‘பகல் வீடு’தன்னில் ‘உயிர் வாழ ஒரு மரம்’

Posted: ஓகஸ்ட் 13, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்


Pagal Veedu - wrapper1

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

இந்தப் பள்ளி தருவதென்று எங்கும் முழங்கு!

பழைய நினைவுகளைப் பேசும்போதெல்லாம் பள்ளி குறித்த பேச்சு வந்தால் உற்சாகம் அதிகமாகிவிடும். என்னை செதுக்கிய பள்ளிகளுள் முக்கியமானது மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படித்த கோவில்பாப்பாகுடியிலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஆடல், பாடல், நாடகம், கவிதை, சித்திரம், விளையாட்டு எனப் பல துறைகளில் என்னை ஈடுபட வைத்தது இப்பள்ளிக்கூடம்தான்.

எங்கள் பள்ளி துவங்கி தொண்ணூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன என்று தெரிந்தபோது ஏதாவது செய்ய வேண்டுமென்று முன்னாள் மாணவர்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து யோசித்தபோது புத்தகம் போடலாமென்று முடிவெடுத்தோம். புத்தகத்திற்கு ‘பகல்வீடு’ என மிகப் பொருத்தமான பெயரை நண்பரொருவர் கூறினார். பள்ளி குறித்த வரலாறு, பழைய புகைப்படங்கள், முன்னாள் ஆசிரியர்களின் நினைவுக்கட்டுரைகள், இந்நாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் படைப்புகள் என பல விசயங்களை அப்புத்தகத்தில் சேர்க்கலாமென்று முடிவெடுத்தோம்.

புத்தகத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டோம். நினைத்ததற்கு மாறாக அச்சமயம் வெளியிட முடியாத சூழல் உருவானது (வழக்கம்போல). புத்தகத்தின் படைப்புகளைப் பெறுவதிலும், தள்ளுவதிலும், கொள்ளுவதிலும், தொகுப்பதிலும் பலநபர் / இருநபர் / தனிநபர் குழுக்களாக அவ்வப்போது செயல்பட்டு ஜூலை மாதம் புத்தகம் வத்தலக்குண்டு ஓவியா பதிப்பகத்தில் தயாரானது. ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் தேதி புத்தகம் வெளியிட முடிவெடுத்தோம்.

புத்தகத்திற்கான செலவு, முன்னாள் ஆசிரியர்களுடனான சந்திப்பு, திரு. மா.யோகநாதன் அவர்களை அழைப்பது மற்றும் சிற்றுண்டி வழங்குவதற்கான பொறுப்புகளை முன்னாள் மாணவ நண்பர்கள் ஏற்றுக் கொண்டனர். எங்கள் பள்ளியில் பயிலாத நண்பர்களும் இவ்விழா சிறப்பாக நடக்க நிறைய உதவிகள் செய்தனர்.

புத்தகவெளியீடு அன்று மாணவர்களுக்கும், ஊருக்கும் பயனளிக்கும் விதமாக நம்காலத்து நாயகர்களுள் ஒருவரான ‘சுற்றுச்சூழல் செயல்வீரர்’ திரு.மா.யோகநாதன் அவர்களது ‘உயிர்வாழ ஒரு மரம்’ என்ற தலைப்பிலான உரை மற்றும் செயல்விளக்கத்துக்கு ஏற்பாடு செய்தோம். திங்கள்கிழமைதோறும் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடம் மரம்வளர்ப்பு, சுற்றுச்சூழலில் மாணவர்பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மா.யோகநாதன் அவர்கள் மகிழ்வோடு வர சம்மதித்தார்.

காலை ஒன்பது மணியளவிலே எல்லோரும் வரத் தொடங்கினர். ஊராட்சி மன்றத் தலைவர், தொடக்கக் கல்வி அலுவலர்கள், முன்னாள் ஆசிரியர்கள்-மாணவர்கள், இந்நாள் ஆசிரியர்கள்-மாணவர்கள், ஆசிரியல்லாத அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ள விழா சிறப்பாக தொடங்கியது.

7

பள்ளியின் காலைவழிபாட்டுடன் ‘பகல்வீடு’ புத்தக வெளியீடும், ‘உயிர்வாழ ஒரு மரம்’ நிகழ்வும் சேர்ந்து தொடங்கியது. முன்னாள் தலைமையாசிரியர் திரு.அமிர்தம் அவர்கள் தேசியக் கொடியேற்றினார். இந்நாள் தலைமையாசிரியர் திரு.சங்கரலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நூலை உதவித் தொடக்க கல்வி அலுவலர் திருமதி. தே.அகிலத்து இளவரசி அவர்கள் வெளியிட கோவில்பாப்பாகுடி ஊராட்சி மன்றத்தலைவர் திரு.இரா.சரவணன் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது. எல்லோரும் பள்ளி குறித்த நினைவுகளை பழகுமொழியில் நெகிழ்ச்சியுடன் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

