ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம்

Posted: மே 23, 2013 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

சமணப்பள்ளி

யாழ்ப்பாண நூலகத்துச் சாம்பலை
முதுமக்கள் தாழியில் சேமித்து வை.
அதில் இருக்கின்றன
புறநானூறும், கலிங்கத்துப் பரணியும்

–    புவியரசு

பசுமைநடை பயணம் இம்முறை கீழவளவு என்ற குறுந்தகவல் வந்ததும் மகிழ்வானது. ஏறக்குறைய மதுரை மலைகளிலுள்ள தொன்மையான இடங்களையெல்லாம் பசுமைநடைப் பயணத்தில் பார்த்துவிட்டோம். அதிகாலை எழுந்து நானும், சகோதரியின் மகனும் கிளம்பி ஆறு மணிக்கு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் சென்றோம். எல்லோரும் வந்ததும் அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் சென்றோம்.

அ.முத்துக்கிருஷ்ணன்

அக்னிநட்சத்திர வெயில்காலமாகயிருந்தும் அன்று காலை ஆதவனோ மெல்லவே தலையெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே சென்ற யானைமலை, மாங்குளம் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி மலைகளையெல்லாம் பார்த்துக்கொண்டே சென்றேன். கீழவளவு பஞ்சபாண்டவமலை வந்ததும் மலை நோக்கி இறங்கி நடந்தோம். ஒவ்வொரு மலையையும் காண்பதற்கு அழகோடும், தனித்துவத்தோடும் இருக்கிறது. படைப்பின் கடவுள் பெருங்கலைஞன்.

பூமிப்பந்து போல நிற்கும் பாறையில் உச்சியில் மகாவீரரின் சிற்பமும், கீழே தமிழ்பிராமிக் கல்வெட்டும், அடியில் துறவிகள் தங்குவதற்கு வெட்டப்பட்ட படுகைகளும் உள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களின் தொடர்ச்சியாய் எல்லோரும் சாந்தலிங்கம் அய்யாவின் உரை கேட்க படுகைகளில் அமர்ந்தோம்.

தமிழிக்கல்வெட்டு

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கீழவளவு, சமணம், கல்வெட்டுக் குறித்த தகவல்களை கூறினார். மகாபாரதக் கதைகளின் தாக்கத்தில் இதுபோன்ற இடங்களெல்லாம் பஞ்சபாண்டவமலையென்று மக்களால் அழைக்கப்படுகிறது. இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய இடம். நூறு பேர் தங்கும் அளவு படுகை இம்மலையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களைவிட வழுவழுப்பாக நேர்த்தியாக படுகைகள் வெட்டப்பட்டுள்ளது. மழைநீர் உள்நுழையாதவாறு காடி வெட்டி வெளியே நீர் செல்லுமாறு அமைத்துள்ளனர். பம்பரம் போல இப்பாறை அழகாக அமைந்துள்ளது. இங்குள்ள தமிழிக்கல்வெட்டு தலைகீழாக உள்ளது. கண்ணாடி வைத்துப் பார்த்தால் நேராகத் தெரியும். உபச(அ)ன் தொண்டி(ல)வோன் கொடு பளி இ என்ற கல்வெட்டின் மூலம் உபவாசமிருந்த துறவிக்கு தொண்டியை சேர்ந்தவர் வெட்டிக்கொடுத்த படுகை என அறியலாம். இதில் உள்ள தொண்டி பாண்டியநாட்டைச் சேர்ந்தது. பாண்டியர்களின் மதுரைக்கும் சோழர்களின் உறையூருக்குமிடையில் யானைமலை, மாங்குளம், அரிட்டாபட்டி, கருங்காலக்குடி என்ற பெருவழிப்பாதை இருந்தது. அதேபோல் கீழவளவு திருப்பத்தூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இவ்வழியே திருமலை என்னுமிடத்தில் சமணப்பள்ளி உள்ளது. எனவே, இந்த வழியை இரண்டாவது பெருவழியாகக் கொள்ளலாம்.

