நான் முதல் அம்பு
பன்னெடுங்காலமாய்
இந்த மலையுச்சியில்
கிடக்கிறேன்
யார் மீதும் விரோதமற்ற
ஒருவன் வந்து
தன் வில் கொண்டு
என்னை
வெளியில் செலுத்துவானென!
– ஆனந்த்
இதற்கு முந்தைய பதிவில் தி ஹிந்து நாளிதழில் வந்திருந்த, திருப்பரங்குன்ற மலையில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டு பற்றிய குறிப்பு இருந்தது. அச்செய்தியின் சாரம் இதுதான்:
இந்திய தொல்லியல் துறையில் வேலைபார்க்கும் பிரசன்னாவும், புதுச்சேரி பல்கலை ஆய்வு மாணவர் ரமேஷும் ஜனவரி 20, 2013 அன்று திருப்பரங்குன்றம் மலையில் இதுவரை வெளிவராத புதிய தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் மச்சமுனி சன்னதியோடு இருக்கும் சுனை ஒன்றுள்ளது. அதற்குச் செல்லும் படிக்கட்டு ஒன்றில் இந்த கல்வெட்டு உள்ளது.
முதல் வரியில் மூ – நா- க – ரா என்ற நான்கு எழுத்துக்களும் முடிவில் திரிசூல வடிவிலான குறியீடு ஒன்றும் உள்ளன. இரண்டாவது வரியில் மூ – ச – க – தி என்ற நான்கு எழுத்துக்கள் உள்ளன.
முதல்வரியை “மூநகர்” என்று படித்து பழமையான நகராகிய மதுரையைக் குறிக்கிறது என்று கருதலாம். இரண்டாவது வரியை ‘மூ’ ‘யக்ஷி’ எனப் பிரித்து “மூத்த இயக்கி” எனக் கொள்ளலாம் என்பது பிரசன்னா – ரமேஷின் கருத்து.
கல்வெட்டறிஞர் வெ.வேதாச்சலம் அவர்கள் முதல்வரி மூத்த சமணத்துறவியைக் குறிப்பதாகவும், இரண்டாவது வரி “மோட்ச கதி”யைக் குறிப்பதாகவும் கருதலாம் என்கிறார். அவ்வாறெனில், வடக்கிருந்து நிர்வாணம் எய்திய சமணத்துறவியைக் குறிக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆ. கார்த்திகேயன் நாகரா என்ற பெயருடைய, மூத்த சமணப் பெண்துறவி மோட்சம் எய்தியதைக் குறிப்பிடும் கல்வெட்டு என்று கருதலாம் என்கிறார்.
ரமேஷின் ஆய்வு வழிகாட்டியான புதுச்சேரி பல்கலைக்கழக பேரா. கா.ராஜன் இந்த கல்வெட்டுக்கு காலம் நிர்ணயிப்பது கடினமானது என்றாலும் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று சொல்லமுடியும் என்கிறார்.
பிறகு மறுப்பு எழுதிய தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி, முதல்வரியின் முடிவில் உள்ள திரிசூலக் குறியீடு ஒரு சைவச்சின்னம் என்றும் இதனால் இந்த வரிகளை சமணத்தோடு தொடர்புபடுத்தக்கூடாது என்றும் சொல்கிறார். இதற்கு ஆதாரமாக பாண்டிய, சேர மன்னர்களின் சங்க கால நாணயங்களில் இதேபோன்ற திரிசூலக் குறியீடு நிற்கும் யானையின் முன்பாகப் பொறிக்கப்பட்டுள்ளதைச் சுட்டுகிறார். இவரது கருத்துப்படி இவ்வெழுத்துக்கள் மூநகர் மதுரையின் ‘சக்தி’யான மீனாட்சியைக் குறிப்பவை. இதன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு
இந்து பத்திரிக்கையில் வந்த செய்திகளின் இணைப்புக்கள்:
திருப்பரங்குன்றம் சமயநல்லிணக்கச் சின்னம் என்ற தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் அய்யாவின் கட்டுரையையும் கட்டாயம் வாசியுங்கள்.
நண்பர்கள் இளஞ்செழியன் மற்றும் ரகுநாத்தின் பசுமைநடை குறித்த பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்.
http://www.kathirvalaipoo.blogspot.in/2012/04/blog-post_18.html
கல்வெட்டு பற்றிய விளக்கமான செய்தியை தந்த நண்பருக்கு நன்றி.
வியப்பாகவும் உள்ளது… ஆதாரங்களுக்கு நன்றி…
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.
பசுமை நடை பதிவும் பதிவின் படங்களும் மிகவும் ரசித்தேன். இந்தப் பதிவின் சுட்டிகள் மீண்டும் இதே பதிவுக்கே வருகின்றனவே?
அருமையான பதிவு நானும் இதில் கலந்துகொண்டேன்
உங்களது பசுமை நடை பதிவுகளைப் படிக்கும் போது ஒருமுறையாவது இந்த பசுமை நடையில் உங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்ம் என்று தோன்றுகிறது.
அந்த நாளும் வந்திடாதோ?
அண்மையில் மதுரை வந்திருந்தேன், அது குறித்த பதிவின் பின்னூட்டத்தில் திரு அப்பாதுரை உங்களைப் பற்றி எழுதி இருந்தார். அவரிடமே உங்கள் தள முகவரி கேட்டு இங்கு வந்துள்ளேன். நானும் பத்திரிக்கச் செய்தி படித்தேன். அந்தக் கல்வெட்டுக்களை காணவும் விரும்பினேன். ஆனால் இந்த வயது ஒத்துழைக்க மாட்டேன் என்கிறதே. வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.
நன்றி.
[…] […]