தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

Posted: செப்ரெம்பர் 18, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

வண்ணதாசன்முற்றிலும் வெறுப்புக்குரிய கோளமாக என்றாவது இந்தப் பூமி பெயர்கொள்ளும் எனில், அது துக்கத்திற்குரியதே. இது ஒருபோதும் அப்படி ஆகாத அளவுக்கு, அடையாளம் காட்டத் தெரியாத ஒரு சமன்பாடு நம்மத்தியில் எப்போதும் இருக்கும் என்று நம்பத்தோன்றுகிறது. இந்த நம்பிக்கையின் ஊடகம் அன்பைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும். முழுக்க முழுக்க நாம் அன்பற்றவர்களாகியா போனோம்? இன்னும் இல்லையே! இந்த ‘இன்னும்’ என்ற வார்த்தையின் கீழ் வருபவையே என் கதைகள் என்றும் சொல்லலாம்.

– எல்லோர்க்கும் அன்புடன், வண்ணதாசன்.

 

thottathirkku-veliye-800x1200பணிமுடிந்து மாலை வீட்டுக்கு வரும் வழியில் மழை பிடித்துக் கொண்டது. பிடித்த மழையில் நனைந்து கொண்டே வந்தேன். மேகம் சாலையில் மிதந்து கொண்டு கூடவே வந்தது. சைக்கிளில் நனைந்து கொண்டு வருவதை வழியில் பார்த்த ஒரு அக்கா ‘எங்ஙணயாவது நின்னு போப்பா, நனையாத!’ எனச் சொன்னதும் வண்ணதாசனின் சிறுகதைக்குள் நுழைந்தது போலாகிவிட்டது.

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள். தலைப்பே அழகான ஜென் கவிதை போலுள்ளது. அட்டைப்படம் மழைச்சாரல் போல மனதிற்கு இதமளிக்கிறது. வண்ணதாசனின் கதைகளைப் போல அவரது முன்னுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்வின் மீதான சலிப்பையும், கசப்பையும் போக்கி அன்பையும், நம்பிக்கையையும் மனதில் விதைப்பது வண்ணதாசனின் எழுத்து.

அன்பின் வழியது‘அன்பின் வழியது’ இத்தொகுப்பில் உள்ள கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தது. ‘லேசு வலியிண்ணாத்தான் தாங்க முடியாது. வலி ஜாஸ்தியாக இருந்ததுண்ணாத் தேள் கொட்டினது மாதிரி விறுவிறுண்ணு சுகமா இருக்கும்.’ எனச் சொல்லும் கதைத்தலைவி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறாள். வெளிய போனால் தலைவலி மாத்திரை வாங்கி வரச் சொல்லும் மனைவியிடம் சரியென்று சொல்லிச் செல்லும் கணவன் தன் நண்பனின் மனைவி கேட்ட மாத்திரை மருந்தை அலைந்து திரிந்து வாங்கிக் கொடுத்துவிட்டு தன் மனைவி கேட்ட மாத்திரையை வாங்க மறந்து வீடு வருகிறான். மாத்திரையைக் கேட்டால் எப்படி சமாளிப்பது என இவன் யோசித்துக் கொண்டிருக்க அவளோ மணியைப் பார்த்துவிட்டு சாப்பாடு எடுத்து வைக்கிறாள். அவளது அன்பில் கிறங்கி அவள் கையைப் பிடித்து முத்தம் கொடுப்பதோடு கதை முடிகிறது.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு

என வள்ளுவர் சொன்னதை அழகான கதையாகச் சொல்லி நம்மை ஈர்க்கிறார் வண்ணதாசன்.

அஜித்இன்று அதிகம் விரயமாக்கப்படுபவைகளுள் புகைப்படங்களும் அடங்கும். 1970களில் புகைப்படங்கள் அபூர்வமாகவே எடுக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி படிப்பின் இறுதி நாட்களில் நண்பர்களுடன், புதுமணத்தம்பதியராக, குழந்தை குப்புற பிறண்டு படுக்கும் பருவத்தில் என இப்படி எடுத்த ஒன்றிரண்டு படங்களையும் பொக்கிஷமாக பாதுகாத்தனர். அந்தக் காலகட்ட ஸ்டுடியோக்களின் சூழலை அருமையாக படம் பிடிக்கிறது ‘போட்டோ’ சிறுகதை. ஸ்டுடியோவுக்கு வரும் கரகாட்டம் ஆடும் பெண்ணின் மீதான பொதுப் பார்வையை கதையின் இறுதிப்பத்தியில் நீக்கி அவர்களின் வலியைப் பதிவு செய்கிறது இக்கதை.