சமணம்

பக்தி இயக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டதில் அச்சணந்தி என்ற சமணத்துறவிக்கு பெரும்பங்கு உண்டு. இம்மலையிலும் சமணத்தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பாறையின் உச்சியில் மகாவீரர் சிலையும், பாறையை சுற்றி வரும் வழியில் பார்சுவ நாதர், பாகுபலி, மகாவீரர் சிலைகளெல்லாம் உள்ளது. அதன் கீழே வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சிற்பங்களில் யானைமலை, அரிட்டாபட்டி போல் வண்ணம் பூசப்பட்டுட்டள்ளது. சங்கரன் ஸ்ரீவல்லபன் என்பவன் திருநந்தாவிளக்கு எரிப்பதற்கு 50 ஆடுகளையும், உணவிற்கு முந்நாழி அரிசியும் ஏற்பாடு செய்ததை 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டில் அறியலாம்.

சாந்தலிங்கம்

இல்லறத்தில் இருப்பவர்களை சிராவகர்கள் என்பார்கள். சிராவகர்களும், வணிகர்களும் துறவிகளுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். சமணர்கள் இப்பள்ளியில் கல்விதானம், மருத்துவதானம், அடைக்கலதானம், ஆகாரதானம் செய்வதை தம் கடமையாக கொண்டிருந்தனர். மிகுபொருள் விரும்பாமை என்பதை பத்தொன்பதாம் நூற்றாண்டில் காரல் மார்க்ஸ் சொல்வதற்கு முன்பே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமணர்கள் தம் கடமையாகக் கொண்டிருந்தனர்.

கீழவளவு சமணப்படுகை

சாந்தலிங்கம் அய்யா பேசிய பின் ‘ஆரிய ஆதிக்கத்தால் பிராமி என்ற பெயர் வந்ததா?, வடக்கிருந்து எழுத்துக்கள் தமிழகத்திற்கு வந்தனவா? திருவள்ளுவர் சமணரா?’ எனப் பலவிதமான சந்தேகங்களை கேட்டனர்.

சாந்தலிங்கம் அய்யா ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக எல்லோருக்கும் புரியும்படி பதிலளித்தார். கி.மு.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சமணநூல் ஒன்றில் 18 வகையான எழுத்துமுறைகள் இந்தியாவில் இருந்தன என்ற குறிப்பு உள்ளது. அதில் தமிழி, பம்மி என்ற எழுத்துவகைகளையும் அடங்கும். பம்மி என்பதே பின் பிராமியானது. வடமொழி ஆதிக்கத்தால் அசோகர் காலத்திற்கு பிறகே இங்கு எழுத்துகள் வந்தன என்று சொல்லி வந்தனர். ஆனால், அது உண்மையில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு கல்வெட்டுகள் மதுரைப்பகுதியில் கண்டறியப் பட்டுள்ளன. மேலும், தமிழில் வர்க்க எழுத்து கிடையாது. மற்ற மொழிகளில் உண்டு. சிறப்பு ‘ழ’கரம், ‘ன’ போன்ற எழுத்துகள் மற்ற மொழிகளில் கிடையாது. சமணர்கள் தமிழகம் வருவதற்கு முன்னரே சிரவணபெலகொலாவிற்கு வந்தனர். ஆனால், அங்கு கல்வெட்டுகள் கிடையாது. ஏழாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில்தான் அவர்கள் பஞ்சகாலத்தில் வந்த கதை சொல்லப்பட்டுள்ளது. எனவே, தமிழி என்று இக்கல்வெட்டுகளை அழைப்பது சரி.

