குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்

Posted: செப்ரெம்பர் 10, 2012 in நாட்டுப்புறவியல், வழியெங்கும் புத்தகங்கள்

நள்ளிரவு நேரத்தில் ஊரே அடங்கி மௌனமாயிருக்கும்போது தொலைவில் எங்கோ மெலிதாக, ஏதோ ஒலிக்கும் ஓசை கேட்கும். கூடவே நாய்களின் குரைப்பொலியும் சற்று நேரத்தில் தெருமுனையில் குடுகுடுப்பை ஒலிக்கும்போது, மனம் திடுக்கெனத் துடிக்கும். அமானுடத்தின் சக்தி, திகிலாக எல்லோருக்குள்ளும் ஊடுருவும்; மாயப்புனைவின் வால் எல்லோரின் முகத்திலும் உரசிப்போகும். மனதிற்குள் பதுங்கியிருக்கும் பயம் உடலெங்கும் பரவும்.

 – ந.முருகேசபாண்டியன்

நாட்டுநலப்பணித்திட்டற்காக மதுரைக்கருகிலுள்ள ஒரு கிராமத்தில் தங்கியிருந்தோம். புத்தாண்டன்று இரவு பொருட்கள் இருக்கும் பழைய பள்ளிக்கட்டிடத்தில் என்னைத் தங்கச்சொன்னார்கள். நானும் கடப்பாறை, மண்வெட்டி, இருப்புத்தட்டுகளுடன் இரவைக் கழிக்க ஆயத்தமானேன். மற்றவர்கள் சாலைக்கு மறுபுறம் உள்ள புதிய பள்ளிக்கட்டிடத்தில் தங்கினார்கள். பழைய பள்ளிக்கூடம் மிகவும் பாழடைந்த மாதிரி இருந்தது. சுற்றி தடுப்புச் சுவர் இருந்ததால் நானும் அசந்து மறந்து தூங்கலாம்ன்னு பார்த்தா கொசு காதுல ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது. தூக்கம் துளிக்கூட வரவில்லை. தொலைவில் குடுகுடுப்பைக்காரர் குறிசொல்லி வரும் சத்தம் கேட்டது. பள்ளி ஊரின் மத்தியில் இருந்ததால் அவர் நாலாபக்கமும் சுத்தி வர நாய்களின் குரைப்பொலி எனக்கருகிலேயே கேட்டுக்கொண்டிருந்தது. எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம். நாய் இருக்கிற தெருவுல தனியா போக மாட்டேன் அந்தளவு பயம். நாய் குரைக்கும் சத்தமே குலை நடுங்கச் செய்தது. அதில் குடுகுடுப்பைக்காரர் குரலும் சேர்ந்து ஆட்டிப்படைத்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு நாய் என்னைப் பார்த்துக்கொண்டே நிற்பது போலத் தோன்றியது. மேலெல்லாம் தூக்கிவாரிப்போட்டது. புத்தாண்டன்று இரவு பயத்துல தனியா சாகப்போறோமேன்னு நினைச்சு வருத்தம் வேறு. ஒரு வழியா மனசுக்குள் தைரியம் வரவழைச்சு எழுந்து உட்கார்ந்தேன். அன்னைக்கு ராத்திரி சிவராத்திரிதான். காலைல அந்தப் பகுதி ஆட்கள்ட்ட கேட்டா இன்னும் பீதியக் கிளப்பிட்டாங்க. பள்ளிக்கூடத்து பக்கத்துல பாழடைஞ்ச கிணறு ஒன்று இருக்கு. அதுனால ராத்திரி வேளைல காத்து, கருப்பு நடமாட்டம் இருக்கும்ன்னு பயமுறுத்திட்டாங்க. மறுநாளும் நான் அங்கு படுத்தேன். அன்றிரவு யாரும் வரலை தூக்கத்தைத் தவிர.

குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல் குறித்த ந.முருகேசபாண்டியனின் ஆய்வுநூலை வாசித்தபோது எனக்கு மேற்சொன்ன அனுபவம்தான் முதலில் ஞாபகம் வந்தது. பகலிலேயே நாய்கள் இருக்கிற தெருவில் தனியே போகப் பயப்படுவேன். இரவில் குடுகுடுப்பைக்காரர்கள் எப்படி தைரியமாக செல்கிறார்கள் என்றறியும் குறுகுறுப்பில் இந்நூலை வாசித்தேன்.

ந.முருகேசபாண்டியன் மதுரைக்கருகிலுள்ள சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் வாழும் குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி 1980களில் அவர் செய்த இனவரைவியல் ஆய்வுநூலே ‘குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்’. இந்நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

இந்நூலில் குடுகுடுப்பைக்கார்களைப் பற்றிய அறிமுகம், அவர்களின் வரலாறு, சமூக அமைப்பு, குறிசொல்லுதல், குலச்சடங்குகள், பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் விரிவாக எழுதியுள்ளார்.

குடுகுடுப்பைக்கார்களைப் பற்றி அவர்கள் சொல்லும் கதை சுவாரசியமானது. ஆதியில் ஈசுவரன் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்ன தொழிலைச் செய் என்று கூறிப் படியளந்தான். அப்போது ஒரு ஆள் மட்டும் தூங்கிவிட்டான். பின்னர் விழித்தெழுந்த அவன், ஈசுவரனிடம் சென்று தனக்கு ஏதாவது தொழில் தருமாறு கேட்டான். எல்லாத் தொழில்களும் ஏற்கனவே பங்கிடப்பட்டுப் பிரித்துக் கொடுத்து விட்டமையால் ஈசுவரன் யோசித்தார். பின்னர் ஈசுவரன், தனது கையில் வைத்திருந்த சித்துடுக்கையையும் சீங்குழலையும் வந்தவனிடம் கொடுத்து ‘நீ சொல்வது அஞ்சுக்கு ரெண்டு பலிக்கும். இவற்றை வைத்துப் பிழைத்துக்கொள்’ என்று கூறினார். அப்போதிருந்து நாங்கள் பிறருக்கு குறி சொல்லிக் கொண்டு குடுகுடுப்பைக்காரர்களாகத் திரிகிறோம்.

விஜயநகரத்தின் வீழ்ச்சி மற்றும் மழையில்லாமல் ஏற்பட்ட பஞ்சம் போன்ற காரணங்களால் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்தனர். குடுகுடுப்பைக்காரர்கள் கம்பளத்து நாயக்கர்களில் நித்திரவார் பிரிவை சேர்ந்தவர்கள். குடுகுடுப்பைக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக நாடோடிச் சமுதாயமாகத் திரிந்து தற்போது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்கின்றனர். மதுரை பரவை கண்மாய்க்கருகில் இவர்கள் தங்கியிருந்த நிலத்தை காமராஜர் முதல்வராயிருந்த போது அவர்களுக்கே வழங்கினார். அந்த இடத்திற்கு சத்தியமூர்த்தி நகர் என்று பெயர்.

சித்திரை, வைகாசி மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் குறிசொல்வதற்காக வெளியூர் சென்று வருகின்றனர். வெளியூர் செல்வதை ‘தங்கலுக்கு செல்வது’ என்று சொல்கின்றனர். நாலைந்து குடும்பங்களாக சேர்ந்து செல்கின்றனர். ‘ஒரு வாக்கு வெல்லும், ஒரு வாக்கு கொல்லும்’ என்பதில் பெரு நம்பிக்கை கொண்டுள்ளனர். தாங்கள் சொல்வது ஜக்கம்மா அருளால் பலிக்கும் என்பதால் யாரையும் திட்ட மாட்டார்கள். கணவன் மனைவியைத் திட்டினால்கூட ‘குற்றப்பணம்’ கட்ட வேண்டும். (1980களிலேயே 2 ரூபாய்)

திருமணம் செய்ய விரும்பும் பெண்ணின் தந்தைக்கு மணமகன் பணம் தர வேண்டும். அவருடன் சேர்ந்து குடுகுடுப்பைத் தொழிலுக்கு மூன்று அல்லது ஆறு மாதம் செல்ல வேண்டும். அவருக்கு பிடித்திருந்தால் மருமகனாக ஏற்றுக்கொள்வார். உடன்போக்குத் திருமணமும், தம்பதியரில் யாரேனும் பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ மறுமணம் செய்து கொள்ளும் வழக்கமும் இவர்களிடம் உண்டு.

