பறவைக்கோணம் – எஸ்.ராமகிருஷ்ணன்

Posted: மே 2, 2013 in தமிழும் கமலும், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:

தமிழ்திரைப்படப்பாடல்கள்

திரையிசைப் பாடல்கள் வெறும் பொழுதுபோக்கிற்கானவை மட்டுமில்லை. அவை, எளிய மனிதர்களின் சுக துக்கங்களை, சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலைவடிவமாகும். வேறு எந்த இலக்கிய வடிவத்தை விடவும் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் கலை வெளிப்பாடு திரையிசைப்பாடல்களே. காரணம், சினிமா பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அதைத் தனது மனதின் பாடலாக உருமாற்றிக்கொண்டு விடுகிறார்கள்.      

– எஸ்.ராமகிருஷ்ணன்

இளம்பிராயத்தில் கேட்ட பாடல்கள், பள்ளி நாட்களில் பாடப்புத்தகங்களுக்கு நடுவே வைத்துப் படித்த பாட்டுப்புத்தகங்களும், கல்லூரிக்காலங்களில் பாடவேளைகளுக்கு ஊடாக வைத்த பாட்டுப்போட்டிகளும், விழாக்காலங்களில் ஒலிபெருக்கியின் வாயிலாக இதயந்தொட்ட பாடல்களும், இன்றும் பயணங்களில் கூட வரும் பாடல்கள் என தினசரி அன்றாடப்பாடுகளுடன் பாடல்களும் கலந்துவிட்டது.


சில பாடல்கள் காதலிக்கத் தூண்டும்; சில பாடல்கள் உற்சாகங் கொள்ள வைக்கும்; சில பாடல்கள் அழ வைக்கும்; சில பாடல்கள் அமைதிப்படுத்தும்; சில பாடல்கள் நமக்காகவே எழுதப்பட்டது போலத் தோன்றும். திரைப்படங்களை விடப் திரைப்படப்பாடல்கள் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டது எனலாம்.

பறவைக்கோணம்எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உயிர்மை இதழில் திரைப்படப்பாடல்கள், அவை இடம் பெற்ற படங்கள், திரைத்துறை சார்ந்த நூல்களைக் குறித்து எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பறவைக்கோணம் என்ற தலைப்பில் நூலாக வந்துள்ளது. இந்தாண்டு நடந்த சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வாங்கி வந்த சகோதரி மதுரை வந்தபோது எனக்கு வாசிக்கத் தந்தார். பறவைக்கோணம் புத்தகத்தை ஒரே நாளில் வாசித்து விட்டேன். நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பாடல்களும் படங்களும் ஏற்படுத்திய நினைவுகளைக் குறித்த அடியேனின் சிறுபதிவு.

 பறவைக்கோணம் தொடரில் இடம்பெற்ற அழகே அழகு பாடல் குறித்த கட்டுரையை எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் வாசித்திருக்கிறேன். அழகே அழகு

ராஜபார்வையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அந்திமழை பொழிகிறதுதான். எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை அழகே அழகு பாடல் மீதான பித்தத்தோடு ராஜபார்வையைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலையும் தூண்டி விட்டது. அழகே அழகு பாடலை யூடியூப்பில் தரவிறக்கி பார்த்தேன்.

அழகே அழகு தேவதை

ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்


கமல்பாடல் எடுக்கப்பட்ட விதம், கமல்ஹாசனின் நடிப்பு, மாதவியின் அழகான கண்கள், ஜேசுதாஸின் குரல், இளையராஜாவின் இசை, கண்ணதாசனின் வரிகள் என அடுக்கிக்கொண்டே போகலாம். வண்ணநிலவன் கதை வசனத்தில் வந்த அவள் அப்படித்தான் படத்தில் உறவுகள் தொடர்கதை பாடலில் வரும் ‘வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்’ என்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பிடித்த வரிகள் இப்போது எனக்கும் நெருக்கமாகி விட்டது.

முகல்-ஏ-ஆசம் படம் குறித்து வாசித்து அந்தப்படத்தை வாங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அதிகரித்துவிட்டது. சமீபத்தில் விஸ்வரூபம் குறித்த நேர்காணலொன்றில் கமல்ஹாசன் ‘உன்னைக் காணாது நானில்லையே’ பாடலை முகல்-ஏ-ஆசம் படத்தில் வரும் ஒரு பாடலின் ராகத்தின் சாயலில் எடுத்ததாக சொன்னார்.

இந்தப் புத்தகத்தை வாசித்ததும் ராஜபார்வை, அவள் அப்படித்தான், அழியாத கோலங்கள், இரத்தக்கண்ணீர், முகல்-ஏ-ஆசம் என இந்த வருடம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் உருவாகிவிட்டது. எல்லாம் பழைய படங்கள் என்பதால் கடைகளில் கிடைக்கும் என நினைக்கிறேன்.

