திருமலாபுரம் பாண்டியன் குடைவரை

Posted: ஒக்ரோபர் 21, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

ஒன்றே யென்னின் ஒன்றேயாம்

பலவென் றுரைக்கிற் பலவேயாம்

அன்றே யென்னின் அன்றேயாம்

ஆமே யென்னின் ஆமேயாம்

இன்றே யென்னின் இன்றேயாம்

உளதென் றுரைக்கின் உளதேயாம்

நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா

– கம்பர்

சாலையின் இருமருங்கிலும் மரங்கள் குடைவரையாய் அமைய பயணித்தவர்கள் பாக்கியவான்கள். தமிழகத்தில் பல்லவர்கள் காலத்திற்கு முன்புவரை குடைவரைகள் அமைக்கப்படவில்லை. அப்போதெல்லாம் மரத்தினால் கடவுள்களுக்கு கோட்டங்கள் அமைத்தனர். மகேந்திரவர்ம பல்லவன் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் முதல் குடைவரை அமைக்கப்பட்டது. பின்னர் பாண்டியர்களும் தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிறைய குடைவரைகள் அமைத்தனர். குடைவரைகள் எழுப்பப்பட்ட காலத்தை கி.பி ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் எனலாம்.

மதுரையிலிருந்து பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்கள் இணைந்து கழுகுமலை – சங்கரன்கோயில் – வீரசிகாமணி சென்றுவிட்டு அங்கிருந்து திருமலாபுரம் நோக்கி பயணித்தோம். திருமலாபுரம் ஊருக்கு வெளியே உள்ள மலையில் இக்குடைவரை அமைந்துள்ளது.

சாலையிலிருந்து மலையை நோக்கி நடந்தோம். வழியில் கூட்டமாய் நின்ற பனைமரங்கள் கண்ணை கவர்ந்தன. குடைவரையில் மூன்று வாயில்கள் உள்ளன. அவற்றிற்கு நேரே உள்ளே நடராஜர், பெருமாள், பிள்ளையார் உள்ளனர். நாங்கள் சென்றிருந்த போது கோயில் திறந்திருந்தது. பூசாரி வந்திருந்தார். சிவலிங்கத்தை அலங்காரம் செய்யும் முன் புகைப்படமெடுக்க ஒத்துழைத்தார்.

சாந்தலிங்கம் அய்யா திருமலாபுரம் குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். இந்தக் குடைவரையில் முன்மண்டபமும், ஒரு கருவறையும் காணப்படுகிறது. நான்முகன், சதுரதாண்டவமாடும் நடராஜர், சங்கு சக்கரத்துடன் பெருமாள் மற்றும் விநாயகர் சிலை முன்மண்டபத்தில் உள்ளது. வலதுபுறம் கருவறையில் சிவலிங்கம் உள்ளது. சிவனுக்கு நேரே பிரம்மா சிலை உள்ளது.

திருப்பரங்குன்றமும் இதுபோன்ற ஐந்து கடவுள்கள் கொண்ட குடைவரைதான். திருச்சியில் ஆறு கடவுள்கள் உள்ள குடைவரையொன்று உள்ளது. அங்கு சூரியன் சிலையும் இருக்கிறது. முன்மண்டபத்திலுள்ள தோரணம் போன்ற அமைப்பிற்கு தரங்கம்பொதிகையென்று பெயர். இக்குடைவரை பாண்டியனால் அமைக்கப்பட்டது. இந்த முன்மண்டபத்தில் ஓவியங்கள் காணப்படுகிறது. இந்த ஓவியங்கள் தற்போது காண முடியாமல் சிதைந்து இருக்கிறது.

இந்த மலைக்கு வாரணவாசி மலை என்று பெயர். இந்த ஊருக்கு முன்பு வாரணவாசிபுரம் என்று பெயர். இக்குடைவரையிலும் பூணூல் இடைவழியாக வராமல் தோள் மேலே ஏறியிருப்பது போல் காணப்படுகிறது. இக்குடைவரை ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்குடைவரையில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இது இக்குடைவரை கட்டி முந்நூறாண்டுகளுக்கு பிறகு வைக்கப்பட்டிருக்கலாம். பாண்டியன் ஸ்ரீவல்லபனின் பெயர் இக்கல்வெட்டில் காணப்படுகிறது.

திருமலாபுரம் குறித்து இணையத்தில் தேடிய போது வரலாறு.காமில் அர.அகிலா எழுதிய சிரட்டைக் கின்னரி என்ற பழமையான இசைக்கருவி குறித்த கட்டுரையில் இந்த ஊரைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அர.அகிலாவிற்கு நன்றி.

தமிழ்நாட்டில் எத்தனையோ பாண்டியர் குடைவரைகள் இருந்தபோதும் சிரட்டைக் கின்னரி இடம்பெறும் ஒரே குடைவரை திருமலைப்புரம் குடைவரைதான். திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம். இன்றைக்கு திருமலாபுரம் என்றழைக்கப்படும் இச்சிற்றூரின் தென்புறத்தே உள்ள மலைக்குன்றுகளின் தொடரில் இரண்டு குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள், குன்றின் வடமுகத்தில் உள்ள முதல் குடைவரை முழுமையடைந்த நிலையில் சிற்பங்களுடன் காட்சி தருகிறது.

