கண்டதையெல்லாம் கவிதை என்று சொல்லாதே

Posted: ஏப்ரல் 4, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

கவிதைகள் எண்ணற்ற குணங்கள் சார்ந்து நிற்கலாம். அதன் நோக்கம் சார்ந்து அது மென்மையாகவோ, ஆக்ரோஷமாகவோ, அமைதியை உருவாக்கக் கூடியதாகவோ அல்லது மனத்தொந்தரவுகளைத் தூண்டுவதாகவோ, உள்ளடங்கிய ஓசையைக் கொண்டதாகவோ, ஓசையின் ஆர்ப்பாட்டம் கொண்டதாகவோ இருக்கலாம். உத்தேசவிளைவுகளை நோக்கிப் பாயும் பாய்ச்சலே அதன் முதல் குறிக்கோளாக இருப்பதால் அதன் குறிக்கோள்களுக்கு ஏற்ப அது கோலங்கள் கொள்ளும்

– சுந்தர ராமசாமி

எனக்கும் கவிதைகளுக்கும் ரொம்ப தூரம். எப்போதாவது வந்து விழும் வார்த்தைகளை வைத்து கொஞ்ச நேரம் விளையாடி விட்டு நகர்ந்து விடுவேன். மற்றபடி கவிதை எழுதும் எண்ணம் எனக்கு எப்போதுமில்லை.

நான்மாடக்கூடல்நண்பர் இளஞ்செழியன் நூல் தொகுப்பு ஒன்றிற்காக கவிதை எழுதச் சொல்லி என்னிடம் கேட்டார். அவர் கேட்டுக் கொண்டதால் ஒன்றிரண்டை எழுதி அனுப்பினேன். அதைக் கவிதை என்று சொல்ல முடியுமா என்று தோன்றவில்லை. நண்பர் இளஞ்செழியன் தொகுத்த கதிர் பொங்கல் மலரிலும், திருமங்கல நண்பர்கள் வெளியிட்ட கவிதை துவங்கும் புள்ளி நூலிலும் என்னுடைய கவிதைகளை(?) பிரசுரித்திருந்தார்கள். தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், நண்பர் இளஞ்செழியனுக்கும் நன்றி.

நான்மாடக்கூடல்காரன் என்பதை கவிதை என்றெல்லாம் சொல்ல முடியாது. என்னுடைய பிரகடனம் என்றெடுத்துக் கொள்ளலாம்.

நான்மாடக்கூடல்காரன்

நான்கு வழிச்சாலைகள்

நாலா பக்கமும் அழைத்தாலும்

நாலாயிரம் சம்பளம் வாங்கி

நாய்படாதபாடு பட்டாலும்

நாலுமாசி வீதிகளுக்குள்ளே சுற்றித் திரியும்

நான்மாடக்கூடல்காரன்

நான் !

–    சித்திரவீதிக்காரன்

நிறைய விசயங்கள் முன்னுக்குப்பின் முரணாக நடக்கிறது. அதை யோசித்த போது சிக்கிய வரிகள் கீழே.

 முரண்

?பின்னட்டையில் இருக்கிறது

கதையின் துவக்கம்

யார் கையில்

இருக்கிறது முடிவு?

மாறி மாறி

நடக்கிறது      எல்லாம்

சரியா நடந்தா

கால்வலிக்குமா என்ன?

– சித்திரவீதிக்காரன்.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் காந்தன் வரைந்த கோட்டோவியங்கள் தொடராக வந்து கொண்டிருந்தது. அதில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஓவியத்தை பார்த்து நான் வரைந்து வைத்திருந்தேன். அந்த கோட்டோவியத்தைப் பார்த்து எழுதியதுதான் இக்கவிதை.

கோட்டோவியம்

புள்ளிகளிலிருந்து…

கொஞ்சம் புள்ளிகள்

இணைந்து கோடுகளாகிறது.

கொஞ்சம் புள்ளிகள்

இணைந்து மரங்களாகிறது.

கொஞ்சம் புள்ளிகள்

இணைந்து மதில்களாகிறது.

கொஞ்சம் புள்ளிகள்

இணைந்து கோபுரமாகிறது.  

எல்லாப் புள்ளிகளும்

சேர்ந்து கோட்டோவியமாகிறது.  

எந்தப் புள்ளியில்  

இது கவிதையாகிறது?

– சித்திரவீதிக்காரன்

இளம் வயதில் கருப்பு கலர் குடிப்பதற்காக வயிறு வலிக்குது என்று பொய் சொல்லி கலர் வாங்கி குடித்ததை இப்போது எண்ணிப் பார்த்த போது கிட்டிய வரிகள்.

பவண்டோ

கருப்பு கலர்

கருப்பு கலர்

குடிப்பதற்காக

வயிறு வலித்ததாய்

நடித்ததை

இப்போது நினைத்தாலும்

சிரித்து சிரித்து

வயிறு வலிக்கிறது!

– சித்திரவீதிக்காரன்

சாதி, மதம், அரசியல் என எல்லா இடங்களிலும் சண்டை போட்டு அடித்துக்கொள்கிறார்கள். எல்லோரும் ஓரிடத்தில் ஒருமைப் படுகிறார்கள். அதை அறிய கீழே வாசித்துப் பாருங்கள்.

சிலம்பம்

 அடித்துக்கொள்கிறார்கள்

கணவன் மனைவிக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

அண்ணன் தம்பிகளுக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

சாதிகளுக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

மதங்களுக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

கட்சிகளுக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

மாநிலங்களுக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

நாடுகளுக்கிடையில் அடித்துக்கொள்கிறார்கள்!

நான் கவிதையெழுதினால் மட்டும்

எல்லோரும் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்!

