பகல் வீடு என்ற பெயர் தாங்கிய சிறுநூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டோம் எனச் சொல்லியிருந்ததோடு அதைத் தரவிறக்கும் சுட்டியும் கொடுத்திருந்தேன். அந்நூலில் எங்கள் பள்ளி குறித்த தகவல்கள், நிழற்படங்கள் தவிர்த்து சில பொதுவான கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக 3 அல்லது 4 பதிவாக போட உத்தேசம். வயிற்றுக்கும் ஈயப்படும் கட்டுரை இங்கே:
பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டத்தைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு முன்னோடி என்பது உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. பசிப்பிணி ஆற்றியதோடு மட்டுமின்றி பள்ளிகளுக்கு எல்லாக் குழந்தைகளையும் வரவைத்ததில் இத்திட்டத்தின் பங்கு அளப்பரியது. 1918ல் குறிச்சி ரங்கஸ்வாமி அய்யங்கார் என்ற ஆசிரியர் சென்னை தங்கசாலையில் இருந்த இந்து இறையியல் (தியலாஜிக்கல்) பள்ளியில் பள்ளியிலேயே சமையலறை ஏற்படுத்தி உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தார் என்கிறது ‘தி ஹிந்து’ நாளிதழில் வி.ஶ்ரீராம் எழுதிய குறிப்பொன்று. அதற்கு முன்னமே சென்னைபுரி அன்னதான சமாஜம் பள்ளிகளுக்கு சமைத்த உணவை அனுப்பி வந்திருந்திருக்கிறது. 1925 வாக்கில் சர் பிட்டி தியாகராயர் ஏழைக்குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தினார் என்று மு.கருணாநிதி ஒரு மேடைப்பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
1922ல் இருந்தே மதுரை சௌராஷ்ட்ரா பள்ளியில் உணவு வழங்கும் பணி நடந்துவந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது ஒரு செய்தி.
பின்னர் காமராசர் 1956ல் இதை தமிழ்நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியது அனைவரும் அறிந்ததே. காமராசர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கேட்டதாகவும் அவர் முதல்வர் என்பதை அறியாத அந்தச் சிறுவன் “அப்புறம் சோறு யாரு போடுவா?” என்று துடுக்காகக் கேட்டதாகவும் கூறுவர். இந்த நிகழ்ச்சியும், மதுரை சௌராஷ்ட்ர பள்ளிக்கு அவர் வந்தபோது அங்கு செயல்பட்ட திட்டத்தைப் பார்த்ததும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த தூண்டுகோலாக இருந்தன என்பர்.
இதை 1982ல் அரசு செலவில் பெரிய அளவில் தமிழகத்தில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியவர் மேனாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன். நிதிக்கு எங்கே போவது?, இது ஓட்டுக்களைக் குறிவைத்து மக்களை மயக்கும் திட்டம் என்றெல்லாம் குறைகூறியவர்கள் இத்திட்டத்தின் விளைவுகள், வெற்றிகள் காரணமாக வாயடைத்துப்போனார்கள். பின்னர் மாறிமாறி வந்த மு. கருணாநிதி மற்றும் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசுகள் இத்திட்டத்தை மென்மேலும் மேம்படுத்தினவே ஒழிய சீர்குலைக்க முயலவில்லை.
இக்காலகட்டத்தில் பசிக்கு உணவு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் ஊட்டச்சத்து மிகுந்த சத்துணவு வழங்கப்படவேண்டும் என்ற கருத்தாக்கமும் ஏற்படத் துவங்கியது. முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. வாரம் ஒன்றுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வேகவைத்த பயிறு, அவித்த உருளைக்கிழங்கு ஆகியவையும் தரப்பட்டன. இப்போதுகூட முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு பதின்மூன்று வகையான கலவை உணவுகளை வழங்கப் போவதாக அறிவித்து படிப்படியாக செயலாக்கியும் வருகிறது.
நாள் | மாதத்தின் முதல் இரு வாரங்கள் | மாதத்தின் கடைசி இரு வாரங்கள் |
திங்கள் | காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டை | சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலா |
செவ்வாய் | கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலா | மீல் மேக்கர் – காய்கறி கலவை சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை |
புதன் | தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டை | புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலா |
வியாழன் | சாம்பார் சாதம் மற்றும் வேகவைத்த முட்டை | எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டல் |
வெள்ளி | கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம் மற்றும் முட்டை மசாலா | சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியல் |
தமிழகத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் ஆண்டின் எல்லா நாட்களிலும் சத்துணவு வழங்கப்படுகிறது. 6 முதல் 10ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி வேலைநாட்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.
இதைப்போலவே பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு காலகட்டங்களில் அரசாலும், தனியாராலும், தொண்டு அமைப்புகளாலும் இத்தகைய திட்டங்கள் வெவ்வேறு வடிவங்களில் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் 2001ல் உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணை ஒன்று சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதைக் கட்டாயமாக்கி, உணவு வழங்கப்படும் உரிமையை மாணவர்களுக்கு நிலைநாட்டியிருக்கிறது. அதன்படி எல்லா மாநில அரசுகளும் அரசு/ அரசு உதவிபெறும் எல்லா ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஒரு நாளைக்கு 300 கலோரியும் 8-12கி. புரதச்சத்துக்கும் குறையாத உணவை ஆண்டொன்றிற்கு 200 நாட்களுக்குக் குறையாமல் வழங்கியாக வேண்டும். இதன் காரணமாக கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் இத்திட்டத்தை சிற்சில வேறுபாடுகளுடன் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டன.
குறைகளும் இல்லாமலில்லை. எங்கும்போல் இதிலும் ஊழல், போதிய நிதி ஒதுக்கீடு இன்மை, உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை, ஊழியர்களுக்குள்ள குறைபாடுகள் என்று சவால்கள் இருக்கவே செய்கின்றன. சமையல் பணியாளர் தலித் என்ற காரணத்துக்காக தமது பிள்ளைகளை ஒரு சாதியினர் பள்ளியில் சாப்பிடவிடுவதில்லை என்ற கொடுமையை அ.முத்துகிருஷ்ணன் பதிவுசெய்திருக்கிறார். எப்போதோ, எங்கோ நடந்ததில்லை. நமது தமிழ்நாட்டில் மிக சமீபத்தில் நடந்ததுதான் இது.
இருப்பினும் இத்திட்டத்தின் நோக்கங்கள் உன்னதமானவை. படிக்கும் வயதில் உள்ள எல்லாரும் பள்ளியில் சேரவேண்டும். சேர்ந்தவர்கள் எல்லாரும் தவறாது வரவேண்டும். பசித்த வயிற்றோடு பிள்ளைகள் வகுப்பறையில் துயருறக்கூடாது. எல்லாச் சாதி பிள்ளைகளும் பாகுபாடின்றி பழகிமகிழ வேண்டும். குழந்தைகளிடம் ஊட்டச்சத்துக் குறைபாடு களையப்படவேண்டும். பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களுக்கு சமூக அளவில் அதிகாரமளிக்க வேண்டும் என்பவையே அவை. இவை நிறைவேறுகின்றனவா எனக் கண்காணிக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
இத்தருணத்தில் நமக்கு சத்துணவு வழங்கிய/ வழங்கி வருகிற நமது பள்ளி சத்துணவுப் பணியாளர்களையும் அமைப்பாளரையும் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
[…] […]
[…] […]