pallivasaal

இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்

இல்லையென்று சொல்லுவதில்லை!

பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் – அவன்

பொக்கிஷத்தை மூடுவதில்லை!

குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராக விளங்கிவருகிறது. மதுரையில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் ஒற்றுமையுடனும், அன்புடனும் வாழ்ந்து வருகின்றனர். மதுரையில் இஸ்லாமியர்கள் பாண்டியர்கள் காலந்தொட்டே வசித்து வருகின்றனர். நான் பிறந்த பகுதியான முனிச்சாலை, சந்தைப்பேட்டை பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம். அண்ணாநகரில் உள்ள இஸ்லாமியப் பள்ளியில்தான் முதலிரண்டு வகுப்புகள் படித்தேன். இஸ்லாமின் சூஃபி மார்க்கம் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் உண்டு. மதுரையில் பள்ளிவாசல்கள் தர்ஹாக்கள் குறித்தும், ரமலான், மொஹரம் போன்ற பண்டிகைகள் குறித்தும், சந்தனக்கூடு போன்ற திருவிழாக்கள்  குறித்தும் எழுத வேண்டுமென்ற ஆசையை இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானிலிருந்து தொடங்குகிறேன். இன்ஷா அல்லா, சிறப்பாக இத்தலைப்பின்கீழ் பதிவுகள் தொடருமென நம்புகிறேன்!

மதுரையில் இஸ்லாம் குறித்து எழுத்தாளர் அர்ஷியா மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள் என்ற தலைப்பில் மிக அருமையான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய இக்கட்டுரையின் சுட்டியை மட்டும் வழங்கியிருக்கலாம்தான். இருப்பினும் பொருத்தம் கருதியும், வாசிப்புத் தடை இல்லாதிருக்கவும் அதை அப்படியே இங்கே சில புகைப்படங்கள் மட்டும் சேர்த்து இடுகிறேன். இரு நிழற்படங்கள் குணாஅமுதன் போட்டோகிராபி முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இருவருக்கும் நன்றிகள் பல.

மாமன் – மச்சான் உறவு காணும் மதுரை முஸ்லிம்கள்

மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது                                               

– எஸ்.அர்ஷியா

முஸ்லிம்களை விட்டுவிட்டு மதுரையின் சிறப்பை எழுதுவதென்பது, சிற்பத்துக்குக் கண் திறக்காதது போல முழுமைபெறாமல் போய்விடும். முஸ்லிம்களும், அவர்களின் ஏற்ற இறங்கங்கள் நிறைந்த வாழ்நிலையும் மதுரை மண்ணோடு இரண்டறக் கலந்து கிடக்கிறது. சரித்திரங்கள் வரையறுத்துச் சொல்லும் மாலிக் கபூரின் படையெடுப்புக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் மதுரையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு, மதுரையை ஆண்ட தமிழ் மன்னர்கள் அத்தனை பேரின் ஆதரவும் இருந்திருக்கிறது. தங்கள் படைகளில் அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கிக் கெளரவித்திருக்கிறார்கள். கூன் பாண்டியனின் தளபதியாக முஸ்லிம் ஒருவரும், படைவீரர்களாக எண்ணற்றவர்களும் இருந்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களின் படைக்குத் தேவையான ஆயுதங்களை முஸ்லிம்கள் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆயுதத் தொழிற்சாலைகள் இருந்த இடம்தான் கொல்லன் பட்டறை என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் ஆயுதங்களைத் தயாரித்துக் கொடுத்தவர்களின் வாரிசுகளே இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் தொழில், கருவிகள் செய்வதாகவே இருந்து வருகிறது.

