ஆடித்தேர்நடை ஆடியாடி…

Posted: ஓகஸ்ட் 13, 2012 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்

தேர் அழகு! தேர் அசைந்தாடி வருவது அழகு!

அசைந்தாடிவரும் தேர் ஆடியில் வருவது அழகு!

ஆடியில்வரும் தேரில் அழகன் வருவது அழகு!

அழகன் வரும் தேரை அழகுமலையில் காண்பது அழகு!

மதுரை சித்திரைத் திருவிழாவைப் போல அழகர்கோயிலில் ஆடித்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அழகர்கோயிலுக்கு வந்து தீர்த்தமாடிச் செல்வதை கிராம மக்கள் தங்கள் கடமையாகவே கொண்டுள்ளனர். பதினெட்டாம்படிக்கருப்பைக் கும்பிட்டு அழகனை வணங்கி சிலம்பாற்றில் நீராடி இராக்காயி அம்மனை வழிபட்டு சோலைமலை முருகனை வணங்கி வருவது மகிழ்வான அனுபவம்.

அழகர்கோயில் தேர்த்திருவிழா மற்ற கோயில் தேர்த்திருவிழாக்களைவிட சற்று வித்தியாசமானது. தேர் கோயிலைச் சுற்றி வருவதில்லை. கோயிலுக்கு வெளியேயுள்ள அழகாபுரிக்கோட்டையைச் சுற்றி வருகிறது. சுற்றியுள்ள கிராம மக்கள் இத்திருவிழாவிற்கு திரளாக வருகின்றனர். தேர் முன்பு கருப்பசாமியாடிகளும், கண்ணன் பாடல்களைப் பாடி கோலாட்டம் ஆடி வருபவர்களைக் காண்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அழகன் வரும் தேரழகைக் காண ஆயிரங்கண் வேண்டும்.

அழகர்கோயில் தேரோட்டம், அழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும் திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும் என்ற முந்தைய பதிவுகளையும் வாசித்துப்பாருங்கள். அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் குறித்து இது மூன்றாவது பதிவு. இரண்டாண்டுகளுக்கு முன்பு புழுதி பறக்க வந்த தேர் இப்பொழுது சிமெண்ட் சாலையில் வருகிறது. அதைத் தவிர மாற்றங்கள் ஏதுமில்லை.

 

அழகர்கோயில் ஆடித்தேர்திருவிழா ஒரு பண்பாட்டுத்திருவிழா என்றும் சொல்லலாம். நாம் தொலைத்த பல விசயங்களை இங்கு இயல்பாகக் காணலாம். சொளகு, மூங்கில் கொட்டான், கூட்டு வண்டி, சவ்வுமிட்டாய் என ஒவ்வொன்றையும் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியை சொல்லி மாளாது.  மலையருகில் தேர் மலை போல அசைந்து வருவது அழகு. கோட்டை சுவர்களுக்கருகில் நகர்ந்து வருகின்ற தேர் இன்னும் அழகு. தேர் ஏறி வரும்  அழகன் அதிஅழகு. எளிய மக்கள் வண்டி கட்டிவந்து அழகனை வணங்கிச்செல்வதைக் காண்பது இன்னும் அழகு.

கருப்பு சாமியாடி வந்தவர்களில் ஒருவர் எங்க தாத்தா மாதிரியே இருந்தார். அவர் மற்றவர்க்கு அருள் சொல்லும்போது கழுத்திலிருந்த மாலையை பிடித்துக் கொண்டு கைகளை சுழற்றி சுழற்றி சொன்னதைப் பார்த்துக்கொண்டே நின்றேன். இம்முறை தேரோட்டத்தில் மறக்க முடியாத நிகழ்விது.

மற்ற தேரோட்ட நிகழ்வுகளை முந்தைய பதிவுகளில் வாசியுங்கள்.

ஆனந்தவிகடன் வழங்கும் இன்று ஒன்று நன்றுவில் வண்ணதாசன் தேரோட்டம் குறித்து சொன்னதை தொகுத்திருக்கிறேன். வாசித்துப்பாருங்கள். வாழ்க்கையை நிதானமாக கொண்டாட கற்றுத் தருகிறார்.

நான் வண்ணதாசன் பேசுகிறேன். இதுவரை எழுத்துகள் மூலமாக உங்களை அடைந்த நான் குரலின் மூலமாக இன்று ஒன்று நன்று எனத் தொடுகிறேன். சமீபத்தில் தான் எங்கள் ஊரில் தேரோட்டம் முடிந்தது. ஒவ்வொரு வருசமும் ஆனி மாதம் தேரோடும். இந்த வருடம் ஆனித்திருவிழாவிற்கு நான் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது. வேறென்றைக்கும் இல்லாவிட்டாலும் தேரோட்டத்தன்றைக்கு எப்படியாவது என்னுடைய ஊரில் அல்லது பிறந்த வளர்ந்த வீட்டில் இருக்கத்தான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. யாருக்கும் அது இயற்கைதானே. அந்தந்த ஊர்த்திருவிழாவை அந்தந்த ஊரில் அதே ஆட்களோடு பார்க்க வேண்டும் என்று தோன்றத்தானே செய்யும். அப்படித்தோன்றாவிட்டால் அப்புறம் நான் என்ன மனுசன்? அது என்ன சொந்த ஊர்?

