மாடக்குளக்கீழ் மதுரை

Posted: ஒக்ரோபர் 4, 2012 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை ‘அமிழ்தம்’ என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம்’ என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘ஏரி’ என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ஏந்தல்’ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய்’ என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.  

– தொ.பரமசிவன் (பண்பாட்டு அசைவுகள்)

மாடக்குளக்கீழ் மதுரை என்ற வார்த்தையை கேள்விப்பட்டதிலிருந்து மாடக்குளம் கண்மாயைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலிருந்து கொண்டேயிருந்தது. காவல்கோட்டம் வாசித்தபின் அந்த ஆவல் இன்னும் அதிகமானது. மாடக்குளத்தில் பசுமைநடை என்ற குறுந்தகவல் வந்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மாடக்குளம் செல்ல அதிகாலை கிளம்பிச் சென்றேன்.

நட்ராஜ் தியேட்டர்க்கு அருகிலிருந்து எல்லோரும் சேர்ந்து சென்றோம்.

புதிதாக சந்தித்த நண்பரொருவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். பசுமைநடைப் பதிவுகளைப் பார்த்து இப்பயணத்திற்கு வந்ததாகச் சொன்னார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மதுரை சரவணன் வந்திருந்தார். அவருடன் சேர்ந்து இருசக்கரவாகனத்தில் சென்றேன்.

மாடக்குளம் சென்று அங்கிருந்த கண்மாயைக் காணச்சென்றோம். மிகவும் பெரிய கண்மாய். தண்ணீர்தான் இல்லை.

அருகில் சமணமலை, கபாலிமலை தெரிந்தன.

கல்வெட்டிருந்த கல் அருகில் எல்லோரும் அமர்ந்தோம். அழகான காலைப்பொழுதை மதுரையின் மிகப் பழமையான ஒரு இடத்தில் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மாடக்குளம் பசுமைநடைக்கு எல்லோரையும் வரவேற்றார்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா மாடக்குளத்தின் வரலாற்றுச்சிறப்புகளை சொன்னார்.

மாடக்குளம் மதுரையின் தொன்மையான இடங்களுள் ஒன்று. இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மாடக்குளம் முன்பு சிறிதாகயிருந்து பின்பு விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. ‘மாடக்குளம் அழிந்தால் மதுரையில் பாதி அழியும்’ எனப் பாரம்பரியமாக ஒரு சொலவடையொன்று இப்பகுதியில் சொல்லப்படுகிறது.

இங்கிருக்கும் கல்லில் செதுக்கப்பட்ட குறியீடுகள், வரிகள் எல்லாம் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை. கல்லின் மேற்பகுதியில் குடை, இரண்டு பக்கமும் சாமரம், குத்துவிளக்கு மற்றும் விவசாயக்கருவிகளான அரிவாள், கலப்பை சின்னங்கள் காணப்படுகிறது. இதிலிருந்து முன்பு வேளாண் சமூகமும் வணிக சமூகமும் ஒன்றியிருந்ததை அறிய முடிகிறது.

அரசகாலத்தில் பிராமணர்களுக்கு ஏராளமான நிலங்கள் ஒதுக்கப்பட்டு ஏற்பட்ட பிரம்மதேயங்களின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் எல்லோரும் சேர்ந்து ‘சித்திரமேலி பெரிய நாட்டார்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அரசு மற்றும் அந்தணர்களுக்கு எதிராக வேளாண் அமைப்புகள், வணிகக் குழுக்கள் இணைந்து உருவான இந்த அமைப்பு மூலம் நிலங்களை மீட்டனர். இந்தக் குழு தங்களை பூமிதேவியின் மக்கள் என்றே தங்களை அழைத்துக் கொண்டனர். பெருமாள் கோயில்களை மீட்டனர். கலப்பையை தங்கள் ஆயுதமாக கொண்டவர்கள். மேழி என்றால் கலப்பை. சித்திரமேழி என்றால் அழகிய கலப்பை. கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமனை வணங்கினார்கள்.