8

2

உயிர்வாழ ஒரு மரம் குறித்து திரு.மா.யோகநாதன் அவர்கள் படக்காட்சிகளின் மூலம் விளக்கினார். பள்ளியின் முன்புறம் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

4

5

6

இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்/ ஆசிரியர்கள்/ முன்னாள் மாணவர்களுக்கு ‘பகல்வீடு’ நூலோடு சேர்த்து பல்வகையான தலைப்பில் புத்தகங்கள் விழாநினைவுப் பரிசாக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட நூல்கள்:

 • சக்தி பிறக்கும் கல்வி – வே.வசந்தி தேவி – காலச்சுவடு
 • கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி – வசீலீ சுகம்லீன்ஸ்கி / வ. அம்பிகா, அ.வள்ளிநாயகம் – பாரதி புத்தகாலயம்
 • அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன் – காலச்சுவடு
 • பறவைகளும் வேடந்தாங்கலும் – மா.கிருஷ்ணன் – காலச்சுவடு
 • கணிதத்தின் கதை – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம்
 • கிரணங்களின் விளையாட்டு – த.வி.வெங்கடேஸ்வரன் – பாரதி புத்தகாலயம்
 • முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்/ பூ.சோமசுந்தரம் – பாரதி புத்தகாலயம்
 • ஓய்ந்திருக்கலாகாது (கல்விச் சிறுகதைகள் ) – (தொ-பு) அரசி ஆதிவள்ளியப்பன் – பாரதி புத்தகாலயம்
 • வாசிப்பை நேசிப்போம் – பாரதி புத்தகாலயம்
 • உடலும் உள்ளமும் நலந்தானா – பாரதி புத்தகாலயம்
 • பீனிக்ஸ் : மூன்று அறிவியல் நாடகங்கள் -மேக்ராஜ் குர்நானி, ஹாஸ்முக் பராதி, அபிஜித் சர்க்கார் / இரா.நடராசன் –  பாரதி புத்தகாலயம்
 • நுகர்வெனும் பெரும்பசி – இராமச்சந்திர குஹா / போப்பு– எதிர் வெளியீடு

மதியம் மூன்று மணிவரை பள்ளியிலேயே பொழுது களிப்போடு கழிந்தது. திருமங்கலத்திலிருந்து நண்பர் இளஞ்செழியனும் வந்து எங்களுக்கு உதவி செய்தார்.

1

பனிரெண்டாம் வகுப்பு வரை ஐந்து பள்ளிகளில் படித்திருந்தாலும் இந்த கிராமத்துப் பள்ளி என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தது. பள்ளி நினைவுகளைத் தனிப்பதிவாக எழுதணும். நூற்றாண்டு விழாவிற்குள் எங்கள் பள்ளியை தமிழகத்தில் சிறந்த பள்ளியாக மாற்றப் பாடுபடுவோம்.

பின்னூட்டங்கள்
 1. cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார, மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த பள்ளியின் நூற்றாண்டு விழாவினை மனதில் கொண்டு பல முன்னாள் மாணவர்கள் நண்பர்கள் கூடி ஒரு புத்தகமும் வெளியிட்டு – நூற்றாண்டு விழாவிறகான முன்னேற்பாடுகளை “நம்பிக்கை இருக்கிறது ” என அறிவித்து – வந்திருந்த விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவுப் பரிசாக அளித்து – சுற்றுச் சூழல் செயல் வீரர் யோக நாதனையும் அழைத்து – உரையாற்றச் செய்து – செயல் முறையிலும் காட்டி – நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகச் செய்து முடிக்க திட்டங்கள் தீட்டி – எத்தனை எததனை செயலகள் – நினைத்தது அனைத்தும் இனிதே நடைபெற நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. Robert சொல்கிறார்:

  தலைப்பே ஒரு கவிதை போல் உள்ளது. “பகல் வீடு” – அருமையான பெயர்ப் பொருத்தம்.

 3. மே. இளஞ்செழியன் சொல்கிறார்:

  நினைவுகளில் மறக்க முடியாத தருணங்கள் வாழ்வில் அவ்வபோது வந்து செல்லும். பகல் வீடு என் நினைவுகளையே மீட்டெடுத்த விழா. இது போன்ற நல்லதொரு கருத்தை இன்றைய பள்ளி மாணவர்களிடம் சேர்ந்து நானும் பெற்று கொள்வதற்கு வாய்பளித்த நண்பர் சித்திரவீதிக்காரருக்கும், அவருடைய சகோதரர் கள் தமிழ்ச்செல்வம், திலீப் மற்றும் சங்கர் ஆகியோருக்கும் எனது நன்றிகளும்… வாழ்த்துக்களும்.

  மீண்டும் இது போன்ற நல்லதொரு தருணத்தில் ஒன்று கூடுவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s