பகல்வீட்டின் சாளரங்கள்: தாய்மொழிவழிக் கல்வி குறித்து காந்தியடிகள்

Posted: நவம்பர் 26, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:

வயிற்றுக்கும் ஈயப்படும், சொல்புத்தி கட்டுரைகளைத் தொடர்ந்து தாய்மொழிவழிக் கல்வி குறித்த காந்தியடிகளின் கருத்துக்கள் கீழே.

 04.02.1916 அன்று அவர் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி:

இந்தப் பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்கள் தங்கள் சொந்த மொழியிலேயே பயிற்றுவிக்கப்படும் நிலையொன்றை இந்தப் பல்கலை. பார்க்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நமது மொழி நம்மைத்தான் பிரதிபலிக்கிறது. நமது சிறந்த சிந்தனைகளை வெளிப்படுத்த இயலாத அளவிற்கு நமது மொழிகள் வறியவை என்று கூறுவீர்களேயானால், நாம் எவ்வளவு சீக்கிரம் அழிந்துபடுகிறோமோ அவ்வளவு நல்லது என்று நான் கூறுவேன். ஆங்கிலம் ஒருநாள் இந்தியாவின் தேசிய மொழியாகும் என்று கனவு காண்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா? (ஒரு போதும் இல்லை’ என்ற முழக்கம்) நாட்டிற்கு இந்த ஊனம் ஏன்? ஒவ்வொரு ஆங்கிலேயப் பையனுடனும் நமது பையன்கள் எவ்வளவு பாரபட்சமான ஒரு பந்தயத்தில் ஓட வேண்டியிருக்கிறது என்பதை ஒரு கணம் சிந்தியுங்கள். பூனாவைச் சேர்ந்த சில பேராசிரியர்களுடன் நெருங்கி உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒவ்வொரு இந்திய இளைஞனும் ஆங்கிலம் வழியாக அறிவு பெற வேண்டியிருந்ததாலேயே வாழ்நாளில் விலைமதிப்பற்ற ஆறுவருடங்களை இழந்ததாக அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார்கள். அந்த எண்ணிக்கையை ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளை முடித்து வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கையால் பெருக்கிப் பாருங்கள். இந்த நாடு எத்தனை ஆயிரம் ஆண்டுகளை இழந்திருக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். நமக்கு எந்த செயலூக்கமும் இல்லை என்பது நம்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஒரு அந்நியமொழியில் புலமை பெறுவதற்காகவே வாழ்வின் விலைமதிப்பற்ற ஆண்டுகளைச் செலவழித்தால் செயலூக்கம் எப்படி வரும்? (அவ்வாறு புலமைபெறும்) முயற்சியிலும் தோற்கிறோம்.

ஆங்கிலம் படித்தவர்களே தலைமையேற்கிறார்கள். அவர்களே இந்த நாட்டிற்கு எல்லாம் செய்கிறார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு இல்லையென்றால்தான் பெருங்கேடு. நமக்கு கிடைக்கும் ஒரே கல்வி ஆங்கிலக்கல்வி. நிச்சயமாக அதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால், கடந்த ஐம்பது வருடங்களாக நமக்கு சொந்த மொழிகளிலேயே கல்வி கிடைத்திருக்குமானால் நாம் இன்று என்ன அடைந்திருப்போம் என்பதை நினைத்துப் பாருங்கள். நாம் சுதந்திர இந்தியாவைப் பெற்றிருப்போம். நமது படித்தவர்கள் சொந்த மண்ணிலேயே அந்நியர்களாக இல்லாமல் தேசத்தின் இதயத்தை நோக்கிப் பேசுபவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் ஏழைகளுக்கெல்லாம் பரம ஏழைகளாக இருப்பவர்களிடையே பணிபுரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாதித்தவையெல்லாம் நாட்டின் பாரம்பரியம் ஆகி இருக்கும். (கைதட்டல்). இன்று நமது சிறந்த எண்ணங்களை மனைவிமாரிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பேராசிரியர்கள் போஸையும், ராயையும் அவர்களது சிறந்த ஆராய்ச்சிகளையும் பாருங்கள். அவர்களது ஆய்வுகள் மக்கள் திரளின் பொதுச் சொத்துக்கள் ஆகவில்லை என்பது வெட்கக்கேடில்லையா?