கீழவளவு சமணப்பள்ளி

திருவள்ளுவரை வந்தவாசி பொன்னூர் மலை பக்கம் குந்தகுந்தர் என்று அழைக்கிறார்கள். அவருடைய பாதவழிபாடு அங்கு காணப்படுகிறது. சமணம்தான் அக்காலத்தில் கொல்லாமையையும், புலால் உண்ணாமையையும் வலியுறுத்தியது. திருவள்ளுவரும் இவற்றை திருக்குறளில் சொல்வதால் அவர் சமணராகயிறுக்க வாய்ப்புள்ளது. மேலும், திருக்குறளை மதுரை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார் என்பர். திருவள்ளுவர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். கல்வெட்டுப்பூர்வமாக திருவள்ளுவர் குறித்த செய்தி எல்லீஸ்துரை 1818ல் இராயப்பேட்டையில் 23 கிணறு தோண்டிய இடத்தில் காணப்படுகிறது.  அந்தக் கல்வெட்டு இப்போது மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்தக்கல்வெட்டில் மைலயம்பதியார் என்ற வரி உள்ளது. மேலும், இராயப்பேட்டையில் திருவள்ளுவருக்கு சிலையும் உள்ளது. திருவள்ளுவர், தொல்காப்பியர் எல்லாம் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று உறுதியாகச் சொல்வது கடினம். இவ்வாறு சாந்தலிங்கம் அய்யா கூறினார்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் சமீபத்தில் மகாவீரர் ஜெயந்திக்கு சிறப்பு விருந்தினராக சாந்தலிங்கம் அய்யாவுடன் வந்தவாசி பகுதிக்கு சென்றிருந்தை குறிப்பிட்டு பேசினார்.  வந்தவாசியில் 25000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சமணர்கள் வசிக்கிறார்கள். அங்குள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மதுரை பகுதிக்கு வந்து இங்குள்ள சமணத்தலங்களையெல்லாம் பார்த்து செல்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன் சமணம் செழித்திருந்த மதுரையில் அவர்களுக்கு இன்று கைபிடி மண்கூட கிடையாது. சாந்தலிங்கம் அய்யா சொன்னது போல அங்குள்ள ஆண்கள், பெண்கள் எல்லோரும் சங்க இலக்கியங்களில் தேர்ச்சியோடு இருக்கின்றனர். இன்றும் முந்தைய காலத்தைப் போல விளக்கு வைப்பதற்கு முன்பே சாப்பிட்டு விடுகின்றனர். வந்தவாசி பொன்னூர் மலைப்பகுதியில் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். அப்பகுதியில் பெரிய சமணக் கோயில்கள் உள்ளது. சமீபத்தில் மேலக்குயில்குடி அருகில் நூலகம், தங்குமிடத்துடன் ஒரு ஆய்வு மையத்தை தொடங்கியிருக்கிறார்கள். தொடக்கவிழாவிற்கு தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம், வேதாச்சலம், வெங்கட்ராமன் மற்றும் எழுத்தாளர் அருணன், வழக்கறிஞர் லஜபதிராய் போன்றவர்களை அழைத்துள்ளனர். பசுமைநடை குழுவினரையும் அங்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பசுமைநடைக்குழுவினரின் பணிகளைப் பாராட்டினர்.

கீழவளவு

அங்கிருந்து மலையைச் சுற்றியுள்ள சமணத்தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்த்தோம். நெடுஞ்சாலை வலைப்பூ நண்பர் வேல்முருகனை சந்தித்தேன். அவருடன் உரையாடிக் கொண்டே மலையில் ஏறினோம். மலையில் மறுபுறம் சென்று பார்த்தால் கற்களை அறுத்து கூறுபோட்டு வைத்திருப்பதை பார்த்து திகைத்தோம். இயற்கை மீதான நம்முடைய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். சமீபகாலங்களில் வாசப்படியில் பட்டியக்கல்லை பார்த்தால்கூட எந்த மலை இங்கு கிடக்கிறதோ என்ற குற்றவுணர்வு வருகிறது. ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி பேனா மனோகரன் அவர்கள் இயற்கை மீதான இன்றைய கால அத்துமீறல்களை கவிதையாக வாசித்தார். மனது கனத்துப் போனது. எல்லோரும் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம்.

பசுமைநடைகுழுவினர்

மலையிலிருந்து இறங்கி மலைக்கு அருகிலிருந்த குன்றின் கீழிருந்த படுகைகளைப் போய் பார்த்தோம். எல்லோரும் அங்கிருந்த மரத்தடியில் சாப்பிட்டோம். ஐஸ்வண்டிக்காரர் ஒருத்தர் வர எல்லோரும் அவரிடம் போய் ஐஸ்வாங்கி தின்று மகிழ்ந்தனர். சூரியன் எட்டிப்பார்க்க எல்லோரும் கிளம்பினோம். மறக்க முடியாத பயணமாக அமைந்தது.

