பால்பன் அழைக்கிறது…பாலமேடு செல்கிறோம்

Posted: ஓகஸ்ட் 17, 2012 in ஊர்சுத்தி, தமிழும் கமலும், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

நடைப்பயிற்சி செய்யும்போது உங்களுடைய பாதத்தை பாதி கடித்தும் கடிக்காததுமாக பச்சையும் மஞ்சளுமான நிறத்தில் ஒரு மாம்பழம் தடுக்கியதா? இன்று உங்கள் வீட்டில் வாசல் தெளிக்கையில் நேற்றுப்போட்ட கோலத்தின் மேல் செக்கச்சிவப்பாக ஒரு வாதாம்பழம் கிடந்ததா? பள்ளிக்கூடத்திலிருந்து வருகிற உங்கள் பிள்ளையின் கையில் ஒரு காக்கைச்சிறகு இருக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! உங்களுடைய இந்த நாள் நன்றாகத் துவங்கியிருக்கிறது. சந்தோஷப்படுங்கள் இந்த நாள் நன்றாக நிறைந்துகொண்டிருக்கிறது.

ஒரு கடிபட்ட மாம்பழத்திற்காக, ஒரு வாதாம்பழத்திற்காக, ஒரே ஒரு காக்கைச்சிறகுக்காக எல்லாம் ஒருவன் சந்தோஷப்படமுடியுமா என்று கேட்கீறிர்களா? நிச்சயம் சந்தோஷப்படலாம். நீங்கள் மாமரங்களுக்கருகில், வாதாம்மரத்திற்கருகில் மட்டுமல்ல, பழந்திண்ணி வவ்வால்களோடும், அணில்பிள்ளைகளோடும், காகங்களோடும் இருக்கிறீர்கள். உங்கள் உலகம் பத்திரமாக இருக்கிறது. அலுவலகத்திலிருந்து திரும்பிவரும்போது உப்புபோட்டுக் குலுக்கிய நாவல்பழங்களுள்ள ஒரு வெங்கலக்கிண்ணம் உங்களை வரவேற்கிறதா? சந்தோஷப்படுங்கள். உங்களுக்கு பிடித்த பெரியம்மாவைப் பார்க்க வேண்டுமென்று திடீரென உங்களுக்குத் தோன்றுகிறது. பஸ் ஏறிப்போகிறீர்கள். அளிக்கதவைத் திறந்து வீட்டுக்குள் கால்வைக்கும் போது மஞ்சள்பொடி வாசனையுடன் பனங்கிழங்கு வேகிற வாசனை வருகிறது. சந்தோஷப்படுங்கள்.

இலந்தப்பழம் கொண்டுவருகிற உறங்கான்பட்டி ஆச்சிக்காக, மருதாணி அரைத்து எல்லோருக்கும் வைத்துவிடுகிற மீனா அக்காக்காக, திருவாசகம் படித்துக்கொண்டே பழைய செய்தித்தாள்களில் விதம்விதமாக பொம்மை செய்து தருகிற பூசைமடம் தாத்தாவுக்காக சந்தோஷப்படுங்கள். கடவுளின் துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட மின்னணுமயமாகிவிட்ட வேகவேகமான பதிவிறக்க நாட்களில் இதற்கெல்லாம் ஒருத்தன் சந்தோஷப்படுவானா என்று யாரும் உங்களைக் கேலி செய்தால் அந்த மெட்ரோ கேலிகளை, மாநகரக் கிண்டல்களை சற்றே ஒதுக்கித்தள்ளுங்கள். அவர்கள் சுத்திகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கிறவர்கள். அவர்களை நீங்கள் அதிகம் பொருட்படுத்தாதீர்கள்.

