மாமதுரை போற்றுவோம்

Posted: ஜனவரி 27, 2013 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

logo

மதுரை திருவிழாக்களின் பூமி. திருவிழா என்றாலே கொண்டாட்டந்தான். மதுரையும் தெய்வமும் வேறுவேறல்ல. தெய்வங்களைக் போற்றுவதைப் போல மதுரையையும் போற்றித் தொழுவது நம் கடமை. மதுரை என்றாலே எனக்கு மந்திரம். மதுரையைக் காண்பதே தெய்வ தரிசனம். மதுரையே எனைக்காக்கும் பெருந்தெய்வம்.

கடம்பவனம், திருஆலவாய், நான்மாடக்கூடல், விழாமலி மூதூர், தூங்காநகரம், கோயில் மாநகரம், கிழக்கத்திய நாடுகளின் ஏதென்ஸ் எனப் பலபெயர்களைக் கொண்டது நம் மதுரை. உலகில் வேறு எந்த ஊருக்கும் இத்தனைப் பெயர்கள் இருக்குமா என்று தெரியவில்லை.

maamadurai

maduraiமதுரையின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதமாக ‘மாமதுரை போற்றுவோம்’ என்ற விழா

 • மதுரையைப் போற்றுவோம்
 • தொன்மையைப் போற்றுவோம்
 • வைகையைப் போற்றுவோம்

என்ற மூன்று தலைப்புகளில் பிப்ரவரி 8,9&10 தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ‘மதுரைதினம்’ தளத்திலிருந்த மதுரை குறித்த மகத்தான பதிவை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.

உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று, நம்முடைய மதுரை. நதிக்கரையில் முளைத்த நாகரீகத்தின் அடையாளமாய், வைகைக் கரையில் முளைத்த வரலாற்று நகரம். இந்தியாவெங்கும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில், அதிகமான கல்வெட்டுக்கள் தமிழ் மொழி சார்ந்த கல்வெட்டுகள் ஆகும். அதில் காலத்தால் முதன்மையான கல்வெட்டுகள் அதிகம் கிடைத்தது நம்முடைய மதுரையில்தான். அதாவது, இப்பரந்த பாரத நாட்டில் எழுத்தும், எழுத்து சார்ந்த அடையாளமும் முதன்மையாகக் கொண்ட பழம்பெரும் நகரம் நம்முடைய மாமதுரை.

சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலான, இந்நகரின் பாரம்பரியத்தை வரலாறும், இலக்கியமும் தொல்பொருள் ஆவணங்களும் மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன. இருபெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் இந்நகர் இடம் பெற்றுள்ளது. கவுடில்யரின் அர்த்தசாஸ்திரமும், இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சமும் நமது நகரைப் பற்றிப் பேசுகின்றன. கிரேக்க நாட்டு தூதுவராய் வந்த மெகஸ்தனிஸ் இந்நகரைப் பற்றி வியந்து கூறுகிறார். உலகின் மிக மூத்த அரச குலங்களில் ஒன்றான பாண்டியர்களின் தலைநகராய் இந்நகரம் விளங்கியதைப் பற்றி ரோமானிய கிரேக்க யாத்திரீகர்களும்., வடஇந்திய காப்பியக் கர்த்தாக்களும் தமிழ்ப் புலவர்களும் இடைவிடாது எழுதி வந்துள்ளனர்.

நெடியதொரு வரலாற்றின் சின்னமாய் விளங்கும் இந்நகர் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகர் என்பதை உலகறியும்.

உலகின் மிகப்பழைய நகரங்களான ரோம், வெனீசு, மொகஞ்சதரோ போல மதுரையும் நன்கு திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரம். தாமரைப் பூவைப் போல இந்நகரின் வடிவமும் அதன் இதழ்களைப் போல தெருக்களும் அதன் நடுவில் உள்ள மொக்கினைப் போல கோயிலும் இருப்பதாக பழந்தமிழ் இலக்கியமான பரிபாடல் கூறுகிறது.

மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பழந்தமிழ் நூல்கள், இந்நகரின் தெருக்களையும், கோட்டையையும் கோபுரங்களையும் ஒரு நவீன ஓவியம் போல வரைந்து காட்டுகின்றன. தேவாரம் பாடிய மூவரும், ஆழ்வார்கள் பலரும் இந்நகரைத் தமது தீந்தமிழால் பாடி மகிழ்ந்துள்ளனர். திருவாசகமோ சிவன் கூலித்தொழிலாளியாக வந்து மதுரையின் மண்ணைச் சுமந்தான் என்று பாடுகிறது. சிவபெருமான் மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக திருவிளையாடல் புராணம் பேசுகிறது. மதுரையைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் நூற்றுக்கணக்கானவை. இந்நகரின் எந்த ஒரு தெருவும் சுமார் இரண்டாயிரம் ஆண்டு நீளமுள்ளதாகத்தான் இருக்கிறது. வரலாறு வற்றாமல் ஓடும் நதியைப் போல, இம்மாநகரின் தெருக்களில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அதனால்தான் மதுரை ஒரு காவிய நகரமாக ஓளி வீசுகிறது.

இக்காவிய நகரின் பாரம்பரியத்தையும் வரலாற்றுச் சிறப்புகளையும் முதலில் நாம் உணர வேண்டும். விலைமதிப்பில்லாத ஒரு கலாச்சாரப் பூமியில் தான் நாம் வாழ்கிறோம். தொழில் செய்கிறோம். படிக்கிறோம். உழைக்கிறோம் என்ற சிந்தனை நம் எல்லோருக்கும் வேண்டும்.

நமது குடும்பத்தினருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இந்நகரம் ஒரு பழமையின் குறியீடாக தெரியக்கூடாது. மாறாக ஒரு பெருமையின் அடையாளமாகத் தெரிய வேண்டும். அடுத்த தலைமுறையின் நினைவுகளில், நமது நகரத்தைப் பெரும் செல்வமாக கருதும் சிந்தனையை ஊட்ட வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இக் கடமையை நிறைவேற்ற மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கும் அமைப்புதான் ’‘மாமதுரை போற்றுவோம்’ என்ற இந்த அமைப்பு.

இதன் நோக்கம் மதுரையை நேசிப்பதையும், போற்றுவதையும், நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றும் உணர்வை உருவாக்குவது தான்.

நமது நகரின் பழம் பெருமை பேசுவது என்பது வயதான காலத்தில் நினைவுகளை அசை போடுவதைப் போன்ற பணியல்ல. நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக நமது நகரத்தை மாற்ற நினைக்கும் ஒரு கனவின் வெளிப்பாடு.

இந்த கனவோடு உங்களை இணைத்துக்கொள்ள, அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

விழாக்குழுத் தலைவர்

திரு. கருமுத்து தி. கண்ணன்.

துணைத்தலைவர்கள்

திரு. பரத். கே எஸ்.

திரு. சு.வெங்கடேசன்.

நன்றி – மதுரை தினம்.காம் 


மதுரையைக் கொண்டாட முடிவு செய்த மாவட்டநிர்வாகத்திற்கும், மதுரை மாநகராட்சிக்கும், மதுரை ஆர்வலர்களுக்கும் நன்றி. மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அவர்களுக்கும், மதுரை மேயர் ராஜன் செல்லப்பா அவர்களுக்கும், மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவினருக்கும் மற்றும் மதுரையைக் கொண்டாடும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

madurei

மதுரையின் வரலாறு, மதுரையின் சிறப்புகள், மதுரையின் திருவிழாக்கள், மதுரையின் பழைய புகைப்படங்கள் அடங்கிய எனது பதிவுகளின் தொகுப்பு:

மதுரையைக் குறித்தே பேசிக் கொண்டும், வாசித்துக் கொண்டும், அலைந்து கொண்டும் இருக்க மதுரை அருளட்டும். மண்ணானாலும் மதுரையிலே மண்ணாவேன். எனக்கு தினம்தினம் மதுரை தினம். மதுரையை எல்லோரும் கொண்டாடுவோம்.

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. நன்றி.
  வாழ்த்துகள்.

 2. ranjani135 சொல்கிறார்:

  ‘மாமதுரையைக் கொண்டாடுவோம்’ விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!

  உங்கள் கை வண்ணத்தில் கிழக்கு சித்திரை வீதி வெகு அழகு!

  • cheenakay சொல்கிறார்:

   அன்பின் சித்திரவீதிக்கார,
   மாமதுரை போற்றுவோம் – அருமையான பதிவு – உனது ஆசைகளூம் கனவுகளும் நிறைவேற நல்வாழ்த்துகள் – உனது சித்திரமும் அழகாக வரையப்பட்டிருக்கிறது. உனது பதிவுகளின் சுட்டிகள் விழாக் குழுவினருக்கும் நிச்சயம் உதவும். விழாக் குழுவினர் மூன்று நாட்களையும் மூன்று தலைப்புகளில் சிறப்பாகக் கொண்டாடுவார்கள் – ஐயமே இல்லை.

   //நமது நகரின் பழம் பெருமை பேசுவது என்பது வயதான காலத்தில் நினைவுகளை அசை போடுவதைப் போன்ற பணியல்ல. நவீன வாழ்வுக்கு முகங்கொடுக்கும் நகரமாக நமது நகரத்தை மாற்ற நினைக்கும் ஒரு கனவின் வெளிப்பாடு.// – நல்ல் சிந்தனை சித்திர வீதிக்கார, படிக்கும் அனைவரும் புரிதலுணர்வுடன் இணைவார்கள் – ஐயமே இல்லை.

   //மதுரையைக் குறித்தே பேசிக் கொண்டும், வாசித்துக் கொண்டும், அலைந்து கொண்டும் இருக்க மதுரை அருளட்டும். மண்ணானாலும் மதுரையிலே மண்ணாவேன். எனக்கு தினம்தினம் மதுரை தினம். // . உனது சிந்தனை வாழ்க ! நிச்சயம் நிறைவேற மதுரை மீனாட்சி அருள் புரியட்டும்.

   நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. VADIVELAN சொல்கிறார்:

  ELLAM ALAGU ETHAI SOLVEN ALAGU MADURAI ALAGU

 4. B.AMMAIAPPAN சொல்கிறார்:

  Madurai Mamadurai aavathu eppadi? Thittangal enna? Pazham perumai pesuvathai niruthi,IT Poonga varuvathai uruthi seivoma? Adithadi arasiyalai matri,”Pirappukkum ella uyirkum sirapovva seithozhil vetumaiyan” enra Valluvanin mozhi nadaimuraiku varuma?

  • தொப்புளான் சொல்கிறார்:

   உங்கள் ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதே.

   மன்னிக்கவும். மதுரை மாமதுரையாகத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவருகிறது.

   “பொருளாதார வளர்ச்சி” “பொருளாதார வளர்ச்சி” என்று முழங்கிக்கொண்டே மலையை முழுங்கி ஏப்பம் விடுபவர்களைத்தான் மதுரை கண்டிருக்கிறது. எனவேதான் வரலாற்றுத் தொன்மை கூடிய இடங்களின் பெருமையைச் சொல்வது வரவேற்கத்தகுந்ததாகிறது.

   பன்னாட்டு விமான நிலையமாக்குவோம் என்ற முழக்கத்தோடு சிங்கள அரசு நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் தேடித்தருபவர்களைத்தான் மதுரை பார்த்திருக்கிறது. எனவேதான் இத்தகு முழக்கங்கள் பயமாயிருக்கிறது.

   விலங்கு வதை தடுப்போம் என்று கூக்குரல் இடுபவர்களோ இந்த ஊர்க்காரர்களின் பண்பாட்டோடு இயைந்த ஒன்றை – நல்லதோ கெட்டதோ – தங்கள் மதிப்பீட்டை வைத்து தடுக்கப் பார்க்கிறார்கள்.

   வரலாற்றுப் பெருமையை மீட்டெடுப்பவர்களால் அல்ல – மதுரை என்றாலே அரிவாளோடு அலையும் காட்டுமிராண்டிகளின் நகரம் என்று சித்தரிப்பவர்களால்தான் நீங்கள் கூறும்விதமான வளர்ச்சி நிகழவில்லை என்று ஒரு பேச்சிருக்கிறது.

   சாதி ஒழிய வேண்டியதுதான். எந்த அளவு இங்கு கலவரங்கள் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறதோ அதே அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு கூடிய கருத்துக்களமாகவும் , போராட்டக் களமாகவும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

   அடிதடி அரசியல்களால் மதுரை இழந்ததைவிட நுட்பமான ஊடறுப்புகளால் இழந்ததுதான் அதிகம்.

   சென்னையில் படித்த உயர் நடுத்தர வர்க்கம் பங்குபெறும் சென்னை தினக்கொண்டாட்டம் மாதிரியானவை மதுரைக்கு வரும்போது எல்லாப் பள்ளிப் பிள்ளைகளையும் இணைத்துக்கொண்டு எவ்வளவு ஜனநாயகத் தன்மை பெற்றுவிடுகிறது பாருங்கள்!

   நாம் போடும் அய்.டி பார்க் திட்டங்கள் இருக்கும் நீர்நிலையைத் தூர்த்துத்தான் அமையும்; நாம் அமைக்கும் மின் உற்பத்தி திட்டம் அணு ஆபத்தைத்தான் விளைவிக்கும் என்றால் அதுகுறித்து பேசுவதற்கு பயமாகத்தானே இருக்கும். இருப்பதையாவது காப்பாற்றிக்கொள்ளத்தானே தோன்றும்?

   ஆயிரம் பூக்கள் மலரட்டும். நீங்கள் மக்கள் நலம் பயக்கும் திட்டங்கள் தீட்டுங்கள். நியாயமான பெருமை கொழிப்பவர்கள் கொழித்துக் கொண்டாடட்டும்.

 5. மதுரை TCN தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சரித்திரம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மதுரையின் வரலாறு குறித்து தினமும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஆளுமைகள் பேசுகிறார்கள். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா திங்கள் கிழமை பேசினார். நேற்று வழக்கறிஞர் லஜபதிராய் பேசினார். உங்களிடம் இருக்கும் மதுரை குறித்த பழமையான ஆவணங்கள் இருப்பின் அதை TCN தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்தால் அதை அவர்கள் மதுரை போற்றுவோம் நிகழ்ச்சியில் மக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு திருப்பி கொடுத்து விடுவார்கள். tcn.mdu@gmail.com

 6. ramani சொல்கிறார்:

  பகிர்வு அருமை
  வாழ்த்துக்கள்

 7. Geetha Sambasivam சொல்கிறார்:

  திரு நரசையா அவர்கள் ஆலவாய் என்னும் தம் புத்தகத்தில் மதுரை குறித்த அனைத்துத் தகவல்களையும் அளித்திருக்கிறார் எனக் கேள்விப் பட்டேன். ஆலவாய் இன்னும் வாசிக்கவில்லை. மதுரை குறித்த தகவல்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. என்றாலும் மதுரையின் பெருமையான வைகை இப்போது எங்கே? நான் பள்ளியில் படிக்கையில் கல்பாலத்தைத் தொட்டுக்கொண்டு தண்ணீர் போவதைச் சில சமயம் கண்டிருக்கிறேன். இப்போதோ? வைகையின் நடுவிலேயே கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அழகையும், கம்பீரத்தையும் இழந்து ஒரு மாபெரும் வடுவாக மதுரையின் முகத்தில் காட்சி அளிக்கிறாள் வைகை. :(((

 8. Geetha Sambasivam சொல்கிறார்:

  சுங்கடி தினத்தன்று நல்ல மதுரைச் சுங்கடி அதுவும் மீனாக்ஷிக்குச் சார்த்தியதைக் கட்டிக் கொண்டே இதை எழுதுகிறேன். பதினைந்து ரூபாயிலும் சுங்கடி கட்டி இருக்கிறேன். சொக்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு தறியில் கலரும் முந்தானை, பார்டரும் சொல்லித் தறி போட்டுக் கொடுக்கச் சொல்லியும் கட்டியது உண்டு. அப்போதெல்லாம் ஜரிகை அசலானது. 150 ரூக்கு வாங்கிய ஜரிகைச்சுங்கடி கட்டிக் கிழிந்ததும், அதன் ஜரிகை மட்டும் அதே 150 ரூக்குப் போனது. இப்போதெல்லாம் அவ்வளவு தரமான சுங்கடிப் புடைவைகள் கிடைக்கின்றனவா எனத் தெரியவில்லை. 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s