அழகர்கோயில் – தொ.பரமசிவன்

Posted: ஏப்ரல் 24, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:

எண்ணெய்பந்தம்

தைய லவரொடும் தந்தா ரவரொடும்

கைம் மகவொடும் காத லாவரொடும்

தெய்வம் பேணித் திசைதொழுனிர் சென்மின்

–    பரிபாடல்

அழகர்கோவில்

அழகர்கோயில் என்றதும் நினைவுக்கு வருவது பசுமையான மலைகள், கோட்டை வாசலுக்குள் நுழைந்து செல்லும் பேருந்து, பெரிய கோபுரம், சந்தனம் பூசிய கதவில் குடிகொண்ட பதினெட்டாம்படிக்கருப்பு, அனுமானும் கருடனும் வரவேற்கும் வண்டிப்பாதை, சுந்தரத்தோளுடையான் குடியிருக்கும் அழகர்கோயில், தீர்த்தத்தொட்டிக்கு செல்லும் வழியில் விளையாடித்திரியும் மந்திகள், கொய்யாப்பழம், மாங்காய், மாம்பழம், பழாச்சுளை, வெள்ளரிப்பிஞ்சு, அன்னாச்சி, இலந்தைப்பழம், நவாப்பழம் என வழியில் விற்கும் எளிய வியாபாரிகள், கூழாங்கற்களுக்கிடையே சலசலத்து வரும் சிலம்பாறு, அடர் மரங்கள், கத்தாழை மற்றும் பாறைத்திட்டுகளில் காணப்படும் பெயர்கள், சிலம்பாற்றில் நீராடி சிரித்துபேசி வரும் மனிதர்கள், நீள்சாலை, பழமுதிர்சோலை, ஈரம் கசியும் கல்மண்டபம், தீர்த்தமாட வரிசையில் நிற்கும் பக்தர்கள், சில்லென வரும் நீர், தீர்த்தத்தொட்டிக்கு மேல் காவலிருக்கும் இராக்காயி அம்மன், குளித்துவிட்டு சாப்பிட இட்லி கெட்டி சட்னி புளியோதரை, பழம்உதிர்சோலையில் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் குமரன், மலையிறங்கி அழகரை வணங்கி வாங்கித் திங்கும் சம்பா தோசை, கூட்டமாக வரும் பேருந்து, குளிர்ந்த காற்று இவற்றோடு தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் நூலும் சேர்ந்து கொண்டது.

அழகர்கோயில்

பண்பாட்டு அசைவுகள் வாசித்தபிறகு ஏற்பட்ட பிரமிப்பு சொல்லில் அடங்காது. தமிழ் தொடங்கி பல்லாங்குழி வரை அறியாத பல தகவல்களை அறியப்படாத தமிழகத்தில் படித்தேன். தெய்வங்களும் சமூக மரபுகளும் பகுதியில் வாசித்த அழகர்கோயில் குறித்த கட்டுரை தொ.ப. அய்யாவின் ஆய்வுநூலான அழகர்கோயில் மீதான ஆர்வத்தை அதிகமாக்கியது.

புத்தக்கடைகளில் அழகர்கோயில் நூல் கேட்டால் இல்லை என்கிறார்கள். முதற்பதிப்பு வெளியிட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு சென்று கேட்டால் தீர்ந்துவிட்டது என்கிறார்கள். அச்சமயம்(2008) தென்திசை படையலாக அழகர்கோயில் வர சகோதரர் சென்னையில் பதிப்பகத்திலிருந்தே வாங்கிவந்து தந்தார்.

இரணியன்வாசல்

அழகர்கோயில் வாசிக்க, வாசிக்க மகிழ்ச்சி பொங்கியது. பலமுறை சுற்றத்தோடும், நட்போடும் சென்ற அழகர்கோயில், இருபது வருடங்களுக்கும் மேலாக பார்த்த சித்திரைத் திருவிழா இவற்றின் பின்னால் இத்தனை கதைகளும், நம்பிக்கைகளும் உள்ளதா என்றறிந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை எப்படிச் சொல்வது?. பார்ப்பவர்களிடம் எல்லாம் அழகர்கோயில் குறித்து பேசிக்கொண்டு திரியும் படி செய்தது அய்யாவின் எழுத்து.

தொ.பரமசிவன்பதிவெழுதத் தொடங்கிய போதே இந்நூல் குறித்த எழுத வேண்டுமென்ற ஆசை உண்டு. காலம் இப்போதுதான் கை கூடி வந்துள்ளது. இந்த சித்திரைத்திருவிழா சமயம் அழகர்கோயில் நூல் குறித்தெழுத வாய்ப்பளித்த திருமாலிருஞ்சோலை அழகனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இந்நூல் குறித்து முதல்பதிவாக நானிதை எழுதினாலும் அழகர்கோயில் வாசித்து பயணித்து எழுதிய பதிவுகள் ஆறேழுயிருக்கும். அழகர்கோயில் தேரோட்டம், சித்திரைத் திருவிழா, பொய்கைகரைப்பட்டி தெப்பத்திருவிழா, அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள் குறித்தெல்லாம் எழுத தொ.ப.அய்யாவின் அழகர்கோயில் புத்தகம் உதவியது.

