பக்தி யாத்திரையா? ஜாலி யாத்திரையா? தீனி யாத்திரையா?

Posted: மார்ச் 23, 2013 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:,

பாதயாத்திரை

பங்குனி உத்திரத்தின்போது கொங்கு நாட்டின் அஞ்சு சாதியினர் கொடுமுடியில் தீர்த்தம் எடுத்துக் காவடி தூக்கிப் பழனி முருகனுக்கு நீர் வார்க்கின்றனர். தைப்பூசத்தின்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் முருகனுக்கு விருப்பமுடன் வெல்லத்தை அமுதாக ஏந்திப் பழனிக்குச் செல்கின்றனர். பழனி முருகனைத் தரிசிக்கும் இந்த யாத்திரையில் தமிழ்ச் சமூக மனத்தின் எதிரிணைகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கொடுமுடியில் எடுக்கும் தீர்த்தம் பங்குனி வெய்யிலின் வெப்பத்தைக் குறைப்பதற்காக ஆகும். நாட்டுக்கோட்டையிலிருந்து வரும் வெல்லம் தைக் குளிரில் வாடும் முருகனுக்கு வெப்பத்தை ஏற்படுத்தும் படையலாகும்.  

– பக்தவத்சல பாரதி (தமிழர் உணவு)

காவல்தெய்வம்பழனி பாதயாத்திரை செல்ல மார்கழி முதல்தேதியன்று அழகர்மலையிலுள்ள பழமுதிர்சோலையில் நண்பர்கள் இரண்டுபேர் மாலையிட்டனர். நானும் உடன் சென்றிருந்தேன். பழமுதிர்சோலையில் மாலை போட்டு கீழே வந்து சுந்தரத்தோளுடையானை வணங்கி சம்பா தோசையும், புளியோதரையும் வாங்கினோம். புளியோதரையை பாதி உண்ணும்போதே குரங்கு வந்துவிட்டது. அதற்கு கொடுத்துவிட்டு கிளம்பினோம்.

பழனிபாதயாத்திரை செல்ல உணவகம் நடத்தும் நண்பன் இரண்டு நாட்களுக்கான உணவை எங்கள் எல்லோருக்கும் தயார் செய்து கொண்டு வந்தான். 28.12.2012 வெள்ளிக்கிழமை மதிய உணவு முடித்த பிறகு கிளம்பினோம். சமயநல்லூர் பாலம் இறக்கத்தில் உள்ள கட்டபுளி கோயிலில் எல்லோரும் கூடினோம். காவல்தெய்வமான கருப்புசாமியை வணங்கி கிளம்பினோம்.

முதல்நாள்நடை என்பதால் கொஞ்சம் உற்சாகமாக நடந்தோம். 1999ல் சென்ற போது இருந்த சூழல் இன்று முற்றிலும் அறுபட்டு போனது. நிறைய ஊர்களின் முகப்பையே நான்குவழிச்சாலைகள் மாற்றிவிட்டது. திருவாலவாயநல்லூர் பிரிவுக்கிட்ட தேநீர் அருந்தினோம். அதன்பின் வாடிப்பட்டியை நோக்கி நடையைக் கட்டினோம்.

அப்பம்வாடிப்பட்டி காவல்நிலையத்திற்கெதிரிலுள்ள கடைவாசலில் கொண்டுபோன புளியோதரையை சாப்பிட்டு அப்படியே சாய்ந்தோம். வெகுதூரம் நடந்துவிட்டு படுக்கும் போது கிடைக்கும் சுகமே அலாதி. ஆனால், எனக்கு வெளியிடங்களில் படுத்தவுடன் தூக்கம் வராது. சும்மா புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருப்பேன்.

அதிகாலை எழுந்து கொடைரோடு நோக்கி கிளம்பினோம். வழியில் பாண்டியராஜபுரம் ரயில்வேகேட் அருகில் உள்ள கடையில் சுக்குமல்லி காப்பி குடித்தோம். குளிருக்கு இதமாய் இருந்தது. கொடைரோடு போய் சுக்குமல்லி காப்பியும், இரண்டு அப்பமும் சாப்பிட்டு நடையைக் கட்டினோம். மதுரையிலிருந்து பாதயாத்திரை வந்த ரெண்டு பசங்க நடக்க முடியாமல் பழனிக்கு பேருந்து ஏறினர்.