விருதுநகர், கும்பகோணம், சென்னையிலிருந்தெல்லாம் பசுமைநடைக்கு வரும் நண்பர்களைப் பார்க்கும்போது மகிழ்வாகயிருக்கிறது. மாட்டுத்தாவணியிலிருந்து கீழவளவு செல்வதற்கு பேருந்து வசதி செய்து தந்த குகன் அவர்களுக்கு நன்றிகள் பல. ஆயிரம் ஆண்டுகளாய் நீடிக்கும் தவம் என்ற வரி காவல்கோட்டம் நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. சு.வெங்கடேசனுக்கு நன்றி. ஒவ்வொரு நடையையும் மறக்க முடியாத பயணமாக்கிய எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவிற்கும் நன்றிகள் பல.

கீழவளவு பசுமைநடை குறித்த நண்பர்களின் பதிவுகள்:

கதிர் – இளஞ்செழியன்,

நெடுஞ்சாலை – வேல்முருகன்

கீழவளவு பசுமைநடை குறித்து தி ஹிந்து நாளிதழில் வந்துள்ள செய்தி: http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/vandalised-hills-and-vanished-history/article4717943.ece

பின்னூட்டங்கள்
 1. நாங்களும் பயணித்தோம்… நன்றிகள் பல…

 2. வணக்கம்

  அருமையான வரலாற்றுப்பதிவு படித்த போதுதான் அறிந்தேன் மிக முக்கியமான வரலாறு என்று இன்னும் தொடர்ந்து படைப்புக்கள் மலர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 3. மே. இளஞ்செழியன் சொல்கிறார்:

  யாழ்ப்பாண நூலகத்துச் சாம்பலை
  முதுமக்கள் தாழியில் சேமித்து வை.
  அதில் இருக்கின்றன
  புறநானூறும், கலிங்கத்துப் பரணியும் – புவியரசு

  ஒவ்வொருவரின் பார்வையிலும், பதிவுகளிலும் பசுமை நடை மலைகளின் அழகும், புகழும் மங்காது பட்டொளி வீசட்டும்.

 4. பா.உதயக்குமார்... சொல்கிறார்:

  அருமையான பதிவு… முன்பு கல்வெட்டுக்களில் பதிவு செய்த வரலாறை இப்போது நாம் இணையத்தில் பதிவு செய்கிறோம்… முந்தைய பதிவுகளை நாம் நூறு பேர் தேடிச்சென்று பார்த்தோம்… இணையத்தில் செய்யும் இத்தகைய பதிவுகள் எண்ணற்றோர் இருப்பிடங்களுக்கே சென்று சேர்ந்து அதன் புகழ் பரப்பும்… தொடரட்டும் பணி…

 5. வேல்முருகன்.கு சொல்கிறார்:

  அழகான கவிதை போன்ற எழுத்துநடை, அதற்கு ஏற்றார் போன்று படங்கள் ஓவியங்களாய் அழகுசேர்க்கின்றன.

 6. kalpana சொல்கிறார்:

  super vazhthukal i want to joinpasumainadai payana kulu wats the procedure

 7. Muthukrishnan சொல்கிறார்:

  அருமையான பதிவு சுந்தர்… நண்பர்கள் இந்த பதிவையும் நேரம் இருப்பின் வாசிக்கவும்

  http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/vandalised-hills-and-vanished-history/article4717943.ece

 8. Muthukrishnan சொல்கிறார்:

  பசுமை நடையில் முதல் முறையாக தனது நண்பர்களுடன் வந்திருந்த Muruga Raj அவர்களின் அனுபவ பகிர்வு…

  http://sanjigai.wordpress.com/2013/05/16/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/

 9. Rajanand சொல்கிறார்:

  tamilpdffree.wordpress.com is now as tamilpdffree.com follow as for latest updates.

 10. தொப்புளான் சொல்கிறார்:

  கீழவளவு பகுதியிலேயே, சிவகங்கை மாவட்டம் திருமலையில் குகை ஓவியங்களும், தமிழி எழுத்துக்களும், மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலும் உள்ளனவாமே? தினத்தந்தி ‘ஆன்மிகம்’ இணைப்பில் போட்டிருந்தது. மதுரையிலிருந்து மதகுபட்டி செல்லும் பேருந்தில் சென்று அளகமாநகரி நிறுத்தத்தில் இறங்கவேண்டுமாம். பசுமைநடை அங்கு எப்போது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s