சித்தர்மலையில் பசுமைநடை

Posted: நவம்பர் 29, 2012 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

காட்டுக்கவிதை

என் கவிதை,

கேட்டு மகிழ எண்ணாதீர்,

முடிந்தால்

அதனுள் புகுந்து ,

அலைந்து திரிந்து,

காண்பன கண்டு,

கேட்பன கேட்டு

திகைப்பு நீங்கித்  

திரும்பிடுவீரே.           

– சுப்பையா

சித்தர்மலை பசுமைநடை செல்ல அதிகாலை எழுந்து பனியினூடாக நானும், சகோதரனும் கிளம்பினோம். மதுரை காமராசர் பல்கலைக்கழக வாசல்முன் பசுமைநடை நண்பர்கள் குழுமியிருந்தனர். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து செக்கானூரணி, விக்கிரமங்கலம், பெருமாள்பட்டி வழியாக கல்யாணிப்பட்டி சென்றோம்.

பார்க்கும் திசைகளிலெல்லாம் மலைகள் வரவேற்றன. வழியெங்கும் தென்னந்தோப்புகளும், நெல்வயல்களும், மல்லிகைத்தோட்டங்களும், கரும்புத்தோட்டங்களும், வெண்டிச்செடிகளும் எனச் சுற்றிலும் பசுமையாகயிருந்தது. அதிகாலையில் குழுவாகச் செல்லும் எங்களை கிராம மக்கள் வியந்து பார்த்தனர். அதிகாலையிலேயே தோட்டங்களில் வேலை செய்பவர்களையும், இன்னும் தண்டட்டி போட்ட பாட்டிகளையும்  நாங்களும் வியந்து பார்த்தோம்.

சித்தர்மலையடிவாரத்தில் கல்யாணிப்பட்டி அமைந்துள்ளது. மலையேறுவதற்கு கொஞ்சதூரம் படிக்கட்டுகள் உள்ளது. மலையடிவாரத்திலிருந்து நண்பர் கந்தவேல் வழிகாட்ட முன்நோக்கி நடந்தோம். மரங்களுக்கிடையே உள்ள பாதையினூடாக சென்றோம். என்னுடன் வந்த சகோதரன் ஏற முடியாமல் திணறினான். எனக்கு என்னவோ இந்த மலை அவ்வளவு சிரமமாக தோன்றவில்லை. கொஞ்சதூரம் மலையில் நடக்க பாறைகளில் படிகள் செதுக்கியுள்ளனர்.

(குறிப்பு: படங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் நான்கைந்து படங்களைச் சேர்த்து தொகுப்பாக இட்டுள்ளேன். தயவுசெய்து சொடுக்கி சொடுக்கி அடுத்தடுத்த படங்களைப் பார்க்கவும்)

மலைமீது இயற்கையாக அமைந்த குகைத்தளத்தைக் கண்டோம். அதில் பத்திற்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. படுக்கைகளின் தலையணை போன்ற அமைப்பில் தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. குகையில் நிறைய இடங்களில் தற்கால மனிதர்களின் பெயர்களும் பெயிண்டில் எழுதப்பட்டுள்ளது. படுகையிருக்கும் குகைத்தளத்தினுள் ஆள் நிற்குமளவு பெரிய குகையொன்று உள்ளேயிருக்கிறது.

பசுமைநடை ஒருங்கினைப்பாளரும் எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் குழுவினரை வரவேற்றுப்பேசினார். வெயில் குறைவாக உள்ளதால் மலையேறுவதற்கு எளிதாகயிருப்பதை சொன்னார். பசுமைநடையில் பயணிக்கும் பெண்கள் சிலரின் கருத்துகள் இன்றைய தினகரனில்(18.11.12) அரைப்பக்கம் வந்திருப்பதாக கூறினார். இன்றும் நம்மோடு சேனல்1, ரேடியோமிர்ச்சி, தினமலர் போன்ற ஊடகங்களிலிருந்து நண்பர்கள் பசுமைநடையில் இணைந்து வந்திருப்பதாக கூறினார். இந்த சித்தர்மலையை தொல்லியல்அறிஞர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கூறுகிறார்கள். இங்கு மதுரை என்ற பெயருள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டு உள்ளது. மேலும், மலைமீது இன்னும் கொஞ்சம் ஏறிச்சென்றால் வைகை ஆற்றுப்படுகையை காணலாம் என்றார்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இந்த மலை குறித்த வரலாற்றுத்தகவல்களைக் கூறினார். இந்த மலையிருக்கும் பகுதி முன்பு சித்தர்கள் நத்தம் என்று அழைக்கப்பட்டது. உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் வரும் வழியில் இந்த மலை அமைந்துள்ளது. மதுரை என்ற பெயருள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள் இரண்டு இடங்களில்தான் உள்ளது. ஒன்று அழகர்கோயில் கிடாரிப்பட்டி மலை. அதில் மதிரை உப்பு வணிகன், மதிரை பொன் வணிகன் போன்ற பெயர்கள் காணப்படுகிறது.

