திருச்செந்தூரின் கடலோரத்தில்…

Posted: நவம்பர் 24, 2012 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

நிலவில்

ஒழுகிய சொட்டென

ஒளிரும் நல்முத்தினுள்

அலைபுரள்கிறது ஆழிப்பெருங்கடல்

அதன் பழுப்புப் பிரதேசங்கள்

சுடர்த்திக்கொண்டிருக்கின்றன

பெரும் நீர்பரப்பினடியில்

புதைந்துகிடக்கும்

வரைபடங்களறியாத் தீவுகளை.

– தாணுபிச்சையா

பார்க்கப் பார்க்க சலிக்காத விசயங்களுள் கடலும் ஒன்று. சமீபத்தில் பயணங்கள் ஆசிர்வதித்த நாளொன்றில் திருச்செந்தூருக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. கழுகுமலை சங்கரன்கோயில் வரலாற்றுப்பயணம் சென்றுவந்த மறுநாள் காலை திருச்செந்தூருக்கு கிளம்பினோம். அண்ணன் பையனுக்கு முடியிறக்கி காதுகுத்துவதற்காக சென்றோம். எனக்கும் முதல் மொட்டை திருச்செந்தூரில்தான் எடுத்தார்கள். அதன் பிறகு நிறைய இடங்களில் அடித்து விட்டார்கள்.

மதுரை இரயில்நிலையம் சென்று அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். இரயில் தாமதமாக வருமென்றதால் அங்கு உள்ள திண்டில் படுத்தேன். முதல்நாள் களைப்பு கொஞ்சம் நீங்கியது. இரயிலில் கூட்டம் குறைவாக இருந்ததால் பயணம் இனிதாக அமைந்தது. வண்டியில் வந்த தின்பண்டங்களை வரிசையாக வாங்கித் தின்று கொண்டே சென்றோம். மதியம் புளியோதரையை ரயிலிலேயே ஒரு கட்டுக் கட்டினோம். அதைவிட திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் வரை சென்ற பேருந்துப் பயணம் மிக சுவாரசியமாக அமைந்தது. பேருந்து அந்தப் பகுதியிலுள்ள எல்லா ஊர்களுக்கும் சென்று கொண்டேயிருந்தது. எங்க அண்ணன் நடத்துனரிடம் திருச்செந்தூர் எப்ப வருமென வினவினார். அதற்கு அவர் ‘திருச்செந்தூர்லதான இருக்கோம்’ என்றதை பிறகு சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தோம்.

செவ்வாய்க்கிழமை காந்திஜெயந்தி வந்ததால் திருச்செந்தூரில் நல்ல கூட்டம். என்னைப் போல விடுமுறை விரும்பிகள் திங்களன்று விடுமுறை எடுத்ததால் தங்கும் விடுதியில் அறை கிடைப்பதற்கே அலைய வேண்டியிருந்தது. தாமதமாக கிடைத்தாலும் கடலைப் பார்க்கும்படி தங்கும் விடுதி கிடைத்தது. அறையில் பொருட்களை வைத்துவிட்டு நீராடச்சென்றோம்.

நிலவொளியில் நீலக்கடலில் நீராடியது மறக்கமுடியாத அனுபவம். அலைகளில் அசைந்தாடியபடி நிலவையே பார்த்துக்கொண்டிருந்தேன். அலையும், கூட்டமும் மிதமாகயிருந்ததால் வெகுநேரம் குளித்தோம். கடலை விட்டு வர மனமில்லாமல் வந்தோம். தங்கத்தேரில் வந்த செந்திலாண்டவரை தரிசித்தோம். உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு வந்து அறைக்கு வெளியே உள்ள திண்டில் அமர்ந்து கடலைப் பார்த்தபடி நானும் எங்க அண்ணன்களும் பேசிக்கொண்டிருந்தோம். மூவரும் கமல்ஹாசன் ரசிகர்கள் என்றதால் அவரைக் குறித்து நிறைய பேசினோம். நிலவும் கடலும் நடனம் புரியும் கதையரங்கம்.

