அரைமலை ஆழ்வார்

Posted: ஒக்ரோபர் 15, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்
குறிச்சொற்கள்:,

மலையில் சிறப்பாக வழிபாடு பெற்ற சமணர் தெய்வத்துக்கு ‘அரைமலை ஆழ்வார்’ என்றும் ‘மலைமேல் திருமலைத் தேவர்’ என்றும் பெயர் இருந்தது. கோட்டாறு, மிழலூர், வெண்பைக் குடி முதலிய 32 க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள். இறந்து போன குடவர் சீடர், தந்தை, தாய், மகன், மகள் முதலிய பலரின் நினைவாக இவ்வுருவங்கள் செய்யப்பட்டுள்ளன. எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப்பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளார், குயவர், கொல்லர், முதலிய பல தொழில் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பல ‘வயிராக்கியர்’களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.   – நன்றி: கழுகுமலை.காம்

 பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து பசுமைநடை நண்பர்களுடன் வரலாற்றுப்பயணமாக கழுகுமலை – சங்கரன்கோயிலைச் சுற்றியுள்ள தொல்லியல் சுவடுகளைப் பார்க்க குழுவாகச் சென்றிருந்தோம். கழுகுமலையில் வெட்டுவாங்கோயிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சமணச்சிற்பங்கள் இருக்கும் கற்பாறையை நோக்கி சென்றோம். நூற்றுக்கணக்கான சமணமுனிகளின் சிலைகளை கற்பாறையில் செதுக்கியிருக்கிறார்கள். இவ்வளவு சிலைகளை இதுவரை சென்ற வேறு எந்த மலையிலும் பார்த்தது இல்லை.

 

சமணமுனிகளின் சிற்பங்களிருக்கும் பாறைகளுக்கருகில் ஐயனார் கோயில் உள்ளது.

மலைமேல் ஐயனார்கோயிலும் அதன் வாயிலில் சேமங்குதிரையில் ஐயனார் இருப்பதையும் இங்குதான் பார்க்கிறேன்.

கருப்புசாமி ஐயனார் கோயிலுக்கு காவலாகயிருக்கிறார்.

ஐயனார் சன்னதிக்கெதிரில் யானை சிலையொன்றும் உள்ளது.

நாங்கள் சென்றபோது ஐயனார்கோயிலுக்கு சாமிகும்பிட ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

நல்ல வெயில். நாங்களே அவர்களிடம்தான் தாகத்திற்கு தண்ணீர் வாங்கி அருந்தினோம்.

பொங்கு சாமரை யேந்திப்

          புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்

சிங்க வாசனத் திருந்து

          தெளிந்தொளி மண்டில நிழற்றத்

திங்கள் முக்குடை கவிப்பத்

           தேவர்தந் திருந்தவை தெருள

 அங்க பூவம தறைந்தாய்

          அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா

-நீலகேசி

சிங்காசனத்தின் மேல் அமர்ந்திருக்கும் மகாவீரரின் இருபுறமும் சாமரம் வீசும் இயக்கியர், முக்குடைக்கு மேலே அரசமரத்திலாடும் அரம்பையர், யானைமேல் வரும் இந்திரன் எனத் தீர்த்தங்கரரின் சிலைமிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

பாம்பை குடையாகக் கொண்ட பார்சுவநாதர், தம் தமக்கையரோடு நிற்கும் பாகுபலி, நவராத்திரியின் போது கொலுவில் அடுக்கியிருக்கும் சிலைகளைப் போல வரிசையாக அமர்ந்திருக்கும் சமணமுனிவர்களின் சிலைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகயிருந்தது.

கற்பாறைக்கு அருகில் ஒரு பதாகையில் மகாவீரரின் அருள்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள். இல்லற வாசிகளுக்கான ஒழுக்கங்களை சமண நூல்கள் கூறுவதைக் காண்போம்

 1. கொல்லாமை
 2. பொய்யாமை
 3. கள்ளாமை
 4. பிறன்மனை விரும்பாமை
 5. பொருள்வரைதல் (அளவாகப்பொருள் சேர்த்தல்)
 6. கள் உண்ணாமை
 7. ஊன் உண்ணாமை
 8. நல்லோரைப் பணிதல்

சாந்தலிங்கம் அய்யா கழுகுமலையில் சமணம் செழித்திருந்த வரலாற்றைக் கூறினார். மதுரை சமணமலையில் மாதேவிப்பெரும்பள்ளி இருந்ததைப் போல இங்கும் ஒரு சமணப் பள்ளி இருந்திருக்கிறது. இங்கு கற்றுக் கொடுத்த சமணத்துறவிகளில் ஆண்களை குரவரடிகளென்றும், பெண் துறவிகளை குராத்தியர் எனவும் படித்த மாணவர்களை மாணாக்கன், மாணாக்கியர் எனவும் குறிப்பிடும் கல்வெட்டுக்கள் உள்ளது. மற்ற பகுதிகளிலிருந்தும் சமணத்துறவியர் வந்து பாடம் நடத்தி சென்றிருக்கின்றனர்.