ஓடுகிற ஆற்றில் கல்மண்டபத்து படித்துறையிலிருந்து உங்களுடைய வட்டப்பாறைகளுக்கு நீங்கள் உங்கள் போக்கிலே நீந்திக்கொண்டு சென்றிருங்கள். உங்களுடைய நாணல்திட்டுகளுக்கு, தாழம்புதர்களுக்கு, புளியமரச்சாலைகளுக்காக நீங்கள் சந்தோஷப்படுங்கள். உங்கள் வீட்டுக்குப் போகிற வழியில் உதிர்ந்து கிடக்கும் வேப்பம்பூக்களுக்காக, பூ கொறித்து பூ உதிர்த்து தாவும் அணில் குஞ்சுகளுக்காக  சந்தோஷப்படுங்கள். அரிநெல்லிக்காய்களுக்காக, செம்பருத்திப்பூக்களுக்காக, விதையுள்ள கொய்யாப்பழங்களுக்காக சந்தோஷப்படுங்கள். இயற்கை உங்களுக்கு மிக அருகில் இருக்கிறது. நீங்கள் இன்னும் இயற்கையின் நடுவிலே இருக்கிறீர்கள். உங்கள் வீட்டுச் செம்மண் முற்றத்தில்தான் மழைக்குப்பிந்திய மண்புழுக்கள் நெளியும். உங்கள் வீட்டுச்சுவரோரம்தான் மார்கழி மாதம் ரயில்பூச்சிகள் ஊர்ந்துசெல்லும். சரியாகச்சுடப்பட்ட ஒரு பேக்கரிரொட்டியின் நிறத்தில்தான் ஒரு குடைக்காளான் நீங்கள் புகைப்படமெடுப்பதற்கு தயாரானதுபோல முளைத்திருக்கும். உங்களுடைய தினங்களில் அணில் கடித்த பழமாக, வவ்வால் போட்ட வாதாம் கொட்டையாக, காக்கைச்சிறகாக கிடைப்பதெல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிற சந்தோஷங்கள். கொஞ்சம் குனியுங்கள். உங்கள்  சந்தோஷங்களை நீங்களே பொறுக்கிக் கொள்ளுங்கள்.                              

– வண்ணதாசன்( இன்று ஒன்று, நன்று – விகடன்)

பயணங்கள் இனிமையானவை. பால்பன்னுக்காக பாலமேடு நோக்கி பயணித்தது அதைவிட இனிமையானது. தித்திப்பான அந்தப் பயணத்தையும் அங்கு எடுத்த படங்களையும் குறித்த சிறுபகிர்வுதான் இந்தப் பதிவு. சந்தோஷமாக இருக்கிறது. இயற்கையின் அருகாமையில் இருக்கிறோம். இயற்கையோடு பயணிக்கிறோம் எனும்பொழுது இன்னும் சந்தோஷமாகயிருக்கிறது. நவாப்பழங்களை உலுப்பிய இடங்களுக்கருகே சென்று (சுடாத பழமாக) வாங்கித் தின்பது சந்தோஷமாகத்தானிருக்கிறது.

 கடந்த பத்து நாட்களுக்குள் பாலமேடு பக்கம் மூன்றுமுறை பயணிக்கும் வாய்ப்பு கிட்டியது. எந்தவிதமான முக்கியநோக்கமும் இல்லை. நண்பருக்கு இருசக்கர வாகனத்தில் மிதமான வேகத்தில் பயணிப்பது பிடிக்கும். எனக்கு பின்னால் அமர்ந்து பராக்கு பார்த்துக்கொண்டு செல்வது ரொம்பப் பிடிக்கும்.

சிக்கந்தர்சாவடி தாண்டியதும் கிராமத்துச்சாலை நம்மை வரவேற்கிறது. சாலையோர மரங்கள் தரும் நிழலில் பயணிப்பது சுகமான அனுபவம். குமாரம் தாண்டியது வலசைப் பிரிவுக்கருகில் உள்ள மின்கம்பத்தில் தூக்கணாங்குருவிக்கூட்டைப் பார்த்தேன். கடந்த மூன்று வருடங்களாக இந்தப்பக்கம் பயணிக்கும் போதெல்லாம் தூக்கணாங்குருவிக்கூடைத் தேடிப்பார்ப்பது வழக்கம். கரும்புத்தோட்டத்திற்கு நடுவே பாதுகாப்பாக இருந்தது. சந்தோஷம்.

குமாரம் தாண்டியதும் இருபுறமும் மிகப்பசுமையான பாதைகளுக்கிடையில், சிலுசிலுவென அடிக்கிற காற்றில் பயணிப்பது சுகமான அனுபவம்.

