தொல்குடிகள் வாழ்ந்த கருங்காலக்குடி

Posted: ஜூன் 30, 2013 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்
குறிச்சொற்கள்:, ,

முத்துக்கிருஷ்ணன்

குகைகளுக்குள் கொடையாளர்கள் செதுக்கச் செய்த கல் படுக்கைகளில் துறவியர் கண்ணயர்கிறார்கள். பசிக்கும்போது அடிவாரக் குடியிருப்புகளில் கையேந்தி உணவிரந்து நின்றவாறு புசிக்கிறார்கள். பள்ளிகளையொட்டி நீர் நிறைந்திருக்கும் சுனைகளில் கையால் மொண்டு பருகுகிறார்கள். கள்ளை வெறுக்கிறார்கள். புலாலை மறுக்கிறார்கள். லோச்சன நோன்பிருந்து கண்ணீர் சிந்த மயிர்க்கால் பிடுங்கித் தலையை மழித்துக் கொள்கிறார்கள். சூத்திரச் சாதியினர்க்குச் கல்வி உணவு மருந்து என அவர்கள் அளிக்கும் கொடைக்கு அளவில்லை. எங்கிருந்தெல்லாமோ அவர்களைத் தேடி வந்து சித்தாந்தம் கேட்பவர்கள் ஏராளம். இருட்டில் இருந்தவர்களுக்கு வெளிச்சம் கிடைத்த பேரானந்தம்.             

– பூமணி (அஞ்ஞாடி)

மதுரை உலகின் தொல் நகரம். மதுரையின் தொன்மையை நிறுவும் சான்றுகளாக பாறை ஓவியங்களும், தமிழிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும், வாய்மொழி வழக்காறுகளும், பிறநாட்டறிஞர் நூல்களும் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் வாழ்ந்த தொல்குடிகள் தாங்கள் கண்டவற்றை பாறைகளில் ஓவியமாக தீட்டி உள்ளனர். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய பார்வையை பதிவு செய்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருக்கிறான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய  பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி மலையைக் காண பசுமைநடைக் குழுவோடு 23.06.2013 ஞாயிறன்று சென்ற அனுபவப் பதிவு.

மந்தை

அதிகாலை எழுந்து மாட்டுத்தாவணி பேருந்துநிலைய வாசலுக்கெதிரில் கூடினோம். அங்கிருந்து ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்தில் கருங்காலக்குடி சென்றோம். மேலூர் தாண்டி கொட்டாம்பட்டி செல்லும் வழியில் கருங்காலக்குடி இருக்கிறது. கருங்காலக்குடி மந்தையில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து மெல்ல நடந்தோம்.

காரைவீடு

கருங்காலக்குடி மிக அழகான ஊர். இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். மக்களிடம் பாதை கேட்டு மலையை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் மனதை ஈர்த்தது.

அன்பின் பாதை

வலைப்பதிவர் தமிழ்ச்செல்வன் அவர்களோடு சமீபத்திய வாசிப்பு, பதிவு குறித்து உரையாடிக்கொண்டே நடந்தேன். வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். பாராட்டிற்குரிய விசயம்.

ஊருணி

மழை வருவது போல மேகம் சூழ்ந்திருந்ததால் சூழல் மிகவும் ரம்மியமாகயிருந்தது. தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்கு சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஆங்காங்கே அமர்ந்தோம்.

சமணமுனி

சாந்தலிங்கம் அய்யா கருங்காலக்குடி குறித்த தகவல்களை கூறினார். கருங்காலக்குடி பாண்டிய நாட்டிற்கும் சோழநாட்டிற்குமான பெருவழிப்பாதையில் அமைந்துள்ளது. ஏழைய்ஊர் அரிதின் பளி என்ற தமிழிக் கல்வெட்டு இங்குள்ள குகை முகப்பில் காணப்படுகிறது. ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்பு ழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.

தமிழிக்கல்வெட்டு

வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் குன்றின் மேலே உள்ள குகையில் காணப்படுகிறது. கிடாரிப்பட்டி, சிவகங்கை திருமலை போன்ற இடங்களிலும் இதுபோன்ற பாறை ஓவியங்கள் காணப்படும் தொல்குடிகள் வாழ்ந்த பகுதிகளில் போய் சமணத்துறவிகள் தங்கியுள்ளனர்.

அச்சணந்தி செய்வித்த திருமேனி

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. முக்குடை இல்லாததால் இது சமணத்துறவி ஒருவரின் சிலையாகும். சிலையின் கீழ் ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். நாகர்கோயில் சிதறால் மலையிலிருந்து வேலூர் வள்ளிமலை வரையிலான பல மலைகளில் அச்சணந்தி செய்த சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் காணலாம். கழுகுமலையில் இவர் செதுக்கிய சிற்பமெதுவுமில்லை.