அறையில் உள்ள கட்டிலில் படுத்துக்கொண்டு சாளரம் வழியாக பார்க்கும்போது இரவில் அலைகள் வெண்புரவிகள் போல ஓடி வருவது தெரிந்தது. வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலில் பிலோமி அலையோசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் வரிகள் ஞாபகம் வந்தது.

எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலில்தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்குச் சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில்தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. அப்போது அந்தக் கடல் கண் முன் வரும். எத்தனை எத்தனை தோற்றங்கள். – வண்ணநிலவன்

 காலை எழுந்ததும் கடலுக்கு நீராடச் சென்றோம். மீனவர்கள் படகில் தொலைவில் செல்வது தெரிந்தது. இரவில் பார்த்த கடலுக்கும் விடியலில் பார்த்த கடலுக்கும் வித்தியாசம் நிறைய இருந்தது. அலைகள் கொஞ்சம் வேகமாயிருந்தது. கடலில் இறங்கி கொஞ்சதூரம் போனதும் வந்த பெரியஅலை என்னை திக்குமுக்காட செய்து விட்டது. எனக்கு நீச்சல் தெரியாது என்பதால் பயம் அதிகரித்தது. எங்க அண்ணன்கள், மாமா எல்லாம் உள்ளே தள்ளிப்போய் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் மன்னார் வளைகுடாவுக்கெல்லாம் வரலை என்று அவர்களிடம் சொல்லி ஓரளவு உள்ளே போகாமல் நின்று குளித்துக் கொண்டிருந்தேன்.

குளித்துவிட்டு மொட்டையெடுக்குமிடம் சென்றோம். குழந்தைகளுக்கு மொட்டையெடுப்பதை பார்க்கும்போது பாவமாகயிருக்கும். அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் சிறுவயதில் மொட்டையடிப்பதால் மண்டையில் அழுக்கு சேராது நல்லது என்கிறார். நானெல்லாம் ஆறாவது படிக்கிறவரைக்கும் முடிவெட்டுறதுக்கே அழுவேன். மொட்டையெடுக்கும் இடத்தில் எழுதியிருந்த பதாகை சிரிப்பை வரவழைத்தது. மொட்டையெடுத்த பின் காதுகுத்தும் இடத்திற்கு சென்றோம். அதன்பின் சாமிகும்பிட செல்லலாம் என்று பார்த்தால்கோயிலில் பயங்கர கூட்டம். எனவே, சாமி பார்க்க முடியவில்லை. கடலையும், கோபுரத்தையும் வணங்கி அறைக்கு வந்து மீண்டும் குளிக்கச் சென்றோம்.

கடலிலிறங்கி அலையை எப்படி எல்லோரும் எதிர்கொள்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஒன்றும் புரிபடவில்லை. ஒருத்தர் அலைமேலே மிதக்கிறார். எனக்கு பார்க்கும் போது பெரிய வித்தை மாதிரி தெரிந்தது. நீச்சல் பழகணும் என்ற ஆவல் உதித்தது. இப்படித்தான் பழனிபாதயாத்திரை சென்ற போதும் உடன்வந்த நண்பர்கள் கிணற்றில் குதித்து நீந்த நான் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டேயிருந்தேன். கடலிலிருந்து வானையும், அலையையும் பார்க்கும்போது மேகம் அலையாக கடலில் இறங்கி வருகிறதோ எனத் தோன்றியது. கடலுக்குள் இருப்பதால் கடலை சரியாக பார்க்க முடியவில்லை என்று சொல்லி நான் மட்டும் தனியே வந்து கோயிலின் பின்புறம் அமர்ந்து கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீர்ப்பறவைகள் வந்து மீனைத்தேடி கடலலைகளின் மீது பறப்பதை பார்த்தபோது நம்மால் பறக்க முடியவில்லையே என்று பொறாமையாக இருந்தது. சகோதரர்கள் வந்ததும் அறைக்கு போய் உணவகம் போனோம். அங்கு கல்யாணவீட்டில் இடம்பிடிப்பதுபோல ஒருத்தர்பின் ஒருத்தர் நின்று இடம் பிடித்து சாப்பிடவேண்டியதாயிற்று.

