மதுரை திருவிழாக்களின் பூமி. திருவிழா என்றாலே கொண்டாட்டந்தான். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா முடிய தமுக்கத்தில் அறிவுத்திருவிழா தொடங்கியது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 முடிய பதினொரு நாட்கள் மதுரை தமுக்கம் மைதானம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
புத்தகத்திருவிழாவைக் காணச் செல்வது எனக்கு மிகவும் பிடித்தமான விசயம். தமுக்கத்தினுள் நுழைந்ததும் வரவேற்கும் பதாகைகள், மாலை வேளையில் எழுத்தாளுமைகளின் உரையை கேட்கக் காத்திருக்கும் புதிதாக அமைக்கப்பட்ட மேடை, பெரும்வீதிகளைப் போலமைந்த புத்தகத்திருவிழா அரங்கு, வீதிகளின் இருபுறமும் புத்தகக்கடைகள், அடுக்கிவைத்திருக்கும் லட்சக்கணக்கான புத்தகங்கள், சிறியவர் முதல் பெரியவர்வரை பால்வேறுபாடின்றி புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களையெல்லாம் காணும்போது உற்சாகமாயிருக்கும்.
இதுவரை பார்த்திராத புதிய புத்தகங்கள், பலநாள் தேடியும் கிடைக்காத புத்தகங்கள், வாசித்த புத்தகங்கள், வாசிக்காத புத்தகங்கள் என அங்கிருக்கும் புத்தகங்களைக் காணக் கண்கோடி வேண்டும். இம்முறை எந்த புத்தகத்தை வாங்கலாம் என நமக்குள் ஒரு போராட்டமே நடக்கும். புத்தகத்திருவிழாவில் நமக்கு பிடித்த எழுத்தாளுமைகளைப் பார்க்கும்போது என்ன பேசுவது எனத் தெரியாமல் புன்னகையுடன் கடந்து போவது அல்லது வாங்கிய புத்தகங்களில் அவர்களின் கையொப்பம் வாங்குவது எல்லாம் மகிழ்ச்சியான விசயங்கள்.
புத்தகத்திருவிழா தொடங்கிய அன்று சகோதரனின் திருமணம். அதை முன்னிட்டு நாங்கள் ஒரு புத்தகம் அடித்திருந்தோம். ‘நான்மாடக்கூடலில் ஒரு நாடறி நன்மணம்’ என்ற தலைப்பில் மதுரை, ஆளுமைகளின் பொன்னான வரிகள், கொஞ்சம் கவிதைகள் என பலவற்றையும் தொகுத்து இருபது பக்கத்தில் புத்தகம் அடித்திருந்தோம். பின்னட்டையில் புத்தகத்திருவிழா குறித்தும் விளம்பரம் செய்திருந்தோம். (அந்த புத்தகம் குறித்து தனியொரு பதிவு இடுகிறேன்.)
ஆகஸ்ட் 31 அன்று மதுரை ஏழாவது புத்தகத்திருவிழாவிற்கு முதன்முதலாக சென்றேன். மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு கடையையும் பார்த்துக்கொண்டே நடந்தேன். எதுவும் வாங்கவில்லை. எதேச்சையாக சகோதரனும் வந்திருந்தார். தினமும் மாலை நடக்கும் நிகழ்வுகளை குறித்து வைத்துக்கொண்டு கிளம்பினோம்.
செப்டம்பர் 1 அன்று புதுமணத்தம்பதியருடன் சேர்ந்து பத்துப்பேர் புத்தகத்திருவிழா சென்றோம். நாலு குழுவாக பிரித்து, ஒரு குழுவிற்கு ஐநூறு ரூபாய் புத்தகம் வாங்க சகோதரன் கொடுத்து அனுப்பினார். அன்று நல்ல கூட்டம். நிறைய புத்தகங்கள் வாங்கினோம். அன்று நான் வெகுநாட்களாய் வாங்க நினைத்திருந்த ஜெயமோகனின் ‘காடு’ நாவலை வாங்கினேன்.
செப்டம்பர் 2 அன்று நானும், சகோதரனும் சென்றோம். ஜோ மல்லூரி உரையாற்றிக்கொண்டிருந்தார். மறுநாள் ஒரு திருமணத்திற்கு பரிசளிப்பதற்காக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘வாசகபர்வம்’ நூல் வாங்கினேன். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனையும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவையும் உயிர்மை அரங்கில் பார்த்தேன். ஆனந்தவிகடனில் வட்டியும் முதலுமாய் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் ராஜூமுருகனின் உரையைக் கேட்க அரங்கில் போய் அமர்ந்தோம். கிளப்பிட்டாப்ல.