நான்கு வழிச்சாலையிலிருந்து பிரிந்து கொழிஞ்சிபட்டி, சல்லிப்பட்டி வழியாக சக்கைய நாயக்கனூர் செல்லும் பாதையில் பிரிந்து நடந்தோம். வழியில் பூந்தோட்டங்கள் நிறைய இருந்தன. மோட்டர் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. குளித்தோம். சல்லிப்பட்டிக்கிட்ட சிறார்கள் கூட்டாஞ்சோறு ஆக்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்தது மகிழ்வாயிருந்தது. லேசான சாரலுடன் சக்கையநாயக்கனூர் சென்றோம். சோகப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது. யாரோ இறந்துவிட்டார்கள் என்றறிந்தோம். அங்கு சாப்பிட்டு சாவடிக்கட்டிடத்தில் படுத்தோம். அந்த இடத்தில்  இறந்தவருக்கு மாலை மற்றும் தேர் கட்ட போகிறோம் என்றார்கள். பிறகு மெல்ல செம்பட்டியை நோக்கி நடந்தோம். மலையையொட்டி வரும் பாலம் ஏறிக் கடந்ததும் வந்த ஊரிலிருந்த நாடக மேடையில் படுத்து ஓய்வெடுக்க முடிவு செய்தோம். மதியம் 2 மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பி செம்பட்டி சென்றோம்.

வாய்க்கால்

செம்பட்டியில் தேநீர் அருந்தினோம். வழியில் ஆர்.கே தோப்புக்கருகில் காப்பி குடித்தோம். தர்மத்துப்பட்டிக்கு சீக்கிரம் செல்ல நினைத்து நடந்தோம். ஆனால், வழக்கம் போல மெல்லவே ஊர் வந்தது. தேநீர் அருந்திவிட்டு வடை சாப்பிட்டோம். மழை நன்றாகப் பெய்யத் தொடங்கியது. மழை விடும் வரை காத்திருந்தோம். கடையை விட்டு கிளம்ப மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. ஆளுக்கு ஒரு மழைக்காகிதப் பையை வாங்கி கோணி மாதிரி மாட்டிக் கொண்டு மழையோடு நடந்தோம். பை நனையாமலும் நான் பாதி நனைந்தும் கன்னிவாடி போனோம். அங்கு ஒரு கருப்புசாமி கோயில் முன் வராண்டாவில் படுத்தோம்.

அதிகாலை 2.45க்கு எழுந்து ஸ்ரீராமபுரம் நோக்கி நடந்தோம். ஸ்ரீ ராமபுரத்திலுள்ள அரசுப் பள்ளியில் படிக்கணும் என்று நானும், நண்பனும் பாதயாத்திரை வரும் போதெல்லாம் பேசுவோம். விடிகாலை நடை. மூலச்சத்திரம் போனோம். நெட்டு ரோடு. புதுச்சத்திரம் திரும்பி அப்பம் இருக்கிற கடையாய் தேடி அடுத்த ஊர் போய்விட்டோம். அங்கு உளுந்தவடைதான் இருந்தது. வேறுவழியில்லாமல் இரண்டு வடை சாப்பிட்டு காப்பி குடித்துவிட்டு ஒட்டன்சத்திரம் நோக்கி நடந்தோம். வழியில் ஓரிடத்தில் மோட்டர் ஓடிக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு புத்துணர்ச்சியோடு நடையைக் கட்டினோம். ஒட்டன் சத்திரம் ஊர் சீக்கிரம் வந்தாலும் அவ்வளவு சீக்கிரம் முடியாது. ஊரே மூணு கிலோமீட்டர் வரும். ஒட்டன் சத்திரத்தில் வெண்பொங்கல் சாப்பிட்டு லேசான வெயிலோடு குழந்தை வேலப்பர் கோயில் நோக்கி நடந்தோம்.