சித்தர்மலையில் மதிரை அமணன் உதயணச என்ற தமிழ்பிராமிக்கல்வெட்டு குகைமுகப்பில் உள்ளது. அமணன் என்ற சொல் வருவதால் இங்கு சமணத்துறவிகள் தங்கியிருந்ததை அறிய முடிகிறது. ஸ்ரமணர்கள் என்ற சொல் பொதுவாகத் துறவிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் ஸ்ரமணர்கள் என்ற சொல் மகாவீரர் வழிவந்த சமணமுனிவர்களையே குறிக்கும். தொல்காப்பியம் மொழிக்கு முன் ‘ச’ என்ற எழுத்து வராது என்கிறது. அதை உறுதி செய்வது போல இங்கு அமணன் என்றே காணப்படுகிறது.

இந்த குகைத்தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையணை போன்ற பகுதியில் தமிழ்பிராமிக்கல்வெட்டு உள்ளது. இதை செதுக்கி தந்தவர்களின் பெயராகயிருக்கலாம். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சமணத்துறவிகளுக்கு உதவியுள்ளதை திடியில் ஆதன் என்ற கல்வெட்டின் வாயிலாக அறியலாம். உசிலம்பட்டி பகுதியில் திடியன் என்ற ஊர் இன்றும் உள்ளது. அந்தக்காலத்தில் இல்’ விகுதியில் முடியும் பெயர்கள் நிறைய உண்டு.

பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்குமான பெருவழி இப்பகுதியில் முன்பு இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அகஸ்டஸ் சீசர்  காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. கம்பம் – உத்தமபாளையம் – சின்னமனூர் – வீரபாண்டி – சித்தர்மலை – விக்கிரமங்கலம் – கொங்கர்புளியங்குளம் – முத்துப்பட்டி பெருமாள்மலை – கீழ்குயில்குடி – மதுரை என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. உத்தமபாளையத்தில் சமணத்துறவிகள் தங்கியிருந்த படுகைகள் காணப்படுகிறது. சின்னமனூரில் ஏழாம் (அ) எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவன்கோயில் ஒன்று காணப்படுகிறது. வீரபாண்டி கௌமாரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகனின் பெண் வடிவமாகக் கூட கௌமாரியைச் சொல்வார்கள். அவர் கௌமாரன். பெண் வடிவில் கௌமாரி. ஏழாவது தாமரையில் தோன்றியவள் என்பார்கள்.

சித்தர்மலை மீது உள்ள மகாலிங்கம்கோயில், நந்திப்பாறை எல்லாம் சமகாலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். உசிலம்பட்டி பகுதியில் சிறுத்தைபுலியை வென்ற வீரன் ஒருவனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நடுகள் உள்ளது.

சாந்தலிங்கம் அய்யாவின் உரையைக் கேட்டபின் அங்கிருந்து மலைமீது ஏறத்தொடங்கினோம். குகைத்தளத்தில் ராமர்பாதம் ஒன்றை அமைத்து இருக்கிறார்கள். மலைமீது ஏறிப்பார்த்தால் வைகை ஆறு மணலாக தொலைவில் காட்சி தந்தது. தொலைவில் உள்ள இடங்கள் எல்லாம் பனிமூடியிருந்தது. தூரத்தில் அணைப்பட்டி பாலம் தெரிந்தது. அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தம். அங்கு ஒருமுறை நானும் சகோதரரும் சென்று வைகையில் நீராடியது ஞாபகம் வந்தது. மலை மேல் மகாலிங்கம் கோயில் ஒன்று உள்ளது. நாங்கள் சென்ற போது கோயில் அடைத்திருந்தது. இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிழாவின் போது மலைக்கு நிறைய பேர் வருவார்களாம். இந்தக்கோயில் பூசாரி மலைக்கு மறுபுறம் உள்ள மல்லிகைப்பட்டி ஊரைச்சேர்ந்தவராம். நாங்கள் ஏறிய பாதைக்கு மறுபுறம் உள்ள மேட்டுப்பட்டி வழியாகவும் வரலாமாம். எங்களோடு மலைக்கு வந்த கல்யாணிப்பட்டியை சேர்ந்த சிறுவர்கள் சொன்ன தகவலிது.

சர்ப்பத்தின் கோணல்

புற்றிற்கு சரியாகவே இருக்கும்

ஆற்றின் கோணல்

கடலுக்கு சரியாகவே இருக்கும்

மனிதர்களின் கோணல்

ஆண்டவனுக்கு சரியாகவே இருக்கும்.            

– இராமானுஜம்

மலையில் சுனை ஒன்று காணப்படுகிறது. ஆற்றுப்படுகையை நீர் உள்ள போது வந்து ஒருமுறை பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். மலையில் மகாலிங்கம் கோயிலுக்கு நேரே இறங்கும் பாறையில் நந்தியை செதுக்கி வண்ணம் பூசியிருக்கிறார்கள். கொஞ்சம் சரிவாக இறங்கும் பாதையில் மெல்ல இறங்கினோம். நந்திப்பாறையைப் பார்த்துவிட்டு எல்லோரும் கீழே இறங்கத் தொடங்கினோம். மரங்கள் சூழ உள்ள பகுதியில் நடக்கும் போது சுத்தமான காற்றை சுவாசிக்க முடிந்தது. வழியில் ஆலமரம் போல இலைகள் உள்ள மரத்தில் விழுதுகள் இல்லையே என்று குழம்பிக்கொண்டிருந்தேன். சாந்தலிங்கம் அய்யா அந்த மரம் அத்தி மரம் எனக் கூறினார். இறங்கும்போது கொஞ்சம் வேகமாக இறங்கினோம்.

அந்த ஊரை சேர்ந்த பெரியவர் ஒருவர் எங்களைவிட வேகமாக இறங்கினார். எங்களிடம் அவர் வென்னீர் வைத்து இரண்டு நாள் குளிச்சா மலையேறி இறங்குன மேலுகாலு வலி போகுமுன்னார். மலையடிவாரத்தில் உள்ள கருப்புசாமியை வணங்கினேன். அங்கு கருப்புசாமிக்கு சமீபத்தில்தான் சிலை வைத்தார்களாம். மாயாண்டிகுடும்பத்தார் படம் இங்கு எடுத்தபோது அவர்கள் கருப்புசாமி சிலையை அமைத்துக்கொடுத்தார்களாம். அதற்குமுன் அருகில் உள்ள மலைப்பாறையை கருப்பசாமியாக வழிபட்டு வந்துள்ளனர். எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. இட்லியை உண்டபின் அங்கிருந்து கிளம்பினோம். இந்தப்பகுதியில் நீர்கொண்டு செல்வதற்கு தொட்டிப்பாலம் போல ஒன்றிருந்ததை வழியில் பார்த்தேன். ஒருநாளின் முற்பகல் வரை நிறைவாக அமைந்தது. இதற்கு காரணமான எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் & தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்களுக்கும் நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

பின்னூட்டங்கள்
 1. நல்ல பகிர்வு… படங்கள் அருமை… இனிய அனுபவ விளக்கங்களுக்கு நன்றி…

 2. ranjani135 சொல்கிறார்:

  நீங்கள் முதலில் சொல்லி இருக்கும் திரு சுப்பையாவின் கவிதையைப் போல உங்களுடன்

  அலைந்து திரிந்து,

  காண்பன கண்டு,

  கேட்பன கேட்டு

  திகைப்பு நீங்கித்

  திரும்பினேன்!

  ‘நேச்சர் வாக்’ என்பதைத்தான் பசுமை நடை என்கிறீர்களா?
  ‘தண்டட்டி’ (போட்ட பாட்டி ….) என்றால் காதணியா?

  உங்கள் பசுமை நடை மூலம் பல வரலாற்று செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.

  சிறப்பான பதிவு; பகிர்வு!
  பாராட்டுக்கள்!

 3. தொப்புளான் சொல்கிறார்:

  நிலக்கோட்டை அணைப்பட்டி ஆற்றின் வளைவில் குளிக்கும்போது அசையாது காவல்நிற்கும் மலை அல்லவா இது!

  வைகையின் மடியில் மலையில் இருந்தவர்கள் துறந்தவர்களாகவா இருக்க முடியும்? அத்தகைய துறவின்போது பெருவிருப்பு கொண்டவர்களாக அல்லவா இருக்க முடியும்?

  இதில் கலந்துகொள்ள வாய்ப்புபெற்ற சிறுவர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நமக்கு வாய்த்ததெல்லாம் அழகர்கோயிலும், சர்க்கரை ஆலையும் மட்டும்தான்.

 4. அப்பாதுரை சொல்கிறார்:

  உங்களுடன் பசுமை நடையில் கலந்து கொள்ளும் ஆர்வம் கூடிக்கொண்டேயிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s