வேலையைச் சுமையாக எண்ணாமல் சுகமாக எண்ணலாம். அதற்காக வேலையையே கட்டி மாரடித்துக் கொண்டிருக்கலாமா?. டிபன் பாக்ஸை அலுவலகத்தில் மறந்து வைத்துச் சென்ற பெண் அதை எடுக்க திரும்ப அலுவலகம் வருகிறாள். அங்கு அப்பொழுதும் பணிபுரிந்து கொண்டிருக்கும் க்ளார்கைப் பார்த்து திகைக்கிறாள். தனக்கு மறந்து போன டிபன்பாக்ஸ் ஞாபகம் வந்தது போல அவருக்கு வீட்டு ஞாபகம் வரட்டும் என நினைப்பதோடு ‘ஞாபகம்’ கதை முடிகிறது. மாலைநேர மழைக்கால பேருந்துப் பயணம், ஆளில்லாத அலுவலகத்தின் இரவுப் பொழுதின் தோற்றம் எல்லாவற்றையும் நம் கண்முன் கொண்டுவருகிறது இக்கதை.

பூக்காரிபடித்துமுடித்து வேலையில்லாமல் இருக்கும் நாட்கள் மிகக் கொடுரமானவை. அதிலும் பார்க்கிறவர்கள் எல்லாம் வேண்டுமென்றே என்ன பண்ற? என்று வேறு விசாரிப்பார்கள். அதோடு தனக்கு தெரிஞ்ச பையன் இதைத்தான் படிச்சான் அப்படியே கேம்பஸ்ல செலக்டாகி அமெரிக்காவுல இருக்கான் எனச் சொல்லும் போது நமக்கு ஏற்படும் கடுப்பை சொல்லில் அடக்க முடியாது. ‘பறப்பதற்குமுன் கொஞ்சம் புழுக்களாக…’ சிறுகதையில் படித்து முடித்து வேலையில்லாமலிருக்கும் இளைஞனையும், திருமண வயதையெட்டியும் மணமாகாமலிருக்கும் அவனது சகோதரியையும் பார்க்கும்போது நமக்கு நம் வாழ்க்கையும் நினைவுக்கு வருகிறது. இக்கதைத் தலைப்புதான் எவ்வளவு பொருத்தமாகயிருக்கிறது. இக்கதையில் சரஸ்வதி பூஜைக்கு புத்தகம் எடுத்துவைப்பதையும், அம்மன் சிலை செய்து வழிபடுவதையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

‘ஊமைப்படங்கள்’ சிறுகதையில் சிறுவர்களின் மனநிலையை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். இக்கதை பம்பரக்குத்து, கோலிகுண்டு, பிரைஸ் அட்டை, பிலிம்ல படம் காட்றது என பருவகாலங்களைப் போல மாறும் விளையாட்டுகளை நினைவூட்டுகிறது . இக்கதையில் வரும் செல்லம்மாக்கா நம் வீட்டருகிலிருக்கும் அக்காக்களை நினைவுறுத்துகிறார்.

பூசணிப்பூபேருந்தில் அழும் குழந்தையை ‘எங்க அம்மையில்லா’ எனக் கொஞ்சும் பெரியவர், வெள்ளையடிக்க வேண்டிய வீட்டுச்சுவர்களை சரியாக அடையாளம் காணும் நாராயணன், சவாரியை இறக்கிவிட்டு வரும் வெறும் ரிக்ஷாவுக்காக காத்திருக்கும் புஜ்ஜி, மரங்களடர்ந்த மலைப்பாதையைவிட தன் வீடிருக்கும் சாக்கடையோடும் முட்டுச் சந்தே உயர்ந்தது என எண்ணுபவன், மின்விசிறியில் காற்று வாங்குவதற்காக நூலகம் வரும் தாஸ், கொசுக்கடியில் தவிக்கும் கணவனுக்கு போர்வை வாங்கும் மனைவி என இத்தொகுப்பில் வரும் ஒவ்வொரு கதைமாந்தரும் நம் மனதைக் கவர்ந்து விடுகிறார்கள்.

தன் வாழ்வில் நிகழ்ந்த, தான் பார்த்த சில தருணங்களை அற்புதமான சிறுகதையாக மாற்றும் வல்லமை வண்ணதாசனுக்கு உண்டு. ஒவ்வொரு கதையும் அழகான சித்திரம் போல நம் மனதில் நிலைத்து நிற்கிறது. நாமும் இக்கதை மாந்தர்களாக மாறத் துடிக்கும் அளவிற்கு நம்மை ஈர்த்துவிடுகிறது ஒவ்வொரு கதையும். தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், உயரப்பறத்தல், நடுகை, பெய்தலும் ஓய்தலும் போன்ற வண்ணதாசனின் சிறுகதைத்தொகுப்புகள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.  சந்தியா பதிப்பகத்தில் வண்ணதாசனின் நூல்கள் கிடைக்கும். வாழும் கலையைக் கற்க எங்கும் செல்லாமல் வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள். வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.

வண்ணதாசன் நூல்கள்

பூக்கட்டும் சிறுமியின் படம் சகோதரர் பழனிக்குமாரும், பூசணிப்பூ படத்தை நானும் எடுத்தோம். மற்றவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அனைவருக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
 1. வேல்முருகன்.கு சொல்கிறார்:

  கதம்பமாலையாக ஓர் இனிய பதிவு

 2. kesavamani சொல்கிறார்:

  வண்ணதாசன் கதைகளின் சிறப்பே புறச்சூழலைக் காட்சிப்படுத்தும் அழகில்தான் இருக்கிறது. கதைகளை வாசிக்கும்போது அவை முப்பரிமாண வடிவம் கொண்டு நம் மனக் கண்ணில் விரியும் தருணங்கள் அவர் கதைகளின் வாசிப்பில் நாம் அடையும் அற்புதத் தருணங்கள் எனலாம்.

 3. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார, பதிவு அருமை – வண்ண தாசனின் முன்னுரை – அந்த இன்னும் என்னுன் வார்த்திகளீன் கீழேயே வருபவை என் கதைகள் – மிக மிகப் பிடித்தது இவ்வரிகள் .

  தோட்டடத்திற்கு வெளியேயும் சில பூக்கள் – தலைப்பு – அட்டைப்படம் – அவரது எழுத்து – மற்றஉம் முன்னுரை அனைத்தையும் பற்றி எழுதியது நன்று.

  அன்பின் வழியது – ஃபோட்டோ – ஞாபகம் – பறப்பதற்கு முன் கொஞ்சம் புழுக்களாக – ஊமைப்படங்கள் – போன்ற கதைகள் மட்டுமல்ல – பெரியவர், நாராயணன், புஜ்ஜி, முட்டுச் சந்தே மேலானது என எண்ணுபவன், தாஸ், போர்வி வாங்கும் மனைவி எனக் கதை மாந்தர்களைப் பற்றிக் குறிப்பீட்டதும் பதிவி|ற்கு மெருகேற்றுகின்றன.

  மிக மிக இரசித்துப் படித்தேன் – உடனே வண்ண தாசனின் புத்தகங்களில் சிலவற்றையாவது வாங்கிப் படிக்க வேண்டுமென நினைக்கிறேன் –

  பதிவு பாராட்டுக்கும் நல்வாழ்த்துகளும் உரியது

  நட்புடன் சீனா

 4. ranjani135 சொல்கிறார்:

  திரு வண்ணதாசனின் புத்தகங்களை உடனே வாங்கிப் படிக்கத் தோன்றியது உங்களது பதிவு. கூடிய சீக்கிரம் வாங்கிவிடுகிறேன். புத்தகத்தை மிக ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s