மிக நெருக்கமாகத் தெரியும் மலைத்தொடர்களும், தென்னந்தோப்புகளும், வாழைத்தோப்புகளும், கரும்புத்தோட்டங்களும் என கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். கிடைமாட்டு மணிச் சத்தம் கேட்டு பயணிப்பது இனிமையான அனுபவம்.

வழிநெடுக உள்ள வீடுகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கூரை அல்லது ஓடு மேலே வேயப்பட்ட மண்சுவராலான வீடுகள். வாசலில் இருபுறமும் திண்ணை, முன்னால் சாணி தெளித்து இருப்பதைப் பார்க்கும் போது அங்கேயே தங்கிவிடலாமென்று இருக்கும். தென்னை ஓலைகளை வெட்டி தட்டி பின்னுவது இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் தொழில்.

பாலமேடு போய் பால்பன் வாங்கினோம். சூடாகயிருந்த பொன்னிறமான பால்பன்னை ஜீராவில் தோய்த்தெடுத்து கொடுத்தார். ஒன்றை முழுதாக தின்னமுடியவில்லை. அவ்வளவு திகட்டியது. இனிப்பை அடக்க காரத்தை வாங்கினோம். வடை வாங்கி சட்னியில் தோய்த்து தின்றோம். பாலமேட்டிலிருந்து அப்படியே நத்தம் செல்லும் சாலை அல்லது சாத்தியார் அணைப்பக்கம் போய்த் திரும்புவது வழக்கம். அந்த மலைப்பயணம் குறித்து தனியொரு பதிவு செய்யணும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப்போல பாலமேடு ஜல்லிக்கட்டும் புகழ்பெற்றது. மாட்டுப்பொங்கலன்று இந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். வாடிவாசலைப் போய் புகைப்படமெடுத்துக்கொண்டேன். வாடிவாசல் பக்கமிருந்த கமல்ஹாசன் நற்பணி மன்ற பதாகையைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினோம். மிகவும் இனிப்பாக இருந்தது. பாலமேட்டில் பால்பண்ணை உள்ளதால் இங்கு பால்கோவா, பால்பன் மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்காகவே இந்தப் பக்கம் பயணிக்கிறோம் என்று கூட சொல்லலாம்.

பாலமேடு ஊர் தொடக்கத்தில் உள்ள கருப்பசாமி கோயிலுக்கு சென்றோம். சமீபத்தில் புரவியெடுப்பு நடந்திருக்கும் போல. அய்யனாரையும், கருப்பனையும் வணங்கி புரவிகளைப் படமெடுத்து வந்தோம். வழிநெடுக கொன்றை மரங்கள் குடைபிடித்து நின்றன. எர்ரம்பட்டி பிரிவிலுள்ள பெட்டிக்கடையில் தேநீர் வாங்கி அருகிலுள்ள பட்டியக்கல்லில் அமர்ந்து மரத்தில் சாய்ந்துகொண்டு தேநீர் அருந்துவது தனிசுகம்.

அங்கிருந்து கிளம்பி வரும் வழியில் ஓரிடத்தில் மரங்கொத்தி போன்ற பறவை ஒன்றை மின்கம்பத்தில் பார்த்தேன். அழகாக இருந்தது. நான் போய் படம் எடுக்கும் வரை நின்று கொண்டிருந்தது.

அலங்காரநல்லூர் என்றதாலோ என்னவோ நாங்கள் சென்ற அன்று முனியாண்டி நல்ல அலங்காரத்தில் நின்றார். வணங்கி வந்தோம்.

இப்பயணத்திற்கு உடன்வந்த பவர்ஸ்டார் பாசறையைச் சேர்ந்த நண்பர்களுக்கு நன்றி.