கி.பி.பனிரெண்டாம்நூற்றாண்டில், ஆற்ற முடியாத வேதனையில் தவித்துக்கிடந்த மதுரை மன்னனின் வெக்கை நோய்க்குச் சிகிச்சையளித்து, அவனது அபிமானத்தைப் பெற்ற சூபி ஞானிகள் சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா, மதுரையின் திருப்பரங்குன்றம் பகுதியை ஆண்ட சிக்கந்தர் பாதுஷா, நோய்வாய்ப்பட்ட மக்களின் துயரை நகரின் மத்தியப் பகுதியிலிருந்துத் துடைத்த மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் ஆகியோர், தங்களின் சேவைகளினூடேயே இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்களின் சேவைகளாலும் அந்த மார்க்கம் காட்டிய நல்வழிகளாலும் ஈர்க்கப்பட்ட மக்கள், முஸ்லிம்களாக மதம் மாறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே மதுரை மண்ணின் மொழியான தமிழை, தங்கள் தாய்மொழியாகக் கொண்டிருந்தவர்கள்.

மதம் பரப்பிய சூபி ஞானிகளுக்கு பள்ளிவாசல்களும், தர்ஹாக்களும் கட்டிக்கொள்ள இடம் கொடுத்து, மதுரை மன்னர்கள் சிறப்பு செய்திருப்பது, தமிழ் மண்ணில் முஸ்லிம்கள் காட்டிய பற்றின் வெளிப்பாட்டினால்தான். அப்படி எழுப்பப்பட்டவைகளில் ஒன்று, கோரிப்பாளையம் தர்ஹாவும் பள்ளிவாசலுமாகும். இந்துக் கோவில்களின் வேலைப்பாடுகள் அதன் உள்ளும் புறமும் காணப்படும். 70 அடி விட்டங்கொண்ட அரைக்கோள வடிவத்தில் மேற்புறமும் 20 அடி உயரமும் கொண்டது, தர்ஹாவின் உட்பகுதி. இந்த தர்ஹாவின் உள்ளே சையத் சுல்தான் அலாவூதீன் அவுலியா, சையத் சுல்தான் சம்சுதீன் அவுலியா ஆகியோரின் சமாதிகள் உள்ளன. மதுரை மக்களின் நோய்த் தீர்க்கும் நம்பிக்கைத் தருபவர்களாக, இன்றும் அவர்கள் இருந்து வருகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், இங்கு வந்து தங்கினால் குணமடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை, மதங்களைத் தாண்டிய சமத்துவத்தைக் கொண்டதாக இருந்து வருகிறது.

தெற்குவாசல் மாஹ்வ் சுபஹானி முகைதீன் ஆண்டவர் தர்ஹாவும், பள்ளிவாசலும் கூட அப்படிக் கட்டப்பட்டக் கலை வடிவங்கள்தான். இங்கும் மாலைநேரங்களில் வந்து மந்திரித்துத் தாயத்துக் கட்டிக்கொண்டு செல்லும் அனைத்துச் சமூக மக்களையும் பார்க்க முடியும்.

அன்னியப் படையிடம் தோல்வி கண்டு ஓடிய சிக்கந்தர் பாதுஷா, (கி.பி. 1195 – 1207) திருப்பரங்குன்றம் மலை மீது தங்கியிருந்தபோது மரணத்தைத் தழுவ, அந்த இடத்தில் அவருக்கு சமாதியும் தர்ஹாவும் கட்டப்பட்டுள்ளது. இங்கும், மனநலம் குன்றியவர்கள், வந்து தங்கினால் குணமடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

வைகையையும் வளமையான ஆட்சியையும் கொண்டிருந்த மதுரை மன்னர்கள், தங்கள் படைகளுக்குத் தேவையான குதிரைகளை, அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்துள்ளனர். குதிரைகளைக் கொண்டுவந்த அரேபிய வியாபாரிகளுக்கும் மதுரை மக்களுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு, பிற்காலத்தில் அவர்களுக்குள் உறவுமுறைகளும் உருவாகியிருக்கின்றன. பாண்டிய மன்னர்கள், அரேபியர்களின் வருகைக்கு பெரும் ஆதரவு தந்துள்ளனர். அவர்கள் தந்த ஆதரவு, இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்த மார்க்கதரிசிகளுக்கு உதவிகரமாக இருந்துள்ளது.

