நேற்று ராத்திரி மழையீரத்தை

நக்கிக்குடித்தது சூரியன்!

மரத்தோடிறுகிய

கோந்துப் பாளமும்

மனதிளகியதால் தழுதழுத்தது!

தொண்டை கனத்த

காகம் ஒன்று

தலையைச் சிலிர்த்து

வானம் பார்க்குது

முருங்கைப் பூவைக்

குடையாய்ப் பிடித்தும்

முதுகு நனைத்ததோர்

கம்பிளிப்பூச்சி!

ஆம்! நேற்று ராத்திரி

நல்ல மழைதான்

இன்று

நத்தை மீண்டும் நகர்ந்தது. 

– கமல்ஹாசன்

உத்தமபாளையத்திற்கு சென்ற பயணஅனுபவத்தை குறித்தக் கட்டுரையிது. அதற்கு ஏன் முதலில் கமல்ஹாசனின் கவிதை இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? பயணத்திற்கு முதல்நாள் மாலை இடியும், மின்னலும் இணைந்து மிரட்ட மழை பெய்தது. மழைபெய்யும் போது ஒரு கடைவாசலில் நின்று கொண்டிருந்தேன். அருகில் உள்ள இடம் கூட தெரியாத அளவிற்கு மழை கொட்டியது. மறுநாள் சூரியன் வந்து மழையீரத்தை நக்கிக் குடித்தது.

சகோதரியின் மகனுக்கு முடியிறக்கி, காதுகுத்துவதற்காக அவங்க குலதெய்வ கோயிலுக்கு உத்தமபாளையம் சென்றோம். மதுரையிலிருந்து இரண்டு வேனில் கிளம்பினோம். வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் பாசறையினர் எல்லோரும் கடைசிச்சீட்டைப் பிடித்தோம். அரட்டையடிப்பதற்கும், அலப்பறை பண்ணுவதற்கும் ஏற்ற இருக்கை. வண்டியில் ஏறியதும் பவர்ஸ்டார் படப்பாடல்கள் போடச்சொன்னோம். தலைவரது பாடல்கள் இல்லாததால் பாடல் கேட்பதை புறக்கணித்து அரட்டையை ஆரம்பித்தோம். செக்காணூரணி தாண்டி ஒரு கடையில் தேநீர் இடைவேளை முடிந்து வண்டி ஏறியதும் பாட்டுக்குப் பாட்டு ஆரம்பித்தோம். அந்தாதி போல முடியும் அடியில் தொடங்கிப் பாடினோம். பழைய பாடல்கள், புதுப்பாடல்கள் என கச்சேரி களைகட்டியது.

வழிநெடுக மலைகள் கூடவே வந்தன. உத்தமபாளையம் ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சிறுகுன்றிற்கு அடிவாரத்திலுள்ள முத்துக்கருப்பண சாமி கோயிலுக்கு சென்றோம். பொங்கல் வைப்பதற்கான சாமான்களை இறக்கி வைத்து விட்டு ஐஸ் வாங்கித் தின்று கொண்டிருந்தோம். எங்க அண்ணன் வந்து நம்ம ஆளுங்க இங்க இருக்காங்க வா போகலாம்ன்னார்.

கோயிலையொட்டிய பாதையில் சென்றோம். பின்னாலேயே குன்று அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் முன்மண்டபம் ஒன்று காணப்படுகிறது. மலைப்பாறையிலேயே சமணத்தீர்த்தங்கரர்களின் சிலைகள் நிறைய செதுக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஒரே மகிழ்ச்சியாகிவிட்டது. இரண்டு வரிசையாக சிலைகள் அமைந்துள்ளன. பார்சுவநாதர், முக்குடைநாதர் சிலைகள்தான் அதிகமிருந்தன. இங்கு வட்டெழுத்துக்கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் அச்சணந்தியின் பெயர் உள்ளது. மேலும், இதை அமைத்துத்தந்தவர்களைக் குறித்த கல்வெட்டும் உள்ளன. கழுகுமலை பயணத்தின் போது சாந்தலிங்கம் ஐயாவிடம் உத்தம்பாளையத்திலுள்ள  சமணமுனிவர்களின் சிலைகளைப் பற்றி கேட்டபோது இத்தகவலைச் சொன்னார். இந்த இடம் பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மண்டபத்தின் கீழே பெரியகுகை போன்ற பகுதி காணப்படுகிறது.  அதன் உள்ளே செல்லமுடியாதபடி குப்பையாகக் கிடக்கிறது. இதைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள தமிழ்மொழித்தளத்தைப் பாருங்கள்.

சமணமுனிகளின் சிலைகளிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் முன்பே மலையேறிச்செல்வதற்கு படிகள் கட்டப்பட்டுள்ளது. படியேறும் முன்  நந்தி சிலை நம்மை வரவேற்கிறது.

கொஞ்சம்படிகள் ஏறிச்சென்று பார்த்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதைப்போன்ற அம்மன் சிலை ஒன்று உள்ளது. அருகில் செங்கல் கட்டிடம் ஒன்றின் அடித்தளம் மட்டும் காணப்படுகிறது. முன்பு இந்த இடத்தில் கோயில் இருந்திருக்கலாம்.

குன்றிலிருந்து பார்த்தால் நாலாபக்கமும் மலைகள் தெரிந்தது. எல்லோரும் சேர்ந்து குழுவாய் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.