குடுகுடுப்பைக்காரர்களின் குலதெய்வமாக ஜக்கம்மா இருந்தாலும் சத்தியம் செய்யும்போது துடியான தாய்த்தெய்வங்களான மடப்புரம் காளி – கொல்லங்குடி காளி மீதே சத்தியம் செய்கின்றனர். இரவுகளில் குடுகுடுப்பையை அடித்துக்கொண்டு குறிசொல்லிக் கொண்டு செல்பவர்களை சாமக்கோடாங்கி என்பர். மறுநாள் காலை வீடுவீடாகச் சென்று குறிசொல்லி பணம் மற்றும் அரிசியை வாங்குவர். பெண்களும், சிறுவர்களும் பகல் நேரங்களில் ஏடு போட்டு, கைரேகைப் பார்த்து குறிசொல்கின்றனர். 

குடுகுடுப்பைக்காரர்கள் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அன்று தாங்கள் இருக்கக்கூடிய இடத்தை சுத்தம் செய்து கோழி அறுத்து இறைச்சி உணவு சாப்பிடுகின்றனர். அன்று குறிசொல்லச் செல்வது கிடையாது. அன்று வேட்டைக்கு செல்வதை ‘பாரிவேட்டை’ என்றழைக்கின்றனர். குடுகுடுப்பைக்காரர்கள் அவர்களுக்கென சாதிச்சங்கம் வைத்து அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்துக்கொள்கின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் கொடி, தோரணங்கள் கட்டுவதில்லை.

முன்பெல்லாம் குடுகுடுப்பைக்காரர்கள் குரைக்கும் நாய்களின் வாயைக்கட்ட சுடுகாட்டிலிருந்து இரவு கிளம்பும் போது கம்பளியில் ஒரு முடிச்சு போடுவார்களாம். பிறகு மறுநாள் காலையில்தான் அவிழ்ப்பார்களாம். இப்போது அப்படி முடிச்சு போடுவதும் கிடையாது. சுடுகாட்டுக்குப் போய் வரும் சாமக் கோடங்கிகளும் குறைவு.

இன்றைய தலைமுறையினர் குடுகுடுப்பைத் தொழிலை விரும்பாமல் எல்லோரையும் போல வேறு பணிகளுக்கு செல்ல விரும்புவது ஆரோக்கியமான விசயம். இன்னும் கொஞ்சப்பேர் இத்தொழிலையே செய்து வருகின்றனர். குடுகுடுப்பைக்காரர்களைப் பற்றி  தமிழ்த்திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் மட்டுமே பெரும்பாலும் பதிவு செய்துள்ளனர். மற்ற நாவல், சிறுகதைகளில் இவர்களைப் பற்றிய பதிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை. இந்நூலை வாசிக்கத் தந்த சகோதரர்க்கு நன்றி.

இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்
படிக்க நேரிடுமானால்
தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்
வெப்புறாளம் வந்து கண்மயங்கும்
மூளை கலங்கும்
படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று
இப்போது
என் எழுத்துக்களில் நான் வாதைகளை
ஏவி விட்டிருக்கிறேன்.

–  என்.டி.ராஜ்குமார்

நன்றி – அழியாசுடர்கள், உயிர்மை, பார்வைகள்

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார, முருகேச பாண்டியனின் குடுகுடுப்பைக்காரர் வாழ்வியல் புத்த்கத்தில் இருந்து எடுத்த தகவல் பரிமாற்றத்தினுற்கு நன்றி – வாழிவியலை ஆய்ந்து அழகாகக் கூறி இருக்கிறார். நல்வாழ்த்துகள் சுந்தர் – நட்புடன் சீனா

 2. தருdமி சொல்கிறார்:

  நல்ல காலம் பொறக்குது .. உங்களுக்கு நல்ல காலம் பொறக்குது ……..