 கி. பி. 12ம் நூற்றாண்டில், ஓமன் தேசத்திலிருந்து ஹஜரத் சையத் தாஜூதீன் என்பவர் மதுரைக்கு நேரடியாக வந்து தங்கி, இஸ்லாமிய மார்க்கத்தைப் பரப்பியிருக்கிறார். முகமது நபியின் நேரடி வாரிசான ‘சையது’ தானென்று சொல்லிக்கொண்ட அவருக்கு, நகரின் நடுப்பகுதியிலேயே மன்னன் கூன் பாண்டியன் இடமளித்துள்ளான். அந்த இடத்தில், முஸ்லிம்களுக்கான முதல் தொழுகைப் பள்ளி கட்டப்பட்டது. தாஜூதீன் முஸ்லிம்களின் மதகுருவான காஜியாகக் கருதப்பட்டார். இன்றுவரை, அவரது வாரிசுகளே காஜிக்களாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசாங்கமும் அந்த வாரிசுகளை மட்டுமே மாநகரின் காஜிக்களாக நியமித்து சிறப்புச் சேர்த்து வருகிறது. மாநகரக் காஜியின் கட்டுப்பாட்டில் பெருவாரி முஸ்லிம் மக்களின் நிக்காஹ் எனப்படும் திருமணப் பதிவு, தலாக் எனும் ம(ன)ண முறிவு உள்ளிட்ட பல அதிகாரங்கள் இருந்து வருகின்றன.

மதுரையின் மிக முக்கியப் பகுதியாகக் கருதப்படும் காஜிமார் தெருவில், காஜிகளுக்கு முன்பே ‘கூடுவாலா’ என அழைக்கப்படும் வெல்லம் காய்ச்சி வியாபாரம் செய்த முஸ்லிம் மக்கள், இருந்திருக்கிறார்கள். அவர்களிடையே மதத்தை வேரூன்றச் செய்ய வந்த காஜிக்களின் வருகை, முன்னமே குடியிருந்தவர்களை இடம்பெயரச் செய்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் வசித்துவந்த கூடுவாலாக்கள், இன்று நகரின் பல பகுதிகளுக்குச் சிதறிச்சென்று, எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாகிப் போய்விட்டனர். இதே பகுதியில் கலைநயமிக்க ஜரிகை வேலைப்பாட்டுத் தொழில் செய்யும் முஸ்லிம் மக்கள், பெருமளவில் இருந்து வருகின்றனர். ‘ஜர்தாரி’ என்றழைக்கப்படும் இவர்கள் வசிக்கும் தெருவுக்குப் பெயர், ஜர்தாரி மஹல்லா. அதாவது ஜரிகைக்காரத் தெரு.

பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் கி.பி. 1311 ல், தில்லியை ஆண்ட அலாவூதீன் கில்ஜி, தனது படைத் தலைவனான மாலிக் கபூரை மதுரையை – மீனாட்சிக் கோவிலை – வெற்றிகொண்டு, அங்கிருக்கும் நகைகள், வைரங்கள், விலைமதிக்க முடியாத பொருட்களை அள்ளிக்கொண்டு வர கட்டளையிடுகிறான். மதுரையின் எல்லைக்கு வந்துசேர்ந்த மாலிக் கபூரை, பாண்டிய மன்னனின் படைத் தலைவனான முஸ்லிம் ஒருவனே எதிர் கொள்கிறான். பாண்டிய மன்னனின் படை ஒன்றும் வலுமிக்கதாக இல்லை. ஆனாலும், படைத்தலைவன் தைரியமாக எதிர்த்து நிற்கிறான். அவனிடம் மாலிக் கபூர், ‘நீயும் முஸ்லிம்… நானும் முஸ்லிம்… பேசாமல் என்னுடன் சேர்ந்து விடு’ என்கிறான்.

