தோல்பாவைக்கூத்து

Posted: ஜூலை 19, 2013 in நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்

தோல்பாவைகள்

என்ன செய்ய நானும்

தோல்பாவைதான்

உந்தன் கைகள் ஆட்டிவைக்கும்

நூல் பாவைதான்!

–    வாலி, தசாவதாரம்

தோல்பாவைக்கூத்து திரைப்படக்கலையின் முன்னோடி.  இராமாயணமும், புராணக்கதைகளும் அன்று எளிய மக்களைச் சென்றடைய பாவைக்கூத்து உதவியது. ஆனால், இன்று அழிவின் விழிம்பில் உள்ள பல நாட்டுப்புறக்கலைகளில் தோல்பாவைக்கூத்தும் அடங்கும்.

இராமயணக்காட்சி

Ambedkarஆறு ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் அண்ணல் அம்பேத்கர் வாழ்வில் நிகழ்ந்த சிறு பகுதியை தோல்பாவைக்கூத்தில் பார்த்தேன். அம்பேத்கரும் காந்தியும் சந்திக்கும் காட்சியெல்லாம் அதில் காண்பித்தார்கள். மறக்க முடியாத மிக அற்புதமான நிகழ்வு. மற்றொருமுறை, மதுரை கிழக்கு சித்திரைவீதியில் தெருவோரத்திருவிழாவில் இராமாயணக்கூத்து பார்த்தேன். போர்க்காட்சிக்கு தீ அம்புகள் பாய்வதை தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

தோல்பாவைகள் ஆட்டுத்தோலில் செய்யப்படுகின்றன. தோலை நன்கு ஊறவைத்து அதிலுள்ள ரோமங்களை நீக்கி நீட்டி காயவைத்து விடுகின்றனர். அதில் கரித்துண்டால் படங்களை வரைந்து பிசினில் வண்ணப்பொடிகளைத் தோய்த்து வண்ணங்களைத் தீட்டுகின்றனர். இப்படி வரையப்பட்ட பாவைகள் பல ஆண்டுகள் சாயம் இழக்காமல் இருக்கும்.

உச்சிக்குடும்பம், உளுவத்தலையன் போன்ற நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் தலை, கை, கால்களை அசைக்கும்படி பாவைகளை செய்கின்றனர். இசைக்கருவியை ஒருவர் வாசிக்க மற்றொருவர் பாடல்களைப் பாடிக்கொண்டு பாவைகளை கதைக்கேற்றாற்போல் வேகமாக அசைக்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான பாவைகளை வைத்து பாவைக்கூத்துகளை நிகழ்த்துகின்றனர்.

artist

கள ஆய்வாளரும், எழுத்தாளருமான அ.கா.பெருமாள் தோல்பாவைக்கூத்து குறித்தும், அக்கலைஞர்களின் வாழ்க்கை குறித்தும் எழுதியுள்ளதை வாசித்திருக்கிறேன். இவர் இக்கலை நிகழ்த்த நிதியுதவி பெற்றுத் தந்து கலைஞர்களுக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்.

மதுரை விழாவில் தோல்பாவைக்கூத்து கலைஞருடன் பேசிக் கொண்டிருந்த போது இப்போதெல்லாம் இதைப் பார்க்க யாரும் விரும்புவதில்லை, விழாக்களுக்கு நிகழ்த்தவும் அழைப்பதில்லையென வருத்தத்தோடு சொன்னார். பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறக்கலைகளை பாடமாக்கி இக்கலைஞர்களை பேராசிரியர்களாக்கினால் நன்றாகயிருக்கும். நம்மூரில் இதெல்லாம் சாத்தியமில்லையெனத் தெரிந்தாலும் மனசு சும்மா இப்படி எதையாவது யோசிக்கிறது.

தோல்பாவைக்கூத்து

எஸ்.ராமகிருஷ்ணன் இலைகளை வியக்கும் மரம் கட்டுரைத் தொகுப்பில் தோல்பாவைக்கூத்து கலைஞர்களைப் பார்க்க கோயில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு பகுதிக்கு சென்றிருந்த அனுபவத்தைப் பதிவு செய்திருக்கிறார். ‘நாங்க எங்க போனாலும் எங்க கூடவே ராமனும் வர்றார். எங்களுக்கு அவருதான் துணை. இப்போ பிழைக்க வழியில்லாம நாதியத்து கிடக்கிறோம். அதுவும் அவர் கொடுத்ததுதான்னு நினைச்சிட்டு இருக்கோம். ஒரேயொரு மனக்குறைதான் எங்களுக்கு இருக்கு… நாங்க ஊர் ஊராகப் போயி ராமன் புகழைத்தானே பாடினோம். வேறு எதாவது தப்பு செய்திருக்கமா? எதுக்கு எங்களுக்கு இந்த நிலை, ஏன் இப்படி ஒரு வாய் சோற்றுக்கு வழியில்லாம அல்லாடுற பிழைப்பா போச்சு. சொல்லுங்க’. அங்கு உள்ள பாவைக்கூத்து கலைஞரான பாப்பாத்தியம்மா கேட்கும் கேள்வி நம்மையும் உலுக்கிறது.