அவர்கள் கல்வெட்டுகளை அமைக்கும்போது தங்கள் சின்னங்களை அதில் போடுவார்கள். இங்கிருக்கும் கல்வெட்டில் ‘இந்தக் குலமும் காலும் எண்திசை நாட்டு எரிவீரகணத்தான்’ என்று இருக்கிறது. பனிரெண்டாம் நூற்றாண்டில் இக்குளத்தை விரிவுபடுத்தி புதிய கால்களை அமைத்து உருவாக்கியதைக் இக்கல்வெட்டின் மூலம் அறியலாம். எரிவீரகணத்தான் என்பது திசையாயிரத்து ஐநூற்றுவர் வணிகக் குழுவின் படையமைப்பிலுள்ள வீரர்களைக் குறிக்கும். அந்தக் காலத்தில் வணிகக்குழுவினர் செல்லும்போது துணைக்கு படைவீரர்களை அழைத்துச்செல்வர். அந்தக்குழு வீரர்களுக்கு எரிவீரர், முனைவீரர், குடைவீரர் என்ற பெயர்கள் உண்டு. பொருட்களை கொண்டு செல்ல யானைப்படை கொண்ட வணிகக்குழுக்கள் கூட அக்காலத்தில் இருந்தது.

அருகிலிருக்கும் இன்னொரு மடை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்த மடைக்கு திருவாலவாயன் மடை என்று பெயர். திருவாலவாயன் என்ற பெயர் மதுரை மீனாட்சி சொக்கநாதரை குறிக்கும். மதுரைக்கு ஆலவாய் என்றும் பெயருண்டு. இந்த மடையை ஆலவாய் உடையான் அதிகாரி என்பவரே கண்காணித்துள்ளார். அந்தக்காலக் கல்வெட்டுக்களில் ‘மாடக்குளக்கீழ் மதுரை’ என்றே குறிக்கப்பட்டது. இதில் குளக்கீழ் என்பது இன்றைய தாலுகா போன்ற பகுதி எனலாம்.

வீரநாராயணக்குளக்கீழ், ராஜசிங்கங்குளக்கீழ் என்றெல்லாம் பாண்டியநாட்டில் இடங்கள் உள்ளன. வீரநாராயணக்குளக்கீழ் என்பது திருப்புவனம். ராஜசிங்கக்குளக்கீழ் என்பது இராமநாதபுரத்திலுள்ள பெரிய கண்மாயைக் குறிக்கும். மாடக்குளக்கண்மாயின்கீழ் திருப்பரங்குன்றம், குலசேகரபுரம், அரியூர் போன்ற பகுதிகள் பாசன வசதிகள் பெற்று வந்தன.

மதுரோதய வளநாட்டு மாடக்குளம் என்றும் குறிப்பிடுவார்கள். மதுரையை பெரிய நாடாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மாடக்குளத்திலிருந்து நீர் வந்து பாசனம் செய்த பகுதிகள் எல்லாம் இன்று வீடுகளாகிவிட்டன.

ஆழ்கடல் ஆய்வுகள் செய்து வரும் அதியமான் அவர்களும் பசுமைநடைக்கு சாந்தலிங்கம் அய்யாவுடன் வந்திருந்தார்.

அதியமான் அவர்கள் எங்களுடன் உரையாடியதிலிருந்து:

 பசுமைநடையை சிறப்பாக நடத்திவரும் முத்துக்கிருஷ்ணனைப் பாராட்டுகிறேன். சாந்தலிங்கம் அவர்களைப் பாராட்டுகிறேன். ஒவ்வொரு ஊரிலும் இதுபோல பண்பாட்டைக் காக்க விரும்பினால் உலகிலேயே சிறந்த பண்பாட்டைக் கொண்டவர்களாக நாமிருப்போம். தொல்லியல் ஆய்வுகள் எல்லாமே மதுரையிலிருந்து ஆரம்பிப்பது வழக்கம். கடைச் சங்ககாலம் இருந்த தடயங்களை மதுரையை சுற்றியுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். எழுத்துகள் மதுரையிலிருந்தே வடக்கே சென்றிருக்க வேண்டும். சமீபத்தில் கூட கீழ்குயில்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையைய கல்வெட்டை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற விசயங்களை பொதுமக்களுக்கு எடுத்துச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மலைகள் குவாரிகள் ஆகாமல் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வையூட்ட வேண்டும். தஞ்சாவூரில் கூட இதுபோன்ற அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது’ என்றார்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கீழவளவு பகுதியில் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தப் பகுதிக்கு ஒருமுறை பசுமைநடை செல்ல வேண்டுமென்றும் சொன்னார். அ.முத்துக்கிருஷ்ணனின் எழுத்துக்களை வாசிக்க அவரது இணைய தளத்தைப் பாருங்கள்.

