வைகை ரயிலாக மட்டும் ஓடினால்…

Posted: மார்ச் 17, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

nature

[நண்பர் இளஞ்செழியன் தொகுத்த கதிர் பொங்கல் மலருக்காக ‘இயற்கையோடு இயைந்து வாழ்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை]

இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை

யுடைத்து; காற்றும் இனிது.  

தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.

ஞாயிறு நன்று; திங்களும் நன்று.  

வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன.

 மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.  

கடல் இனிது. மலை இனிது. காடு நன்று.  

ஆறுகள் இனியன.

உலோகமும், மரமும், செடியும், கொடியும்,

மலரும், காயும், கனியும் இனியன.

பறவைகள் இனிய.

ஊர்வனவும் நல்லன.

விலங்குகளெல்லாம் இனியவை.

நீர் வாழ்வனவும் நல்லன.  

மனிதர் மிகவும் இனியர்.

ஆண் நன்று. பெண் இனிது.

 குழந்தை இன்பம்.  

இளமை இனிது. முதுமை நன்று.

உயிர் நன்று. சாதல் இனிது.

–    மகாகவி பாரதியார்.

இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை வரம். இயற்கைகெதிராக இருப்பது சாபம். இன்று நாம் செயற்கையின் பிடியில் சிக்கி சாபத்தை வரமாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். 2012 டிசம்பரில் உலகம் அழியப் போகிறது என்ற வதந்தி சமீபத்தில் காட்டுத்தீ போல் பரவியது. கேட்கும் போது சிரிப்பாகத்தான் வருகிறது. உலகத்திலுள்ள எல்லாவற்றையும் நம் சுயநலத்திற்காக அழித்துவிட்டு நாம் உலகம் அழியப்போகிறது என்று சொல்வது வேடிக்கையாகத்தானே இருக்கும்.

naturepainting

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களை ஐவகையாக பகுத்து அவற்றோடு இயைந்து வாழ்ந்தனர் நம் முன்னோர். நாம் அனைத்தையும் சிதைத்து குறிஞ்சி நகர், முல்லை நகர் எனப் பெயரிட்டு வசித்து வருகிறோம். நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை அழிப்பதை ஆறறிவு கொண்ட நாம் அநாகரிகமாக கருதுவதில்லை.

சாலையின் இருமருங்கிலும் மரங்களை குடைவரை போல் அமைத்து பயணித்தனர் நம் முன்னோர். நாம் மரங்களை வெட்டி விட்டு தங்க நாற்கர சாலைகளில் பறந்து கொண்டிருக்கிறோம். மரங்களில் நிழலில் வாழ்வதற்கும், நினைவில் வாழ்வதற்கும் இடையே எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு.

பொருள் தேடுவதையே வாழ்க்கையாக்கி வீட்டையே வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி கூடமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு பொருள் சேர்த்து வைத்தால் மட்டும் போதுமா? சுத்தமான காற்று, நல்ல தண்ணீர், ஆரோக்கியமான உணவு, வசிப்பதற்கேற்ற நல்ல சூழல் எதுவும் இல்லாமல் அடுத்த தலைமுறை எப்படி வாழும்?

save nature

சுவாசிக்க சுத்தமான காற்று, குடிநீர், உணவு இவைகளைப் பெறுவதற்கு நாம் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டி உள்ளது. இன்று நீரையும், நிலத்தையும் நாம் அதிகம் பாழாக்கி விட்டோம். விளைநிலங்களை எல்லாம் விலைநிலங்களாக்கி நெல் நட்ட இடங்களில் எல்லாம் இன்று கல் நட்டு வைத்திருக்கிறோம். அதற்கு மாற்றாக மரங்களை நட்டு பராமரிப்பதன் மூலம் அவைகள் பறவைகளுக்கு புகலிடமாகவும், நமக்கு மழை தரும் காரணியாகவும் விளங்குகிறது.

பிளாஸ்டிக் யுகம் என்று சொல்லுமளவு பார்க்குமிடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகிவிட்டது. பிளாஸ்டிக் மட்குவதற்கு நானூறு ஆண்டுகள் ஆகும். நாம் கடைகளுக்கு செல்லும் போது துணிப் பைகளையோ, சணல் பைகளையோ கொண்டு செல்வதில்லை. அலட்சியத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் மண்ணையும், நம்மையும் கெடுத்துக் கொள்கிறோம்.

இராசயன உரங்களால் நிலமும், நீரும் பாழ்படுவதோடு நமக்கு நோய் ஏற்படுகிறது. மரபான விவசாய முறைகளை பின்பற்றுவது மற்றும் விவசாயிகளின் உற்பத்திக்கு நல்ல விலை பெற வைப்பதன் மூலம் இயற்கையை மீட்க முடியும். வாகனங்களிலிருந்து வரும் புகையால் காற்று அதிகமாக மாசு அடைகிறது. அருகில் உள்ள தூரங்களுக்கு நடப்பது அல்லது சைக்கிளில் செல்வது உலகத்தைப் புகையிலிருந்து காக்க கொஞ்சம் உதவும்.

வைகை ரயிலாகவே ஓடினால் நாளை நாம் குடிநீர்க்கும் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். பறவைகளின் கானங்களை மறந்து இரைச்சல்களை இனிமையாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். கடல், மலை, காடு என பயணிக்க மறந்து தொலைக்காட்சி பெட்டிகளுக்குள்ளும், கணினி வலைகளுக்குள்ளும் சிக்கித் தவிக்கிறோம். இயற்கையை வணங்கி வாழ்ந்த முன்னோர்களை காட்டுமிராண்டிகளாக எண்ணிக்கொண்டு தொழில்நுட்பத்திற்கு அடிமையாக இருக்கிறோம். இயந்திரங்களுக்கு இதயம் இல்லை.

