கொடும்பாளூர் மூவர்கோயில்

Posted: ஜனவரி 1, 2013 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, , , ,

மூவர் கோயில்

விஜயாலயன் தோற்றுவித்த சோழப் பேரரசு தொடர்ந்து 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு குடைக்கீழ் ஆண்டது. இதற்குக் காரணம் அந்தச் சோழ மாமன்னர்கள் மட்டும் அல்ல. அவர்கள் காட்டிய திசைவழியில் ஈட்டிகளையும் வேல்களையும் ஏந்தி, தேர்பூட்டிப் படைநடத்தி உயிர்கொடுத்து வெற்றிக்கனி பறித்தோர் ஏராளம். ஏராளம். அவர்களில் சிலர் சிற்றரச மரபினர். இருக்குவேளிர், பழுவேட்டரையர், மழவரையர் எனப் பலகுறுநிலத்தலைவர்கள் படைதிரட்டி உதவியதால்தான் சோழமன்னர்களின் சாதனைகள் சாத்தியமாயின. அத்தகைய ஓர் சிற்றரசர்குடியே கொடும்பாளூரை தலைநகராகக் கொண்ட இருக்குவேளிர்குடி. இவர்களில் செம்பியன் இருக்குவேள், மகிமாலய இருக்குவேள், பூதிவிக்கிரமகேசரி எனப் பலதலைவர்கள் சோழர் படை நடத்தியவர்கள். இவர்கள் ஆண்ட தலைநகரம் கொடும்பாளூர் இன்றைய மதுரை – திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக கொடும்பாளூர்சத்திரம் என்ற பெயரில் இருக்கிறது. இவ்விடத்தில் இறங்கி சற்றே கிழக்காக இரண்டு கி.மீ தொலைவு சென்றால் கொடும்பாளூர் மூவர்கோயிலைக் காணலாம்.

இக்கொடும்பாளூர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கண்ணகியும் கோவலனும், கவுந்தி அடிகளோடு தொடர்ந்த மதுரைப் பயணத்தின் போது ‘கொடும்பை மாநகர்க் கோட்டகத்தே’ தங்கியதாகச் சிலம்பிலே குறிப்பு உண்டு. கொடும்பையிலிருந்து மதுரைக்கு மூன்று பெருவழிகள் சிவபெருமானின் மூவிலைச் சூலம் போலப் பிரிந்து செல்வதாகவும் அக்குறிப்புக் கூறும். எனவே, நீண்ட காலமாகச் சோழநாட்டையும் பாண்டியநாட்டையும் இணைத்த பெருவழியில் அமைந்திருந்த கொடும்பாளூர் இருக்குவேளிரின் தலைநகராக அமைந்தது. அவர்கள் இங்கு தங்கள் ஆட்சியைத் தொடர்ந்து எல்லை காவலர்களாகவும் விளங்கினர். சோழர்களின் பல்லவருடனான போரிலும், ஈழப்போரிலும் பெரும்பங்காற்றினர்.

சோழ அரச குடும்பத்தினரோடு மண உறவும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பூதிவிக்கிரம கேசரி என்னும் பெரும்வீரன். இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன். அவனுக்கு இருமனைவியர். கற்றளிபிராட்டி, வரகுண நங்கை என்பது அவர்களின் பெயர்கள். பூதிவிக்கிரமகேசரியும், அவன் மனைவியர் இருவரும் சேர்ந்து எடுத்த கோயிலே மூவர் கோயில் என்பது. மூன்றும் சிவன் கோயில்களே. மூன்றும் ஒரே விதமான அமைப்பில் சிறிய இடைவெளிவிட்டு ஒரே வரிசையில் கட்டப்பட்டவை. மூன்று கோயில்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய திருச்சுற்றும் கட்டப்பட்டது. ஆனால், இன்று முதல் கோயிலும், திருச்சுற்றும் முற்றிலும் அழிந்து இரண்டு கோயில்கள் மட்டுமே அதுவும் விமானம்(கருவறை உள்பட) மட்டுமே எஞ்சியுள்ளன. பிறமண்டபங்கள் எல்லாம் அழிந்துபட்டன. இவை சோழர்கோவில் கலைவரலாற்றுக்கு முக்கிய சான்றுகளாய்த திகழ்கின்றன.