செப்டம்பர் 4 அன்று நானும் உடன்பணிபுரியும் நண்பரும் சென்றோம். நேஷனல் புக் டிரஸ்டில் சிறுவர்களுக்கான புத்தகங்களான ராஜஸ்தான், முதல் ரயில் பயணம் புத்தகங்கள் வாங்கினேன். அந்த புத்தகத்திலிருந்த படங்கள் மிக அருமையாக வரையப்பட்டிருந்தன.
செப்டம்பர் 5 அன்று ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, காவல்கோட்டநாயகன் சு.வெங்கடேசன் உரையை கேட்பதற்காக நானும் உடன்பணிபுரியும் நண்பனும் சென்றோம். மிக அற்புதமான உரை. இருவரும் மதுரைக்காரர்கள் என்பதால் மதுரை குறித்த அவர்களது அனுபவங்களை கேட்கும் வாய்ப்பு கிட்டியது.
வண்ணதாசன் சிறுகதை(1962-2012) எழுத வந்து ஐம்பது ஆண்டுகள் ஆனதையொட்டி சந்தியா பதிப்பகமும், மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து வண்ணதாசன் 50 – அந்நியமற்ற நதி என்ற நிகழ்வை செப்டம்பர் 7 அன்று மாலை அமெரிக்கன் கல்லூரியில் நடத்தினர். அருமையான அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
செப்டம்பர் 9 அன்று நானும் சகோதரனும் சென்றோம். புத்தகத்திருவிழா இறுதிநாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் காலையிலேயே நல்ல கூட்டம். ரொம்ப நேரம் சுத்திக் கொண்டிருந்தோம். நேஷனல் புக் டிரஸ்டில் போதிசத்வ மைத்ரேய எழுதிய ‘சிப்பியின் வயிற்றில் முத்து’, ரஷ்கின் பான்ட் எழுதிய ‘ரஸ்டியின் வீரதீரங்கள்’ என்ற மொழிபெயர்ப்பு நூல்களையும், சந்தியா பதிப்பகத்தில் வண்ணதாசனின் கடிதத் தொகுப்பான ‘சில இறகுகள் சில பறவைகள்’ புத்தகத்தையும், பாரதி புத்தகாலயத்தில் ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய ‘பிள்ளையார் அரசியல்’, ச.தமிழ்ச்செல்வனின் ‘வ.உ.சி.யின் சுதேசிக் கப்பலும் தொழிற்சங்க இயக்கமும்’, முகில் எழுதிய ‘நாமும் நமது கலைகளும்’ என்ற புத்தகங்களை வாங்கினேன். சகோதரன் ச.தமிழ்ச்செல்வன் கதைகள் நூலையும், யுவன் சந்திரசேகர் எழுதிய மணற்கேணி கதைத்தொகுப்பையும், பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தையும் வாங்கினார்.
புத்தகத்திருவிழாவிற்கு செல்ல முடியாத விடுபட்ட கொஞ்ச நாட்களை மேகம் கருத்து மிரட்டி என்னை வீட்டுக்கு அனுப்பியது. திருவிழா என்றாலே மழை வந்துவிடும் அல்லது மழை பெய்தாலே திருவிழாதான். இந்த வருட புத்தகத்திருவிழாவின் போதும் மழைவாசகன் வந்து கொஞ்சம் வாசித்துப் போனான்.
மணா தொகுத்த ‘கமல் நம் காலத்து நாயகன்’ என்ற புத்தகத்தை வாங்கலாமென்று நினைத்தேன். பணம் பத்தவில்லை. அதில் கமல்ஹாசன் குறித்து பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், இசை அறிஞர் மம்மது எல்லாம் எழுதியிருப்பதை பார்த்தேன். அந்த புத்தகத்தை பார்த்துக்கொண்டிருந்த போது மம்மது ஐயா உயிர்மையரங்கில் இருந்தார். ஆச்சர்யமாகயிருந்தது. அவருடன் எதாவது பேசலாமென்று ஆசைதான். ஆனால், எனக்கு பாட்டுக் கேட்கப் பிடிக்கும். மற்றபடி இசை குறித்து ஒன்றும் தெரியாது. எனவே மௌனமாக கடந்துவிட்டேன்.
