குடுமியான்மலை குகையும் குடைவரையும்

Posted: ஜனவரி 17, 2013 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்
குறிச்சொற்கள்:, , ,

அற்புத மரங்களின் அணைப்பில்

நான் ஒரு காற்றாடி

வேப்ப மரக்கிளைகளின் இடையே

நான் ஒரு சூரியரேகை.

பப்பாளிச் செடிகளின் நடுவே

நான் ஒரு இனிமை

சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்  

நான் ஒரு நட்சத்திரம்.

–    ஆத்மாநாம்

பசுமைநடை குழுவும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வுமையமும் இணைந்து புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருநாள் வரலாற்றுப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். முதலில் கொடும்பாளூர் மூவர்கோயிலைப் பார்த்துவிட்டு பிறகு குடுமியான்மலை வந்தோம்.

சாந்தலிங்கம்

குகைத்தளத்தில் குழு

குடுமியான்மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி நடந்தோம். கொஞ்சம் சறுகலாக இருந்தாலும் ஏறுவதற்கு சிரமமில்லாமல் இருந்தது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா குகைத்தளத்தில் வெட்டப்பட்டிருந்த தமிழ்பிராமிக்கல்வெட்டை சுட்டிக்காட்டினார். பின் அங்கிருந்த படுகைகளைப் பார்த்தோம்.

படுகை

தமிழ் பிராமி கல்வெட்டு

எல்லோரும் அக்குகைத்தளத்திற்கு வந்து சேர்ந்ததும் சாந்தலிங்கம் அய்யா அவ்விடம் குறித்த தகவல்களை கூறத்தொடங்கினார்.

இந்த ஊரின் பெயர் சங்க காலப் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் பெயரால் அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. (நிலவிவரும் இன்னொரு கருத்து பற்றி அடுத்த பதிவில் காண்போம்) சமணர்கள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளுக்கு அருகில் உள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டில் ‘நாழள் கொற்றந்தய் பளிய்’ என்றுள்ளது. இக்கல்வெட்டு கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

இம்மலைமீது குலசேகரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட முருகன்கோயில் ஒன்று உள்ளது. இது எழுநூறு ஆண்டுகள் பழமையானது.

மலையடிவாரத்திலுள்ள பெரிய கிணற்றில் ஒரு பொருளைப் போட்டால் மலைக்கு மறுபுறம் உள்ள கிணற்றில் அதை எடுக்கலாம் என்ற கதை இந்தப் பகுதியில் நிலவுகிறது. இதை அண்ணன் கிணறு, தம்பி கிணறு என்கிறார்கள். மலையைச்சுற்றி முன்பு முதுமக்கள்தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவைகள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகயிருக்கலாம்

மலையிலிருந்து மெல்ல இறங்கினோம். அங்கிருந்து குடுமிநாதர்கோயில் சென்றோம். (குடுமிநாதர்கோயிலைக் குறித்து அடுத்த பதிவில் காண்போம்) குடுமிநாதர்கோயிலுக்குள் சென்று மலையின் கிழக்குச்சரிவில் வெட்டப்பட்டுள்ள குடைவரைக்கோயிலைக் காணச் சென்றோம்.

குடுமியான்மலை

வாயிலோன்சாந்தலிங்கம் அய்யா இக்குடைவரை குறித்த வரலாற்றுத்தகவல்களை கூறினார். இக்குடைவரையிலுள்ள ஈசனுக்கு திருமூலட்டானத்து எம்பெருமான் என்று பெயர். இக்குடைவரை மேலைக் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்குடைவரை ஒரு கருவறையும், முன்மண்டபமும் கொண்டுள்ளது. இங்குள்ள வாயில் காவலர் உருவங்கள் மிகவும் எழிலார்ந்தவை. இங்குள்ள தூண்களில் கி.பி.எட்டாம்நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியன் சடையன் மாறனின் கல்வெட்டு உள்ளது.

தேவதூதர்கள்வாயில்காவலர் சிலை ஒரு கையை இடுப்பில் வைத்து மறுகையை ஒரு தூணில் சாய்ந்து ஒயிலாக நிற்கிறார். மிகவும் அழகாகயிருந்தது. சிவலிங்கம் இருக்கும் கருவறையின் வாசலில் படிபோல செதுக்கப்பட்டுள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். கருவறை வாசல் முகப்பில் மேலே தேவதூதர்கள் பறந்து வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தூண்கள் மிகவும் அழகாக வெட்டப்பட்டுள்ளது. அதிலும் கல்வெட்டுகள் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

பிள்ளையார்வாயில்காப்போன் சிலைக்கு இடதுபுறம் ஒரு சிறிய பிள்ளையார் சிலையும் செதுக்கப்பட்டுள்ளது.

குடைவரையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். குடைவரைக்கு இடதுபுறம் மலையில் ஒரு பெரிய பிள்ளையார் சிலையும் அதனருகில் இசைக்கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஏழுபத்திகளில் சமஸ்கிருதக்கல்வெட்டு உள்ளதை சாந்தலிங்கம் அய்யா சுட்டிக்காட்டினார். இதைக் குறித்து இசைப்பேராசிரியர் ராமநாதன் போன்றோர் எழுதியிருப்பதையும் குறிப்பிட்டார். இங்குள்ள இசைக்கல்வெட்டுகள் மிகவும் புகழ் பெற்றவை. ஏழுசுவரங்களையும், ஏகப்பட்ட ராகங்களையும் இக்கல்வெட்டில் அந்தக்காலத்தே பதிவு செய்திருக்கிறார்கள்.