சோழர்களின் கோயில்கட்டடக் கலைப்பாணியை ஆராய்ந்தவர்கள் அதனை முற்சோழர்பாணி, இடைச்சோழர்பாணி, பிற்சோழர்பாணி என மூவகைப் படுத்துவர். இதில் முற்சோழர்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்த் திகழ்வது மூவர்கோயில். அதிட்டான வரியில் விரிந்த தாமரை இதழ்களும், உருள் குமுதமும், அதற்கும் மேலாக வரிசையாக அமைந்த யாளி வரியும் அமைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்கோயில்களில் தேவகோட்டச் சிற்பங்களின் எழிலும் கலைநேர்த்தியும் கண்டோரைக் களிப்படையச் செய்வன. ஸ்தூபி வரை கல்லிலேயே கட்டப்பட்டுள்ளன. விமானத்தின் உள்கட்டமைப்பு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முன்னோடியாய் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரி, ஆடவல்லான், திரிபுராந்தகர் ஆகியோரின் கற்சிற்பங்கள் கண்டு மகிழத்தக்கவை. இங்குள்ள தமிழ், கிரந்தக் கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற பெயரில் தமிழகமெங்கும் வணிகம் செய்த குழுவினர் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. இதன் முக்கியத்துவம் கருதி இது வரலாற்றுச் சின்னமாகப் பராமரிக்கப்படுகிறது.

–    சாந்தலிங்கம், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையம், மதுரை.

பசுமைநடை குழுவும், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து ஒருநாள் பயணமாக வரலாற்றுச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இந்த ஆய்வு மையத்தின் செயலராகயிருக்கிறார். மதுரையிலிருந்து கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை, திருமெய்யம் செல்வதாகத் திட்டம். 23.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரை காளவாசல் அருகிலுள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய அலுவலக வாசலிலிருந்து ஒரு பேருந்து மற்றும் ஒரு சிற்றுந்திலும் கிளம்பினோம். கிட்டத்தட்ட எண்பதுபேர் குழுவாகச் சென்றோம். சென்னை, கோவையிலிருந்தெல்லாம் நண்பர்கள் வந்திருந்தார்கள். செல்லும் இடங்களைக் குறித்த வரலாற்றுத்தகவல்கள் அடங்கிய குறிப்பேடு எல்லோருக்கும் பேருந்திலேயே வழங்கப்பட்டது. மூவர்கோயில் குறித்து சாந்தலிங்கம் அய்யா எழுதிய அக்குறிப்பை முன்புள்ள பத்திகளில் வாசித்திருப்பீர்கள்.

கொடும்பாளூர் கோயில்கள்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ கட்டுரைத் தொகுப்பில் மூவர்கோயில் குறித்து வாசித்திருக்கிறேன். அன்றிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள வரலாற்றுச்சுவடுகளைக் காண வேண்டுமென்று ஆசை. அந்த ஆசை இப்பயணம் மூலம் நிறைவேறியது. மதுரையிலிருந்து முதலில் கொடும்பாளூர் சென்றோம். என்னோடு இம்முறை சகோதரர்களும் வந்திருந்தனர்.

விமானம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வேளிர்மன்னர்களின் தலைநகரமாகயிருந்த கொடும்பாளூர் இன்று சிறு கிராமமாக ஒடுங்கி ஆழ்ந்த மோனத்தில் உள்ளது. மூவர்கோயிலைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் விழிகள் அகன்றன. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரையிலுள்ள இரட்டைக் கற்கோயிலின் ஞாபகம் வந்தது. சுற்றி சிதிலமடைந்துள்ள கோட்டை, புல்வெளித் தோட்டம் என மாமல்லையை நினைவுபடுத்தியது வேளிர்களின் கலைக்கோயில். தொல்லியல் துறையின் பராமரிப்பில் இன்று இக்கோயில் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

அ.மு.கியும் அய்யாவும்

கோயிலைச் சென்று காண்பதற்குமுன் ஒரு மரத்தடியில் எல்லோரும் கூடினோம். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எல்லோரையும் வரவேற்று பேசினார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் துறையில் அனுபவமுள்ள சாந்தலிங்கம் அய்யா நம்முடன் இப்பயணத்திற்கு வருவது நமக்கு இன்னும் பெருமை தருவதாகக் கூறினார். சாந்தலிங்கம் அய்யா மூவர்கோயில் குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். குறிப்பேட்டிலுள்ள தகவல்களோடு மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