பறவைக்கோணம் வாசித்த பிறகு நான் அறியாத பல அரிய தகவல்களை அறிந்து கொண்டேன். ‘சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து என்னை தழுவிக் கொண்டோடுது தென்னங்காற்று’ என்ற பாடலை ஒலிபெருக்கிகளில் நிறையமுறை கேட்டிருக்கிறேன். அந்தப் பாடல் இடம் பெற்ற படம் ‘பிராப்தம்’ என்றும் அதை இயக்கியது நடிகையர் திலகம் சாவித்திரி என்றறிந்த போது ஆச்சர்யம் அதிகமாகியது. ‘குழந்தை உள்ளம்’ என்ற படத்தையும் சாவித்திரி இயக்கியிருக்கிறார்.

நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடல் ஜேசுதாஸின் முதல் பாடல் என்று தெரியும். அந்தப் படத்தை இயக்கியது வீணை எஸ்.பாலசந்தர் என்றும் அவர் தமிழில் திரில்லர் படங்களை வித்தியாசமாக எடுத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன். வீணை எஸ்.பாலசந்தர் இசைக்கலைஞர், எடிட்டர், இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமைகள் கொண்டவர்.

பனிரென்டாம் வகுப்பு படிக்கும் போது தமிழாசிரியை குண்டலகேசி கதையை சொன்னபோது இந்தக் கதையை ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடல் இடம்பெற்ற மந்திரிகுமாரி கதை மாதிரி உள்ளதென்று நான் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். இந்தப் படம் குறித்து பறவைக்கோணத்தில் வாசித்த போது பள்ளி ஞாபகம் வந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படமிது.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் சொன்னது நீதானா பாடல் ஒரே அறையில் குறைந்த செலவில் அற்புதமான பாடலை இயக்கிய ஸ்ரீதரின் ஆளுமையைச் சொல்லும் பகிர்வு. செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் பாடலை எஸ்.ரா. மலைப்பாடல் என்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணன்இரயில் பயணத்தின் போது வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்ற பாடலைக் வண்டியில் வந்தவர் பாடியதைக் கேட்ட போது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் தங்கவேலுவின் நடிப்பையும் புகழ்கிறார். அத்தோடு அடுத்த வீட்டு பெண் படத்தில் இடம் பெற்ற கண்ணாலே பேசிப்பேசி கொல்லாதே என்ற பாடலை குறித்த வரிகளை வாசித்த போது சமீபத்தில் மறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் ஞாபகம் வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடகர் அவர். பாடலின் முதல் ஹம்மிங்கை எனது தம்பி அழைப்பு ஓசையாக பதிவு செய்து வைத்திருந்தான். கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் எடுத்த படங்களையும் அதில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தையும் குறித்த வரிகளையும் வாசித்த போது அந்த நாவலைப் படித்துவிட்டு அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டாகியது. சமீபத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், வாலி போன்ற ஆளுமைகளை வைத்து அவர்களோடு பாடல்கள் உருவான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் வரத் தொடங்கியுள்ளது. ஆரோக்கியமான விசயம்.

பறவைக்கோணம் வாசித்ததும் எனக்குப் பிடித்த பாடல்கள், பிடித்த பாடல்வரிகள், அது பிடிக்கக் காரணம் போன்ற காரணங்களை எழுதித் தொகுத்து வைக்க வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகியுள்ளது. இந்நூல் வாசிக்கும் போது உங்களுக்கு பிடித்த பாடல்களும், நினைவுகளும் கட்டாயம் மேலெழும். என் நினைவுகளை மீட்டெடுத்த எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள் பல.

பறவைக்கோணம் புத்தகம் வாசியுங்கள்.

நண்பர் இளஞ்செழியன் எடுத்த பறவைத்தாகம் தணிக்க கோரும் குறும்படத்தைக் காணுங்கள்: http://www.kathirvalaipoo.blogspot.in/2013/04/blog-post_29.html

காலச்சக்கரம் – திரையிசைப்பாடல்கள்

பின்னூட்டங்கள்
 1. ரசிக்க வைக்கும் பாடல்கள்…

  பாடல்கள் என்றால் உடனே வாங்கி விட வேண்டியது தான்… நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி…

 2. ranjani135 சொல்கிறார்:

  மிகச் சிறந்ததொரு புத்தக அறிமுகத்திற்கு முதலில் உங்களுக்கு நன்றி.
  எஸ்ராவின் எழுத்துக்களை மிகவும் நேசிப்பவள் நான்.
  ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவை மீட்டுக் கொண்டுவரும்.
  எனக்கும் கூட உங்களைப்போலவே எனக்குப் பிடித்த பாடல்கள், அவைகளுடன் வரும் நினைவுகள் இவற்றை எழுதி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
  பாராட்டுக்கள்!

 3. Mrs.Mano Saminathan சொல்கிறார்:

  அருமையான விம‌ர்சனம்! உங்கள் எழுத்து, என்னையும் ‘பறவைக்கோண’த்தைப்படிக்கத் தூண்டுகிறது!

  என் வலைத்தளத்திற்கு வந்து என் ஓவிய‌ங்களை ரசித்துப் பின்னூட்டம் தந்தமைக்கு மனங்கனிந்த நன்றி!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s