இந்த ஊரின் பெயர் நெச்சுரம் அல்லது திருநெச்சுரம் என்று இங்குள்ள கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. நெச்சுரம் என்றால் நீர்நிலைகள் சூழ்ந்த பகுதி என்று பொருள். பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தைச்(ஏழாம் நூற்றாண்டு) சேர்ந்தவை. இங்குள்ள சிலைகளை நேர்ச்சையாக செய்து கொடுத்துள்ளனர். தென்தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பலர் இங்கு வந்து சிலைகள் செய்து கொடுத்திருப்பதை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

சமணமும் தமிழும் என்னும் நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி அய்யா இங்குள்ள கல்வெட்டுக்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அதிலிருந்து கொஞ்சம் இப்பதிவில் காணலாம்.

‘சித்தாந்தம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹார தானமாகச்’ என்னும் கல்வெட்டின் மூலம் கழுகுமலையில் பண்டைக்காலத்தில் சமண சித்தாந்தம் நாள்தோறும் போதிக்கப்பட்டு வந்ததையும், அவர்களுக்கு தானஞ்செய்ய நிலங்கள் வழங்கப்பட்டிருந்ததையும் அறியலாம்.

 1. திருநேச்சுரத்துக் கோன் மகன் சாத்தங்கண்ணான் மகன் கண்ணஞ் சாத்தன் செய்வித்த திருமேனி.
 2. பேரெயிற்குடி சேந்தங்காரியார் செய்வித்த திருமேனி
 3. குறண்டிக் காவிதி செய்வித்த திருமேனி.
 4. ஸ்ரீ குணசாகர படாரர் சீடன் பேரெயிற்குடி சாத்தன் தேவன் செய்வித்த திருமேனி.
 5. திருக்கோட்டாற்றுப் பாதமூலத்தான் கன்மன் புட்ப நந்தி செய்வித்த திருமேனி.
 6. புட்பநந்தி படாரர் மாணாக்கர் பெருணந்தி படாரர் செய்வித்த திருமேனி.
 7. வெளற்குடி மூத்த அரிட்டநேமி படாடர் மாணாக்கர் குணநந்தி பெரியாரைச் சார்த்தி மிழலூர்க் குரத்தியார் செயல்.
 8. திருநெச்சுரத்து மாறன் புல்லி செய்வித்த படிமம். இதுக்குக் கீழுரன் றொட்டன் திருவிளக்கு நெய்.
 9. கடைக்காட்டூர் திருமலையர் மொனிபடாரர் மாணாக்கர் தயாபாலப் பெரியார் செய்வித்த திருமேனி.
 10. படிக்கமணபடாரர் மாணாக்கர் பவணநந்திப் பெரியார் செயல்.
 11. நெடுமரத்தோட்டத்து குணந்தாங்கியார் செய்வித்த திருமேனி.
 12. மலைக்குளத்து ஸ்ரீவர்த்தமானப் பெருமாணாக்கர் ஸ்ரீ நந்தி…

(நன்றி – மயிலை சீனி.வேங்கடசாமி, சமணமும் தமிழும்)

இந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பேரெயிற்குடி மதுரை கீழ்குயில்குடியாக இருக்கலாமென நான் நினைக்கிறேன். குறண்டி என்னும் ஊரும் மதுரையில் உள்ளது. திருநேச்சுரம் என்பது கழுகுமலையைக் குறிக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன் பதின் வயதில் கழுகுமலைக்கு குழுவாகச் சென்ற சமணத்துறவிகளைப் பார்த்ததை தேசாந்திரியில் எழுதியிருக்கிறார்.