இந்தத்தடவை தற்செயலாகத் தேரோட்டத்தன்றைக்கு நான் பெங்களூரில் இருக்கிறேன். நண்பன் பரமனிடமிருந்து போன் வருகிறது: “கல்யாணி, இன்னைக்கு நம்ம ஊர்ல தேரோட்டம்”. அதை கேட்ட உடனே எனக்குள் ஒரு சத்தம் கேட்கிறது. வடம் பிடிக்கிறவர்கள் சத்தம். நகரா அடிக்கிறவர்கள் சத்தம். வேட்டுப்போடுகிறவர்களின் சத்தம். இவையெல்லாம் மொத்தமாக சேர்ந்த ஆனித்திருவிழாவின் சத்தம். எனக்கு தேர் அசைந்து அசைந்து வாகையடிமுக்குத் திரும்பி தெற்குரத வீதியில் வருவது மாதிரித்தெரிக்கிறது. தேர் தேர்தான். நின்றாலும் அழகு. நகர்ந்தாலும் அழகு. தேர் அசைந்த மாதிரி இருக்குமென்று சொல்வது எப்பேர்ப்பட்ட வார்த்தை. தேர் அசைந்து வருவதுதான் அழகு. உச்சியிலே கொடி பறக்கும். ஏழுதேர்தட்டும் லேசாக அசையும். நிஜமாகவே நான்கு மரக்குதிரைகளும் நமக்கு மேல் பாய்கிற மாதிரியிருக்கும். தூரத்திலிருந்து பார்க்கிறபோது சாமியைக் கும்பிடத் தோன்றுகிறதோ இல்லையோ அசைந்து வருகிற தேரைக் கண்டிப்பாக கும்பிடத் தோன்றிவிடும்.

நான் பரமனிடம் பதிலுக்குக் கேட்கிறேன்: “தேர் பார்க்கப் போயிருக்கியா? தேர் எங்கப்பா வருது?”. “நான் எங்கே போக மயூரில, ஏஎம்என் டிவிலயெல்லாம் வைவ்வா காட்டுறான். சும்மா பாத்துட்டு உட்கார்ந்திருக்கேன்” என்கிறான். இதைச் சொல்ல அவனுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்திருக்க வேண்டும். சிரிப்பு அப்படித்தான் நேரே நம் முகத்தைப் பார்க்காமல் சற்று குனிந்து கொண்டிரந்த மாதிரியிருந்தது. இது முடிந்த கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது. அதிகமாகப் போனால் காலை  பதினொரு மணிகூட இருக்காது. மூங்கில்மூச்சு சுகா அவருடைய முகப்புத்தகத்தில் தேர் லாலாசத்திரம் முக்குத் திரும்பிட்டுதாம் என்று ஒரு தகவலைப் போடுகிறார். லாலாசத்திரம் முக்குத் திரும்பியாகிவிட்டதென்றால் இனிமேல் ராயல்டாக்கீஸ் முக்கு அதற்குப் பிறகு நேராகத் தேர் போய் நிற்க வேண்டியது நிலையில்தான். எதற்கு இப்படி அவசரப்படவேண்டும்? நெல்லையப்பரை இப்படி வேகமாகக் கொண்டுபோய் நிலையில் நிறுத்துவதற்கு எதற்கு இந்த கொடியேற்று? எதற்கு இந்த ஒன்பது நாள் திருவிழா? சப்பரம், சாமி புறப்பாடு எல்லாம்?.

நான்கு ரத வீதிகளில் ஒவ்வொரு ரதவீதி முக்கிலேயும் தேர் ஒரு நாளாவது நின்று புறப்பட்டால் நன்றாகத்தானே இருக்கும். எதற்கு இந்த அவசரம்? இப்படி பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் முடிவதற்குப் பேர் தேரோட்டமா? இப்படி வேகவேகமாக முடித்துவிட்டால் அடுத்து நாம் என்னதான் செய்யப் போகிறோம்? மிஞ்சிப்போனால் தொலைக்காட்சி அல்லது ஒரு திரைப்படம் அல்லது சற்று தூக்கம் அதுதான் என்றைக்கும் இருக்கிறதே. இன்றைக்கும் வேண்டுமா? திருவிழாக்களை ஏன் ஆறஅமர நிதானமாக சந்தோஷமாக நாம் கொண்டாடக் கூடாது. பனி உருகுவது போல, பூ உதிர்வது போல அல்லது ஒரு தொட்டில் பிள்ளை தூக்கம் கலைந்து அழுவது போல ஒரு திருவிழாவை ஏன் அதன் போக்கில் நிகழ்த்தக் கூடாது? இவ்வளவு கனத்த வடம் பிடித்து இவ்வளவு பெரிய தேரை இத்தனை பேர் இழுக்கிற காட்சி எவ்வளவு அருமையானது.