போர்பாவைகள்

ஏழுமலையானுக்கு வரும் கூட்டம் நம்மூரில் உள்ள பழமையான நிறைய கோயில்களுக்கு வருவதில்லை.  கலைகளிலும், கடவுள்களிலும் பிரமாண்டங்களை நோக்கியே மக்கள் படையெடுக்கின்றனர்.

பாவைக்கூத்து

இராமாயணப் பாவைக்கூத்து நடக்கும் நாட்களில் பட்டாபிசேகத்தன்று மழை பெய்யும் என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடமிருந்தது. இன்று பாவைக்கூத்து நடக்காததால்தான் மழை பெய்ய மறுக்கிறதோ என்னவோ? நேரங்காலமில்லாமல் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் தொலைக்காட்சிகளை நிறுத்துவோம். மக்கள் கலைகளை மீட்டெடுப்போம். வாழ்க்கையை கொண்டாடுவோம்.

நாட்டுப்புறக்கலைகள் அகமும் – புறமும்

பின்னூட்டங்கள்
  1. cheenakay சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார,- வழக்கம் போல் அருமையான பதிவு – படங்களும் சிறந்த படங்கள் – பதிவிற்கேற்ற படங்கள் – தோல பாவைக் கூத்து – விளக்கங்கள் அனைத்தும் அருமை – நாட்டுப்புறக் கலைகள் நசிந்து கொண்டே வருகின்றன – தூக்கி நிறுத்த இயலவில்லை. அரசு ஏதேனும் செய்தால் தான் உண்டு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. ranjani135 சொல்கிறார்:

    அருமையான பதிவு!
    எத்தனை தொன்மையான கலை இது. திருமதி பாப்பாத்தியம்மாவின் கேள்வியில் இருக்கும் நியாயம் மனதை வருத்தப் படுத்துகிறது.

    எப்படியாவது இந்தக் கலையை வாழ வைக்க முடியுமா?யாராவது இந்த கலையை தத்தெடுத்து பராமரிக்க முன் வருவார்களா? கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன.

  3. இன்றைய மக்கள் மாறுவது சிரமம் தான்…!

  4. மே. இளஞ்செழியன் சொல்கிறார்:

    நேரங்காலமில்லாமல் ஒளிர்ந்து கொண்டேயிருக்கும் தொலைக்காட்சிகளை நிறுத்துவோம். மக்கள் கலைகளை மீட்டெடுப்போம். வாழ்க்கையை கொண்டாடுவோம்.

    கலைகளைப் பாதுகாப்பது நமது கடமை… அருமையான பதிவு வாழ்த்துக்கள்…

  5. velmurugan.k சொல்கிறார்:

    இன்று மக்கள் தொலைகாட்சி இல்லாமல் வாழ்கை இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர் எனவே தொலைகாட்சியினர் இதுபோன்ற கலைகளை மக்களுக்கு காட்டவேண்டும் , நல்ல சினிமா இயக்குனர்களும் சினிமாவில் இதை காட்டவேண்டும்

  6. rathnavel natarajan சொல்கிறார்:

    தோல் பாவைக்கூத்து பற்றிய திரு சித்திரவீதிக்காரன் அவர்களின் அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு சித்திரவீதிக்காரன்.

  7. தொப்புளான் சொல்கிறார்:

    //உச்சிக்குடும்பன், உளுவத்தலையன் போன்ற நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் தலை, கை, கால்களை அசைக்கும்படி பாவைகளை செய்கின்றனர்//

    உளுவைத் தலையன் என்பது எனது சிறுவயது பட்டப்பெயர்களுள் ஒன்று. அது தோல்பாவைக் கூத்திலிருந்து வந்திருக்கலாம் என்பதை இதன்மூலம் அறிகிறேன்.

    //இராமாயணப் பாவைக்கூத்து நடக்கும் நாட்களில் பட்டாபிசேகத்தன்று மழை பெய்யும் என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடமிருந்தது//

    தொலைக்காட்சியில் இராமாயணம் இந்தியில் தொடராக வந்தபோது நாங்கள் டி.வி. பார்த்தவீட்டில் பட்டாபிஷேக நாளன்று டி.வி முன் சூடதீபாராதனை காட்டி எங்களுக்கெல்லாம் நாட்டுச்சர்க்கரை வழங்கினார்கள்

  8. Asin sir சொல்கிறார்:

    நல்ல பதிவு.

    சிறுவயதில் அதிகமாகப் பார்த்து ரசித்தது. இன்றைய தலைமுறைகளுக்குக் கிடைக்கப்பெறாத தாகிவிட்டது.

    அதில் தோல்களில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், மிமிக்ரி, ஒளி அமைப்பு, நாடக இயல், இசை, பாட்டு போன்ற பல கலைகள் ஒளிந்திருந்தன. அவை அனைத்தும் இன்று காணோம்.

    மறைந்தவை கலைகள் அல்ல; தமிழ்ப் பண்பாட்டு விழுதுகள்!

    – அசின் சார், கழுகுமலை.

  9. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_21.html?showComment=1390260727952#c4402202584474342055

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  10. கீதமஞ்சரி சொல்கிறார்:

    வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html

velmurugan.k -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி