பாண்டியனின் சமணப்பள்ளியில்

Posted: ஜூன் 22, 2013 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

???????????????????????????????

ஒரு எழுத்தாளனுடைய வேர்கள் அவன் வாழும் மண்ணில் இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் அவன் எழுதித் தீர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக தான் வசிக்கும் கிராமத்தின் எல்லையில் இருக்கும் மலையை அவன் பார்த்தபடியே இருக்கிறான். அம்மலை அவனுக்குள் எப்போதும் வளர்ந்தபடி உள்ளது. தான் பார்த்துணர்ந்த மலையின் சிறு துகள்களை காற்றில் அலைந்தபடி இருக்கும் அதன் வாசனைகளை அந்த எழுத்தாளன் எழுதினாலே போதுமானது.                 

– கோணங்கி

(ஆகஸ்ட் 2011ல் சென்ற பசுமை நடை குறித்த நினைவுப்பதிவு)

கொங்கர்புளியங்குளம் பஞ்சபாண்டவமலை பசுமைநடையின் போது அடுத்த நடை மாங்குளம் மீனாட்சிபுரம் என்றதும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால், அங்குள்ள படுகைகளை செய்வித்தவன் மதுரைக்காஞ்சி, புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதுதான். பசுமைநடை செல்லும் ஞாயிறுக்கு நாலு நாட்களுக்கு முன்பே உடல்நிலை சரியில்லை. எதாவது தகுடுதத்தம் செய்தால்தான் ஞாயிறு செல்ல முடியுமென்றெண்ணி சனிக்கிழமை விடுப்பெடுத்தேன்.

21.08.2011 ஞாயிறு காலை வெள்ளென எழுந்து நண்பரை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். எல்லோரும் மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் முன் கூடினோம். அப்போது டீக்கடைக்காரர் இன்று ஏதும் போட்டித்தேர்வு உள்ளதா எனக் கேட்டார். எனக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியவில்லை. ஏன்னா எனக்கும் போட்டித்தேர்வுகளுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. எல்லோரும் வந்ததும் கிளம்பினோம். சிட்டம்பட்டி பிரிவிலிருந்து மீனாட்சிபுரம் சென்றோம். வழிநெடுக பசுமையாயிருந்தது. வயல்களிலிருந்து அடிக்கிற காற்று மேனியை சிலிர்க்க வைத்தது. அந்தப்பகுதி மக்கள் மலையை பார்க்க இவ்வளவு பேர் செல்வதைக் கேட்டு ஆச்சரியப்பட்டனர்.

???????????????????????????????

மீனாட்சிபுரம் மிக அழகான கிராமம். இங்குள்ள குடிசை வீடுகள், கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் மற்றும் காரை வீடுகள் என பெரும்பாலான வீடுகளில் திண்ணை இருந்தது. திண்ணையில் சாய்ந்து கொண்டும், படுத்துக்கொண்டும் வாசிப்பதும், எல்லோருமாய் அரட்டையடிப்பதும் அலாதியான சுகம். மீனாட்சிபுரம் பெரிய கண்மாயை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வழியில் ஒரு அண்ணன் ‘மலையப் பாக்கப் போறீங்களா? மேலயிருந்து பார்த்தா அழகர்கோயில் தெரியும்’ பாருங்கன்னு சொன்னார். வண்டியை நிறுத்திவிட்டு மலையை நோக்கி நடந்தோம். மழை மீது ஏறும் போது தொலைவில் தெரிந்த ஒரு மலையை உடன் வந்த நண்பரிடம் காட்டினேன். அந்த மலையைப் பார்க்க ஒரு பொம்மை கணினிப்பெட்டி முன் அமர்ந்திருப்பதை போலிருக்கும். அரிட்டாபட்டி போகும் போது அதை பார்த்திருக்கிறோம்.

மாங்குளம்-மீனாட்சிபுரம்

???????????????????????????????

வழியில் நரந்தம்புல் நிறைய வளர்ந்திருந்தது. வழியில் ஓரிடத்தில் ஒரு கட்டிடத்தின் அடித்தளம் மட்டும் இருந்ததை பார்த்தோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா அங்கு முன்பு ஆய்வு செய்ததை பற்றிக் கூறினார். அக்காலத்திலேயே செங்கல்கள் வைத்துக் கட்டியுள்ளனர்.

சாந்தலிங்கம்

அடுத்திருந்த குகைத்தளத்தில் எல்லோரும் கூடினோம். குகையின் முகப்பில் தமிழி(தமிழ்பிராமி) எழுத்துக்களைப் பார்த்தோம். இம்முறை நடைக்கு நிறையப்பேர் வந்திருந்தனர். நிறைய நண்பர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். குகைத்தளத்தில் அமர்ந்தோம். சாந்தலிங்கம் அய்யா சமணம் குறித்தும், கல்வெட்டுக்களில் இருந்ததை பற்றியும் பேசினார்.

மாங்குளம் ஓவாமலை 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான இடம். ஐராவதம் மகாதேவன்  அவர்கள் மதுரை வரும் போது மாங்குளத்திற்கு வருவார். சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி இம்மலையில் உள்ள கல்வெட்டில் குறிப்புள்ளது. இந்த மலையில் ஆறு தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் உள்ளன. மதுரையில் உள்ள தமிழிக் கல்வெட்டுக்களில் மாங்குளம் மிகவும் பழமையானது.

இந்தியாவில் பிராமி எழுத்து போல பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் கரோஷ்டி என்ற ஒரு வகை எழுத்துமுறை இருந்தது. கழுதைக் காது போன்றிருப்பதால் இதற்கு இப்பெயர். இன்று அதை வாசிப்பதற்கு கூட அதிகம் ஆளில்லாமல் அழிந்துவிட்டது. வடக்கே அசோகர்கால பிராமிக் கல்வெட்டுக்களுக்கு தமிழிக் கல்வெட்டுகள் மூத்தது.

மாங்குளம் கல்வெட்டில் தம்மம்(தர்மம்), அசுதன்(மகன்), சாலகன்(சகலன்)  போன்ற பிராகிருதச் சொற்கள் கலந்து காணப்படுகிறது. மேலும், இங்குள்ள கல்வெட்டுக்களில் கடல் அன் என்று பிரித்தே எழுதப்பட்டுள்ளது. உயிர் மெய் சேர்த்து கடலன் என எழுதும் வழக்கத்திற்கு முந்தைய கால கல்வெட்டுக்கள் இவை.

மாங்குளத்தில் உள்ள கல்வெட்டில் நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி, கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு படுகை வெட்டிக்கொடுத்தை குறிப்பிடுகிறது. இன்னொரு கல்வெட்டில் காவிதி என்ற வரி உள்ளது. இது தற்போது வழங்கப்படும் கலைமாமணி போன்ற பட்டமாக இருக்கலாம். வெள்ளறை நிகமம் என்ற வரி கல்வெட்டில் உள்ளது. இப்போதுள்ள வெள்ளரிப்பட்டி ஊரிலிருந்த வணிகக்குழுவாகயிருக்கும். நிகமம் என்பது வணிகக்குழுக்களைக் குறிக்கும். தற்போது கூட பாரத் சஞ்சார் நிகாம் என்பதை காணலாம்.

மாங்குளத்திற்கு முந்தைய தமிழிக் கல்வெட்டாய் 2004ல் புலிமான்கோம்பை கல்வெட்டைச் சொல்லலாம். இதில் ஆகோள் பூசல் என மாடுபிடி சண்டையைப் பற்றிய குறிப்பு உள்ளது. நிரைகவர்தல், நிரைமீட்டல் என்ற தொல்காப்பியத்தில் வரும் திணைக் கோட்பாடு பற்றி அறிய உதவும் தமிழின் மிகப் பழமையான கல்வெட்டு.

2007ல் இம்மலையில் அகழாய்வு செய்த போது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு செப்புக்காசு கிடைத்தது. அதில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்னொரு இடத்தில் செங்கல் கட்டிட அடித்தளம் காணப்பட்டது. அதை வழியில் வரும்போது பார்த்திருப்பீர்கள். இரண்டு அறைகள் கொண்ட கட்டிடம். 33 செ.மீ நீளம் x 13 செ.மீ அகலம் x 5 செ.மீ உயரம் கொண்ட செங்கல் கற்கள். மண் கலவையை வைத்து பூசியிருக்கிறார்கள். கூரை ஓடு பயன்படுத்தியிருக்கிறார்கள். மரச்சட்டங்களை இணைப்பதற்கு ஆணியை பயன்படுத்தியிருக்கிறார்கள். வழிபாட்டு கூடமாக இந்த அறைகள் இருந்திருக்கலாம்.

மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற ஊர் சமீப காலங்களில் உருவாகிய ஊர். மாங்குளம் வழி வரும்போது பாதியோடு நின்றுபோன குடைவரை ஒன்றைக் காணலாம். இதில் தூண்களோடு முன் வராண்டா மட்டும் வெட்டப்பட்டுள்ளது. அதற்குமேல் கட்டாமல் பாதியோடு விடப்பட்டுள்ளது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மாங்குளம் ஓவாமலை தொல்லியல் ஆய்வாளர்களுக்கு மிக முக்கியமான இடமாகும்.

அ.முத்துக்கிருஷ்ணன்

அ.முத்துக்கிருஷ்ணன் பேசும்போது இந்த இடங்களை குறித்தெல்லாம் நாம் ஒரு இடத்தில் சேர்ந்து ஏசிஹாலில் புரொஜக்டரில் பார்ப்பது வேறு. இது போன்ற இடங்களுக்கே நேரில் வந்து பார்ப்பது வேறு. மேலும், இது போல மதுரையில் உள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு மாதந்தோறும் பயணிப்போமெனக் கூறினார்.

அடுத்த கல்வெட்டிருந்த இடங்களுக்கு சென்றோம். இரண்டு பெரும் பாறைகளுக்கு நடுவில் சென்ற போது அவ்விடத்திலிருந்த குளுமை, சூழல் எல்லாம் எழுத்தில் எப்படிச் சேர்ப்பது? அங்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் இருந்தன. நிறைய புதிய நண்பர்கள் அறிமுகமானர்கள். அங்கிருந்த கல்வெட்டுக்களையும், படுகைகளையும் பார்த்தோம். அங்கிருந்த ஒரு பாறை வழுவழுப்பாக இருந்தது. எப்படியென்றால் பாலமேடு பால்பன் மீது ஜீராவ ஊத்தி வச்ச மாதிரியிருந்தது.

கண்ணன்

இயற்கையாக குகைபோலிருந்த இடத்தில் தமிழிக் கல்வெட்டுகளைப் பார்த்தோம். வரலாற்று பேராசிரியர் கண்ணன் அவர்கள் தொன்மையான இடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

தமிழ்பிராமிக்கல்வெட்டுகளையும், தொன்மையான மலைகளையும் காப்பதன் மூலம் சங்ககாலத்தில் மக்கள் வாழ்ந்த முறைகளையும், கல்வி நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது. வடநாட்டிலுள்ள கல்வெட்டுகள் எல்லாம் அரசர்கள் மட்டுமே பயன்படுத்தியிருப்பதை காட்டுகிறது. இங்கு அரசர்கள், வணிகர்கள், மக்கள் இந்த எழுத்துகளை பயன்படுத்தியிருப்பதை குகைத்தளங்கள், பானைஓடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இது போன்ற தொன்மையான கல்வெட்டுகள் உதவியது. இவைகளை பொக்கிஷமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு சேர்ப்பது நமது கடமை.

கல்வெட்டு

மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளைப் பார்த்துவிட்டு வெயில் ஏறும் முன் மாங்குளம் மலையிலிருந்து இறங்கி வந்து அங்குள்ள சமுதாயக் கூடத்தில் குழுவாக உண்டோம். அடுத்த நடையில் புத்தகத்திருவிழாவிற்கு வரும் எழுத்தாளர்களும் நம்மோடு கலந்து கொள்வார்கள் என்றது மகிழ்வைத் தந்தது. இந்த நடையில் சென்னைப் பகுதியிலிருந்து வந்த தமிழ்ச்சமணர்கள் சிலரும், வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த சிலரும் கலந்து கொண்டது பெருமகிழ்வை தந்தது.

படங்கள் அ.முத்துக்கிருஷ்ணன் தளத்திலிருந்தும், பசுமைநடை நண்பர் கந்தவேலிடம் வாங்கியும், பசுமைநடை முகநூல் பக்கத்தில் சுந்தர்ராஜன் அவர்கள் பகிர்ந்ததிலிருந்தும் எடுத்துள்ளேன். அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. அருமையான படங்களுடன் வரலாற்று தொன்மையான இடங்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி… அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

 2. மதுரக்காரன் சொல்கிறார்:

  சும்மா இருந்த என்னை சொறிஞ்சு விட்ட மாதிரி ஆகிடுச்சி. பால் பன் பத்தி ஏன் தல சொன்னீங்க.. இப்போ திங்கணும் போலவே இருக்கு. 😐

  அன்புடன்,
  மதுரக்காரன்.

 3. cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  வழக்கம் போல் அருமையான பதிவு – பசுமை நடை மாதந்தோறும் செல்வது மட்டுமல்ல – சென்று வந்த வுடன் அப்பயணத்தினைப் பற்றி இயல்பான நடையில் – ஒரு சிறு செய்தி கூட விடாமல் – அத்தனை நிகழ்வுகளையும் – அருமையாகப் பதிவாக மாற்றுவது சாலச் சிறந்த பணியாகும். ஆவணப்படுத்துவது பிற்காலத்தில் அனைவருக்கும் பயன்படும். புகைப்படக் கலையிலும், தமிழ்ப் பதிவு எழுதும் கலையிலும் தேர்ந்து – அப்பணியினை ஒரு கடமையாகச் செய்யும் சித்திர வீதிக்கார, உன்னுடைய செயல் பாராட்டுக்குரியது. நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா.

 4. maathevi சொல்கிறார்:

  வரலாற்று முக்கியத்துவமான இடங்களை பகிர்ந்துள்ளீர்கள். கண்டுகொண்டோம்.

 5. ranjani135 சொல்கிறார்:

  உங்கள் பசுமை நடை படித்து நிறைய இடங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்று முக்கியத்துவங்களும் தெரிந்து கொண்டேன். ஒரு முறையாவது உங்களுடன் வந்து இந்த பசுமை நடையில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

 6. NARAYANASAMI SANKAR சொல்கிறார்:

  Hello friend, Thank you somuch.Is that possible to share with me about your next trip plan and the details

 7. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி. வாழ்த்துகள்.

 8. […] தொடர்புடைய பதிவு: பாண்டியனின் சமணப்பள்ளியில் […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s