கும்பமுனி கதைகள்

Posted: செப்ரெம்பர் 4, 2012 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

ஆலம்பழங்களை உண்டு நாகணவாய்ப்புள் கூட்டமாய் கூத்தடித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தடியில் சுத்தமான மாருதத்தில்  சண்டிமுனி படுத்திருந்தார். அந்த வழியாக வந்த பெரியசாமி “என்னய்யா பகல்லயே பகுமானமா படுத்திட்டீரு”ன்னார். சண்டிமுனி மெல்ல எழுந்து “சனாதிபதி தேர்தல்ல நிக்கலாம்ன்னு நெனச்சேன். அதுக்குள்ள வேற யாரையோ சனாதிபதி ஆக்கிட்டாங்களாம். அதான் செவனேன்னு படுத்திட்டேன்”னார் நக்கலாக. அந்நேரம் சண்டிமுனியின் செல்போன் சிணுங்கியது. எடுத்துட்டு கோவத்தோடு வைத்தவர் “இந்த வெளக்கெண்ணெய்களுக்கு வேற வேல இல்ல. பாட்ட வைய்யி வேட்ட வைய்யின்னு உயிர எடுக்குறானுங்க”. பெரியசாமி சும்மாயிருக்காம “நீரெல்லாம் சைனாப்போன் வச்சுருக்கப் போய்தான் நாட்ல மழை பெய்ய மாட்டேங்குது”ன்னார். சண்டிமுனி கடுப்பாகி “ஆறு, குளம், கம்மாய், மரம், மட்டை எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டு மழை பேயலன்னா எங்கிட்டுய்யா பேயும். என்னமோ நாந்தான் அதிசயமா சைனாஃபோன் வச்சுருக்கிற மாதிர பேசுறீரு? இரண்டாயிரம் வருசத்துக்கு முந்தியே தமிழ்நாட்டுக்கு சைனால்லயிருந்து என்னல்லாம் வந்திருக்கு தெரியுமா?”. தெரியாது என்பது போல முளித்தார் பெரியசாமி. “சீனத்துப்பட்டு, சீனி, சீனக்கண்ணாடி, சீனக் கற்பூரம், சீனக்கிழங்கு, சீனக்கருவாடு, சீனக்களிமண், சீனக்காக்கை, சீனக்காரம், சீனத்துமுத்து, சீனநெல், சீனப்படை, சீனச்சரக்கு, சீனாச்சுக்கான், சீனச்சுண்ணம், சீனப்புகை, சீனக்கிளி, சீனக்குடை, சீனச்சட்டி, சீனப்புல், சீனப்பரணி, சீனப்பருத்தி, சீனாக்கற்கண்டு, சீனாச்சுருள் என எம்புட்டு பொருள் இங்க வந்துருக்கு. அதே மாதிரி நம்ம தமிழ்நாட்டுப்பொருளும் அங்க இறக்குமதியாயிருக்கு”ன்னார் சண்டிமுனி. “அடேயப்பா இம்புட்டு தெரிஞ்சுவச்சுருக்க நீரு வி.ஏ.ஓ போட்டித்தேர்வு எழுதுய்யா மொத ஆளா வருவ”ன்னாரு பெரியசாமி. “நானு வி.ஏ.ஓ ஆகலைன்னுதான் டெல்லியில உண்ணாவிரதம் இருக்காங்ங. கடுப்பக்காட்டாம போயி பொழப்பப் போயி பாருய்யா?”

கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டேன்னு பாக்குறீங்களா? பயப்படாதீங்க. நாஞ்சில்நாடனின் கான்சாகிப் சிறுகதைத்தொகுப்பு வாசித்தேன். அந்தப் பாதிப்புல இந்தப்பதிவ கும்பமுனி கதை மாதிரி தொடங்கினேன்.

கதைத்தன்மை குறைந்துவிட்டது. கட்டுரைத் தன்மை மிகுந்துவிட்டது என்றெல்லாம் நண்பர்கள் சொல்வதுண்டு. அந்தக் கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. என்னால் செய்யக்கூடுவது என்ன என்றும் யோசிக்கிறேன். உயரத்தை, திசையை வேகத்தை, கோணத்தை மாற்றிக்கொள்ள இது வெள்ள நிவாரண விமானப்பயணத்திட்டமா? எனக்கு இருக்கும் எதிர்க்கேள்வி, வாசிப்பதில் இடைஞ்சல் இருக்கிறதா என்பது.                  – நாஞ்சில்நாடன்

கதையோ, கவிதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் வாசிக்க சுவாரசியமாக இருக்க வேண்டும், நம் நெஞ்சைத் தொடுவதாய் இருக்க வேண்டும். நாஞ்சில் நாடனின் சிறுகதைகள் வாசிக்க சுவாரசியமானவை. நாட்டில் நடக்கும் அவலங்களை, நம் அலட்சியத்தை அங்கதத்தோடு சொல்பவை.

நாஞ்சில்நாடனின் கட்டுரைத்தன்மை மிகுந்த சிறுகதைநடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கட்டுரைத் தன்மை சேரும்போது கதை இன்னும் நமக்கு நெருக்கமாகிறது. கான்சாகிப், கோம்பை, ஒழுகும் பாரதம் கதையில் வரும் மாநகராட்சி பள்ளிமாணவன் இம்மூவரும் கதைமாந்தர்களாக மட்டும் தோன்றவில்லை. நிஜமாந்தர்களாகவே எண்ணுகிறேன்.

கான்சாகிப் கதை ஆனந்தவிகடனில் வந்தபோதே வாசித்திருக்கிறேன்.  பம்பாயில் நாஞ்சில்நாடன் இருந்த நாட்களில் அவருடன் நட்பாயிருந்த மனிதரைக் குறித்து புனைகதை என்பதோடல்லாமல் கான்சாகிப் என்ற மனிதரை நமக்கும் நெருக்கமாக மாற்றிய சிறுகதை. கோம்பை எனும் கதையை நாஞ்சில்நாடன் நகர்த்தி செல்லும்விதமே தனி ராஜபாட்டை எனலாம். இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதைகளுள் கோம்பையும் ஒன்று. கடற்கரையில் மீன் விற்கும் சவளக்காரக் கோம்பை நம் மனதைக் கவர்ந்து செல்கிறார்.

ஒழுகும் பாரதம் சிறுகதையில் ‘வெள்ளையாகத் தனது சீவிதம் தொடங்கி பழுப்பு நிறத்தில் ஆவியை விட்டுக் கொண்டிருந்த அரைக்கைச் சட்டை, துவைத்து உலர்த்திய ஆனால் தேய்த்து மடிக்காத காக்கிக் காற்சட்டை. பிற கான்வென்ட் பள்ளி மாணவன் போலன்றி முதுகுப்பார புத்தக மூட்டை, உணவுப் பை ஏதுமற்று வந்தான். கையில் கோர்த்து தோளில் தொங்கிய காக்கிப் புத்தகப்பை. கால்களில் செருப்புக்கே வழியில்லை. சாக்ஸ்,ஷூவுக்குப் போவதெங்கே? அதென்னவோ இந்தியா முழுக்க கான்வென்ட் மாணாக்கர் தனித்தினுசாகவும் முனிசிபாலிட்டி, கார்ப்பரேசன், அரசுப்பள்ளி மாணாக்கர் வேறு தினுசாகவும் இருக்கிறார்கள். யாவரையும் 2020-ஐக் கனவு காணச்சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர். கனவு ஒரேவிதத்தில் வருமா என்ற யோசனை அவருக்கு இருந்திருக்குமா?’ இந்தக் கதை நம் கல்வி முறையின் அவலங்களைக் கூறுவதோடு அந்த மாணவனின் மனஉறுதியையும் காட்டுகிறது. ஆசிரியர்களில் பெரும்பாலானோர் மாணவர்களை மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஒதுக்கும்போது வாத்துக்காரன் மகனை வாத்துக்காரனாக்காமல் விடுவார்களா என்ன? அதைத்தான் வாத்துக்காரன் கதையிலும் நடக்கிறது. வாசிப்பதோடு நில்லாமல் யோசிக்கவும் வைக்கும் சிறுகதைகள் இவை.

நாற்பது வயதை நெருங்கும் வேளையிலும் மணமாகாமல் தவிக்கும் பெண்ணின் வலியை ‘தெரிவை’யும், முதலில் சரியாக சமைக்கத் தெரியாத மனைவியை காயப்படுத்தும் கணவனை ‘உப்புக்கிணறும்’, மனைவியை விட்டுச்செல்லும் கணவன், தாயை விட்டுச் செல்லும் மகன் இவற்களுக்கிடையில் வாழும் பெண்ணின் கஷ்டத்தை ‘பேச்சியம்மை’யும், அடுக்குமாடிக்குடியிருப்பில் வசிக்கும் பெண்ணின் பாலியல்சிக்கல்களை ‘அதிதி’யும் சொல்கிறது.

