எனக்கு புத்தகம் பிடிக்கும் – உதயசந்திரன்

Posted: ஏப்ரல் 23, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

magaveerarமகாவீரர் தினமும் உலக புத்தக தினமும் அடுத்தடுத்து வந்தது பொருத்தமாகத்தான் இருக்கிறது. சமணத்துறவிகள் மக்கள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கோடு தாங்கள் தங்கிய பள்ளித்தலங்களில் போதித்து வந்தனர். தமிழில் அதிக நூல்களை இயற்றிய சமண முனிவர்களை வணங்குகிறேன். என்னை வழிநடத்தும் புத்தகங்களை வணங்குகிறேன். தங்கள் எழுத்தின் வழியாக என்னை ஆட்கொண்ட எழுத்தாளர்களை வணங்குகிறேன்.

udhayachandhiranஎனக்கு மிகவும் பிடித்த ஆளுமையான உதயசந்திரன் ‘எனக்கு புத்தகம் பிடிக்கும்’ என்ற தலைப்பில் ஆனந்தவிகடனில் பகிர்ந்து கொண்ட கட்டுரையை உலக புத்தக தினத்தில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உதயசந்திரனின் இதயம் புத்தகங்களால் ஆனது. இலக்கியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல் என எந்தப் புத்தகம் வந்தாலும், அதன் வாசம் அறியாமல் விடாத புத்தகப் புழு இந்த ஐ.ஏ.எஸ்!

இன்று உலகத்தை ஆள்வது இரண்டு புத்தகங்கள். ஒன்று ஆடம் ஸ்மித் எழுதிய ‘தேசங்களின் செல்வம்’. மற்றொன்று காரல் மார்க்ஸின் ‘மூலதனம்’. இந்த இரண்டு புத்தகங்களின் கலவையைத்தான் எல்லா நாட்டு அரசாங்கங்களும் தங்களது கொள்கையாக வைத்திருக்கின்றன. ஆடம் ஸ்மித்தை முழுமையாகப் பயன்படுத்தி வந்த அமெரிக்கா, நைந்துபோன தொழிற்சாலைகளை அரசுமயமாக்கி வருகிறது. காரல்மார்க்ஸ் வழித்தடத்தில் வந்த சோவியத்தும், சீனாவும் பல்வேறு தொழிற்சாலைகளைத் தனியார்மயமாக்கி விட்டன. ஆம், புத்தகங்கள்தான் இந்த உலகத்தை ஆள்கின்றன.

அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல், புத்தகம் மட்டும்தான். தொடக்க கால அறிவு, காலம் தோறும் கடத்தப்பட்டது. அது ஓலைச்சுவடிகளில் இருந்தபோது சிலரது கைக்கு மட்டும் நெருக்கமாக இருந்தது. சில மன்னர்களது மாளிகையால் மட்டுமே வாசிக்க முடிந்தது. ஆனால், தாளுக்கு மாறிப் புத்தகமானபோதுதான் அறிவு பரவலாக்கப்பட்டது. எனவே, புத்தகம் என்பது ஜனநாயகத்தின் குறியீடு. அதனாலேயே சர்வாதிகாரிகள் முதலில் கைவைப்பது, தடை போடுவது புத்தகளுக்குத்தான். இத்தாலி கலிலியோவைப் பார்த்து அன்றைய திருச்சபைகள் பயப்பட என்ன காரணம்?. ‘டயலாக் கன்சர்னிங் தி டு சீஃப் வேர்ல்ட் சிஸ்டம்’ என்ற புத்தகத்தை எழுதிய ஒரே காரணத்துக்காக கலிலியோ வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான். இங்கிலாந்துக்காரனான சார்லஸ் டார்வின் பலரது கசப்புக்கு ஆளாகக் காரணமும் அவர் எழுதிய புத்தகம்தான். ‘ஆன் தி ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ் பை மீன்ஸ் ஆஃப் நேச்சுரல் செலெக்ஷன்’ என்ற புத்தகத்தில் தனது பரிமாணக் கொள்கையைச் சொன்னார். ஐந்து ஆண்டுகள் கப்பலில் சுற்றி ஒவ்வொர் இடத்திலும் போய் உயிரினங்களை ஆராய்ச்சி செய்தான். ‘பயன்தரக்கூடியவை அடுத்த தலைமுறைக்கு வந்துசேரும். பயனற்ற மாறுபாடுகள் காலப்போக்கில் மறைந்துவிடும்’ என்று கண்டுபிடித்தான். ‘கடவுள் நினைத்தார்… மனிதன் தோன்றினான்’ என்ற கருத்தாக்கத்தை உடைத்தார் தன் புத்தகத்தால். ‘ஆண்டவனின் முதல் எதிரி’ என்று அவர் அழைக்கப்பட இந்தப் புத்தகமே காரணம். இது டார்வின் பிறந்து 200 ஆவது ஆண்டு. காலங்கள் கடந்தும் அவனை நினைக்கிறோம். கலிலியோ அன்று துன்புறுத்தப்பட்டு இருக்கலாம். ஆனால், அவனது புத்தகம் உண்மையைத்தான் பேசியது என்பதை 362 ஆண்டுகள் கழித்து, போப் இரண்டாவது ஜான்பால் ஒப்புக்கொண்டார். தங்களது தவறை 1992ல் திருத்தினார். சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட புத்தகம் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மகுடத்தில் வைத்துக் கொண்டாடப்படும் என்பதற்கு சாட்சி இது. கோபர்நிக்கஸ், கலிலியோ, ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் வந்திராவிட்டால், நாம் இன்று காட்டுமிராண்டிகளாகத்தான் திரிந்து இருப்போம்.