குழந்தை வேலப்பர் கோயிலுக்கு வெளியே உள்ள மண்டபம்கிட்ட படுத்தோம். மதியம் அன்னதானத்தில் சாப்பாடு. முருகனே வந்து  உணவிட்டதாய்தான் எண்ணினோம். விருப்பாச்சி ஊரில் போய் தேநீர் சாப்பிட்டு விருப்பாச்சி மேடு ஏறினோம். முன்பெல்லாம் விருப்பாச்சி ஏத்தம் ஏற சிரமமாகயிருக்கும். இப்போது அதை குறைத்துவிட்டார்கள். சத்திரப்பட்டி, அடையாளவேல் எல்லாம் சீக்கிரம் வந்தது. கணக்கன்பட்டிதான் சரியான வாங்கு. நடக்க நடக்க ஊர் வருவனான்னு சோதிச்சிருச்சு. மையிருட்டாக சாலையிருந்ததால் நட்சத்திரங்களை நிறைய பார்க்க முடிந்தது. வலியோடு நட்சத்திர இரவு பார்த்தோம். சத்திரப்பட்டியிலிருந்து கணக்கன்பட்டி  எட்டு கிலோமீட்டர்தானிருக்கும். இரண்டு ஊர்களுக்குமிடையே பெரிய ஊர் எதுவும் கிடையாது. படுப்பதற்கு கணக்கன்பட்டி செல்ல வேண்டுமென்றதால் தத்தித்தத்தி சென்றோம். போய் ஒரு கடையில் இரண்டு தோசை சாப்பிட்டு உரக்கடை வாசலில் படுத்தோம். வழக்கம்போல் வெகுநேரம் தூங்காமலே முளித்துக்கிடந்தேன்.

திருஆவினன்குடிகோயில்

பழனியாண்டவர்அதிகாலை நாலு மணிப்போல எழுந்து தேநீர் அருந்திவிட்டு நடக்கத்தொடங்கினோம். ஆயக்குடி திருப்பத்தில் அழகாய் மலை வரவேற்றது. மலையைப் பார்த்துக் கொண்டே நடந்தோம். இடும்பன் மலையடிவாரத்திலுள்ள கண்மாயில் போய் குளித்தோம். பழனிமலையை ஒரு வலம் வந்து மலை ஏறினோம். நண்பனுடைய வீட்டிலிருந்து எல்லோரும் வந்திருந்தனர். அறுநூறுக்கும் மேற்பட்ட படிகளை படிப்படியாய் கடந்து மலைக்கோயிலை அடைந்தோம். வரிசையில் சுற்றி வரும் வழியில் நல்லதண்ணீர் குடிக்க குழாய் ஒன்று வைத்திருந்தனர். அதை யாரோ சரியாய் அடைக்காமல் விட லேசாக ஒழுகிக் கொண்டிருந்தது. அந்த குழாயை அடைக்காமல் வழிகின்ற தண்ணீரை எடுத்து தீர்த்தம் போல தலையில் தெளித்த நம்மாட்களைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! என்று சன்னதியெங்கும் அரோகரா ஒலித்துக் கொண்டிருந்தது. தமிழ் அழகனை கண்குளிர தரிசித்தோம். முருகனுக்கு மூலிகை சிலை வடித்த போகரை வணங்கினோம். யானைப்பாதை வழி வரும் போது இறங்கி வந்தோம். மண்டபம் கட்ட வழியில் வைத்திருந்த செங்கல் துண்டுகளை, சின்ன சின்ன கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சென்றனர். என்னவென்று விசாரித்தால் இந்தாண்டு புதிதாக கதை ஒன்று கிளம்பியுள்ளது. இப்படி அடுக்கி வைத்தால் சீக்கிரம் வீடுகட்டலாமாம். சிரிப்பதற்கு வாழ்க்கையில் நிறைய விசயங்கள் கிடைக்கின்றன. அடிவாரம் வந்து பழனி பஞ்சாமிர்தம் வாங்கினோம். அப்போதுதான் நாம் பழனி சென்றதாகவே நிறைய பேர் நம்புவர். கீழே உள்ள திருஆவினன்குடி கோயிலில் முருகனை வணங்கி நண்பனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த புளியோதரையை சாப்பிட்டு பேருந்து நிலையம் வந்தோம். பைபாஸ்ரைடர் என்று வந்த பேருந்தில் ஏறி மூன்றுநாள் நடந்ததை இரண்டரை மணி நேரத்தில் கடந்து வந்தோம்.

மதுரை – பழனி நடைவழியிலுள்ள ஊர்களும் கடந்த நேரமும்

வழித்தடம் நேரங்களுடன்

நான், என்னுடைய நண்பர்கள் இருவர், நண்பனுடைய சகோதரர், நண்பனுடைய உணவகத்தில் பணிபுரியக்கூடிய நால்வர் என மொத்தம் எட்டு பேர் சென்றோம். மகிழ்வான பயணம்.