– சித்திரவீதிக்காரன்

ஒரு அடியில் சொன்னா எதையும் ஒழுங்கா கேட்க மாட்டோமென்றுதான் வள்ளுவரே இரண்டடியில் குறள் இயற்றியிருக்கிறார். எனக்கு இரண்டடியில் சிக்கிய புதுக்குறள்.

சொல்லாததைச் சொல்லச் சொல்கிறாய் சொன்னதை

எல்லாம் கேட்ட மாதிரி

–    சித்திரவீதிக்காரன்

ஒரு வீட்டின் வாசல் முன் கம்பிக்கோலம் பார்த்தேன். மிக அழகாகயிருந்தது. அதை நான் ஒரு தாளில் வரைந்து பார்த்தேன். கொஞ்சம் வந்தது. வராத இடங்களையெல்லாம் அடைத்து எழுத்தில் கொஞ்சம் கிறுக்கிய போது தோன்றிய வரிகள்தான் கீழே உள்ளவை.

கோலம்

கட்டங்களுக்குள்தான் வாழ்க்கை கிடந்து அல்லாடுகிறது

புள்ளிகளை அழித்து புதிய வெளிகளை நோக்கிப் பற

கண்டதையெல்லாம் கவிதை என்று சொல்லாதே

வார்த்தைகளைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறது கவிதை

அது என் கவிதையல்ல!

–    சித்திரவீதிக்காரன்.

இப்பதிவை வாசித்து மறுமொழியாய் எல்லோரும் சொல்வதை தலைப்பாகவே வைத்து விட்டேன். நன்றி.

கவிதை சார்ந்த எனது மற்ற பதிவுகள்

காதல் கவிதைகள்

நகுலன் இலக்கியத்தடம்

அணிகலன்களின் தேவதையைப் பாடும் கலைஞன்

கதவைத் திற காற்று வரட்டும்

மகுடேஸ்வரன் கவிதைகள்

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  நானும் பார்த்தேன். எவ்வளவு முயன்றும் பாலியல் அடிப்படையிலான உள்ளர்த்தம் ஒன்றும் தொனிக்கவில்லை. மேலும் தனிமை, இருள், மௌனம், அறை போன்ற வார்த்தைகள் பயின்று வரவில்லை. எனவே இவை கவிதையில்லை.

  அடித்துக்கொள்பவர்கள் அடித்துக்கொல்லாதிருக்கட்டும், அல்லேலூயா!

  இசை தனது கவிதைத்தொகுப்பு ஒன்றின் முன்னுரையில் ”’கவிதை என்பது’ என்று ஆரம்பித்து” என்று ஆரம்பித்து எழுதியிருப்பார். அந்த முன்னுரையே ஒரு அற்புதம். அவர்போல தென்னிலங்கை தீக்குரங்காக மாறமுடியாவிட்டாலும் ஒரு சித்திரவீதிச் செம்போத்தாக (டூன்ம் டூன்ம் குருவி) முயற்சித்தல் தகும்.

  நீங்கள் கமல் ரசிகராக இருப்பதில் எந்த ஆச்சரியமும் இருந்தால்தான் ஆச்சரியம் என்பது நான் சொல்லித்தான் மற்றவர்களுக்குத் தெரியவேண்டும் என்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார – நீ எழுதுவது அனைத்துமே கவிதை தான் – உனக்கு ஏன் ஐயம் வருகிறது ? கவலை வேண்டாம் – இருக்கும் திறமைகளுடன் கவிதை எழுதும் திறமையும் வளரட்டும். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. vgovindaraj சொல்கிறார்:

  நான்மாடக்கூடல்காரன்

  நான்கு வழிச்சாலைகள்

  நாலா பக்கமும் அழைத்தாலும்

  நாலாயிரம் சம்பளம் வாங்கி

  நாய்படாதபாடு பட்டாலும்

  நாலுமாசி வீதிகளுக்குள்ளே சுற்றித் திரியும்

  நான்மாடக்கூடல்காரன்

  நான் ! —

  அற்புதம்

 4. jeevansubbu சொல்கிறார்:

  சொல்லாததைச் சொல்லச் சொல்கிறாய் சொன்னதை

  எல்லாம் கேட்ட மாதிரி

  – மாஸ்டர் பீஸ் _

 5. kesavamani சொல்கிறார்:

  முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். தங்கள் கவிதையில் வினை இருக்கிறது! பழகப்பழக திருவும் கூடி வரும். எதையும் எழுதாமல் இருப்பதைவிட எழுத முயற்சிப்பது எவ்வளவோ மேல் அன்றோ? தங்களின் புதுக்குறல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

 6. அனைத்தும் அருமை…

  உங்கள் மனதிற்கு பிடித்தால் போதும்….

  தொடர வாழ்த்துக்கள்….

 7. Asin sir சொல்கிறார்:

  பிறப்பு முதல் இறப்பு வரை
  புள்ளிகளை இணைப்பதிலேயே
  வாழ்க்கை முடிந்து விடுகிறது.
  புள்ளிகளை அழித்து
  புதிய வெளியை நோக்கிப் பறந்தவர்கள்தான்
  பாடங்களாகிறார்கள்.
  – நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

 8. bagawanjee சொல்கிறார்:

  ரசிக்கத் தெரிந்தவன் ரசனையுடன் எழுதும் எல்லாமே கவிதைகள் தான் !

 9. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

 10. samson சொல்கிறார்:

  vungal manam pol vungal eluthukkalum paranthu visalamahikondirupathurku valthukkal
  melum umathu vuraiyae voru kavithaiyai irukirathu melum valara aasaipaduhiraen

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s