நான் முதலில் தொட்ட புத்தகங்களின் தலைப்பை இன்று நினைக்கிறேன். பள்ளியில் நடந்த போட்டியில் வென்ற எனக்கு மீரா எழுதிய ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’, மு.மேத்தாவின் ‘கண்ணீர் பூக்கள்’ ஆகிய இரண்டு கவிதைப் புத்தகங்கள் பரிசாகத் தரப்பட்டன. கனவு, கற்பனை, காயம், கண்ணீர், பூ ஆகிய ஐந்து வார்த்தைகளுக்குள்தான் எல்லாப் புத்தகங்களும் அடங்கியிருக்கின்றன. வென்றவனின் கதையை வரலாறுகள் சொல்லும், தோற்றவன் வலியை இலக்கியங்களில் தேடுங்கள் என்பார்கள்.

புரிகிறதோ இல்லையோ, லா.ச.ரா-வின் சிந்தாநதியும் கார்க்கியின் தாயும் பள்ளி நாட்களில் வாசித்தேன். என் வயது மனிதர்களுக்கு நல்ல புத்தகங்களை கணையாழியின் கடைசிப் பக்கங்களின் மூலம் அறிமுகப்படுத்திய சூத்திரதாரி சுஜாதா. மோகமுள் குத்திய வலியுடன் ஜே.ஜே. சில குறிப்புகள் கொடுத்த அதிர்வுகளுடன்தான் கல்லூரிக்குள் போனேன். பொறியியில் மாணவன் நான். அங்கு இலக்கியத் தாகங்களுக்கு இடம் இல்லை என்றாலும், நண்பர்கள் வட்டத்தை வைத்துக் கொண்டு படித்தேன்.

ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்று நினைத்தபோது, தமிழ் இலக்கியத்தையும் மானுடவியலையும் பாடமாக எடுத்தேன். ‘புத்தகங்களின் காட்டில் எனது தலையைத் தொலைத்தேன்’ என்பது அப்போதுதான் நடந்தது. வ.சு.ப.மாணிக்கம், நா.வானமாமலை, பிரதாப முதலியார் சரித்திரம், பாரதி எனத் தொடர்ந்த படிப்பு, தி.ஜானகிராமனில் கொண்டுவந்து சேர்த்தது. மோகமுள்ளும், அம்மா வந்தாளும், மரப்பசுவும் படிக்காதவன் மனிதனே அல்ல என்று நினைத்தேன். கரிசல்காட்டு மண்ணைக் குழைத்து தாளில் தடவிய கி.ராஜநாராயணனின் புத்தகங்கள் அதிகாரம் வாய்ந்த பதவிக்காரனையும் புழுதி படிந்த மண்ணில் புரட்டி எடுத்தது. போகாத நூலகங்கள் இல்லை, வாங்காத புத்தகங்கள் இல்லை எனக் கண் விழித்து இருக்கும் நேரம் எல்லாம் வாசிப்பு. வாசிப்பு மட்டுமே. எங்களுக்கு அந்தக் காலத்தில் இருந்த ஒரே வாய்ப்பு சென்னை புத்தகக் கண்காட்சி மட்டும்தான். ஒவ்வோர் ஆண்டும் ஏதோ புனிதப் பயணம் போவதைப் போல நான் போனேன்.

ஜார்ஜ் ஆர்வெலின் விலங்குப் பண்ணையும் படிப்பேன். சிக்மண்ட் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கமும் வாசிப்பேன். முந்தைய நாள் பெருமாள் முருகனது புத்தகம் எனது மேஜையில் இருக்கும். மறுநாள் அறிவுமதியின் கவிதைகள் மனதை நனைக்கும். சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் அழைக்கிறது. ரோமிலா தாப்பர் மறுநாள் ஞாபகம் வருகிறார். டபிள்யூ.டி.ஓ. ஏற்படுத்திய மாற்றங்களும் பொருளாதார அதிர்வுகளும் அடுத்துப் படிக்க ஆசையாக இருக்கின்றன. எந்தப் புதிய டெக்னாலஜி வந்தாலும் அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு என்பதால், அதையும் வாங்கிப் படிப்பேன். வாசிப்பது நாளுக்கு நாள் அதிகமாகியே வருகிறது. களப்பிரர் காலத்தைப் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள அலைகிறேன். இடங்கை, வலங்கை என்ற சாதிப்பிரிவுகள் பற்றி ஏதாவது குறிப்பு கிடைக்குமா என்று தேடி வருகிறேன். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இங்கு அதிகாரிகளாக இருந்த வெள்ளையர்களைப் பற்றி புத்தகம் எழுதுவதற்கான சேகரிப்பில் இருக்கிறேன். எனவே, புத்தகக் காதலுக்கு முற்றுப் புள்ளியே இல்லை.