மழையோடு பாதயாத்திரை

கூட்டமாக பக்தர்கள் பாதயாத்திரை வரும் படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது. பழனியாண்டவர் கோட்டோவியமும், திருஆவினன்குடி கோயில் கோட்டோவியமும் ஓவியர் தநுஸு வரைந்தது. கல்கி வார இதழில் இருந்து எடுத்தேன். நன்றிகள் பல. மார்கழி மாதம் சென்ற பயணத்தைக் குறித்து பங்குனி மாதம் பதிவிடுகிறேன். படங்கள் கிடைக்காததும், நாலைந்து வருடங்களுக்கு முன்பு சென்ற போது எழுதி வைத்த பயணப்பட்டியல் கிடைக்காததாலும் காலதாமதமாகிவிட்டது.

பழனிக்கு புத்தகம் வாங்குவதற்காகவே பலமுறை வந்த பெருமாள் முருகனின் பதிவு

பின்னூட்டங்கள்
 1. இனிய பயணம்… நாள் கழித்து பதிவிட்டாலும் இனிமையாக தான் இருந்தது… வாழ்த்துக்கள்…

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  நடைப்பயணம் சென்று வந்தமை குறுத்து விரிவான பதிவு இட்டமை நன்று – நகைச்சுவையாகவும், பயணக் கட்டுரையாகவும் எழுதியமை நன்று. சென்ற இடங்களூம், எடுத்துக் கொண்ட நேரமும் கூட ஆவணபப்டுத்தியமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. ச.மே.இளஞ்செழியன் சொல்கிறார்:

  அருமையான பயணக்கட்டுரை. ஒரு நீண்ட நடை பயணத்தின் அனைத்து விபரங்களையும் தொகுத்துள்ளீர்கள். வழியில் உணவும், தோட்டங்கள், கண்மாய் , தொட்டங்களில் குளியல், மழையும் நல்ல நடை பயணத்திற்க்கு ஏற்ற சூழல்.

  நடை பயணத்தில் கால் வலிக்கும்… இந்த கட்டுரை அதனை கால் வலிக்காமல் ரசிக்க செய்துள்ளது. நீங்கள் இதனை ஒருமுறை படிக்கும் போது ஏற்படும் உணர்வை கூறுகிறேன்.

  மண்டபம் கட்ட வழியில் வைத்திருந்த செங்கல் துண்டுகளை, சின்ன சின்ன கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சென்றனர். என்னவென்று விசாரித்தால் இந்தாண்டு புதிதாக கதை ஒன்று கிளம்பியுள்ளது. இப்படி அடுக்கி வைத்தால் சீக்கிரம் வீடுகட்டலாமாம். புதிய தகவல்.

  வாழ்த்துக்கள்.

 4. chan சொல்கிறார்:

  என்னப்பா …எப்படி இருந்தா என்ன நல்ல யாத்திரியா இருந்தா சரிதான்….. வேற எந்த நாட்டிலாவது இப்படி யார்மே ஆர்கனைஸ் செய்யாத மக்களா கலந்துக்கிற யாத்திரை இருக்கா சொல்லு…. இது தம்பி நம்ம நாட்டின் ஸ்பெசாலிட்டி….

  குதம்பை,
  குயில்,
  குரவை,
  குறத்தி,
  கூடல்,
  கொச்சகச் சார்த்து,
  கோத்தும்பி,
  கோழிப் பாட்டு,
  சங்கு,
  சாயல் வரி,
  சார்த்து வரி,
  சாழல்,
  செம்போத்து,
  தச்சராண்டு,
  தச்சாண்டி,
  தாலாட்டு,
  திணைநிலைவரி,
  திருவங்கமாலை,
  திருவந்திக் காப்பு,
  தெள்ளேணம்,
  தோணோக்கம்,
  நிலைவரி,
  நையாண்டி,
  பகவதி,
  படைப்பு வரி,
  பந்து,
  பல்லாண்டு,
  பல்லி,
  பள்ளியெழுச்சி,
  பாம்பாட்டி, பிடாரன்,
  பொற்சுண்ணம்,
  மயங்குதிணை
  நிலைவரி,
  முகச்சார்த்து,
  முகமில் வரி,
  முகவரி,
  மூரிச் சார்த்து,
  வள்ளைப்பாட்டு முதலியனவற்றைப் படித்து விட்டு அவை பற்றி ஒரு நாளைக்கு ஒரு பத்வு எழுதேன். இவையன்றிச் சித்தர் பாடல்களில் வழங்கும் பலவகை இசைப் பாட்டுக்களும்
  நொண்டிச் சிந்து,
  சிந்து முதலியவைகளும் கும்மி கோலாட்டம் முதலியவைகளும் பல வகையான கண்ணிகளும் ஆனந்தக்களிப்பு,
  கீர்த்தனங்கள் முதலிய பலவும் இசைப்பாட்டுக்களைச் சேர்ந்தனவே.