இந்தப்பயணத்தில் நடந்த ஒரு கூத்தோடு இப்பதிவை முடிக்கிறேன். பாலமேட்டில் உள்ள ஏ.டி.எம்’மில் நூறுரூபாய் பணம் எடுக்கச்சென்றேன். பணம் பரிவர்த்தனை நடந்துகொண்டிருந்த போதே காலம் கடந்துவிட்டது என்பது போன்ற ஒரு வாசகத்துடன் நின்றுவிட்டது. ஆனால், பணம் எடுத்ததாக அலைபேசியில் குறுந்தகவல் வந்துவிட்டது. மறுநாள் வங்கியில் இருப்பை சரிபார்த்துவிட்டு மேலாளருக்கு ஒரு உணர்ச்சிகரமான கடிதத்தை  ‘பணமும் வரவில்லை; ரசீதும் வரவில்லை’ என்ற வசனத்துடன் எழுதிக்கொடுத்துள்ளேன். இந்த வரிகளை வாசித்து வாசித்து அவரும் சந்தோஷமாய் இருக்கட்டும். நீங்களும் சந்தோஷமாகயிருங்கள்.

தொடர்புடைய பிற பதிவுகள்

சாத்தியார் அணையும் கல்லுமலை கந்தன் கோயிலும்

அருகிவரும் இசைக்குறிப்புகள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன்

பின்னூட்டங்கள்
 1. பயண அனுபவமும், படமும் அருமை…

  பால்பன் நம்ம ஊர் சின்னளாப்பட்டி.. பேமஸ் ஆச்சே…

  நல்ல வேளை 100 ரூபாயோடு போச்சி…

  • vidhyahari சொல்கிறார்:

   வண்ணதாசனின் வரிகள் என்னை என் குழந்தைப்பருவ நினைவுகளில் மூழ்கச்செய்தது. பாலமேடு பால்கோவாவை விரும்பாதவர்கள் உண்டா? நான் சிக்கந்தர் சாவடி தாண்டி போனதேயில்லை. ஆனால் ்தங்களின் பயண அனுபவங்களும் படங்களும் என்னையும் பயணப்பட தூண்டின. தங்களின் எழுத்தை நான் வாசிப்பது இதுதான் முதன்முறை. இயல்பான நடையில் எங்களையும் உடன் அழைத்துச்சென்ற பரவசத்தை தந்தது. படங்கள் நிழல்போலன்றி நிஜங்களுக்குள் கூட்டிச்சென்றது. அருமை.

  • நூறு ரூபாயை ஒரு வாரம் கழித்து வங்கிக்கணக்கில் ஏற்றிவிட்டார்கள். மறுமொழிக்கு நன்றி.

 2. vetrimagal சொல்கிறார்:

  அருமைங்க! அப்பிடியே மனசு நிறைஞ்சு போச்சு. கூடுகள் படம் அற்புதம்.!
  நன்றி.

 3. ஆருத்ரா சொல்கிறார்:

  பால்பன் அருமை. வாசிக்கக் கிடைத்தது. சுவைக்கக் கிடைக்கவில்லை. மரங்களால் சூழப்பட்ட மண்வீடு, பெட்டிக்கடை,
  சுடச்சுட தேநீர். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். நவாப் பழங்கள் என்பது நாவல் பழங்கள் தானே.சுட்ட பழமெனில்
  ஊதிச் சாப்பிடவேண்டும். ஊதாமல் சாப்பிடுபவை சுடாத பழங்கள். ஔவையார் ஞாபகத்திற்கு வந்து விட்டார்.

 4. அப்பாதுரை சொல்கிறார்:

  பொறாமைப்பட வைக்கிறீர்கள். அருமையான அனுபவம்.
  பால்பன் கேள்விப்பட்டதில்லை. ரொட்டியை பாலில் ஊறவைத்துக் கொடுக்கிறார்களா? பார்க்க சுவையாக (கொஞ்சம் பயமாகவும்) இருக்கிறது.

  வண்ணதாசனின் எழுத்து ஈர்க்கிறது. விழித்தவன் விழித்ததற்காக சந்தோஷப்படலாம், அல்லது தூக்கம் கெட்டதற்காக வருத்தப்படலாம். ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்பதற்கு புதுப் பொருள் அறிந்தேன்.

  படங்கள் பரவசப்படுத்துகின்றன. நடுவில் மரங்கள் சூழ அமைதியாக இருக்கும் குடிசையில் பத்து நாள் தங்க ஆசை வந்தது.

  சாத்தியார் அணைப்பயணம் பற்றி நீங்கள் எழுதப்போவதை தவறவிடாது படிக்க வேண்டும்.