பனங்கிழங்குகள், சில்லுக்கருப்பட்டி எல்லாம் கடைவீதிகளில் விற்றார்கள். நம்முடைய உணவில் இனிப்பிற்கு கருப்பட்டி சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். முன்பு திருச்செந்தூர் வந்த போது பதனீர் குடித்தது ஞாபகம் வந்தது. மதியம் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பி மதுரை வந்தோம்.

சமீபத்தில் திரைப்படங்களின் கவனம் நெய்தல் நில மக்களின் மீது குவிந்துள்ளது. மணிரத்னத்தின் ‘கடல்’ , சீனுராமசாமியின் ‘நீர்ப்பறவை’ (இதில் ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார்), தனுஷ் நடிக்கும் ‘மரியான்’ (இதற்கு ஆழிசூழ்உலகு & கொற்கை எழுதிய ஜோ டி குருஸ் வசனம் எழுதுகிறாராம்). நெய்தல் நில மக்களுக்கு அமைதியான வாழ்க்கை அமைய இயற்கை அருளட்டும்.

தொடர்புடைய பதிவுகள்:

வண்ணநிலவனின் கடல்புரத்தில்.

அணிகலன்களின் தேவதை.

பழனி பாதயாத்திரை

பின்னூட்டங்கள்
 1. படங்களும் பகிர்வும் அருமை…

  முடிவில் உள்ள செய்திகளும் அறியாதவை… நன்றி…

 2. Rathnavel சொல்கிறார்:

  Fantastic, will make tamil comments later.

 3. rathnavel natarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

 4. மதுரக்காரன் சொல்கிறார்:

  ஏண்ணே!! நானும் இப்பிடித்தான் நீச்சல் தெரியாம பராக்கு பாத்துட்டு சுத்திட்டு கெடந்தேன். அப்பறம் ரொம்ப ஆசைப்பட்டு ஒருவழியா கத்துகிட்டேன்.. நீங்களும் சீக்கிரம் கத்துகிட்டு மீன் மாதிரி தண்ணில துள்ள என் வாழ்த்துக்கள். என் பையனுக்கும் திருச்செந்தூர்ல ஒரு மொட்டை இருக்கும்னு நெனைக்கிறேன். மாமனார் சைடுல கேட்டு தான் முடிவு பண்ணனும். 🙂 அப்போ இந்த பதிவு ரொம்ப உபயோகமா இருக்கும். நல்ல பதிவு.

  அன்புடன்,
  மதுரக்காரன்.

  • ஒருமுறை நீச்சல் பழக காந்தி அருங்காட்சியகம் அருகில் உள்ள நீச்சல் குளம் சென்றேன். மூணு வயசுப்பையன்லாம் தண்ணில பல்டி அடிச்சுக்கிட்டிருந்தான். நானோ ஆறடி. தண்ணில நின்னு குளிச்சுக்கிட்டிருந்தேன். வெட்கமா இருந்துச்சு. அப்படியே அங்க போறத விட்டுட்டேன். அடிக்கடி நீச்சல் பழகணும்ன்னு நினைக்கிறது, பிறகு மறந்துருது. இனியொருமுறை முயற்சிக்கணும்.

 5. தொப்புளான் சொல்கிறார்:

  குளிக்க வசதியான கடல் திருச்செந்தூர்தான். சென்னை, கன்னியாகுமரிபோல் ஆபத்தும் இல்லை. ராமேஸ்வரம் போன்ற அலையற்ற பெருங்குளமும் இல்லை. அவ்வப்போது பாறைகள் மட்டும் இடரும்.

  மற்ற கோயில்களைப்போல அன்றி நடை சாத்தப்படாத இந்த கோயிலில் சில விஷயங்கள் மட்டும் எனக்குப் பிடிக்காது: சட்டையைக் கழற்றிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்; வள்ளிகுகை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் சாமிசிலையைத் தவிர எல்லாரும் காசுகேட்டு கைநீட்டுவார்கள்.

 6. அப்பாதுரை சொல்கிறார்:

  திருச்செந்தூரும் அழைக்கிறது. ஹ்ம்ம்.. அடுத்த இந்தியப்பயணத்தை சற்று நீட்டி உங்களையும் சந்தித்து விடவேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s