தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.
– பரிபாடல்
திருவிழாக்களில் தேரோட்டம் காண்பது எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். திக்கெட்டும் மக்கள் வெள்ளத்தில் மலை போல் அசைந்து வரும் தேரைக் காண்பது பெரு மகிழ்ச்சி தரும். மலை போலத் தேர் மலையைச் சுற்றி வரும் போது பார்க்காமல் விடுவேனா என்ன?
திருப்பரங்குன்றத்தில் பங்குனித் தேரோட்டம் பார்க்க நானும், சகோதரரும் அதிகாலை கிளம்பிச் சென்றோம். திருப்பரங்குன்றத்திலுள்ள சித்தி வீட்டுக்கு போய் அங்கிருந்து செல்லத்திட்டம். இரயில்வே நிலையத்திற்கருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வணங்கி தென்பரங்குன்றம் வழியாக நடந்தோம்.
நையாண்டிமேளம் வைத்து காவடி, பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள். சாலையோர ஓவியர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் ஓவியங்களை வரையத் தொடங்கியிருந்தனர். தேரோட்டத்தைக் காண மக்கள் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர்.
வழிநெடுக பசிப்பிணி போக்க சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என அன்னதானங்களும் தாகந்தீர்க்க நீர்பந்தல், மோர் பந்தல், பானகம், சர்பத் மற்றும் வெயிலுக்கு இதமாக விசிறியும் கொடையுள்ளம் படைத்தோர் கோடையை சமாளிக்க வழங்கினர். தேரைக் காண்பதற்கு முன்பே வழியில் அன்னதானத்தில் வெண்பொங்கல், சாம்பாருடன் கிடைத்தது. வாங்கி சாப்பிட்டு தெம்பாகத் தேரை நோக்கி கிளம்பினோம்.
திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுத்துள்ளனர். கிராம மக்கள் வந்து தேரை இழுத்து தங்கள் ஊர் திருவிழாவாக மகிழ்வோடு கொண்டாடுகின்றனர். இராட்டினங்களில் சிறுவர் சிறுமியர் மகிழ்வோடு சுற்றிக்கொண்டிருந்தனர்.
குட்டியானைகளில் குடும்பம் குடும்பமாக வந்து சோறாக்கி முருகனுக்கு படைத்து உண்கின்றனர். தென்பரங்குன்றத்தை சுற்றியுள்ள வீடுகள், வீதிகளில் எல்லாம் மக்கள் வெள்ளம். சாமியார்களுக்கு அன்னதானமிட்டு காணிக்கை வழங்குகிறார்கள். வழியில் எல்லோரும் தேரைப் பார்த்தும், பார்க்கவும் மகிழ்வோடு அலைந்து கொண்டிருந்தார்கள்.
நாங்கள் தென்பரங்குன்றம் வழியாகச் சென்ற போது சுற்றுச்சூழல் பூங்கா அருகில் தேர் வந்துவிட்டது. தேர் அசைந்தாடி வருவதே அழகு. அதுவும் மலைக்கருகில் குறுமலை போல தேர் அசைந்து வருவதைக் காண்பது இன்னும் அழகு. மலையையும், தேரையும் சேர்த்து படம் பிடிப்பதற்காக வயக்காட்டிற்குள் சென்று கொஞ்சம் படங்கள் எடுத்தேன். தேரில் அழகன் முருகன் பவனி வந்து கொண்டிருந்தார். தமிழ்த்தலைவனை வணங்கி கிளம்பினோம்.
தேரோட்டம் காண இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த போது அமண்பாழி பகுதியில் போய் சமணர் படுகைகளை குகைத்தளத்தில் பார்த்தது ஞாபகம் வந்தது. சித்தி மற்றும் சகோதரனிடம் காவல்கோட்டத்தில் திருப்பரங்குன்றத் தேரோட்டம் குறித்து வந்த காட்சியை சொல்லிக்கொண்டிருந்தேன். பயில்வான் வீட்டில் திருடச் செல்லும் வயதானவரை பயில்வான் பிடித்துக் கொள்வார். அவர் பயில்வான் பிடியை விலக்கி நகல மிரண்டு போகும் பயில்வான் அவரைக் குறித்து விசாரிப்பார். பின் திருப்பரங்குன்றத் தேரோட்டத்திற்கு வரச் சொல்லி அவருக்கு மரியாதை செய்வார். அப்போது தேரோட்டத்திற்கு வரும் வயதானவர் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு ஆட்டுக்கிடாயை அள்ளிக் கட்டுவதைப் பார்த்து எல்லோரும் வியந்து போவார்கள். காவல்கோட்டத்தில் சு.வெங்கடேசன் இதை அழகாய் எழுதியிருப்பார்.