இக்குடைவரையின் சுவர்ச் சிற்பங்களுள் ஒன்று சிவபெருமானின் ஆடற்திருக்கோலமாக உருவெடுத்துள்ளது. இதில் நடுநாயகமாக சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பூதங்கள் இரண்டு, பக்கத்திற்கொன்றாக நிறுத்தி, வலப்பாதத்தை உத்கடிதமாக்கி சதுரகரணத்தில் ஆடும் சிவபெருமானின் இவ்வாடல் அமைப்புச் சிறப்புக்குரியதாகும். சிவபெருமானின் இருபுறத்தும் உள்ள பூதங்களுள், வலப்புற பூதத்தின் உடல் பெருமளவிற்குச் சிதைக்கப்பட்டுள்ளது. அதன் கால்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனையோலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடத்தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக் கருவியை, வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

– அர.அகிலா (வரலாறு.காம்)

திருமலாபுரம் திருப்பரங்குன்றத்தை ஞாபகமூட்டியது. இக்குடைவரையின் முன்அமைப்பு தென்பரங்குன்றத்திலுள்ள கல்வெட்டுக்கோயிலைப் போலவும், உள்ளேயுள்ள முன்மண்டபமும் கருவறையும் திருப்பரங்குன்ற முருகன் சன்னதியையும் போலவும் இருந்தது. திருப்பரங்குன்றத்தில் மலைமேல் தர்ஹா உள்ளது. இங்கு கிறிஸ்துவ தேவாலயம் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் நுழைந்ததும் முருகன் சிற்பம் தெரியும். முருகனுக்கு அருகில் துர்க்கை அதற்கடுத்து பிள்ளையார் சிலையுள்ளது. இங்கு முருகன் சிலையிருக்குமிடத்தில் நடராஜரும், துர்க்கை சிலையிருக்குமிடத்தில் திருமாலும் உள்ளனர். வலதுபக்க கருவறையில் இங்கு சிவலிங்கம் உள்ளது. திருப்பரங்குன்றத்தில் சிவலிங்கமும் அதன் பின்னால் சிவனும், பார்வதியும் சிலைவடிவில் இருக்கின்றனர். திருப்பரங்குன்றத்தில் சிவன் சன்னதிக்கு எதிரே பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார். பெருமாளுக்கு பதில் இங்கு நான்முகன் இருக்கிறார். (திருப்பரங்குன்றத்தில் பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் பவளக்கனிவாய்ப்பெருமாளையும், சிவலிங்கத்தையும் தரிசிக்க வாய்ப்பில்லை)

திருமலாபுரத்தில் காணப்படும் குடைவரைச் சிற்பங்களான பிரம்மா, நடராஜர், பெருமாள் மற்றும் பிள்ளையார் நால்வருக்கும் நான்கு கைகள் இருப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

கடவுள் எங்கும் பரந்து இருக்கிறார் என்பது எல்லாச் சமயத்தவரின் கொள்கை. இதனைச் சைவரும் வைணவரும் தமது கடவுள் திருவுருவத்தில் அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கடவுள் உருவங்களுக்கு நான்கு கைகள் அல்லது எட்டுக் கைகளை அமைத்துக் காட்டியிருக்கிறார்கள். திசைகளை நான்காகவும் எட்டாகவும் கூறுவது மரபு. ஆகையினாலே எல்லாத் திசைகளிலும் பரந்து இருக்கிறவர் கடவுள் என்பதைக் காட்ட, நான்கு கைகளை அல்லது எட்டுக் கைகளை கற்பித்திருக்கிறார்கள்.

– மயிலை.சீனி.வேங்கடசாமி (தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்)

திருமலாபுரத்தில் எல்லோரும் சேர்ந்து குடைவரை முன் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம். அங்கிருந்து கிளம்பி கடையநல்லூர், இராஜபாளையம் வழி ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றோம்.  நிலவும் கூடவே வந்துகொண்டிருந்தது.

பின்னூட்டங்கள்
 1. அறிய கல்வெட்டுக்கள்… தொடர்கிறேன்… நன்றி…

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  கம்பனின் இப்பாடலைப் படித்த் பின்னர் தான் கண்ணதாசன் உண்டென்றால் அது உண்டு – இல்லை என்றால் அது இல்லை என எழுதினாரோ

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார

  திரும்லாபுரம் குடைவரைக் கோவில் – அத்தனை புகைப்படங்களூம் அருமை – விளக்க்ங்களும் அருமை – அய்ராது சென்று அத்தனையும் பார்த்து பதிவிட்டது நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி சித்திர வீதிக்காரன்.

 5. தொப்புளான் சொல்கிறார்:

  ஓ! பூதம் சிரட்டைக் கின்னரி இசைக்க சிவன் தாண்டவமா? நன்று.

  வரிசைப் பனைகளும் வாழ்க!

 6. Dr.M.K.Muruganandan சொல்கிறார்:

  வரலாற்று தகவல்கள், புகைப்படங்கள்
  அனைத்தும் மிகச் சிறப்பாகத் தந்திருக்கறீர்கள்

 7. அப்பாதுரை சொல்கிறார்:

  ஒரு முறையாவது இப்படி உங்களுடன் பயணம் போக வேண்டும்.
  படங்களும் விவரங்களும் சுவாரசியம்.

 8. maathevi சொல்கிறார்:

  திருமலாபுரம் கண்டுகொண்டோம். வரலாறுகளும் விளக்கமாகத் தெரிந்து கொண்டோம்.
  திருப்பரம் குன்றம் சென்றிருக்கின்றேன்.

 9. வே.இராஜகுரு சொல்கிறார்:

  திருமலாபுரம் பற்றிய தகவல்களை நீங்கள் மட்டும் தான் இவ்வளவு விரிவாக சுவையாக வழங்கியிருக்கிறீர்கள். எனது பள்ளி மாணவர்களுக்கு சொல்ல இது மிகவும் பயன்படும் எனது வலைப்பதிவிலும் இதை நான் பதிவிடுவேன். இத்தகவல் பல ஆண்டுகளாக தேடியவை நன்றி நன்றி நன்றிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s