மலையின் மீதுள்ள படுக்கையொன்றில் நாலு வரிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் பள்ளித்தரையன் என்ற வரி காணப்படுகிறது. அரையன் என்பவர் பாண்டியர்களின் கீழிருந்த சிற்றசர்களில் ஒருவராயிருக்கலாம்.

வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அச்சமயம் மக்கள் வழக்கத்திலிருந்த தமிழ் மிகவும் எளிமையாய் இருந்ததால் வட்டெழுத்து மறைந்து போனது. வட்டெழுத்து மேற்கே நாகர்கோயில், கேரளா பகுதிகளில்  பதினாறாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. இன்றும் சுசீந்தரம் கோயிலிலும், கேரளப்பகுதியிலுள்ள பாறைகளிலும் காணப்படுகிறது. வட்டெழுத்து கேரளத்தில் கிரந்தத்தோடு இணைந்து மலையாளமாகியது.

பாண்டியர்களுக்குப் பிறகு நாயக்கர் ஆட்சி காலத்தில் லிங்கம நாயக்கர் நத்தம் பகுதியை ஆண்டார். மகாபாரதக் கண்ணனின் நினைவாக இப்பகுதி அப்போது துவராபதிவளநாடு என்றழைக்கப்பட்டது. நத்தம் தாசில்தார் அலுவலகத்திற்கு எதிராக உள்ள மண்கோட்டை, சத்திரம் எல்லாம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அக்காலத்தில் மக்கள் குடிநீர் வசதிக்கு கிணறு, பொது செக்கு ஆகியவைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர். அதன்பின் இராவுத்தர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட போது கொடைகளை செய்துள்ளார்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள திருச்சுனை என்னும் ஊரில் பிற்கால பாண்டியர்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. சூழும் அரசர் கண்டம் என்ற வரலாற்று பெயர் எப்படி திருச்சுனை என்றானது எனத் தெரியவில்லை.

பசுமைநடை

கருங்காலக்குடி குறித்த தகவல்கள் அடங்கிய கைப்பிரதி எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற படிகள் செதுக்கியுள்ளனர். குகை போன்றமைந்த பாறையின் அடியில் ஓவியங்களை வரைந்துள்ளனர்.

பாறைஓவியம்

பாறை ஓவியங்கள் குறித்து ஓவியர் பாபு பேசினார். இங்குள்ள பாறைகளில் காணப்படும் ஓவியங்கள் அழகர்கோயில் கிடாரிப்பட்டி ஓவியங்களுக்கு முந்தியவையாக இருக்கலாம். அங்கு ஆடு,மாடுகள் எல்லாம் பழக்கி மேய்ப்புச் சமூகமாக மாறியது போல படங்கள் இருக்கும். இங்கு எல்லாம் தனித்தனியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் உள்ள altamira, chauvet குகை ஓவியங்களை மிகப் பழமையானதாகச் சொல்லி அவற்றை யாரும் பார்க்க முடியாதபடி பாதுகாத்து வருகிறார்கள். நாம் இப்போதுதான் இதுபோன்ற துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம்.

அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் ஓவியங்கள் குறித்தும் பசுமைநடைப் பயணம் குறித்தும் பேசினார். இதுபோன்ற மலைகள் நம் வீட்டு சமையலறை மேடையாகவோ, தளமாகவோ மாறாமலிருக்க நாம் இன்னும் தொடர்ந்து பயணிக்க வேண்டும். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் தமிழை செம்மொழியாக நிரூபிக்க உதவியதுபோல இதுபோன்ற பாறை ஓவியங்கள் நம் நீண்ட வரலாற்றை அறிய உதவுகிறது. ஓவியங்கள் குறித்து அறிந்து கொள்ள தனிவகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யலாம். அடுத்த நடை ஜூலை மாதம் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரிட்டாபட்டி என்றார். சுற்றிலும் மலைகள், மழைமேகம் சூழ்ந்த வானம், சிலுசிலுவென காத்து அடிக்க அங்கிருந்து வர மனசேயில்லை. மெல்ல இறங்கினோம்.

மலைகள்

எல்லோரும் ஊருணிக்கருகிலிருந்த மலைக்குன்றைச் சுற்றி உணவருந்தினோம். தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம் அய்யாவும், இராஜேந்திரன் அவர்களும் எழுதிய கல்வெட்டுக்கலை என்னும் நூல் வாங்கினேன். கருங்காலக்குடி மந்தைக்கருகிலுள்ள பழைய கோயிலொன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். கொஞ்சப்பேர் தேனீர் கடையிலும், மந்தையில் விற்ற மாம்பழங்களையும் வாங்கி அந்த ஊரோடு ஐக்கியமாயினர். வருகையில் பேருந்தில் நண்பர்களோடு கதைத்துக்கொண்டே வந்தேன். ஒவ்வொரு பசுமைநடையும் நிறைய புதிய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. கருங்காலக்குடி பசுமைநடை குறித்து நண்பர்கள் இளஞ்செழியன்(கதிர்), வேல்முருகன்(நெடுஞ்சாலை) பதிவுகளையும் வாசியுங்கள்.

