வீரசிகாமணி: குடைவரை, குகை, கல்வெட்டு

Posted: ஒக்ரோபர் 21, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

 

குற்றால நாதர்

நெல்லை யப்பர்

மத்யஸ்த நாதர்

சங்கர லிங்கம்

 சோம சுந்தரேஸ்வரர்

சுடலையாடும் பெருமாள்

சொகுசானால்

சிவபெருமான்.

– விக்ரமாதித்யன்

பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப்பயணமாக சங்கரன்கோயிலைச் சுற்றியுள்ள இடங்களுக்கு சென்றிருந்தோம். சங்கரநயினார் கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து வீரசிகாமணி சென்றோம். சங்கரன் கோயிலுக்கு வடமேற்கே பத்துமைல் தொலைவில் வீரசிகாமணி அமைந்துள்ளது.

ஊருக்கு வெளியே அமைந்துள்ள நீளமானகுன்றில் குடைவரைக் கோயில் உள்ளது. நாங்கள் சென்றபோது இறங்குவெயில். குடைவரைக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருந்ததால் நாங்கள் சென்ற போது நிழலாயிருந்தது. குடைவரைக்கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்டியிருக்கிறார்கள். இக்கோயில் சிவனுக்கு கயிலாயநாதனென்று பெயர்.

கோயிலில் குடைவரைக்குமுன் பெரிய நந்தி சிலை அமைத்திருக்கிறார்கள். குடைவரை முன்மண்டபத்திற்கு வெளியேயுள்ள பாறைக்குன்றில் இடதுபுறம் பிள்ளையார் சிலையும், வலதுபுறம் திருமால் சிலையும் செதுக்கப்பட்டு உள்ளது. கருவறையில் சிவலிங்கம் அமைந்திருக்கிறது. முன்மண்டபத்து கருவறை வாசலுக்கருகில் துவாரபாலகர் சிலை அமைந்துள்ளது. மண்டபத்து சுவர்களில் முனிவர்களின் சிலை இரண்டு காணப்படுகிறது. மண்டபத்து தூண் ஒன்றில் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது.

பௌர்ணமிக்கு மறுநாள் நாங்கள் சென்றிருந்தோம். எனவே, நான்கு நாட்களுக்கு முன் பிரதோஷ வேளையில் சிவலிங்கத்திற்கும், நந்திக்கும் அபிஷேக அலங்காரம் நிகழ்ந்திருக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்தவர்கள் மாலைகள் வாங்கிவந்து கொடுத்திருக்கலாம். குடைவரைக்கு வெளியே சுற்றுச்சுவருக்கு அருகில் நவக்கிரக சன்னதியை இக்கோயிலில் அமைத்திருக்கிறார்கள். இதிலிருந்து இக்கோயில் மக்கள் வழிபாட்டில் உள்ளதை அறிய முடிகிறது.

சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த வரலாற்று தகவல்களைக் கூறினார். தமிழகத்தில் நிறைய குடைவரைக் கோயில்கள் உள்ளன. மதுரையில் உள்ள ஏழு குடைவரைகளை பசுமைநடைப்பயணத்தின் போது பார்த்தோம். இந்தப் பயணத்தில் வீரசிகாமணியும், திருமலாபுரமும் குடைவரைக்கோயில்கள் (ROCKCUT CAVE TEMPLE). கழுகுமலை வெட்டுவாங்கோயில் ஒற்றைக் கற்கோயில் (MONOLITHIC TEMPLE).

வீரசிகாமணி குடைவரை சோழர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட காலத்தில் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள வட்டெழுத்து கல்வெட்டின் மூலம் அறியலாம். ராஜராஜசோழனின் வாரிசுகள் பாண்டிய நாட்டில் மண்டலாதிபதிகளாக பொறுப்பேற்றிருந்தனர்.

முன்மண்டபத்தில் கருவறை நுழைவாயிலில் கோணிப்பையை தலையில் கவிழ்த்திருப்பது போன்ற துவாரபாலகர்களின் சிலை அக்கால மனிதர்களை ஞாபகமூட்டுகிறது. துவாரபாலகர்களின் தோளிலிருந்து பூணூல் கீழே இடைவழியாக வராமல் மற்றொரு தோளில் உள்ளது போலிருப்பதால் இச்சிலையமைவை வைத்து இக்குடைவரை ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாமென்று கணிக்கலாம்.

குடைவரைக்கு வெளியே உள்ள பாறையில் பிள்ளையார் சிலையும் மறுபுறம் திருமால் சிலையும் உள்ளது.

சில குடைவரைக்கோயில்களில் பிள்ளையாருக்கு மறுபுறம் ஜேஷ்டாதேவி சிலையிருக்கும். ஜேஷ்டாதேவி ஸ்ரீதேவியான இலக்குமியின் அக்கா. மூதேவி என்று சொல்வது ஜேஷ்டாதேவியைத்தான். வளம் மற்றும் உரத்தின் தெய்வம். திருப்பரங்குன்றத்தில் கூட ஜேஷ்டாதேவிக்கு தனி சந்நதி உள்ளது. வைணவர்கள் திருமாலின் இணையான இலக்குமியை வணங்கத்தொடங்கிய பின் ஜேஷ்டாதேவி வழிபாடு மங்கத்தொடங்கியது.  

குடைவரைக்கு வெளியே பழமையான பெருமாள் சிலை ஒன்றுள்ளது.

இங்கிருக்கும் கல்வெட்டில் ‘ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையவன்மாரன சுந்தர சோழ பாண்டியதேவர்க்கு யாண்டு அ(எட்டாவது) இராசராசபாண்டி நாட்டு முடிகொண்ட சோழவளநாட்டு கல்லக நாட்டு பிரமதேயம் வீரசியான வீரவநோதச் சருப்பேதிம்… ஸ்ரீ கையலாயத்து பெருமான்….’ என இன்னும் கொஞ்சம் வரிகள் காணப்படுகிறது.

குடைவரையிலிருந்து வெளியே வந்து பெருமாளைப் போய் பார்த்தேன். பின்னாலிருந்து கதிரவன் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து குகைத்தளமிருந்த இடத்திற்கு சென்றோம். திருப்பரங்குன்றத்திலிருந்தது போல இயற்கையான குகைத்தளம் இங்கு அமைந்துள்ளது.

குகைத்தளம் வளுவளுப்பாக இருந்ததால் சறுகி விளையாட வசதியாகயிருந்தது.

இந்தக் குகையை பஞ்சபாண்டவர்குகை என்றழைப்பதாக ‘சமணமும் தமிழும்’ நூலில் மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதியுள்ளார். மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருக நகரைச் சுற்றியிருந்த ஐந்து மலைகளை பண்டவமலை என்று அழைத்தனர். அங்கு புத்தர் தங்கிருந்திருக்கிறார். தமிழகத்தில் பௌத்தபிக்குகள் தங்கிய இடங்களை பண்டவமலை என்றழைத்தனர். பண்டவமலை என்பது பேச்சு வழக்கில் பாண்டவ மலையானது. பாண்டவமலைகளில் பின் பஞ்சபாண்டவர்கள் தங்கியிருந்ததாக கதைகள் கிளம்பியது தனிக்கதை. பௌத்தபிக்குகள் தங்கிய இடங்களில் பின்னர் சமணத்துறவிகள் தங்கியிருக்கலாம் அல்லது பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் வேறுபாடு தெரியாமல் இந்த இடங்களுக்கு பாண்டவ மலையென்று பெயர் வந்திருக்கலாம்.  இந்தத் தகவலை ‘பௌத்தமும் தமிழும்’ நூலில் வாசித்தேன். மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு நன்றி. மதுரை கொங்கர்புளியங்குளத்தில் உள்ள மலைக்குகூட பஞ்சபாண்டவ மலையென்று பெயர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் எனது நன்றிகள் பல. கவிஞர் விக்ரமாதித்யனுக்கும் நன்றி.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. சிறப்பான படங்களுடன் விளக்கம் அருமை…

    மிக்க நன்றி…

  2. சங்கரபாண்டி சொல்கிறார்:

    கோச்சடையான் கால குடைவரையா?

  3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார,

    வீரசிகாமணி குடைவரை குகை கல்வெட்டு – பதிவு அருமை- படங்களூம் அவற்றைப் பற்றிய விளக்கங்களும் அருமை. உனது ஈடுபாடு பிரமிக்க வைக்கிற்து. கண்ணில் கண்டதை எல்லாம் ஆவணப் படுத்துவது நன்று. புத்தகமாக வெளியிட வசதியாக இருக்கும்.

    பார்த்தவை அனைத்தையும், அறிஞர் பெருமக்கள் கூறுவதை அனைத்தையும், புகைப்படங்கள் அனைத்தையும் – எப்படி நினைவில் நிறுத்தி – பதிவிடுகிறாய். திறமை பளிச்சிடுகிறது.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

  4. தொப்புளான் சொல்கிறார்:

    ஏ.எஸ்.ஐயின் ஊதா பலகைகள் இங்கெல்லாம் இருக்கின்றனவா?

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    சங்கரன் கோவில் அருகே உள்ள வீரசிகாமணி பற்றிய திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s