இப்படியும் ஒரு சுற்றுலா

Posted: ஒக்ரோபர் 13, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

தொன்மம் கால வரைக்குட்பட்டதல்லதாகும். சமகாலத்தில் நடந்து கொண்டிருக்கும் தொன்மமே நவீனம்.   – கோணங்கி

மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் காணப்படும் தொல்லியல் சுவடுகளை மாதம்தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமை பசுமைநடைப் பயணமாக சென்று கண்டு வருகிறோம். பசுமைநடை நண்பர்களில் நிறையபேர் கழுகுமலைக்கு ஒருநாள் செல்ல வேண்டுமென்று சொன்னார்கள்.

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து ஒருநாள் பயணமாக வரலாற்றுச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்வதாகத் திட்டம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இந்த ஆய்வு மையத்தின் செயலராகயிருக்கிறார். நானும், சகோதரரும் வீரசிகாமணி, திருமலாபுரம் தவிர மற்ற இடங்களுக்கு சென்றிருக்கிறோம். இருந்தாலும் குழுவாகச் செல்லும்போது ஏற்படும் இன்பம் அலாதியானது.

30.09.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை காளவாசல் அருகிலுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய அலுவலக வாசலிலிருந்து ஒரு பேருந்தில் கிளம்பினோம். கழுகுமலைக்கு முதலில் செல்லத்திட்டம். மொத்தம் 65 பேர் சென்றோம். கழுகுமலை செல்லும் வழியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி மையத்தில் காலை உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த தொழிற்பயிற்சி வளாகத்தில் பத்திற்கும் மேலாக கொண்டு சென்றிருந்த மரக்கன்றுகளை நட்டோம்.

கழுகுமலை செல்லும் போது நல்ல வெயில். வெயில் அடித்ததால் படங்கள் எடுக்க உதவியாக இருந்தது. முன்பொருநாள் நல்ல மழைப்பொழுதில் சகோதரனுடன் வந்தது ஞாபகம் வந்தது. இப்பொழுது மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் வெட்டியிருக்கிறார்கள். இரும்பு கம்பிகளை கை பிடித்து செல்வதற்கு வசதியாக அமைத்திருகிறார்கள். கழுகுமலை வெட்டுவான் கோயிலைப் படமெடுப்பதற்காக எல்லோரும் வருவதற்கு முன்பாக ஏறிச்சென்றோம். என்னோடு இப்பயணத்திற்கு சகோதரியின் மகனும் வந்திருந்தான்.

வெட்டுவான் கோயிலின் அழகைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு. வெட்டுவான் கோயிலைப் பார்த்து விட்டு அருகிலுள்ள சமணமுனிவர்களின் சிலைகளைக் காணச்சென்றோம். பாண்டியர்கள் காலத்தில் இப்பகுதியில் சமணம் செழித்து வளர்ந்திருக்கிறது. தமிழகத்தில் மற்ற இடங்களைவிட இங்குதான் அதிகமான சமணமுனிவர்களின் சிற்பங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

சாந்தலிங்கம் அய்யா கழுகுமலை குறித்த வரலாற்றுத்தகவல்களைக் கூறினார். சமணமுனிவர்களின் சிலையிருக்கும் பாறைக்கருகிலேயே அய்யனார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் முன் சேமங்குதிரையொன்று உள்ளது. கருப்புசாமி காவலுக்கு வீற்றிருக்கிறார். வெயில் வாட்டி எடுத்தது. அய்யனார் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களிடம் தண்ணீர் வாங்கி அருந்தினேன்.  பிறகு மெல்ல இறங்கினோம்.

கழுகுமலையிலிருந்து சங்கரன்கோயில் சென்றோம். சங்கரநாராயணனை வணங்கினோம். சாந்தலிங்கம் அய்யா கோயில் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவருடன் சேர்ந்து கோயிலைச் சுற்றிப் பார்த்தோம். சங்கரன்கோயிலில் ஒரு வீட்டில் மதிய உணவு. அங்கிருந்து வீரசிகாமணி சென்றோம். பேருந்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் கலைஞானி கமல்ஹாசனின் படப்பாடல்களைக் கேட்டுச் சென்றபோது வெய்யோனின் வெம்மை குறைந்து காற்றில் குளுமை ஏறியது.