பாண்டிய மன்னனின் படைத்தலைவன் சொல்கிறான்… ‘மதம் எனக்குப் பெரிதுதான்… ஆனாலும் என் தேசம்… மண்… அதைவிடப் பெரியது’ என்று மறித்து நிற்கின்றான். அவனை எளிதாக வென்றான், மாலிக் கபூர் என்பது சொல்லப்பட வேண்டியதில்லை.

vaigai

மாலிக் கபூரின் வெற்றிக்குப் பின், மதுரை பல்வேறு முஸ்லிம் மன்னர்களால் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. இக்கால கட்டத்தில், மதுரை நகரம் பல்வேறு கட்டமைப்புகளைப் பெற்றது. வைகை ஆற்றைக் கடந்தே ஊருக்குள் வரும்படியான முறை ஒன்று இருந்திருக்கிறது. அப்போது, ஊருக்குள் நுழைபவர்களிடம் சுங்கவரி வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் செய்யப்பட்ட அந்த இடம், பிற்காலத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலாக உருமாறியது. அதற்கு சுங்கம் பள்ளிவாசல் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

townhallroad

மீனாட்சி கோவிலைச் சுற்றி, பெருவாரியான முஸ்லிம்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு அப்பகுதியில் நிறைய நிலபுலன்கள் இருந்துள்ளன. கோவிலைச் சுற்றி இந்து மக்கள் குடியேறவும், இந்துக்களுக்கான விழாக்கள் தங்குதடையின்றி நடைபெறவும் ஏதுவாக மனமுவந்து, பரிவர்த்தனை முறையில் சுற்றுப் பகுதியிலிருந்துக் கிளம்பி, சற்றுத்தள்ளி தங்கள் குடியிருப்புகளை முஸ்லிம்கள் அமைத்துக் கொண்டுள்ளனர். கோவிலுக்கு சற்றுத்தள்ளி அமைந்துள்ள மேலமாசி வீதியின் பள்ளிவாசல் அப்படியாக அமைக்கப் பெற்றதுதான். இந்துமடங்களின் அமைப்பைப் போலவே தோற்றத்தில் காணப்படும் இப்பள்ளி வாசலைச் சுற்றியுள்ள பகுதியில், பெருமளவு முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். மதுரையின் மிக முக்கிய பள்ளிவாசலான இது, ‘மார்கஸ்’ என்றழைக்கப்படுகிறது. மக்களிடையே மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதிலிருந்து மதுரைக்கு வரும் ‘தப்லிக்’குகளை வரவேற்று, அவர்களுக்கு நகர் குறித்த வழிகாட்டுதலையும், நகரிலுள்ள பள்ளிவாசல்களையும், எந்தப் பகுதியில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற குறிப்புகளையும் வழங்கும் முக்கிய இடமாக, இது இருந்து வருகிறது.

 மதுரையை ஆண்டவர்களில் மிக முக்கியமான முஸ்லிமாகக் கருதப்படுபவர்களில் கான் சாகிபுக்கு நிச்சயம் இடமுண்டு. அவர் காலத்தில் (கி.பி.1759 – 1964) உருவாக்கப் பட்டதுதான் கான்(சா) பாளையம், கான் சா(கிப்) மேட்டுத்தெரு, கான் சா(கிப்) புரம் ஆகியவை. மதுரை கான் சாகிபின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, மீனாட்சிக் கோவிலுக்கு அவர் பல தானங்களைச் செய்திருக்கிறார். அவர் அளித்தக் கொடை இடம்தான், மீனாட்சி கோவிலின் யானைகள் கட்டும் லாயம். அந்தக் கொட்டடியின் மேற்கூரை அப்படியே இஸ்லாமிய கட்டிடக் கலையின் வடிவமாகவே இன்னும் இருக்கிறது.