  • அப்பாதுரை சொல்கிறார்:

   ஜீராவைப் படத்தில் இப்போது தான் கவனித்தேன். வடக்கத்திய குலோப்ஜாமூன் மாதிரியா?

   • பால்பன் மைதாமாவில் செய்கிறார்கள். மைதா மாவோடு தயிரை ஊற்றி பிசைந்து கொஞ்சம் சோடாபூ சேர்த்து கொஞ்சம் நேரம் வைத்திருந்து கை அளவிற்கு தட்டி எண்ணெய்யில் போடுகிறார்கள். நன்கு வெந்ததும் தயாரித்து வைத்திருந்த ஜீராவில் போட்டு வைக்கிறார்கள். பிறகு எல்லாவற்றையும் ஒரு பெரிய தட்டில் அழகாக அடுக்கி வைத்து விடுகிறார்கள். நல்ல இனிப்பாக இருக்கும். சில கடைகளில் தின்றதும் கொஞ்சம் மிச்சர் கொடுப்பார்கள்.
    தங்கள் மறுமொழிக்கு நன்றி.

    விரைவில் தூக்கணாங்குருவி படத்தையும் பதிவேற்றுகிறேன்

 5. அப்பாதுரை சொல்கிறார்:

  தூக்கணாங்குருவிக்கூடும் இப்போது தான் பார்க்கிறேன்.
  தூக்கணாங்குருவிப் படம் ஒன்று கிடைத்தால் வெளியிடுங்கள். அதையும் பார்க்க ஆசை.

 6. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார , அருமையான படங்களுடன் கூடிய நல்லதொரு பதிவு. வண்ணதாசனின் உரையினைப் பகிர்ந்து உனது உரையினைத் தொடர்ந்ததும் நன்று.
  இயற்கையின் அருகினில் இயறகையோடு பயனித்து இயற்கை தந்த நவாப்பழத்தினை சுடாத பழமாகத் தின்று மகிழ்ந்தது நன்று.

  தூக்கணாங்குருவிக் கூட்டினைத் தேடிப் பார்த்து மகிழ்ந்தது – கிடை மாட்டு மணிச்சத்தம் கேட்டும் மலைத்தொடர்களூம், தென்னந்தோப்புகளும், வாழைத்தோப்புகளும், கரும்புத்தோட்டங்களும் கண்டும் மகிழ்வுடன் பயணித்த அனுபவம் அருமை.

  மண்சுவர்களிலானவீடுகள் – இரு புறமும் திண்ணைகள் – முன்னால் சாணீ தெளித்த தரை – இயற்கையினை இரசிக்கும் மன நிலை நன்று.

  பாலமேடு பால்பன்னைத் தின்று திகட்டத் திகட்டத் தின்று – சட்னியில் தோய்த்த வடையினையும் தின்று – ஆகா ஆகா – அனுபவிச்சிருக்கேய்யா ……

  கருப்பண சாமி கோவில் – கருப்பு சாமி அய்யணார் வணக்கம் – அழகான சாமி சிலைகளைப் படமெடுத்தது – மரங்கொத்திப் பறவையினைத் துல்லியமாகப் படமெடுத்ததில் திறமை பளிச்சிடுகிறது.

  பதிவ்ய் அருமை – மிக மிக இரசித்தேன் – பயண அனுபவங்களை விவரிக்கும் திறமை நன்று.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

 7. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமை. எத்தனை காலமானாலும் சேமித்து வைத்து படிக்கும் பதிவு திரு சித்திரவீதிக்காரன் அவர்களுடையது.
  இந்த அற்புதமான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் கிராமத்தை படிக்க கேட்டுக் கொள்கிறேன்.
  நன்றி & வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்காரன்.
  (இப்படி அற்புதமான எழுத்தாளர்களை ‘பத்திரிகைக்காரகள்’ – The Hindu, Indian Express, விகடன், தந்தி, குமுதம் – கண்டு கொள்ள மாட்டார்களா? – அவர்களுக்கு சினிமா அல்லது மட்டமான காமெடியாக இருக்க வேண்டும்).
  நன்றி நண்பர்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s