தொ.பரமசிவன் அய்யா இரண்டாம் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையை வாசித்தால் அவரது ஆய்வு குறித்தும் எளிய மனிதர்கள் மீது அவர் கொண்டுள்ள மதிப்பு குறித்தும் அறியலாம்.

இந்த நூல் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேடாகும். 1976 முதல் 79 வரையிலான மூன்றாண்டு காலத்தில் இந்த ஆய்வினை நிகழ்த்தும் வாய்ப்பினை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனக்கு வழங்கியது. பின்னர் 1980இல் பல்கலைக் கழகப் பதிப்பிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நூல், ஒன்பதாண்டுகள் அச்சகங்களில் ‘தவம் கிடந்து’, 1989இல் வெளிவந்தது. இருப்பினும் 1997-98ஆம் ஆண்டிற்குப் பிறகே இந்த நூல் சரியான வாசகர்களின் கைகளில் சேர்ந்தது. அதன் பின்னர் இந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டும் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தன. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் படிப்புத்துறைகளிலும், ஆய்வுத் துறைகளிலும் புது மலர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நூலின் மறுபதிப்பிற்கான தேவை அங்கிருந்தே உருவானது.

கோயிலாய்வுகள் என்பன வரலாற்றுத்துறை சார்ந்தன என்ற எல்லையினைத் தாண்டும் முயற்சியில் இந்த நூல் வெற்றி பெற்றுள்ளது என்றே நான் கருதுகிறேன். கோயிலாய்வுகள் என்பன பண்பாட்டாய்வின் ஒரு பகுதி என்ற எண்ணம் இன்று மேலெழுந்துள்ளது. பெருங்கோயில்களின் வாழ்வும், வளர்ச்சியும், நலிவும் சமூகத்தின் எளிய மக்களின் அசைவுகளைப் பொருத்தே அமைந்துள்ளன. கால் நூற்றாண்டுக்காலம் கோயிலாய்வுகளில் ஈடுபட்டபின் நான் கண்டுணர்ந்த உண்மை இதுவே ஆகும்.

கள ஆய்வு சார்ந்து இயங்கும்போதே கோயிலாய்வுகள் முழுமை பெறுகின்றன. கள ஆய்வு என்பது காட்சிகளின் அடுக்குகளாக அமையாமல் மனித வாசிப்பாக அமைய வேண்டும். அப்பொழுதுதான் பண்பாட்டாய்விற்கான தரவுகளை நாம் பெற முடியும் மரபின் மீது மதிப்புக் கொண்ட எளிய மக்களே பண்பாட்டாய்வாளர்களின் உண்மையான குருமார்கள் ஆவர்.

பண்பாட்டாய்வு என்பது பலமுனைப்பட்டதாகும். மக்களின் வாய்மொழி வழக்காறுகளும் வாய்மொழி அல்லாத வழக்காறுகளும் செல்வமதிப்பு உடையன. இந்த உண்மையை உணர்ந்தவர்களால் மட்டுமே ஓர் இலக்கியப் பனுவலையோ, ஒரு கல்வெட்டினையோ, சமூக நிகழ்வு அல்லது முரண்பாடு ஒன்றினையோ அதன் உள்ளார்ந்த தன்மையுடன் விளங்கிக் கொள்ள முடியும்.

இந்த நூலின் இரண்டாம் அச்சினை வெளிக் கொண்டு வரும் கே.கே.புத்தக நிறுவனத்தாருக்கும், ‘தேடித் தேடிக் கண்டடையும்’ விஜயவேலனுக்கும் என் நன்றி. ஆய்விற்கான வாய்ப்புத்தந்து முதற்பதிப்பினை வெளியிட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தாரும் என் நன்றிக்குரியர்.

பாமரர் என்று புறந்தள்ளப்பட்ட, அதிகார வேட்கையற்ற, மரபுச் செல்வர்களான எளிய மக்களுக்கே இந்நூல் காணிக்கை ஆகும்.

–    தொ.பரமசிவன்

தொ.பரமசிவன் அய்யாவின் பேனாவில் மையுடன் சிலம்பாற்று நீர் கலந்திருக்குமென்று எனக்கு தோன்றுகிறது. சிலம்பாற்று நீர் குடிக்க குடிக்க அவ்வளவு இனிமையாகயிருக்கும். இன்னும் குடிக்க வேண்டுமென்ற உணர்வினைத் தரும். மூலிகை நீரென்பதால் உடலுக்கும் புத்துயிர் தரும். தொ.ப.வின் எழுத்தும் சிலம்பாற்று நீரைப்போலத்தான். வாசிக்க வாசிக்க எளிமையானது. ஆழமான பொருள் கொண்டது. பலமுறை வாசித்தாலும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவது. பலரும் வாசிக்கும் படி ஆய்வு நூல் எழுதுவது மிகக் கடினம். தொ.ப. அய்யாவின் வாசிப்பும், களஆய்வும், எளிய மனிதர்கள் மீதான அன்பும் இதை சாத்தியமாக்கியிருக்கிறது என எண்ணுகிறேன்.