மலையைப் பார்த்துவிட்டு கோயிலுக்குச் சென்றோம். அங்கு காவல்பூதத்தின் முன் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தனர். இங்குள்ள மிக உயரமான காவல் பூதத்தின் சிலைகள் கருப்புசாமி சன்னதிக்கு இருபுறமும் வெளியில் இருக்கிறது. குதிரை சிலையொன்றும் உள்ளது.

சகோதரியின் மகனிற்கு முடியிறக்கினர்.

எங்க அண்ணனும் இன்னொரு தம்பியும் ஆத்திற்கு குளிக்கச் சென்றனர். நானும் இன்னொரு தம்பியும் அவர்களைத் தேடி ஆத்திற்குச் சென்றோம். நாங்கள் பாதை மாறி வேறுபக்கம் போய்விட்டோம். ஒரு வழியாக ஆற்றுக்குப் போனால் அதற்குள் எங்கள் நால்வரையும் வரச்சொல்லி அலைபேசியில் அலை போல மாறிமாறி அழைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் ஷேர்ஆட்டோ பிடித்துக் கோயிலுக்கு போக, ஆட்டோக்காரர் காசு குறைவாக கொடுத்துருவோம்ன்னு நினைச்சு உத்தம்பாளையத்தை எங்கள் அவசரம் தெரியாமல் சுற்றிக்காண்பித்துக்கொண்டிருந்தார். எஜமான் ரஜினி மாதிரி ஒரு சின்ன சந்தில் எல்லாம் நுழைந்து சென்றார்.

நாங்கள் நடந்து சென்றபோது ரெண்டு நெட்டு ரோடுதான் இருந்தது ஆறு. கடைசியில் இறக்கிவிட்டு நாலுபேருக்கு முப்பதுரூபாய் கேட்டார். இதை அங்கேயே சொல்லியிருந்தா கொடுத்துருப்போமே இப்படி ஊரைச்சுத்திக்காட்டணுமான்னு கேட்கலாம் என்பதற்குள் அவர் போய்விட்டார். பிறகு சாமி கும்பிட்டு எல்லோரும் சாப்பிட்டோம்.

உத்தமபாளையத்திலிருந்து வருகையில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு சென்றோம்.

இங்கு சித்திரை மாதம் பெருந்திருவிழா நடைபெறுமாம்.

வைகை அணைக்குச் சென்றோம்.

தண்ணீர் குறைவாக வறண்டு இருந்தது.  அணையைச் சுற்றிப்பார்த்துவிட்டு கிளம்பினோம்.

 

இந்தப் பயணத்தில் சமணமுனிகளின் சிலைகளைப் பார்த்தது மறக்க முடியாத அனுபவம் மட்டுமல்ல, எதிர்பாராத ஆச்சர்யமும் கூட. பயணங்கள் முடிவதில்லை.

பின்னூட்டங்கள்
 1. படங்களும் பகிர்வும் அருமை…

  நீங்கள் தந்த இணைப்பையும் (http://mintamizh.blogspot.in-Monday, July 18, 2005) படித்தேன்…

  நன்றி..

 2. ranjani135 சொல்கிறார்:

  மிகவும் சரி. ‘பயணங்கள் முடிவதில்லை தான். போய்விட்டு வந்தபின் மறுபடி போகத் தூண்டும்.

  உங்களுடன் கூடவே நாங்களும் வந்ததுபோல ஒரு உணர்வு இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததும்.

  பாராட்டுக்கள்!

 3. ஸ்ரீ சொல்கிறார்:

  நல்ல பதிவு. :-)))

 4. rathnavelnatarajan சொல்கிறார்:

  சமண சிற்பங்கள் பற்றிய திரு சித்திர வீதிக்காரன் அவர்களின் இன்னொரு அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.

 5. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  பயணக் கட்டுரை அருமை – கண்ணில் கண்டதை எல்லாம் கட்டுரையாக வடிக்கும் திறமை பாராட்டுக்குரியது – நினவாற்றலும் நன்று. ஓவ்வொரு சின்னச் சின்ன தகவலைக் கூட நினைவில் வைத்து எழுதியமை மிகவும் பிடித்தது. கமலஹாசனின் கவிதையுடன் சகோதரியின் மகனுக்குக் காது குத்தி , முடியிறக்கிய வைபவதிற்குச் சென்றது படங்களூடன் விவரிக்கப் பட்ட விதம் அருமை.

  நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 6. Geetha Sambasivam சொல்கிறார்:

  அருமையான சிற்ப அதிசயம் ஒரு பொக்கிஷத்தையே கண்டு எடுத்திருக்கிறீர்கள். பெரியகுளத்தில் நான்கு நாட்கள் தங்கி இருந்தப்போ இந்த இடம் பற்றித் தெரிஞ்சிருந்தா போய்ப் பார்த்திருக்கலாம். தெரியலை. :(((

 7. maathevi சொல்கிறார்:

  ஆறு , சிற்பங்கள் ,மலைமீது சிவன் என அழகிய இடம். கண்டது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

 8. ரெங்கசுப்ரமணி சொல்கிறார்:

  உத்தம பாளையத்தின் அடுத்த ஊர்க்காரன். பாளையத்தில் ஐந்து வருடங்கள் படித்துள்ளேன். பாளையத்தில் சமணர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை கேள்விபட்டது கூட இல்லை. பள்ளிக்கு பின்னால் உள்ள ஒரு மொட்டை பாறையில் சில சிலைகளை பார்த்ததுடன் சரி, அது கூட புத்தர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது சொந்த ஊர் பெருமைகளை வெளியூர் ஆட்கள் தானே வந்து கூற வேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s