இன்றைய சூழலில் நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம். அலைபேசி இல்லாமல் அடுத்தநொடி வாழமுடியாத தலைமுறை உருவாகிவிட்டது. மின்ணனுமயமாக்கப்பட்ட நம் வாழ்க்கையை இயற்கையோடு இணைத்து கொள்ள நாம் செய்ய வேண்டியவைகளை குறித்து சிந்திப்பதும் செயல்படுவதும் ஆரோக்கியமான பணி. குழந்தைகளை இயற்கையோடு இயைந்து செயல்பட பழக்குங்கள். அடுத்த தலைமுறையாவது மகிழ்வாய் வாழட்டும்.

கதிர் பொங்கல் மலருக்காக கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்த நண்பர் இளஞ்செழியனுக்கு நன்றி. மேலும், சமீபத்தில் அவருடைய வலைப்பூவில் என்னுடைய கோட்டோவியங்களைத் தொகுத்து பதிவாகயிட்டமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. rathnavel natarajan சொல்கிறார்:

  வைகை ரயிலாகவே ஓடினால் நாளை நாம் குடிநீர்க்கும் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும்.

  நிஜம் தான். வேதனையான காலத்தில் வாழ்கிறோம். நமது சந்ததியினரை நினைத்தால், மிகவும் கசப்பாக இருக்கிறது.

 2. நண்பர் இளஞ்செழியன் அவர்களை சிறப்பித்தமைக்கு நன்றி…

  தங்களின் படைப்புகளையும் அவர் தளத்தில் ரசித்தேன்… வாழ்த்துக்கள்…

 3. kesavamani சொல்கிறார்:

  இயற்கையின் சுழற்சியை நாம் பெருமளவில் நிலைகுலையச் செய்துவிட்டோம். அதற்கான தண்டனையை நாம் அனுபவித்து வருகிறோம். இன்னும் பயங்கரமான தண்டனை நம் எதிர்கால சந்ததியினருக்குக் காத்திருக்கிறது. தங்கள் பதிவு நன்று.

 4. ச.மே.இளஞ்செழியன் சொல்கிறார்:

  கதிர் பொங்கல் மலருக்கு இயற்கையின் இன்றைய உண்மைகளை சிறப்பான கட்டுரையாக எழுதி தந்தமைக்காக மீண்டும் ஒரு முறை நெஞ்சார்ந்த நன்றிகள்…

  இயற்கையை நாம் எவ்வாறு அலட்சியப்படுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டி காட்டும் கட்டுரை. இதன் பலனை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இனி வரும் தலை முறையினர் மிகவும் கடினமான…. ஒரு நவீன பாலைவனத்தில் வாழ்வார்கள். பாலைவனமே கொடியது அதிலும் நவீன பாலைவனத்தின் தன்மைகள் பற்றி சிந்திக்க வைத்துள்ளார். வாழ்த்த மனமில்லை… அவரின் வரிகள் என்னைத் தண்டிப்பதாகவே உணர்கிறேன்… நம்மை சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகள் மட்டும் கோடிகளில்…

  புகைப்படங்கள் மிக மிக மிக அருமை… தோழரே உங்கள் கண்களில் கண்டு ரசிக்கும் அந்த இயற்கையின் மடிக்கு என்னையும் ஒரு முறை அழைத்து செல்லுங்கள்… சிறிது தலைசாய்த்து இளைப்பாற…

 5. Geetha Sambasivam சொல்கிறார்:

  எங்கே கிடைச்சது இவ்வளவு நெருக்கமான பச்சை நிறம்?? கண்ணுக்குக் குளுமையாக இருக்கிறது, பகிர்வுக்கு நன்றி.

 6. gardenerat60 சொல்கிறார்:

  டீ வீ பார்க்கவும் சினிமா பார்க்கவும், பேஷன் செய்து கொள்ளவும் முன்னோடியாக இருக்க முனையும் சமுதாயம் , பசுமை சுற்றுப்புற சுழல் என்னும் நிஜங்களை ஏன் தள்ளி வைத்து , சீர் கெடுகிறது என்பது , புரியாத புதிர்.

 7. gardenerat60 சொல்கிறார்:

  அருமை.இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளே அபுரூபம்.

  தமிழ் பதிவுகளில், சினிமா அலசல்களும், ஒருவரை ஒருவர் இழித்துக்கொள்ளும் பதிவுகளே , பிரபலமாக இருப்பதாக தோன்றுகிறது!.

 8. jeevansubbu சொல்கிறார்:

  ரெம்ப சந்தோசம் காரணம் – பல குப்பை பதிவுகளுக்கு இடையில் இந்த பதிவு படிக்க கிடைத்ததற்கு . உங்களது ஓவியங்கள் நின்று கவனிக்க வைக்கிறது . வார்த்தைகள் யோசிக்க வைக்கிறது .
  முகப்பு பக்கத்தில வைத்திருக்கும் அந்த கோபுர ஓவியத்தினை எனக்கு மின்னஞ்சல் செய்வீர்களா ? எனக்கு ரெம்ப புடிச்சுருக்கு .. கணினியின் பின்புற படமாக வைக்க விரும்புகிறேன் .

 9. ranjani135 சொல்கிறார்:

  நீங்கள் சொல்லியிருப்பது போல வைகை ரயிலாக மட்டும் ஓடினால்…..பின்விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது.

  இயற்கையை அழித்து செயற்கையை விரும்பும் போக்கு எத்தனை ஆபத்தானது என்று எப்போது நாம் உணரப் போகிறோம்? இப்போதே காலம் கடந்துவிட்டதே!

  உங்கள் சித்திரங்களையும் ரசித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s