 

மாடக்குளம் கண்மாய் அருகிலுள்ள கபாலிமலையை நோக்கி நடந்தோம். கண்மாய்கரை காவலாய் கருப்பசாமி வீற்றிருக்கிறார். வெகுநாட்களாக தொலைவில் பார்த்த இம்மலையில் பயணித்தது மகிழ்வைத் தந்தது.

திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பசுமலைக்கு பின்னால் தெரியும் மலைதான் இந்தக் கபாலிமலை. காவல்கோட்டத்தில் சமணமலையிலிருந்து இரவு காவலுக்கு மற்றும் களவிற்கு மாடக்குளம் கண்மாய் வழியாகத்தான் மதுரைக்குள் வருவார்கள். மேலும், செம்பூரான்கள் வெள்ளைக்காரப் போலீஸை கபாலிமலை அடிவாரத்தில்தான் கொன்றுபோட்டிருப்பார்கள். இப்பொழுது கபாலி மலையில் பயணிக்கும்போது அந்த நினைவுகள் மேலோங்கி வந்தது.

மலையேறிச்செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இருநூறுக்கும் மேற்பட்ட படிகள் உள்ளன. இதனாலேயே ஏறிச்செல்வதற்கு மலைப்பாக உள்ளது.

மலை மீது ஏறிப்பார்த்தால் மதுரையை 360°யில் பார்க்கலாம்.

அருகில் பசுமலை, கூடைதட்டிப்பறம்பு, திருப்பரங்குன்றமலை, சமணமலை, தென்கால்கண்மாய் எல்லாம் தெரிந்தது.

தொலைவில் நாகமலை, சிறுமலை, வயித்துமலை, நத்தம் மலை, யானைமலை, மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு கோபுரங்களும், நிறைய வீடுகளும் என எல்லாம் அழகாய், சிறிதாய் தெரிந்தது.

மலைமீது கபாலீஸ்வரி மற்றும் அலங்காரி அம்மன் கோயிலும் உள்ளது. இங்கு வந்து கிராமமக்கள் வழிபட்டுச் செல்கின்றனர். மலையில் எல்லோரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டோம். வெயில் நன்கு ஏறிவிட்டது. எல்லோரும் மலையிலிருந்து மெல்ல இறங்கினோம்.

மலையிலிருந்து இறங்கி வந்து மாடக்குளத்தின் காவல்தெய்வமான ஈடாடி அய்யனார் கோயிலுக்கு சென்றேன். யானை மற்றும் குதிரைகளில் கருப்பசாமியும், அய்யனாரும் வருவது போலிருந்த சிலைகளைப் பார்த்ததும் நிஜமாகவே அவர்கள் அங்கிருப்பது போலிருந்தது. அங்கிருந்த காவல்தெய்வங்களை வணங்கி வந்தேன்.

பின் எல்லோரும் உணவருந்தினோம். மதுரை சரவணன் அவர்களுடன் சேர்ந்து கிளம்பினேன்.

நாடு செழிக்கணும்! நல்ல மழை பெய்யணும்! கண்மாய்குளமெல்லாம் நிறையணும்! மதுரை வளம்பெருகணும்!

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார – அருமையான விளக்கங்கள் மற்றும் அழகான துல்லையமான படங்களுடன் கூடிய உரை நன்று. பசுமை நடை – உடற்பயிற்சி – அரிய தகவல்கள் அறிவது – தொல பொருள் ஆய்வு – மன நிறைவு இத்தனையையும் தருகிறது.