இத்தொகுப்பில் உள்ள கும்பமுனி கதைகளை வாசிக்கும்போதே அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே வாசித்தேன். கும்பமுனியாக மாறி சாட்டையைச் சுழற்றுகிறார். ஒவ்வொரு கதையிலும் இங்கு நடக்கும் அவலங்களை அங்கதத்தோடு பதிவு செய்துள்ளார்.

 தமிழ்திரைப்படநாயகர்களின் ஆராதனையை கேலி செய்யும் ‘அஷ்டாவக்ரம்’, அரசியல்கூத்துகளைக் கேலி செய்யும் ‘கவிழ்ந்தென்ன மலர்ந்தென்ன காண்’, விருதுகளில் நடக்கும் கூத்துக்களை பதிவு செய்த ‘பார்வதி சம்மான்’, தன்னை பாலியல்கதைகளை எழுதச்சொன்ன பதிப்பாளரைத் திட்டும் ‘வங்கணத்தின் நன்று வலிய பகை’, அலைபேசி மற்றும் பண்பலை இம்சைகளை சொல்லும் ‘இடைவெட்டு’ என கும்பமுனிக்கதைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு நெருக்கமானவை. வாசித்துக்கொண்டிருக்கும் போதே சிரிப்பை அடக்கமுடியாமல் வாசிக்கும்படியான கதைகள்.

நாஞ்சில்நாடன் ஒவ்வொரு கதைக்கும் வைக்கும் தலைப்பே அலாதி இன்பம் தருகிறது. இயக்குனர் பாலா நாஞ்சில்நாடனின் ‘தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்’ என்ற கதைத்தலைப்பை பார்த்துதான் வாசிக்கவே தொடங்கியிருக்கிறார்.

நாஞ்சில்நாடனின் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்… பக்கங்கள் புரட்டியதில் தற்செயலாகக் கண்ணில்பட்டது அந்தக்கதை… ‘எடலாக்குடி ராசா’ பேர் சுவாரஸ்யப்பட அந்தக் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். கோடி மின்னல்கள் கூடித்தாக்கியதுபோல என்னை உலுக்கியது அந்தக் கதை. அந்த வட்டார வழக்கு, அது சொன்ன வாழ்க்கை… உடம்பெல்லாம் சிலிர்த்துபோனது. ஏதோ ஒரு இடி எனக்குள் இறங்கி என்னைச் சுக்கு நூறாக உடைத்து எறிந்தது போல உணர்ந்தேன். எதிலேயும் நாட்டம் இல்லாமல் எதிலெதிலோ போதை தேடித் திரிந்த எனக்கு இன்னோர் உலகத்தை இழுத்துத் திறந்துவிட்ட நான் படித்த முதல் சிறுகதை அது!                 – பாலா

நன்றி – இவன்தான் பாலா, விகடன் பிரசுரம்

கவிந்தென்ன மலர்ந்தென்ன காண், ஒழுகும் பாரதம், தெரிவை, வங்கணத்தின் நன்று வலியபகை, கோம்பை, சீடனாக வந்த குரு’ என இத்தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு கதைத்தொகுப்பும் நம்மை ஈர்க்கிறது. பெரும்பாலான கதைகளின் ஊடாக வரும் இயற்கை வர்ணனையும் அருமை. நல்ல சிறுகதைத் தொகுப்பு. நீங்களும் வாசித்துப்பாருங்கள்.

நாஞ்சில்நாடனின் எழுத்துக்களை வாசிக்க http://nanjilnadan.com/

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

பின்னூட்டங்கள்
 1. சுருக்கமாக இருந்தாலும் விமர்சனம் அருமை… நன்றி…

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  இரு முறை படித்தேன் சுந்தர் – மீண்டும் மீண்டும் படிப்பேன் சுந்தர் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  நீங்கள் கூறுவது மிகச் சரியான து. நாஞ்சில்நாடனின் கதைகளின்கட்டுரைத்தன்மைக்காகவே அவற்றைவிரும்பிப் படிப்பேன். அவரது
  ”வளைகள் எலிகளுக்கானவை” என்ற கதை மிக அருமையாக இருக்கும்கதைகளின் ஊடே கட்டுரைபோல விவரங்கள் மண்டிக் கிடக்கும்

 4. kesavamani சொல்கிறார்:

  நாஞ்சில் நாடனை வாசித்து வெகுநாளாகிவிட்டன. தங்கள் பதிவு அவரை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. எனக்கும் கட்டுரை வடிவிலான கதைகள் மிகவும் பிடிக்கும்.

 5. rathnavel natarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s