நற்றினை பதிப்பகத்தில் சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ நாவல்களை அருமையாக பதிப்பித்திருக்கிறார்கள். கிழக்கு பதிப்பகத்தில் ‘வண்ணநிலவன் கதைகள்’ முழுத்தொகுப்பையும் வாங்க நினைத்தேன். நானூறு ரூபாய். டிசம்பர் மாசம் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை வாங்கிய நூல்களை வாசிப்போம் என்று வந்து விட்டேன்.
ஐந்தாவது புத்தகத்திருவிழாவின் போது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த நூறு புத்தகங்கள், சிறந்த நூறு நாவல்கள் குறித்த பட்டியலை ஆயிரம் பிரதிகள் எடுத்து வழங்கினோம். ஆறாவது புத்தகத்திருவிழாவிற்கு நூறு பதாகைகள் அடித்தோம். ஏழாவது புத்தகத்திருவிழாவில் சகோதரன் திருமண விழாவிற்கு வழங்கிய புத்தகத்தில் புத்தகத்திருவிழா குறித்து விளம்பரம் செய்தோம்.
இனி எட்டாவது புத்தகத்திருவிழாவை நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் ஒத்துழைப்புடன் இன்னும் சிறப்பாக கொண்டாட நிறைய பணிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக மதுரையிலுள்ள எல்லா கிராமங்களிலும் புத்தகத்திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது முக்கிய கடமையென நினைக்கிறேன்.
புத்தகத்திருவிழாவில் ராஜூமுருகன், ட்ராட்ஸ்கி மருது, சு.வெங்கடேசன் மற்றும் வண்ணதாசன் 50 விழா நிகழ்வுகளை தனிப்பதிவாகயிடுகிறேன்.
தென்மாவட்டங்களின் மேல் லேசாகப் படிந்திருக்கும் சாதிக் கறையை புத்தகத்திருவிழாவால்தான் மாற்ற முடியும். எல்லோரும் கொண்டாடுவோம்.
ஒவ்வொரு வருடமும் இதே காலக் கட்டத்தில் நடக்குமா மதுரை புத்தகவிழா? அடுத்த வருடம் போக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி விட்டது உங்கள் பதிவு.
பெரும்பாலும் மதுரை புத்தகத்திருவிழா ஆகஸ்ட் கடைசிவாரத்தில் தொடங்கி செப்டம்பர் முதல்வாரம்வரை நடக்கிறது. அடுத்தவருடம் மதுரை புத்தகத்திருவிழாவிற்கு கட்டாயம் வாங்க.
அன்பின் சித்திர வீதிக்கார, புத்தகத் திருவிழா நிகழ்வுகள் பல்வேறு பணிகளினால் கலந்து கொள்ள இயலாமல் போய் விட்டது. நேர்முக விளக்கம் அருமை.
ஐந்து ஆறு ஏழாவது புத்தகத் திருவிழாக்களில் ஆற்றிய தமிழ்த் தொண்டு – எட்டாவது திருவிழாவில ஆற்றப் போகும் அருமையான தொண்டு – அனைத்துமே பாராட்டுக்குரியவை. நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
சு.ரா. காலமானது அக்டோபர் 15, 2005 அன்று. செப்டம்பர் 2005, 25ஆம் தேதி அவர் எழுதிய கவிதை இது.
அடுத்த முறை வர வேண்டும்… பகிர்வுக்கு நன்றி…
மதுரை புத்தகத்திருவிழா குறித்த பதிவு மிக நன்றாக இருந்தது.அவ்வாறான ஒரு புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ள முடியாததற்கான வருத்தம் மேலிடுகின்றது. “வட்டியும் முதலும்” ராஜு முருகனின் உரை குறித்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
வாழ்த்துக்கள், சுந்தர்.
இனி புத்தகத் திருவிழாவுக்கு ஒருவருடம் காத்திருக்கவேண்டுமே என்று ஏக்கமாக உள்ளது.பதிவு அருமை.காடு படித்துவிட்டு சீக்கிரம் கொடுங்கள். திரை, மாதொரு
பாகன் கொடுக்கிரேன்வாங்கிய புத்தகங்களைநமக்குள் விருந்தாகப் பரிமாறிக்
கொள்ளலாம்
சொல்ல மறந்துவிட்டேனே, சிறுகதைகள் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க
நன்றி
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.