  நாடு செழிக்கணும்! நல்ல மழை பெய்யணும்! கண்மாய்குளமெல்லாம் நிறையணும்! மதுரை வளம்பெருகணும்! – விருப்பங்கள் நிறைவேற நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. dharumi சொல்கிறார்:

  மதுரையச் சுத்தி இம்புட்டு இருக்கா …~

 3. தொப்புளான் சொல்கிறார்:

  யானையேறி காவல்செய்யும் தெய்வம் கொண்ட ஊரொன்றை இங்குதான் காண்கிறேன்.

  மாடக்கண்மாய் நன்றாக இருந்தால்தான் மாடக்கூடல் நன்றாக இருக்கும்.

  பதிவில் உள்ள தென்கால் கண்மாயில் நீர் வற்றிப்போவதன் சிரமத்தை தனிப்பட்ட முறையில் அனுபவித்திருக்கிறேன். நெருக்குவெட்டான ஒரு வெப்ப நாளின் கலக்கிய பொழுதில் இந்த கண்மாயை நம்பி இருந்துவிட்டு நீர்தேடி அலைந்து ஒரு ஓரத்தில் கீரைப்பாத்திக்குச் சென்று கொண்டிருந்த கலங்கிய நீர் மட்டுமே கண்டு கலங்கினேன்.

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  மதுரையைப் பற்றி அற்புதமான பதிவு.
  எல்லோரும் படிக்க வேண்டும். குறிப்பாக மதுரைக்காரர்கள் படிக்க வேண்டும்; கலந்து கொள்ள வேண்டும்.

 5. விளக்கமான பதிவு… நன்றி…

  அ.முத்துக்கிருஷ்ணனின் அவர்களின் தள இணைப்பிருக்கும் நன்றி…

 6. மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் பெருமாள்மலை அடிவாரத்தில் பழமையான மலைக்கோயில் உள்ளது. பெருமாள் கால்தடம் பதித்ததாக நம்பப்படும் இடத்தில் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு பல நூறு ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
  இந்தக் கோயிலுக்கு கட்டிடம் கிடையாது. திறந்தவெளியில் படிக்கட்டுகள் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து ‘சேங்கி’ என அழைக்கப்படும் குளத்தில் தீர்த்தமாடுவர். அதன்பின் அவர்கள் 3 முறை மண்ணை அள்ளி நேர்த்திக்கடனாக மலையில் உள்ள குன்றின் மீது போடுவர். இவ்வாறு போட்டால் நெல் விளைச்சல் அமோகமாக அமையும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
  குளங்களை தூர்வாரி மழை நீரை சேமிப்பதற்காகவும் அப்போதிருந்தே இதுபோன்று ஒவ்வொருவராக மண்ணை அள்ளி குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என்பதும் ஒரு கருத்தாக இருந்துள்ளது. இந்த நாளில்தான் மேலூரை சேர்ந்தவர்கள், வயலில் விளைந்த பொங்கல் கரும்புகளை கோவிலுக்கு காணிக்கை செலுத்தி விற்பனை செய்வார்கள். இந்த நாளில் மேலூர், நரசிங்கம்பட்டி உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் திருக்கார்த்திகையன்று குடும்பத்துடன் வந்து வழிபட்டு செல்வார்கள்.
  – தினத்தந்தி 28.11.12
  கண்மாய் குளங்களைக் காக்க அப்போதே நம் முன்னோர்கள் இதுபோன்ற செயல்களை வழிபாட்டுடன் இணைந்து செய்து வந்துள்ளனர். அடுத்த வருடம் முடிந்தால் இந்நிகழ்வை நேரில் சென்று பதிவு செய்யணும். தினத்தந்திக்கு நன்றி.

 7. வி.டி .என் .பிரபாகரன். சொல்கிறார்:

  மாடக்குளம் குறித்த மற்றொரு பழமொழி : மதுரையில் எழவு ( சாவு ) ஓய்ந்தாலும், மாடக்குளத்தில் உழவு ( விவசாயம் ) ஓயாது .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s