தேர் பார்த்துட்டு சித்தி வீட்டில் சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கிளம்பினோம். சித்தி வீட்டிலிருந்து திருப்பரங்குன்ற மலை அழகாய் தெரிந்தது. வெயிலோடு வீடு வந்தோம்.
வரிசையான போட்டோக்கள், தேரோட்டத்தை நேரில் பார்த்த மகிழ்வைத் தந்தன.
அருமையான படங்களுடன் கொண்டாட்டம் அருமை…
அருமையான பதிவு. வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்காரன்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறேன்.
புகைப்படங்களுடன் அருமையான பதிவு.
நல்ல படங்கள். குறிப்புகள். நன்றி.
அன்பின் சித்திர வீதிக்கார,
அருமையான பதிவு – அருமையான் படங்களுடன் – நன்று நன்று.
பரிபாடலில் துவங்கி, மலை போலத் தேர் மலையைச் சுற்றி வரும் கண்
கொள்ளாக் காட்சியினை விவரித்தமை நன்று.
எத்த்னை நிகழ்வுகள் – கண்ணில் கண்ட நிகழ்வுகளை எல்லாம் உள் வாங்கி – மனதில் நிறுத்தி – அததனையையும் புகைப்படமாக்கி – விளக்கங்கலுடன் வெளீயிட்டமை நன்று.
பசிப்பிணீ போக்க, தாகம் தீர்க்க, கோடை வெயிலினிற்கு விசிறி கொடுத்து வெயிலினைத் தவிர்க்க – அத்த்னை கொடையுள்ளம் கொண்ட நல்லுள்ளங்களும் நல்முடன் வாழ பிரார்த்த்னைகள் – நல்வாழ்த்துகள்.
கிராம மக்கள் தங்கள் ஊர்த்திருவிழாவாகக் கொண்டாட, மழலைச் செல்வங்க்ளோ மகிழ்ச்சியுடன் விளையாடிக் களித்தது கண்டு இங்கு எழுதியது நன்று.
காவல் கோட்டத்தில் திருப்பரங்குன்றத் தேர்த் திருவிழா பற்றிய குறிப்பினை – எப்பொழுதோ படித்ததை – நினைவில் நிறுத்தி அதனை இங்கு அழகாக வெளியிட்டமை நன்று.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
திருப்பரங்குன்றம் பசுமை நடைக்குப் பிறகு எல்லாப் பதிவுகளையும் படித்தேன்.
முதலில் என் பாராட்டுக்களைப் பிடியுங்கள். படங்களும் விவரங்களும் சிலிர்க்க வைக்கின்றன. கவிதைகள் கவிதைகளாகவே தோன்றின. கறுப்பு கலர் குடித்தால் வயிற்றுவலி போகுமா? கேள்விப்பட்டதில்லை. அந்தப் பதிவில் இருக்கும் வரிச்சித்திரம் நீங்கள் வரைந்ததா? அழகாக இருக்கிறது. பழனி பாதயாத்திரை பதிவும் பிரமாதம். என்னவோ ஜாலி யாத்திரை போலவே பட்டது. வைகை பதிவின் ஒரு படம் கண்ணிலேயே நிற்கிறது. தேரோட்டம் பதிவிலும் தீனி!
இந்த அனுபவமெல்லாம் உங்கள் எழுத்தின் வழியாக எனக்குக் கிடைக்கிறது. நன்றி.
சின்ன வயதில் ஸ்ரீரங்கத்தில் கோடை விடுமுறையின் போது சித்திரைத் தேர் சேவித்த நினைவு வருகிறது. சென்ற இரண்டு ஆண்டுகளாக பங்குனித் தேர் சேவித்தேன்.
தேர் அசைந்தாடி வருவது கண்ணுக்கு அழகு. உங்களுடன் சேர்ந்து இந்த முறை குமரனின் தேர் சேவை! படங்களும், வர்ணனைகளும் உங்கள் கூடவே நடந்து வருவதைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன.