மணியாட்டிக்காரர்

அறுவடை நேரம் கிராமத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த மாதத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள்(நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு செருகப்பட்டிருக்கும். வெண்கலத்தினால் ஆன பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்கு பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருக… பட்டி பெருக… களம் பொலிக…’ என்று, எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டு வந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள்.                                                                 

– ந.முருகேச பாண்டியன் (கிராமத்து தெருக்களின் வழியே)

இளமைக் காலத்தில் விடுமுறை நாட்களில் கிராமத்திலுள்ள தாய்வழித்தாத்தா வீட்டிற்குச் செல்வது கொண்டாட்டமான விசயம். அந்த நாட்களை இப்போது நினைக்கும்போதும் மகிழ்வாகயிருக்கிறது. பெரிய காரை வீடானாலும் சின்ன குடிசை வீடானாலும் திண்ணையோடிருக்கும் வீடுகள், வீதிகளில் படுத்துறங்கும் மனிதர்கள், ஓசிக்கஞ்சி எனக் கேலி செய்யும் மாமா முறையினர், கிணற்றடியின் குளுமை என கிராமத்திற்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதிய ஆச்சர்யங்களை தந்துகொண்டேயிருக்கும். கிராமத்தின் நினைவுகளையூட்டும் ந.முருகேச பாண்டியனின் ‘கிராமத்துத் தெருக்களின் வழியே’ நூல் நல்லதொரு ஆவணம்.

கிராமங்களில் வெள்ளுடை உடுத்தி மணியாட்டிக்கொண்டு வரும் சாமியார்களை இளம் வயதில் பார்த்திருக்கிறேன். மணியாட்டிக்காரர்கள் மணியை தலைகீழாக கவிழ்த்தி அதில் கம்பை வைத்து சுழற்றும் போது வரும் மணியோசையும், மணியாட்டிக்காரர்கள் பாடும் பாட்டும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று எங்கம்மா கூறினார். அந்தப் பாட்டில் நெல்லின் பலரகப்பெயர்களை சேர்த்து பாடுவதையும் குறிப்பிட்டார்.

மணி

சமீபத்தில் மதுரை கூடல்நகர் அருகே நானும் நண்பரும் பயணித்துக் கொண்டிருந்தபோது மணியாட்டிக்காரர்களை பார்த்தோம். அவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது திருச்செந்தூர் கோயிலுக்கு நேர்த்திக் கடனாக இப்படி மணியடித்துக் கொண்டு ஊர்ஊராக சென்று நெல், பணம் காணிக்கையாக பெறுவதாகக் கூறினார். திருச்செந்தூரில் இவர்களுக்கென்று பாத்தியப்பட்ட மடம் ஒன்று இருக்கிறதாம். தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணிமூலம் ஆகிய நாட்களை ஒட்டி கிராமங்களில் பயணிப்பார்களாம். குடும்பத்தில் மூத்த உறுப்பினர் இந்த நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பெரியவர் கூறினார்.

‘அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இவ்வுலகத்தில் ஏராளம். ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யம் தான். ஆச்சர்யம் நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்’ என அன்பேசிவத்தில் இறுதியில் கமல்ஹாசன் சொல்லும் வரிகள் ஞாபகம் வருகிறது. நீங்கள் மணியாட்டிக்காரர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதைக் குறித்து விரிவாக பதிலிடுங்களேன்.

நன்றி.

மாமதுரை போற்றுவோம்

பின்னூட்டங்கள்
 1. இங்கு இல்லை… ஞாபக வரிகள் ஞாபகம் வருகிறது…

 2. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார

  மணியாட்டிக்காரரகள் பற்றிய பல தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. vidhaanam சொல்கிறார்:

  அஞ்ஞாடி நாவலில் ‘நாழிமணிக்காரர்கள்’ பற்றிய அருமையான ஒரு காட்சி உள்ளது. நாழிமணிக்காரர்கள் பாடுவதாய் அதில் ஒரு பெரிய பாடலும் உண்டு. கிட்டத்தட்ட 37 வகையான நெல்வகைகளின் பெயரை தனித்தனியாய்ச் சொல்லி அவற்றை நாழியில் கொண்டுவந்து தருமாறு பாடுவார்கள்.

  “தொண்டைக்குள்ளயுமில்ல மணியக் கெட்டிவச்சிருக்கான்” – இப்படித்தான் நாழிமணிக்காரர்கள் பற்றி அந்த நாவலில் ஒருவன் சொல்வான்.