அதன் பிறகு மதுரையின் தாசில்தாராகவும், மீனாட்சி கோவிலின் நிர்வாகியாகவும் ஏழரைப் பங்காளி வகையறாவின் மூலகர்த்தா சையத் இஸ்மாயில் இருந்து வந்திருக்கிறார். மீனாட்சிக் கோவில் அருகேயுள்ள (தாசில்தார்) பள்ளிவாசலைக் கட்ட அவர் நன்கொடைகளையும் வழி முறைகளையும் சொல்லியிருக்கிறார். அவரது முயற்சியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசலுக்கு தாசில்தார் பள்ளிவாசல் என்ற பெயரை வைத்து (கி.பி. 1811) அப்பகுதி முஸ்லிம்கள் கெளரவித்திருக்கிறார்கள். அப்பகுதியிலேயே குடியிருந்த அவர், அல்லங்காடியின் ஜன சந்தடியிலிருந்து விலகி, புறநகர் ஒன்றை அமைத்து அங்கே குடியேறியிருக்கிறார். அந்தப் புறநகர் பகுதிதான், இன்றைய இஸ்மாயில்புரம். அடுத்தடுத்து 19 தெருக்களையும் அதனைத் தொடர்ந்து ஓலைப்பட்டிணம் என்ற பெயரில் மூன்று சந்துகளையும் அமைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர் சந்தைப்பேட்டை பகுதியையும் ஏற்படுத்தியிருக்கிறார். இஸ்மாயில் புரத்தில் அவர் கி.பி. 1897 ல் உருவாக்கிய பள்ளிவாசல், நூர்தீன் பள்ளிவாசல் என்றழைக்கப்படுகிறது. தனது தாசில்தார் பதவி காலத்தில், மீனாட்சி கோவிலின் உள்ளே பேச்சியம்மன் மண்டபத்தின் வாயிலில் 616 அடுக்குகளில் பொருத்தப்பட்ட பலநூறு விளக்குகளைக் கொண்ட தோரணம் ஒன்றை அமைத்துள்ளார். 1819 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ம் தேதி அமைக்கப்பட்ட அந்த விளக்குத் தோரணங்களின் பக்கவாட்டில், அதை தாசில்தாராகப் பணியாற்றிய சையத் இஸ்மாயில் அமைத்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே முஸ்லிம் மக்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட பகுதிகள்தான் மஹபூப் பாளையம், அன்சாரி நகரம், அசனுதீன் சாகிப் தெருக்கள் ஆகியவை.

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், மதுரை முஸ்லிம்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. அன்றைய மதுரையில் நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் சுதந்திர வேள்வியின் அனைத்துப் போராட்டங்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். கிலாபத் போராட்டத்தின் போது, பிரிட்டிஷ் போலிஸின் எதிர்ப்பையும் மீறி தாசில்தார் பள்ளிவாசலிலிருந்து காலேஜ் ஹவுஸ் வரை போராட்ட ஊர்வலத்தை நடத்திச் சென்றுள்ளார், மெளலானா சாகிப். கள்ளுக்கடை போராட்டத்தில் மைதீன் அப்துல் காதர், மெளலானா சாகிப், அவரது சகோதரர் முகம்மது இப்ராஹிம், சம்சுதீன் சாகிப், உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். சட்ட மறுப்புப் போராட்டத்தின்போது காந்தி, ஜனவரி 4, 1932 ல் கைதான நேரத்தில் பெரும் போராட்டம் நாடெங்கும் நடந்தது. மதுரையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கைதானார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் முஸ்லிம்கள்.