தேர் என்றாலும் சரி வாழ்க்கை என்றாலும் சரி கூடி இழுக்கும்போது அசைந்து அசைந்து அது நகர்வது நன்றாகத்தானே இருக்கும். அது திருவிழாவாக இருக்கட்டும், நீங்கள் தொடுத்த பூவை உங்களுடைய சினேகிதியின் தலையில் சூடுவது போன்ற அல்லது தொலைபேசியில் கூப்பிட்டு உங்கள் நண்பனுக்கு திருமணநாள் வாழ்த்து சொல்வது போன்ற சில எளிய சந்தோஷங்களாக இருக்கட்டும். ஏன் நாம் நிதானமாகக் கொண்டாடக் கூடாது. நிதானமாகக் கொண்டாடுவோம். அறுவது நொடிகள் ஓடவேண்டிய தேரை ஏன் ஒரே ஒரு நிமிடத்தில் நாம் இழுத்து முடிக்க வேண்டும். கேட்பது நானல்ல அந்த நான்கு ரதவீதிகளும்.

– வண்ணதாசன்

வண்ணதாசன் சொல்வது எவ்வளவு உண்மை. வாழ்க்கை ஒரு திருவிழா அதைக் கொண்டாடுங்கள் என்கிறார் ஓஷோ. எல்லோரும் கொண்டாடுவோம். ஆடித்தேரோட்டம் காணும் ஆவலைத் தூண்டியது தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் புத்தகம்தான். அவருக்கு என் நன்றிகள் பல. வண்ணதாசனின் குரலில் தேரோட்டம் கேட்க வாய்ப்பளித்த ஆனந்தவிகடனுக்கும் நன்றிகள் பல.

அழகர்கோயில் தேரோட்டம்

அழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும்

அன்னவாகனத்தில் அழகுமலையான்

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  தேரோட்டம் என்பதை தேர்நடை என்று மாற்றுங்கள் முதலில். சற்று மெதுவாக சுற்றவிடுகிறார்களா பார்க்கலாம்.

  குள்ளச்சித்தன் சரித்திரத்தில், அய்யர் பேசும்போது ‘கட்டையைப் போட்டுத் திருப்பிவிடுவதுபோல’ அவ்வப்போது சில கேள்விகள் கேட்பது தவிர யாரும் குறுக்கிடுவதில்லை என்று வரும். இஞ்சினும், ஸ்டீயரிங்கும் வைத்து தேர்கள் வந்துவிட்டால் இதுபோன்ற உவமைகள் எங்கிருந்து வரும்? (இருந்தாலும் ‘உன்னைப்போல் ஒருவனி’ல் மோகன்லால் சொல்வதுபோல பாதுகாப்பு குறிச்ச சில காரணங்களையும் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்)

  • கீதமஞ்சரி சொல்கிறார்:

   தேரோட்டத்தின் அழகை வர்ணித்த வார்த்தைகளோடு அதன் இன்றைய நிலையைப் பற்றிய ஆதங்கம் தொணிக்கும் வார்த்தைகளும் மனதைக் கவ்விப் பிடிக்கின்றன. தேர்த்திருவிழாப் படங்களும், சுளகு, கொட்டான், சவ்வுமிட்டாய் போன்ற புழக்கம் மறந்துபோனப் பொருட்களின் நினைவூட்டலும் கொஞ்ச நேரம் என்னை திருவிழாத் தெருக்களில் அலையவிட்டிருந்தன.

   வண்ணதாசன் அவர்களின் வார்த்தைகள் நிதர்சனம் காட்டுபவை. நவ நாகரீக, அவசர யுகத்தில் இது போல் எத்தனை பாரம்பரிய கலாச்சார அடையாளங்கள் தங்களிருப்பைத் தக்கவைக்கத் தவறிவிடுகின்றன! பகிர்வுக்கு மிகவும் நன்றி நண்பரே.

 2. படமும் பதிவும் நேரில் கண்டது போல் இருந்தது…

  தொடருங்கள்… வாழ்த்துக்கள்… நன்றி…

 3. Prasanna சொல்கிறார்:

  All the photos are..AMmmmmmmmmmmmmmmmmmmmmaaaaaaaaazing

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s