனால், படத்தின் முன்னோட்டக் காட்சியின் போது வரும் பாடலே இவர்களுக்கு பதிலாய் அமைகிறது.

யாரென்று தெரிகிறதா?

இவன் தீயென்று புரிகிறதா?

தடைகளை வென்றே

சரித்திரம் படைத்தவன்

ஞாபகம் வருகிறதா?

அபூர்வசகோதரரின் விஸ்வரூபம் காண ஆவலாய் உள்ளேன். கமல்ஹாசன் குரலில் வந்த பாடல்களின் பன்முகத்தன்மை குறித்து தனிப்பதிவு எழுத வேண்டுமென்ற ஆசை உதித்துள்ளது. விரைவில்…

¤¤¤¤        ¤¤¤¤        ¤¤¤¤

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் முன்னுரையில் வண்ணதாசன் சொல்லும் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது.

என்னால் பூக்களை விட முடியவில்லை. அது குளத்திலாயினும், தோட்டத்திலாயினும், தோட்டத்திற்கு வெளியிலாயினும். ஏதாவது ஒரு வகையில் என் வரிகளுக்கும் அதற்குமான சம்பந்தம் தீர்ந்துவிடவில்லை. ‘விடுமென்று தோன்றவில்லை.’ விடவேண்டும் என்ற அவசியமுமில்லை. பூ எதற்குத் தீர வேண்டும். தீ எதற்கு அணைய வேண்டும்?

என்னாலும் மதுரையை விட முடியாது. தமிழ் என் மொழியாக இருப்பது வரம். சொர்க்கமே என் ஊராக அமைந்தது நான் செய்த பாக்கியம். இதுவரை எழுதிய, தொகுத்த எல்லாப் பதிவுகளும் எனக்கு நெருக்கமாகவே தோன்றுகிறது. உள்ளானும் சுள்ளானும் போலக் கேட்ட கதைகளை இன்னும் தொகுக்க வேண்டும். நாட்டுப்புறக்கலைகளைப் போய் பார்த்து பதிவு செய்ய வேண்டும். வாசித்த புத்தகங்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும். மதுரை வீதிகளை சித்திரமாகப் பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் நன்றி. எனைக்காக்கும் மதுரைக்கும், தமிழுக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
 1. dharumi சொல்கிறார்:

  நடையில் நட்டுவாங்கம் என்று சொல்வார்களே .. அதுபோல் இருந்தது இடுகை.

  மதுரை உங்களை ‘ரட்சிக்கட்டும்’!

 2. Bhaskar சொல்கிறார்:

  மதுரை சென்று வந்த உணர்வு நண்பரே. தொடரட்டும்.

 3. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்க்கார,

  நன்றி சொல்வது நற்றமிழர் பண்பு – அதனை இவ்வளவு தெளிவாக – எங்கெங்கு சொல்ல இயலுமோ – அங்கெல்லாம் சொல்வது சாலச் சிற்ந்த ஒன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்க்கார,

  நூறாவது பதிவினிற்குப் பாராட்டுகள் – இன்னும் ஆயிரம் பதிவுகள் இடுவதற்கு மதுரை மீனாட்சியின் அருளும் – தெற்கத்திக் கடவுள் ஆலமர் செல்வனின் அருளும் ஒருங்கே அமையப் பெற பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  100வது பதிவுக்கு எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.

 6. ஆருத்ரா சொல்கிறார்:

  சித்திரவீதிக்காரரே!
  தாங்கள் “கிறுக்கல்கள்”என்று குறிப்பிட்டவை ஓவியங்கள் என்ற வகையில் அடங்குபவை. ஐயப்படத் தேவையில்லை.
  அழகாகவே படம் வரைய வருகின்றது. வாழ்த்துக்கள்.
  தங்களது 100வது பதிவான நன்றிகள் அனைத்துத் தரப்புக்கானவை. “தமிழ் என் மொழியாக இருப்பது வரம் .சொர்க்கமே என் ஊராக அமைந்தது நான் செய்த பாக்கியம்”. வரிகளை இரசித்தேன். பதிவு எழுதக் கிடைத்தது பிறவிப்பயன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s