படங்களை எடுத்துத் தந்த சகோதரன் செல்லப்பாவிற்கு நன்றிகள் பல.

பசுமைநடையில் முகநூல் பக்கத்தில் இணைய http://www.facebook.com/groups/251761754837926
மின்னஞ்சல் : greenwalkmdu@gmail.com

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  தொல்குடிகள் வாழ்ந்த கருங்காலக்குடி = திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
  நன்றி நண்பரே.

 2. பல தகவல்கள் அடங்கிய சிறப்பான பகிர்வு… நன்றி…

 3. நிரஞ்சன் தம்பி சொல்கிறார்:

  அற்புதமான பதிவு, தமிழின் புராதன சின்னங்கள் அழிவு நிலையில் இருப்பது வேதனையானது. இருப்பினும் இவ் விடங்களுக்கு பயணித்து தகவல்களைத் தொகுத்து, விழிப்புணர்வு ஊட்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

 4. இளஞ்செழியன் சொல்கிறார்:

  பசுமை நடையை பற்றிய கட்டுரைகளை படிப்பதில் எப்பொழுதுமே தனி சுவராசியம். புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

 5. வேல்முருகன்.கு சொல்கிறார்:

  இன்றும் பேசா சித்திரங்களாய் சமண சிற்பங்கள்
  ஆனால்
  என்றும் பேசும் சித்திரங்களாய் சித்திரவீதிக்காரன் பதிவு.
  ஒவ்வொரு பதிவும் படங்களும் கவிதை வாசிப்பது போல் ஆனந்தம் தருகிறது.

 6. வஞ்சி.க.தங்கமணி சொல்கிறார்:

  அண்ணே கொஞ்சம்(இல்லை ரொம்பவே) தாமதமான பதிவு மன்னிக்கவும்.facebook வாயிலாக தற்போது இதை படிக்கவும் பகிரவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி.உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை.இதை எழுதிய உங்களுக்கு இருக்கும் மன மகிழ்வைவிட எனக்கு ரொம்ப ரொம்ப அதிகம்.காரணம் இந்த மலைக்கு அருகில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நான் படித்தேன்.அப்போது பள்ளியை கட்டடிக்கும் நேரத்திலெல்லாம் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஏன் பள்ளியில் பெரும்பாலான மாணவர்களுக்கும் இந்த மலைதான் உல்லாசபுரி,சுற்றுலாதலம்,விளையாட்டு மைதானம் எல்லாம்.இந்த மலையில் எங்கள் காலடி படாத இடமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.இங்கேயே சமைத்து சாப்பிட்டிருக்கிறோம்,தென்றலை தாலாட்ட சொல்லி பாடபுத்தகங்களை தலைக்கு வைத்து காலாட்டியபடியே தூங்கியிருக்கிறோம்,குகைகளுக்குள் ஒளிந்து விளையாடியிருக்கிறோம்,பரீட்சை நேரங்களில் விழுந்து விழுந்து படித்திருக்கிறோம்,தாவரவியல் பாடத்திற்காக ஒரு சில தாவரங்களை இந்த மலையில் தேடிப்பிடித்து பயனடைந்திருக்கிறோம்.ஆனால் அப்போதெல்லாம் விளையாட்டுத்தனமாக தெரிந்த இந்த மலையை மாபெரும் வரலாறாக,தமிழ்க்குடியின் தடயமாக,சரித்திரத்தின் சான்றாக என் கண்முன்னே கொண்டுவந்ததற்கு என் இதயம் கனிந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
  இதில் இன்னொரு தகவல் (உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை),அந்த அச்சனந்தி சிலைக்கு அருகில் இருட்டான அறை போன்ற குகை இருக்கும்.அங்கேதான் நீங்கள் கூறிய படுக்கை,கிண்ணம் போன்ற குழி,கால்தடம் எல்லாம் இருக்கும்.அதன் அருகே ஒரு பெரிய பாறை போன்ற கூரான கல் ஒன்று உண்டு,அதில் ஒரு சிறிய கல்லை கையில் வைத்து தட்டினால் ஏதோ இசை கருவியிலிருந்து வரும் சத்தம் போல் இருவேறு விதமான சத்தம் வரும்.(அதை இசைத்து மகிழ்ந்திருக்க்றோம்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s