என்னுடைய டிப்ளமோ பிராஜக்ட்க்கு போட்ட புத்தகத்தை நானே முழுமையாய் ஒருமுறை வாசித்தேனா என்றால் அது சந்தேகந்தான். தலைப்பையும் அதில் உள்ள என் பேரையும் தவிர அதில் எனக்கு உருப்படியாய் ஒன்றும் தெரியாது. இந்நூல் தொழில்நுட்பவியல் படிக்கும் போது படித்திருந்தால் கொஞ்சமாவது சிரத்தையெடுத்திருப்பேன். அழகர்கோயில் நூல் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

அழகன்

அழகர்கோயில் அமைப்பு, புராணத்தகவல்கள், வரலாற்று செய்திகளோடு அழகர் கோயிலை சுற்றியுள்ள சமூக மக்களுக்கும் அழகர்கோயிலுக்கும் உள்ள தொடர்பை தொ.பரமசிவன் அய்யா எளிமையாக விளக்குகிறார். மதுரை சித்திரை திருவிழா குறித்து விரிவாக எழுதியிருப்பது என்னைப் போன்ற அழகரின் இரசிகர்களுக்கு பேருவுகை தருவது. அழகர்கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பழமுதிர்சோலை ஆறாவது படைவீடுதானா?, பதினெட்டாம்படிக்கருப்புச்சாமி அங்கு வந்த கதை, வர்ணிப்பு பாடல்கள், கோயில் குறித்த பட்டயங்கள், வாய்மொழி வழக்காறுகள் குறித்து இந்நூலில் வாசித்து வியந்தேன்.

பதினெட்டாம்படிக்கருப்பு

தங்ககுதிரைபரிபாடல், சிலப்பதிகாரம் மற்றும் ஆழ்வார்கள் பலரால் பாடப்பட்ட அழகர்கோயில் குறித்து தொ.பரமசிவன் அய்யா எழுதிய இந்நூல் மதுரைக்காரர்கள், கோயிலாய்வு செய்பவர்கள், தமிழ்வரலாற்று மாணவர்கள், தமிழ்ப்பண்பாடு, வைணவம் குறித்து அறிந்து கொள்ள விழைபவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

சமீபத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்வில் கலந்து கொண்ட கமல்ஹாசன் தொ.பரமசிவன் அய்யாவின் ‘அறியப்படாத தமிழகம்’ நூலை பிரகாஷ்ராஜூக்கு பரிசாக வழங்கினார். தொ.பரமசிவன் அய்யா குறித்து அந்நிகழ்ச்சியில் பேசினார். அழகர்கோயில் நூல் சமீபத்தில் மதுரை காமராசர் பல்கலைகழக வெளியீடாக இரண்டாம் பதிப்பு வந்துள்ளது. அழகர்கோயிலும் சித்திரைத்திருவிழாவும் குறித்து தனிப்பதிவில் காண்போம். தொ.பரமசிவன் அய்யாவின் நூல்களை அறிமுகம் செய்த சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கும், அபூர்வ சகோதரர் கமல்ஹாசனுக்கும் நன்றி. எழுத்தாலும், பேச்சாலும் என்னை ஈர்த்த தொ.பரமசிவன் அய்யாவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

தொடர்புடைய பதிவுகள்

அழகர்மலையில் ஆதிகாலக் குகை ஓவியங்கள்

அழகர்மலையில் சமணத்தின் சுவடுகள்

பொய்கைகரைப்பட்டி தெப்பத்திருவிழா

அழகர்கோயில் தேரோட்டம்

மதுரைச்சித்திரைத்திருவிழா குறித்த நினைவுகளும் பழமரபுக்கதைப்பாடல்களும்

பின்னூட்டங்கள்
 1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி…

 2. maathevi சொல்கிறார்:

  அழகர் கோயில், திரு .பரமசிவமன் அவர்களுடைய நூல் பற்றி அறிந்துகொண்டோம்.

 3. ஆருத்ரா சொல்கிறார்:

  அழகர் கோவில் குறித்த பதிவு வாசித்தேன்.சிறப்பாக உள்ளது. இரண்டு த‌டவைகள் தமிழக சுற்றுலாவில் அழகர் கோவிலையும் தரிசித்திருக்கின்றேன். இன்று வாசிப்பிற்கூடாக தரிசித்திருக்கின்றேன்.

 4. velmurugan.k சொல்கிறார்:

  அழகான பதிவு ,புத்தகம் கிடைக்குமா,

 5. பிரபாகரன் சொல்கிறார்:

  திரு .பரமசிவன்அவர்களை எப்படி நேரில் சந்திப்பது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s