வீரசிகாமணி குடைவரையைப் போய் பார்த்தோம். சாந்தலிங்கம் அய்யா அந்தக் குடைவரை குறித்த தகவல்களை சொன்னார். அருகிலேயே குகைப்புடைவு ஒன்றும் உள்ளது. அங்கிருந்த பாறையில் சறுகி விளையாடிக் கொண்டிருந்தோம். அங்கிருந்து கிளம்பி திருமலாபுரம் சென்றோம். திருப்பரங்குன்ற கல்வெட்டுக்கோயிலை நினைவூட்டியது. அங்கு மலைமேல் பள்ளிவாசல் உள்ளது. இங்கு தேவாலயம் ஒன்று உள்ளது. குடைவரை முன் எல்லோரும் குழுவாகப் படமெடுத்துக் கொண்டோம். பேருந்தில் சாந்தலிங்கம் அய்யா சந்தேகங்களுக்கு பதிலளித்தார். வெட்டுவான் கோயில், சங்கரன்கோயில் குறித்த வரலாற்று தகவல்களைக் கூறினார்.

அங்கிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றோம். மிகவும் இருட்டிவிட்டது. கோயில் செல்லவில்லை. எல்லோரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் புகழ் பால்கோவா, பால்அல்வா வாங்கினர். இரவு உணவை எல்லோருக்கும் ஒருவர் வாங்கி கொடுத்தார். அவருக்கு நன்றிகள் பல.

இந்தப் பயணத்தை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடைக் குழுவும் இணைந்து சிறப்பாக நடத்தினர். பாண்டியநாட்டு வரலாற்றுப் பேரவையை சேர்ந்த ஆத்மநாதன் மற்றும் பசுமைநடைக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் அவர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் பல. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவுடன் சென்றது இன்னும் நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள உதவியாகயிருந்தது.

அடுத்த பயணம் டிசம்பர் மாதம் ஞாயிறொன்றில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூர், சித்தன்னவாசல், குடுமியான் மலை, திருமயம் என அறிவித்து உள்ளனர். வெட்டுவான்கோயில், கழுகுமலையில் சமணம், வீரசிகாமணி குடைவரை, திருமலாபுரம் குடைவரை, சங்கரன்கோயில் குறித்தெல்லாம் தனிப்பதிவாக எழுதுகிறேன். தென்பாண்டிநாட்டில் தொன்மையான இடங்களைப் பார்த்துவிட்டு உலகின் தொன்மையான  தூங்காநகருக்கு இரவு பத்தரைக்கு வந்தோம். இந்த நாள் இனிய நாள்.

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்

ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி 

– ஆத்மாநாம்

பின்னூட்டங்கள்
 1. கழுகுமலை பலமுறை சென்றுள்ளேன்…

  படங்கள் அருமை… நன்றி…

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  மதுரையிலிருந்து ஒரு குழு அற்புதமாக பணியாற்றுகிறார்கள். இந்த பதிவை படித்துப் பாருங்கள். அவர்களை உற்சாகப் படுத்துங்கள்.
  நன்றி சித்திர வீதிக்காரன்.

 3. subash krishnasamy சொல்கிறார்:

  நல்ல பயணம். நல்ல நோக்கம்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

 4. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார, அருமையான பயணம் பற்றிய பதிவு -படங்களும் விளக்கங்களும் நன்று – நல்லதொரு செயலினைத் தொடர்ந்து செய்து வரும் குழுவினர்க்குப் பாராட்டுகள் – நல்வாழ்த்துகள் – ந்ட்புடன் சீனா

 5. தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

  அருமைசயாக பதிவு . உங்கள் கேமிரா வழி ப டங்கள் மிக அருமை. நிறைய தகவல் நிறைந்துள்ளன.

 6. Radhakrishnan Gopalsami pillai சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார, அருமையான பயணம் பற்றிய பதிவு -படங்களும் விளக்கங்களும் நன்று – நல்லதொரு செயலினைத் தொடர்ந்து செய்து வரும் குழுவினர்க்குப் பாராட்டுகள் –

  • cheenakay சொல்கிறார்:

   அன்பின் ராதாகிருஷ்ணன் கோபால்சாமி பிள்ளை – தங்களின் க்ருத்து என் மறுமொழியில் உள்ள சொற்களாக உள்ளனவே . தாங்கள் என் கருத்தினை அப்படியே நகல் எடுத்து வெளியிடுவதற்குப் பதிலாக சுயமாக தங்கள்: க்ருத்தினை வெளீயிடலாமே ! சிந்த்க்கவும். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 7. vidhaifoundation சொல்கிறார்:

  பசுமை நடையில் பங்குபெற என்ன செய்ய வேண்டும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s