அவர்கள் சிரவணபெலகுலாவிலிருந்து நடந்தே கழுகுமலை நோக்கி போய்க்கொண்டு இருந்தார்கள். அவர்களின் மழிக்கப்பட்ட தலையும், முகத்திலிருந்த சாந்தமும் அவர்கள் பின்னாடியே போய் விடலாமா என்று தோன்றும்படியாக இருந்தது. கிராமத்து மக்கள் அவர்களை எப்படி சேவிப்பது என்று தெரியாமல் படி நிறைய நெல், தேங்காய், பழங்கள் சகிதமாகச் கொண்டுபோய் அவர்களை வணங்கியபோது, அந்தத் துறவிகள் கைகளை உயர்த்தி ஆசிர்வாதம் செய்தபடி, மக்கள் கொண்டுவந்திருந்த தானியங்களைப் பறவைகளுக்கு தீனியாகப் பாறையில் போட்டார்கள். இளம் துறவி ஒருவர் மட்டும், ஆடு மாடுகளை இம்சை செய்யக்கூடாது, உயிர்க்கொலை தவிர்க்கப்பட வேண்டும் என்று சிறிய உரை நிகழ்த்தினார்.       

 – எஸ்.ராமகிருஷ்ணன்

கழுகுமலையில் சமணம், சைவம் செழித்திருந்ததைப் போல கிறிஸ்துவ மதமும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. கழுகுமலையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சங்கரன்கோயில் சென்றோம். இந்தப் பகுதியில் பருத்தி, கம்பு, வத்தல் பயிரிடப்படுகிறது.

தொடர்புடைய பிற பதிவுகள்:

இங்கும் ஒரு எல்லோரா – கழுகுமலை

இப்படியும் ஒரு சுற்றுலா

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார , அருமையான பதிவு – பசுமை நடைப்பயணம் நன்று – எத்த்னை படங்கள் – எத்தனை எடுத்துக் காட்டுகள் – எத்த்னை விளக்க்ங்கள் – ஆர்வமும் தனியாத தாகமும் பிரமிக்க வைக்கின்றன – நல்வாழ்த்துகள் – நட்புடன்சீனா

 2. kashyapan சொல்கிறார்:

  தோழரே! இவை பதிவுகளாக நின்று விடாமல் புத்தகங்களாகி ஆவணங்களாக்கப்பட வேண்டும்—கஸ்யபன்.

 3. rathnavelnatarajan சொல்கிறார்:

  அற்புதமான பதிவு. சமண மத சம்பந்தமான புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கின்றன. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி.

 4. பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது…

  படங்கள் அருமை… நன்றி…

 5. தொப்புளான் சொல்கிறார்:

  கழுகுமலை முருகன் கோயிலுக்கு சென்றுவரும் பலருக்கும் வெட்டுவான் கோயிலோ சமணச்சிற்பங்களோ தெரிவதே இல்லை. தீர்த்தயாத்திரை செய்பவர்கள் தீர்த்தங்கர யாத்திரையும் செய்யலாமே?

  அதுசரி, திருக்கழுக்குன்றம் போல கழுகு கரெக்டா நேரத்துக்கு வந்து சாப்பிட்டுப்போற மாதிரி கதையெதுவும் கழுகுமலைக்குக் கிடையாதா?

 6. சட்டநாதன் சொல்கிறார்:

  எங்க ஊரைப் பற்றிப் படிக்கும் போது , ரொம்ப பெருமையாக இருக்கிறது . சின்ன வயதில் ஊர் பற்றிய விஷயங்களை எங்களுக்கு சொல்ல நிறையபேர் இருந்தனர் , எங்க ஊர் மாட்டுத்தாவணியில் நடந்த மாட்டுச் சந்தை பற்றிய பற்றிய விவரங்களை எல்லாம் கதை போல ஒருவர் சொன்னார். எதையும் குறித்து வைக்கவில்லை .
  இன்று ஊருக்குப் போக நேரமில்லை , பல பெரிய மனிதர்களும் மறைந்து விட்டனர்.

  இருந்தாலும் எங்களால் ஆன முயற்சிகளை செய்து கொண்டு தான் இருக்கிறோம் . குறிப்பாக இந்தப் பதிவின் மூலம் எங்கள் ஊரின் ஓவியங்களை எங்கள் தமிழாசிரியரும் நண்பர் ஓவியர் ரஞ்சித்தும் ஆவணப் படுத்த ஆரம்பித்துள்ளனர் .
  http://goo.gl/LVkCH

  எங்க ஊர் பற்றி வந்த பதிவுகளை இங்கே தொகுக்க ஆரம்பித்துள்ளேன்.
  http://msattanathan.wordpress.com/2012/03/28/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/

 7. maathevi சொல்கிறார்:

  பலதகவல்கள் உங்கள் பகிர்வில் தெரிந்துகொண்டேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s