இங்கும் ஒரு எல்லோரா – கழுகுமலை

Posted: ஒக்ரோபர் 13, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

இருண்ட காட்டுக்குள் செல்லும்போது குளிர்ந்த கரிய பாறை ஒன்றைப் பார்த்தேன். அது அங்கே மௌனமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாகப்பட்டது. நம்மைச் சுற்றி இந்த அலகிலாப் பெரும் பிரவாகம், பிரபஞ்சப் பெருவெளி, நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதில் நாமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அந்தப் பாறை ஒரு ரிஷி போல. அத்வைதத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்த யோகி. அதன்மீது சருகுகள் பெய்கின்றன. மழையும் பனியும் வெயிலும் நிழல்களும் பொழிகின்றன. காற்று தழுவிச் செல்கிறது. காலம் அதன்மீது பெருகிச் செல்கிறது. வாழ்தல் என்பது அதுபோல பரிபூர்ணமான ஒரு நிகழ்தலாக இருக்க வேண்டும்.           

– ஜெயமோகன்.

பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களோடு வரலாற்றுப்பயணமாக கழுகுமலைக்கு சென்றிருந்தோம். கழுகுமலைக்கு நாங்கள் சென்றிருந்த சமயம் நல்ல வெயில். மலைமீது ஏறி வெட்டுவான் கோயிலுக்கு சென்றோம். சாந்தலிங்கம் அய்யா வெட்டுவான் கோயிலைப் பௌர்ணமி நாளில் பார்த்த அனுபவத்தையும், வரலாற்றுத்தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு நானும் சகோதரனும் முதல்முறை சென்றபோது மழை பெய்து கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. வெட்டுவான்கோயிலை முதன்முதலில் பார்த்தபோது ஏற்பட்ட போது பிரமிப்பு இந்தப் பயணத்திலும் அகலவில்லை.

வெட்டுவான் கோயிலிருக்கும் மலையின் பெயர் அரைமலை. மலைமீது ஒற்றைக்கற்கோயிலாக வெட்டுவான் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் எட்டாம் நூற்றாண்டாகும். பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தைச் சேர்ந்தது. அந்தக் காலத்தில் பாண்டியனின் நிலைப்படையொன்று இப்பகுதியில் இருந்ததாம். வெட்டுவான் கோயிலை தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கிறார்கள்.

வெட்டுவான் கோயில் குறித்த சுவாரசியமான கதையொன்று இப்பகுதியில் உலவி வருகிறது. பாண்டியநாட்டில் மிகவும் புகழ்பெற்ற சிற்பி ஒருவன் இருந்தான். அவன் சிலை செய்யும் கலைநேர்த்தியைக் கண்டு இவன்தான் தெய்வச்தச்சன் மயனோ என்று அனைவரும் வியந்தனர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் திருவிழாவிற்கு சென்றனர். கூட்டத்தில் மகன் தொலைந்து போய்விட்டான். தேடி அலைந்து அழுதுபுலம்பினான். மகன் கிடைக்கவில்லை. அதன்பிறகு இம்மலையில் சமணத்துறவிகளின் சிலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டான்.

திடீரென்று ஒருநாள் மலையின் கீழ்பகுதியில் கல்செதுக்கும் ஒலி கேட்டது. மேலே வந்தவர்கள் இந்தச் சிற்பியிடம் ‘கீழே ஒரு இளம் சிற்பி சிலை செதுக்குகிறான். எவ்வளவு அழகாக செதுக்கிறான் தெரியுமா? பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு’ என்றனர். அவனைப் பற்றி வருபவர்களெல்லாம் புகழ இவனுக்கு வெறுப்பு அதிகமாகியது. ஒருநாள் கடுப்பாகி தன் கையிலிருந்த பெரும் உளியை இளம்சிற்பி இருக்கும் திசையை நோக்கி வீசினான். உளிபட்டு அந்த இளம் சிற்பி ‘அப்பா’ என அலறி விழுந்தான். போய் பார்த்தால் திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகனின் தலையைத்தான் உளியால் வெட்டியிருக்கிறான். அங்கு அவன் செதுக்கிய சிற்பங்களை பார்த்து மலைத்து நின்றான். பிறகு தன் மகனை எடுத்து அழுதுபுலம்பினான். இதனால் இக்கோயில் பணி பாதிலேயே நின்றுவிட்டது. இதனால் இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்ததாம். வெட்டியெடுக்கப்பட்ட கோயில் என்பதாலும் வெட்டுவான் கோயில் என்ற பெயர் வந்திருக்கலாம்.

கதைதான். இந்தக் கதை அறுந்துபோனால் ஊர் அறுந்துபோகும். ஊரும் கதையும் வேறல்ல, கதையும் உயிரும் வேறல்ல. கதை மறந்த பொழுது உயிர்களெல்லாம் அழிந்ததால் கதையே உயிரென்றானது. கதை மண்ணிலிருந்து துவங்குகிறது. மண்ணைப் பற்றியே பேசுகிறது. இந்த மண்ணின் தலை விளைச்சல் கதைதான்.

– சு.வெங்கடேசன் (காவல்கோட்டம்)

வெட்டுவான் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் எழிலாக, ஒயிலாக, அழகாக செதுக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர், பூதகணங்களின் சிலைகள் அவ்வளவு ஒயிலாக அமைக்கப்பட்டுள்ளது. சிவன், திருமால் அமர்ந்திருக்கும் சிலைகளுக்கு அருகிலிருக்கும் சிம்மம், யாளி, தேவகன்னியர் சிலைகளைப் பாருங்கள். கோயில் முகப்பில் சிவனும் பார்வதியும் அந்நியோன்யமாக பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற சிலை அவ்வளவு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. வெட்டுவான் கோயிலைப்  பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி முருகன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. சகோதரனுடன் சென்றிருந்த போது தமிழ்க் கடவுளைப் பார்த்து வந்தோம். நீங்களும் கழுகுமலைக்கு கிளம்பிட்டீங்களா? கழுகுமலை கோயில்பட்டியிலிருந்து சங்கரன் கோயில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கோயில்பட்டி செல்ல இரயில் வசதி உள்ளது. கோயில்பட்டியிலிருந்தும், சங்கரன்கோயிலிருந்தும் கழுகுமலைக்கு பேருந்து வசதிகள் உள்ளது.

பின்னூட்டங்கள்
 1. படங்கள் மிகவும் அருமை…

  நன்றி…

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார – கழுகு மலைப் பயணம் அருமை – படங்கள் நேர்த்தியாக எடுக்கப் பட்டிருக்கின்றன – வெட்டுவான் மலை தல வரலாறு நன்று – பசுமை நடை தொடர நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  N.Rathna Vel
  கழுகுமலை பற்றி நண்பர் திரு சித்திர வீதிக்காரன் அவர்களின் அருமையான பதிவு. படித்துப் பாருங்கள். அவரது பதிவில் பின்னூட்டம் எழுதுங்கள். நல்ல அணியின் நல்ல சேவையைப் பாராட்டுங்கள்.

 4. சங்கரபாண்டி சொல்கிறார்:

  வெட்டுவாங்கோயில்’ என்றால் காசு வெட்டிப்போடும் கோயில் என்றுதான் நான் முதலில் நினைத்தேன். அதன் பின்னால் இப்படியொரு கதையிருப்பதை இப்போதுதான் அறிந்தேன். தேவதையின் சிலையில் முகம் வெட்டப்பட்டு கிடப்பதைப் பார்க்கும்போது சங்கடமாயிருக்கிறது.

 5. Pandian சொல்கிறார்:

  மிக்க நன்றி ஐயா…..

 6. ரெங்கசுப்ரமணி சொல்கிறார்:

  எத்தனையோ முறை இவ்வூரை கடந்து சென்றுள்ளேன். அங்கு ஒரு முருகன் கோவில் உள்ளது மட்டும்தான் தெரியும். அத்துடன் ஒரு பாசி படிந்த குளம். பயப்படுத்தும் ஒரே விஷயம் வெய்யில், மற்ற இடங்களை விட கடுமையாக உள்ளது போலவே இருக்கும் எனக்கு.

 7. maathevi சொல்கிறார்:

  “தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கிறார்கள்.” அருமை.

 8. சுரேஷ் பாபு சொல்கிறார்:

  அருமை நண்பரே இப்படி ஒரு இடம் இருப்பதை தாங்களின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் மிகவும் பயனுள்ள தகவல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s