(பெரிய தேன்கூடு இருந்ததால் கலைந்துவிடும் அபாயம் கருதி கூட்டமாக மிக அருகில் செல்லவில்லை)

இசைக்கல்வெட்டு உள்ள மண்டபம்

மலைமீது மலைப்பாறையில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் சிலைகளுக்கு மத்தியில் சிவன் உமையுடன் காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது போல சிலை வெட்டப்பட்டிருக்கிறதைப் பார்த்தோம். மலைமீது வரிசையாக அச்சிற்பங்களைப் பார்த்ததும் அக்காலச் சிற்பிகளை எண்ணி வியப்பாகயிருக்கிறது. இந்த சிற்பங்களின் படத்தை ஒரிரு மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் சகோதரன் அனுப்பியிருந்தான். பதில் மின்னஞ்சலாக கழுகுமலை-சங்கரன்கோயில் பசுமைநடைப் பயண நிழற்படங்களுடன் டிசம்பர் மாதத்தில் சித்தன்னவாசல், குடுமியான்மலை பயணம் நிகழவுள்ள தகவலையும் அனுப்பினேன். படங்களையும் பதிவையும் வாசித்து இம்முறைப் வரலாற்றுப் பயணத்திற்கு மிக ஆர்வமுடன் கலந்துகொண்டான். (சகோதரன் அனுப்பிய நிழற்படத்தை எடுத்த முகமறியாத அந்தக் கலைஞனுக்கு நன்றி) சிற்பங்களின் அழகைக் கண்டுவிட்டு சித்திரங்களின் அழகைக் காண சித்தண்ணவாசல் சென்றோம்.

பின்னூட்டங்கள்
 1. ranjani135 சொல்கிறார்:

  உங்களது பசுமை நடைப் பயணத்தால் எங்களுக்கு பல தெரியாத விஷயங்கள் தெரிகின்றன. இந்த இடங்கள் எல்லாமே கேள்வி பட்டதே தவிர பார்த்தது இல்லை.
  இசைக் கல்வெட்டுகளைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. நம் முன்னோர்கள் எத்தனை செய்திருக்கிறார்கள்!

  உங்கள் ஓவியங்கள் மிஸ்ஸிங்!

  அருமையான பதிவு!

 2. jeevansubbu சொல்கிறார்:

  தள வடிவமைப்பு , தளத்தின் பெயர் , சித்திரங்கள் , புகைப்படங்கள் , உங்களது எழுத்து நடை அனைத்தும் மிக நேர்த்தியாகவும் மிக அழகாகவும் உள்ளது . பசுமை நடை யில் எம்மையும் இணைத்து கொள்வீர்களா ?

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திரவீதிக்கார

  அருமையான் பதிவு – கண்ணையும் காதையும் அகலத் திறந்து வைத்து – காட்சிகளையும் செய்திகளையும் அப்படியே அழகாகப் பதிவாக்கியமை ந்னறு. தட்டச்சுப் பிழை – ஒற்றுப்பிழை – சந்திப்பிழை என எவ்விதப் பிழைகளும் இல்லாமல் பதிவிடுவது தன் திறமையினைக் காட்டுகிறது. பசுமை நடையில் தனக்கிருக்கும் ஆரவம் பிரமிக்க வைக்கிறது – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. selvishankar சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார

  குடுமியான் மலைக் கல்வெட்டும் குடைவரையும் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது பதிவு. வரைத் தளத்தின் பதிவு செதில் செதிலாய் இருப்பதும் காவல்ன் கம்பீரமாய் நிறபதும் கணபதிக் கடவுள் கண்களில் தெரிவதும் பசுமை நடைப் பயணத்தின் கண் கொள்ளாக் காட்சியாய் உள்ளது. தொடரட்டும் பயணங்கள் – நல்ல் சிந்தனை – பயனுள்ள முயற்சி .

 5. ரெங்கசுப்ரமணி சொல்கிறார்:

  மதுரையை சுற்றி பல இடங்களில் சமணர்கள் இருந்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் இருந்த மலைகளை மலைகள் என்று கூற முடியாது போல அனைத்தும் பாறைகள். உத்தமபாளையத்தில் எங்கள் பள்ளியின் பின்னால் ஒரு மொட்டைப் பாறை (மலை) அங்கு சில சிறிய சிற்பங்கள் காணப்படும், உள்ளே ஒரு சிறிய குட்டை (சுனையா இல்லை மழை நீரா) உண்டு. பள்ளியின் போது போரடித்தால் அங்கு போய்விடுவது. அச்சிற்பங்கள் அனைத்தும் புத்த சிற்பங்கள் என்று அப்போது நினைத்தேன், விவரமறிந்ததும் அது சமணச்சிற்பங்களாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

 6. Raja Simma Pandiyan சொல்கிறார்:

  உங்கள் வலைதளத்திற்குள் முதல் முறையாக நுழைகிறேன். அருமையான பதிவுகள்.
  சாந்தலிங்கம் அய்யா போன்ற அறிஞருடன் பயணிக்கும் போது, அந்தந்த இடங்களின் வரலாற்றை அறிவதுடன், பார்க்கத் தவறக் கூடாத‌ எதையும் தவறவிட மாட்டோம். பசுமை நடைப் பயணங்களின் மீது கொஞ்சம் பொறாமையும் ஏற்படுகிறது.

 7. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர முடியவில்லை. Kindly provide the Sharing Option tools; so that I may share with FB & Google +.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s