சினிமா வந்தது, இன்டர்நெட் வந்தது, அவ்வளவுதான் புத்தகங்கள் காலம் முடிந்தது என்று யாரும் புலம்பத் தேவை இல்லை. அவை இரண்டும் இதன் இடத்தைப் பிடிக்க முடியாது. புத்தகம்தான் மனிதனைக் கற்பனை செய்ய அனுமதிக்கிறது. நான் சொல்லிய அளவுக்குள் நீ கற்பனை செய்தால்போதும் என்று சினிமா கட்டுப்பாடு விதிக்கிறது. இன்டர்நெட், தகவல் தரும் மீடியமாக மட்டுமே இருக்கிறது. மனதை ஊடுருவும் வல்லமையை அது இன்னமும் அடையவில்லை.

காரணம், நீங்கள் புத்தகத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். அதன் மணம் எழுத்துக்கு ஏற்ப, எழுத்தாளனுக்கு ஏற்ப, உங்களை வருடிக் கொடுக்கிறது. தி.ஜா-வின் நாவல், புதுமைப்பித்தனின் சிறுகதை, சேரன், ஜெயபாலன் கவிதைகள், தொ.பரமசிவன், ஆ.சிவசுப்பிரமணியன், ராஜ்கௌதமன், வெங்கடாசலபதி ஆகியோரின் சமூகவியல் ஆய்வுகள் படிக்கும் சுகம் சொல்லிப் புரியாது. ‘வீட்டுக்கு ஒரு புத்தகச்சாலை’ என்று இயக்கமாக்க வேண்டும்’ என்றார் அண்ணா. பூஜை அறை மாதிரி புத்தக அறையும் அனைத்து வீட்டிலும் வேண்டும் என்பது பேராசையாகக் இருக்கலாம். அறம் பாடிய அறிஞன் வள்ளுவனின் திருக்குறள், புதிய மறம் பாட வந்த பாரதியின் கவிதைகள், வரலாற்று அறிவின் வேதப் புத்தகமான ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை ஆகிய மூன்று புத்தகங்களை மட்டுமாவது வீட்டில் வாங்கிவையுங்கள்.

விலை உயர்ந்த கண்ணாடிக் கோப்பைகள், பீங்கான் ஜாடிகள், மண் குடுவைகள் வைப்பதைவிட அப்போது உங்கள் வீடு அழகாகத் தெரியும்!.

நன்றி. ப.திருமாவேலன், படம் – சு.குமரேசன், ஆனந்தவிகடன் 4.11.2009

உதயசந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. kesavamani சொல்கிறார்:

  நாம் படித்த புத்தகங்கள் கொடுக்கும் பரவசத் தருணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதற்கு எல்லை ஏது? எப்போதுமே அலுக்காதது புத்தகங்கள் பற்றி பேசுவதும் எழுதுவதும்தான்.

 2. ranjani135 சொல்கிறார்:

  புத்தக தினத்தில் புத்தகம் பிடித்த, படித்த ஒருவரின் கட்டுரையை பகிர்ந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். எத்தனை எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறார்!
  ‘அறிவு என்ற வார்த்தைக்கு இணையான சொல் புத்தகம் மட்டும் தான்.’
  ‘புத்தகம் மட்டும்தான் மனிதனை கற்பனை செய்ய அனுமதிக்கிறது’ – உண்மையான வரிகள்.
  புத்தகங்கள் படிப்பதிலும் அதைப் பற்றிப் பேசுவதிலும் இருக்கும் மன நிறைவு வேறு எதில் வரும்?
  வீட்டிற்கு உண்மையான அலங்காரம் புத்தகங்கள்தான்!
  அருமை!

 3. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார, அருமையான பகிர்வு – புத்த்கப் புழுவின் கட்டுரை பகிர்வு நன்று. மிகுந்த பணிச்சுமைக்கு இடையேயும் புத்த்கம் படிக்க நேரம் ஒதுக்கி – தன் புத்தகம் படிக்கும் ஆர்வத்தினிற்கு தீனி போட்ட உதய சந்திரன் பாராட்டுக்குரியவர். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. Asin sir சொல்கிறார்:

  “மனிதரெலாம் அன்பு நெறி காண்பதற்கும்
  மனோபாவம் வானைப்போல் விரிவடைந்து
  தனிமனித தத்துவமாம் இருளைப் போக்கிச்
  சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்,
  இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம்
  இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
  புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
  புத்தக சாலைவேண்டும் நாட்டில் யாண்டும்.”

  உங்களோடு சேர்ந்து நானும் இந்நாளில், பாரதிதாசன் பாடிய ‘புத்தக சாலை’ பாடலை நினைத்துப் பார்க்கிறேன்.

  வாழ்த்துக்களுடன்,
  அசின் சார், கழுகுமலை.

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s