  • அஞ்ஞாடி நாவல் இந்தாண்டு கட்டாயம் வாசிக்கணுமென்று இருக்கிறேன். அதில் மணியாட்டிக்காரர்கள் குறித்து இருப்பதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல. மறுமொழியிட்டு என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.

 4. kashyapan சொல்கிறார்:

  avarkalai “CHITHTHESAN ” enRu Nellai maavattaththil azhaippaarkaL! naayakka mahaaraajakkaL kaalaththil iSlaamiya -inthu kalasara echchaam enRum kUruvaarkaL ! ivarkaLukkum azakar koVilukkum thotarpu iruppathaakavum kELvippattirukkiREN ! —kaaSyapan

  • அய்யா! படத்திலுள்ள மணியைப் பார்த்தீர்களென்றால் ‘350நபர் திருச்செந்தூர் சித்தேசர் மண்டபம்’ என்ற வரி காணப்படுகிறது. எனவே, நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு சித்தேசன் என்ற பெயரும் இருக்கும் போல.
   தங்கள் மறுமொழிக்கு நன்றி.

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. நான் சிறுவயதில் – 1960க்கு முன்னால் – பார்த்திருக்கிறேன். நன்றி திரு சித்திரவீதிக்காரன். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

 6. தொப்புளான் சொல்கிறார்:

  நான்கைந்து பேர்கள் கூட சேர்ந்துவரக் கண்டிருக்கிறேன். சிறு வயதில் இவர்களைப் பார்த்து, மது அருந்தியவர்களைப் பார்த்து, கிறுக்கன் / கிறுக்கச்சி என்றழைக்கப்பட்டு எப்போதாவது கிராமத்துத் தெருக்களுக்கு வந்துவிடும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து என்று நாங்கள் பயப்படாத ஆட்களே இல்லை.

  ஒரு குடும்பத்தாருக்கு குறிப்பிட்ட வட்டாரத்தில்தான் மண்டகப்படி என்பதால் ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஊர்களுக்கே வருவார்கள். இதனால் ஊரில் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பார்கள். திருநீறு கொடுத்தாலும் குறி சொல்லிப் பார்த்த ஞாபகம் இல்லை.

  பிறை துலங்கும் தலைப்பாகை அணிந்திருப்பதால் மெய்வழிச்சாலையை சேர்ந்தவர்களோ என்றெண்ணிக் குழம்பியிருக்கிறேன்.

  //நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள்//

  ஏதோ கிறுக்குவதில்லை. ‘ழ’, ‘ம’ என்பதுபோல தமிழ் எழுத்துக்களையே அடையாளத்துக்கு எழுதிவிட்டுப் போவார்கள்.

  மணியாட்டிச் சாமிகள் வடிவத்தில் எங்கள் ஊரைக் கொள்ளையிட வந்த ஏழுபேரை காவல்தெய்வம் கல்லாகச் சமைத்துவிட்டதாக ஒரு கதை உண்டு. இன்று ஊரில் அந்த கற்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

  சித்தேசர் மண்டபம் என்றே ஒன்று திருச்செந்தூரில் இருப்பதாகத் தெரிவதால் அடுத்த நெய்தல் பயணத்தில் அம்மண்டபத்தின் நிழற்படம் தர முயலவும்.

 7. சேக்காளி சொல்கிறார்:

  //எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும்//
  “பால்யம்” போல இதையும் நினைத்து பார்த்து மகிழலாமே தவிர திரும்ப வரவே வராது “பால்யம்” போலவே.

 8. kesavamani சொல்கிறார்:

  மணியாட்டிக் காரர்களையும் பூம்பூம் மாட்டுக் காரர்களையும் இணைத்து நல்லதொரு சிறுகதை எழுதலாம் போலிருக்கே. முயற்சி செய்யுங்கள் சித்திரவீதிக்காரன்.

 9. ranjani135 சொல்கிறார்:

  மணியாட்டிக்காரர்கள் பற்றி கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை. அஞ்ஞாடி நாவல் பற்றி இன்னும் கொஞ்சம் தகவல் கொடுங்கள் ப்ளீஸ்!

  பின்னூட்டங்கள் அருமை!

 10. maathevi சொல்கிறார்:

  எனக்கு இது புதிதாக இருக்கின்றது. அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  எங்கள் கிராமங்களில் இப்படி இருந்ததாகத் தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s