சைவத்தில் உள்ள காளாமுகம் என்னும் பிரிவைச் சேர்ந்த துறவிகளுக்கான மடம் இந்த ஊரில் இருந்துள்ளது. மல்லிகார்ஜூனர் என்ற துறவி இங்கு தங்கியிருந்ததாகவும் மடத்தை பராமரிக்க மதுரையிலிருந்தெல்லாம் நன்கொடை வழங்கப்பட்டதாகவும் சொல்வார்கள். காளாமுகர்கள் முகத்தில் கரிய மையை பூசி மேனியெங்கும் திருநீறு அணிந்து மண்டையோட்டு மாலை சூடியிருப்பார்கள். இவர்களுக்கு மது, மாமிசம் எல்லாம் விலக்கில்லை. வேளிர்கள் ஆட்சிக்குப் பின் இப்பகுதியை பாண்டியர்கள், அதன்பின் நாயக்க மன்னர்கள் ஆண்டனர். மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது இந்த ஊர் மங்கம்மா சமுத்திரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரை ஒரு பாளையக்காரருக்கு மங்கம்மா தானமாக வழங்கியதாக குறிப்பு உள்ளது. இங்கு ஐந்தளி என்ற கோயில் இருந்துள்ளது அது முற்றிலும் அழிந்து போய்விட்டது. இந்த ஊருக்கு வரும் வழியில் முசுகுந்தேஸ்வரம் என்ற கோயில் உள்ளது. (முதுகுன்றம் என்பது சிதைந்து வடமொழியாக்கப்பட்டு இருக்கிறது) இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சோழநாட்டுக்கும் பாண்டியநாட்டுக்கும் நடுவில் இருந்ததால் வணிக மையமாக கொடும்பாளூர் இருந்திருக்கிறது. மூவர்கோயிலின் உள்விமானம் கூடு போல உள்ளது. இந்த முறையைப் பின்பற்றி தஞ்சைப் பெரிய கோயில் கட்டியிருக்கிறார்கள்.

வதம் புரியும் சிவன்

சிவன் சன்னிதி

விமானத்தின் உள்ளமைப்பு

சாந்தலிங்கம் அய்யாசாந்தலிங்கம் அய்யாவுடன் சேர்ந்து மூவர்கோயிலை நோக்கி நடந்தோம். கோயிலின் அமைப்பு, அங்குள்ள சிலைகள், புராணத்தகவல்கள், கல்வெட்டுகள், வரலாற்றுத் தகவல்களை ஒவ்வொன்றையும் விரிவாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு சிலையின் கலையழகையும், அதன் வரலாறு, புராணக்கதைகளுடன் சேர்த்துக் கேட்கும்போது மனதில் பதிகிறது.   இங்கிருந்த கோயில் சிற்பங்கள் கொஞ்சம் சென்னை அருங்காட்சியகத்திலும், புதுக்கோட்டை அருங்காட்சியகத்திலும் உள்ளது. இங்கு முன்பு நூறு சிற்பங்களுக்கு மேல் காட்சிக்கு வைத்திருந்தார்கள். இப்பொழுது அது திருச்சியிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளதாம்.

பாடப்புத்தகங்களில் வரலாற்றை மனனம் செய்து படித்து பரிட்சை எழுதி மறைந்து போனதுபோலில்லாமல் நேரடியாய் பயணித்து காட்சியாய் காணும்போது ஏற்படும் பரவசத்தை சொல்லில் அடக்க முடியாது. கல்கியின் பொன்னியின் செல்வனின் நாயகியான  வானதி கொடும்பாளூரைச் சேர்ந்தவள் என்பது வாசித்த அனைவருக்கும் நினைவிலிருக்கும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும், பசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

சிற்ப வேலைப்பாடு

 யாளி

 
பசுமை நடை முகநூல்முகநூலில் பசுமைநடையில் இணைய http://www.facebook.com/groups/251761754837926

பின்னூட்டங்கள்
 1. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார, தூள் கிளப்புகிறாய் – கண்ணில் கண்டதையும்,காதில் கேட்டதையும், படித்ததையும் வைத்து அழகான அருமையான் ப்திவு ஒன்று. உன் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது – இயல்பான நடையில் தமிழ்ச் சொற்களை வைத்து – ஒரு சிறு தட்டசசுப் பிழையின்றி பதிவிட்டமை நன்று. புகைபப்டங்கள் மிளிர்கின்றன – ஆர்வம் பாராட்டுக்குரியது – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. Senthil kumar.K. சொல்கிறார்:

  Arithana visayam , azhagana visayam. Nanri…

 3. ranjani135 சொல்கிறார்:

  மிகவும் ரசித்துப் படித்தேன்.

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

 4. Asin sir சொல்கிறார்:

  பல ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த கொடும்பாளூர், தொல்பொருள் ஆர்வலர்கள் தவிர பிறர் அறியவும், அணுகவும் நினைக்காத ஒன்றாக இருந்தது. உங்கள் பதிவினால் அது பலரையும் சென்றடைந்திருக்கும். பார்த்தவுடன் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  கொடும்பாளூர் மூவர்கோயில் = திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் அருமையான பதிவு.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்கார

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s