 3. அறியாத தகவல்களை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…

 4. சங்கரபாண்டி சொல்கிறார்:

  குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
  நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
  சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
  சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

  தரித்திரம் போகுது; செல்வம் வருகுது;
  படிப்பு வளருது; பாவம் தொலையுது;
  படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
  போவான், போவான், ஐயோவென்று போவான்! – மகாகவி பாரதியார்

 5. தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

  நல்ல பதிவு ,புதிய தகவல்

 6. anu-dev சொல்கிறார்:

  “திருமணம் செய்ய விரும்பும் பெண்ணின் தந்தைக்கு மணமகன் பணம் தர வேண்டும். அவருடன் சேர்ந்து குடுகுடுப்பைத் தொழிலுக்கு மூன்று அல்லது ஆறு மாதம் செல்ல வேண்டும். அவருக்கு பிடித்திருந்தால் மருமகனாக ஏற்றுக்கொள்வார். ” Very interesting and new information. All the best….

 7. தொப்புளான் சொல்கிறார்:

  அவசியம் முழுமையாகப் படிக்கவேண்டிய நூல்.

  இப்போதெல்லாம் சாமக்கோடாங்கிகள் வரும்போது நாய்கள் குரைக்கிற சத்தத்தில் அவர்கள் சொல்வது ஒன்றுமே காதில் விழுவதில்லை. அவர்கள் அம்மணமாக வருவார்கள் என்றும் யாரும் பார்க்கக்கூடாது என்றும் நம்பிக்கை இப்போதுவரை இருந்துவருகிறது. வீட்டுக்குள்ளே ஒளிந்துகொண்டு எதிர்க்கேள்விகள் கேட்கிறவர்களையும் பார்த்திருக்கிறேன்.

  இரவில் வந்ததற்கு அடுத்த பகலில் வந்து முந்திய இரவில் கூறியவற்றைச் சொல்லி பரிகாரங்கள் பரிந்துரைப்பதுண்டு.

  ஆம். தனித்த இரவுகளில், தொலைவில் இருந்து நாய்கள் சூழ நெருங்கிவரும் சித்துடுக்கை திகிலூட்டக்கூடியதே. என்ன சொல்லப்போகிறாரோ என்ற எண்ணம் அதனினும் திகில்.

  நிற்க. முன்பு மதுரை வானொலியில் சாமக்கோடாங்கி சங்கரலிங்கம் அதிகாலையில் வேளாண் குறிப்புகள் சொல்வார். இப்போதும் வீச்சலை ஒலிபரப்பு இருக்கிறதா? கேட்கிறார்களா?

 8. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  பதிவு நன்றாக உள்ளது.வேலைவாய்பு மிக்கஃ குறைந்த காலத்தில்,பிறருக்கு
  நல்லசெய்தி சொல்லுவதை ஒரு தொழிலாகச் செய்கிறார்களே? பாராட்டவேண்டும்.
  இதுவும் வேண்டித்தானே உள்ளது வாழ்த்துக்கள் சுந்தர்

 9. rathnavelnatarajan சொல்கிறார்:

  குடுகுடுப்பைகாரர்கள் பற்றி அருமையான பதிவு. இதில் குறிப்பிட்டுள்ள புத்தகம் கிடைக்குமா?
  இதில் என்னை கவர்ந்த குறிப்பு:
  குடுகுடுப்பைக்காரர்கள் பல நூற்றாண்டுகளாக நாடோடிச் சமுதாயமாகத் திரிந்து தற்போது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்கின்றனர். மதுரை பரவை கண்மாய்க்கருகில் இவர்கள் தங்கியிருந்த நிலத்தை காமராஜர் முதல்வராயிருந்த போது அவர்களுக்கே வழங்கினார். அந்த இடத்திற்கு சத்தியமூர்த்தி நகர் என்று பெயர்.

  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு சித்திரவீதிக்காரன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s