 5. Geetha Sambasivam சொல்கிறார்:

  அருமையான பதிவு. திருவாவினன்குடிக்குச் செல்லாமலேயே நாங்கள் வந்துவிட்டோம். மேலே மலைக்கும் ஏறிப்போகலை. மேலே ஏறும் ரயிலில் போனோம். கூட்டம், நெரிசல் தாங்காமல் இருந்தது.

 6. jeevansubbu சொல்கிறார்:

  //மண்டபம் கட்ட வழியில் வைத்திருந்த செங்கல் துண்டுகளை, சின்ன சின்ன கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து சென்றனர். என்னவென்று விசாரித்தால் இந்தாண்டு புதிதாக கதை ஒன்று கிளம்பியுள்ளது. இப்படி அடுக்கி வைத்தால் சீக்கிரம் வீடுகட்டலாமாம். சிரிப்பதற்கு வாழ்க்கையில் நிறைய விசயங்கள் கிடைக்கின்றன. //

  ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடியே , இந்த நம்பிக்கையை மருதமலையில் பார்த்திருக்கிறேன் .

  செட்டிநாட்டு பகுதியிலிருந்து இருபது வருடங்களுக்கு முன்பு நான் எனது அப்பா , அம்மாவுடன் பாதயாத்திரை சென்றிருக்கிறேன் . அது ஒரு வார பாயாத்திரை .

  பாதயாத்திரையின் போது, என் அம்மாவும் நானும் அப்பாவை தவறவிட்டு முன்னேறி சென்றுவிட்டோம். செல்போன் இல்லாத அந்த நாட்களில் , எப்படி தொடர்பு கொள்வது ..?

  சாக்பீஸ் கொண்டு சாலையில் எழுதி வைத்துவிட்டு மேற்கொண்டு நடந்து சென்றோம் . அப்பொழுதெல்லாம் சாலை முழுதும் சாக்பீஸ் எழுத்துக்கள் நிறைந்திருக்கும் . வேறு வேறு வண்ணங்களில் , எழுத்து நடையில் , ஒவ்வொரு சாக்பீஸ் கடிதமும் , ஒவ்வொரு காவியம் . வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் அது .

  எமது பாதயாத்திரை போன நினைவுகளை உங்களது பதிவு ஞாபகப்படுத்தியது . நன்றி .

 7. ranjani135 சொல்கிறார்:

  மொத்தத்தில், ஜாலியாக சாப்பிட்டுக்கொண்டே போன பக்தி யாத்திரை.
  போகும் வழியில் வரும் ஊர்களையும், சாப்பிட்டவைகளையும் குறிப்பிட்டது சுவையாக இருந்தது.
  //நிறைய ஊர்களின் முகப்பையே நான்குவழிச்சாலைகள் மாற்றிவிட்டது.// பல சமயங்களில் தொழில் நுட்பம் சோதனையாகத் தான் இருக்கிறது!

  ஆனாலும் 3 நாட்கள் நடந்த தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடக்கலாம் என்னும்போது முன்னேற்றம் தேவையாகத்தான் இருக்கிறது!

  நடக்கும்போது பல விஷயங்களைக் கவனிக்க முடிகிறது என்பதே நடைப் பயணத்தின் மிகப் பெரிய பலன், இல்லையா?
  மொத்தம் எத்தனை தூரம் என்று குறிப்பிடவில்லையே!

  எங்களுக்கும் மகிழ்வூட்டிய பயணம்!

 8. Asin sir சொல்கிறார்:

  பழநிக்குப் பாதயாத்திரையாக எங்களைக் கூட்டிச் சென்றதற்கு நன்றி.

 9. rathnavelnatarajan சொல்கிறார்:

  பழனி பாத யாத்திரை பற்றிய அருமையான பதிவு.
  நன்றி திரு சித்திரவீதிக்காரன், எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  மின்சாரம், வேலைப்பளு காரணமாக உங்கள் பதிவு படிக்க கால தாமதமாகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s