1942 ல் நாடெங்கும் இந்து – முஸ்லிம் கலவரம் நடந்தபோது, மதுரையின் இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதி காத்து, சகோதரத்துவத்தை நாட்டுக்கு எடுத்துக் காட்டினர். 1942 – 44 களில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை மதுரையில் முஸ்லிம்களான டி.எஸ்.அப்துல் ரஹிம், சாஹித் சாகிப், சையத் அஹமத் சாகிப், பி.மொய்தீன் கான், மீரா மொய்தீன், அப்துல் ரஜாக், மெளலானா சாகிப் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

இலக்கியத்திலும் மதுரை முஸ்லிம்களின் பங்களிப்பென்பது குறிப்பிடத்தக்கது. மதுரையைச் சேர்ந்த மஹதி என்பவர் வெடிகுண்டு, சிட்டி கெஜட் ஆகிய பத்திரிகைகளை நடத்தி வந்திருக்கிறார். சுதந்திரத் தாகமூட்டும் அவரது பணி செவ்வன நடந்திருக்கிறது. ஏழரைப் பங்காளி வகையறாவைச் சேர்ந்த எஸ். சையத் இஸ்மாயில் இண்டியன் பிரஸ் எனும் அச்சகத்தை நடத்தி, உத்வேகமூட்டும் சுதந்திரப் பணிகளைச் செய்ததுடன், நூருல் ஹக் எனும் இஸ்லாமிய பத்திரிகையையும் நடத்திவந்தார். இன்றும் மதுரை இலக்கியப் பணியில் முன்னணியிலேயே உள்ளது. குர்ஆனின் குரல், சிந்தனைச் சரம், மறைச் சுடர் ஆகிய இஸ்லாமிய பத்திரிகைகள் பல ஆண்டுகளாக இடைவெளியில்லாமல் வெளியாகின்றன. இஸ்லாமியத் தளத்திலிருந்து வெளியாகும் புதிய காற்று, இடதுசாரி சிந்தனையுடன் வெளியாகும் ஒரு முக்கியப் பத்திரிகையாகும்.

எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் மதுரை முஸ்லிம்கள் படைப்புலகிலும் இருந்து வருகின்றனர். வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஜே. ஷாஜஹான், எஸ். அர்ஷியா ஆகியோர் அவர்களில் முக்கியமானோர். அதுபோல மறைந்த எழுத்தாளர் ஜியாவுதீனின் படைப்புகள் சாகாவரம் பெற்றவை.

மதுரை முஸ்லிம்களின் பொருளாதார நிலை என்பது, கவலைக்கிடமான ஒன்றாகவே இருக்கின்றது. கல்வி கற்றோரின் எண்ணிக்கை முஸ்லிம்களில் மிகவும் குறைவு. அதனால் அரசின் உயர் பணிகளில் இருந்தோர், இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக இல்லை. முன்னோர்களின் சேமிப்பை செலவு செய்து வாழும் மேம்போக்குத்தனம் இம்மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலும் தொழில் என்பது, பத்தி உருட்டுதல், பாய் முடைதல், எவர்சில்வர் பட்டறையில் கூலிவேலை, இரும்புப் பட்டறை, தகரத் தொழில்கள், கட்டிட வேலை போன்றவற்றிலேயே ஈடுபட்டுள்ளனர். சவரத் தொழில் மற்றும் சலவைத் தொழில் செய்யும் முஸ்லிம்களும் மதுரையில் உள்ளனர். பெண்களை மார்க்கக் கல்வி தவிர்த்த பொதுக்கல்வி கற்க வெளியே அனுப்புவது, சமீப காலமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதையே மிகப்பெரிய முன்னேற்றமாகமாக கருதவேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் உணவுப் பழக்கம் அசாதாரணமாகிவிட்டது. பண்டிகைக் காலங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த பிரியாணி, தற்போது விடுமுறை தினத்துக்கான உணவாக மாறிவிட்டது. பஸவ், மொகல் பிரியாணி போன்ற அதிக அளவில் கறியும் மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்ட வகைகள் அவர்களின் உணவுப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது. மிட்டா கானா, பீர்னி, முத்தஞ்ஜன் போன்ற இனிப்பு வகைகள் யாரையும் சுவையால் கட்டிப் போடக் கூடியவை.

 பல நூற்றாண்டு காலமாக மதுரை முஸ்லிம்களின் ஆடைகளில் ஒரு ‘ஜிகுஜிகு’த் தன்மை இருந்து வந்தது. பளபளப்பான, வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளையே ஆண்களும் பெண்களும் விரும்பி அணிந்து வந்தனர். வசதி நிறைந்தவர்களின் நகை அலங்காரமும், வாசனைத் திரவிய வீச்சமும் பிரசித்தியானது. சமீப காலமாக அவர்களின் ஆடை, அலங்காரம் குறித்த செயல்பாடுகளில் பெரும் வித்தியாசம் தோன்றியிருக்கிறது என்றபோதும் காஜிமார் தெரு போன்ற பகுதிகளில் தொன்மையான கலாச்சாரம் கைவிடப்படாமல் தொடர்ந்து வருகிறது.

santhankkoodu

எந்தவொரு இனப்பண்பாடும் அதன் திருவிழாக்களின் மூலமே வெளிப்படும். அந்த வகையில், மதுரை முஸ்லிம்கள் கொண்டாடும் திருவிழாக்களாக கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக் கூடு, முகைதீன் ஆண்டவர் தர்ஹா சந்தனக்கூடு, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவில் நடக்கும் தீமித் திருவிழாக்கள் இருந்து வருகின்றன. அல்லாஹ்வுக்கு இணையாக எதுவுமில்லை என்று மார்க்கம் வலியுறுத்தி வரும்போதும், இதுபோன்ற திருவிழாக்கள் மண்ணின் கலாச்சாரத்தை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடும், அதைத் தொடர்ந்து வரும் ஜஹாஜூம் காணக் கண்கோடி வேண்டும் அம்சங்களாகும். நோன்பு நோற்று, விரதமிருந்து, நேர்த்திக் கடனை நேர் செய்யும் பழக்கம் இந்துக்களை போலவே முஸ்லிம்களிடமும் இருந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் மலைமீது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பாத்திஹாவின்போது, தீயில் இறங்கும் பூக்குழி நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. ஏராளமான முஸ்லிம் பெண்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கும் பழக்கம், கால காலமாக நீடித்து வருகிறது. வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் முஸ்லிம் பெண்கள் இதுபோன்ற விழாக்களின்போது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், சில மணி நேரங்கள் வெப்பமற்றக் காற்றை சுவாசிக்கும் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள்.

மதுரை முஸ்லிம்களுக்கென்று, தனித்த குணமென்று ஒன்றுண்டு. அது மற்றவர்களுடன் அனுசரித்துப் போவது. தேசமே இந்து – முஸ்லிம் கலவரத்தில் வெட்டுக் குத்துக்களாலும், தீச்சுவாலைகளாலும் தகித்துக் கொண்டிருந்தபோது, மதுரையில் இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தவொரு பிரச்சனையுமின்றி அப்பு – மகன் உறவிலும், மாமன் – மச்சான் உறவிலும் கைகோர்த்து சகிப்புத் தன்மையை வெளிக்காட்டிக் கொண்டனர். இந்த குணம் வேறு எந்த ஒரு ஊருக்கும் கிடைக்காத அற்புத வரமாகும். அந்த நிலை இன்றும் தொடர்வது, இந்துக்களும் முஸ்லிம்களும் பரஸ்பரம் காட்டிவரும் உறவு முறைக் கண்ணியமாகும்.

நன்றி:

எஸ்.அர்ஷியா

http://arshiyaas.blogspot.in/2009/09/blog-post_09.html

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  அர்ஷியா அவர்கள் வடக்குமாசிவீதி மணிமேகலை பள்ளியில் அருமையான சிறுகதை ஒன்றை வாசிக்கக்கேட்டிருக்கிறேன். புதிய காற்று அலுவலகத்திலோ அல்லது அழகர்கோயில் பக்கம் ஓயாசிஸில் நடந்த கூட்டத்திலோ (ராஜன்குறை அவர்கள் வந்திருந்தபோது) ஷாஜஹான் அவர்கள் கட்டுரை வாசிக்கவும் கேட்டிருக்கிறேன். அவர்களது ஆக்கங்கள் பலவும் படிக்கவாய்க்கட்டும்.

  திருவாலவாயநல்லூரில் இருந்து நிறைய இஸ்லாமிய நண்பர்கள் என்னுடன் படித்தார்கள். (இப்போது நான்குவழிச்சாலையில் அந்த ஊரை டி.வி.நல்லூர் என்று எழுதியிருக்கிறார்கள்). அந்த ஊர் பற்றிய விவரம் சேகரித்தால் மதுரையில் இஸ்லாம் பற்றிய ஒரு பக்கம் திறக்கும்.

  இனிய தாளம் இசைத்துக்கொண்டு மயிலிறகால் மந்திரிக்கும் தம்பதி ஒன்று முன்பு ஊருக்கு வருவதுண்டு.

  பதினேழு வயதில் “துலுக்கன்ய்ங்க..” என்ற வார்த்தையை வகுப்புத்தோழன் சாகுல் அமீது முன்பு பயன்படுத்தி பின் குற்ற உணர்வில் துன்புற்றதும் நினைவுக்கு வருகிறது.

  பிறகொரு நாளில் ஒரே பேருந்தில் தினமும் வரும் முஸ்லீம் பெண் பார்த்து புன்னகைத்தது என்ற காரணத்துக்காக திடீர்நகர் பாலத்துக்கடியில் நண்பன் அடிவாங்கியபோது பயமாக இருந்தது.

  நல்லவேளையாக இப்போதெல்லாம் நாம், அவர்கள் என்று பார்ப்பதே செயற்கையாகத் தோன்றுகிறது.

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  திருப்பரங்குன்றம் மலைமீது ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் பாத்திஹாவின்போது, தீயில் இறங்கும் பூக்குழி நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. ஏராளமான முஸ்லிம் பெண்கள் விரதமிருந்து பூக்குழி இறங்கும் பழக்கம், கால காலமாக நீடித்து வருகிறது.
  = இது ஒரு துளி தான்.
  மதுரையில் இஸ்லாம் = நண்பர் சித்திரவீதிக்காரன் அவர்களின் அற்புதமான படைப்பு. அருமையான உழைப்பு. இவரது பதிவுகளை பண வசதி படைத்தவர்கள், நல்ல தமிழ் மீது பற்றுள்ளவர்கள் – புத்தகமாக போட்டு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கலாம். பத்திரிக்கைக்காரர்கள் இவரது கட்டுரைகளை வெளியிட்டு இவரை ஊக்கப் படுத்த வேண்டும்,.
  வாழ்த்துகள் நண்பரே. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

 3. அர்ஷியா.எஸ் சொல்கிறார்:

  எனது கட்டுரையைத் தங்கள் வலைத்தளத்தில் காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது. தங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

 4. வேல்முருகன்.கு சொல்கிறார்:

  எஸ்.அர்ஷியாவின் கட்டுரை அருமையானது,
  இந்த ஒரு கட்டுரை போதும் மதுரையின் வரலாற்றை அறிந்துகொள்ள,
  இதற்காகவே நாம் அவரை போற்றப்படவேண்டும்,
  அவரது கட்டிரையின் தொடக்கமாக தாங்கள் இஸ்லாம் பற்றி எழுதபோவது சரியாக இருக்கும்.
  முழுமையான தகவலுடன் தாங்கள் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். பாராட்டுக்கள்.

 5. velmurugan.k சொல்கிறார்:

  அருமையான அவசியமான பதிவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s