யங் இந்தியா 01.09.21 இதழில் எழுதியது

அந்நிய மொழி வழிக்கல்வி மூளைச்சோர்வை ஏற்படுத்தி இருக்கிறது. நமது குழந்தைகளின் நாடி நரம்புகளில் தேவையற்ற அழுத்தத்தைத் திணித்திருக்கிறது. அவர்களை குருட்டு மனப்பாடம் செய்பவர்களாகவும், போலி செய்பவர்களாகவும் ஆக்கியிருக்கிறது. சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் வக்கற்றவர்களாக ஆக்கியிருக்கிறது. அவர்கள் கற்றுக்கொண்டவற்றை குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் கொண்டு செல்லும் திறனற்றவர்களாக்கிவிட்டது. நடைமுறையில் நமது குழந்தைகளை அந்நியமொழி வழிக்கல்வி சொந்த மண்ணிலேயே அந்நியர்களாக்கியிருக்கிறது. இப்போதுள்ள கல்வி முறையின் பேரவலம் அதுதான். அந்நியமொழிவழிக்கல்வி நமது மொழிகளின் வளர்ச்சியைத் தடுத்திருக்கிறது. ஒரு சர்வாதிகாரிக்கு உரிய அதிகாரங்கள் எனக்கு இருந்தால் அந்நிய மொழிவழியாக நமது பையன்களும், பெண்களும் படிப்பதை இன்றே நிறுத்தி விடுவேன். மாற்றத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் வேலையிழக்கும் அபாயத்தை ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் ஏற்படுத்துவேன். பாடப்புத்தகங்கள் தயாராகும் வரை காத்திருக்க மாட்டேன். அவை மாற்றத்தைத் தொடர்ந்து தானே வரும். உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டிய கேடு இது.

09.07.1938 ஹரிஜன் இதழில் எழுதியதில் இருந்து ஒரு பகுதி

ஒவ்வொன்றையும் ஆங்கிலம் வழியாக கற்க வேண்டியிருந்தது. வடிவியல், இயற்கணிதம், வேதியியல், வானியல், வரலாறு, புவியியல் எல்லாவற்றையும். ஆங்கில ஆதிக்கம் எவ்வளவு இருந்ததென்றால் சமஸ்கிருதத்தையும், பாரசீகத்தையும்கூட தாய்மொழி வழியாக இல்லாமல் ஆங்கிலம் வழியாகவே படிக்க வேண்டியிருந்தது. யாராவது ஒருவன் தனக்குப் புரிந்த மொழியான குஜராத்தியில் பேசினால் தண்டிக்கப்பட்டான். அவனால் சரியாக உச்சரிக்க முடியாது. அவனுக்கு முழுவதும் புரியாத மோசமான ஆங்கிலம் பேசினால் ஆசிரியருக்குப் பிரச்சனையில்லை. அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆசிரியருடைய ஆங்கிலமே குறைபாடற்றதல்லவே. அது வேறெவ்வாறும் இருக்க முடியாது. மாணவர்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு அந்நிய மொழியோ அதே அளவுக்கு ஆசிரியருக்கும் அந்நியந்தான். விளைவு பெருங்குழப்பம். நாங்கள் முழுமையாகப் புரியாத, ஏன் சுத்தமாகவே புரியாத பல விஷயங்களை நெட்டுருப் போட வேண்டியிருந்தது. ஆசிரியர் தனது வடிவியல் பாட விளக்கத்தை எங்களுக்குப் புரிய வைப்பதற்காகப் போராடியபோது எனக்குத் தலைசுற்றியது. வடிவியலில், யூக்ளிடின் முதல்நூலின் 13வது தேற்றம் வரும் வரைக்கும்கூட எனக்குத் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. நான்கு வருடங்கள் எடுத்து நான் படித்த எண்ணியல், வடிவகணிதம், இயற்கணிதம், வானியல், வேதியியலை குஜராத்தி வழியாகப் படித்திருந்தால் ஒரே வருடத்தில் எளிதாகப் படித்திருப்பேன் என்பது இப்போது தெரிகிறது. நான் பாடங்களை எளிதாகவும், தெளிவாகவும் புரிந்து கொண்டிருப்பேன்.

18.08.46 ஹரிஜன் இதழிலிருந்து – தாய்மொழி வழியாக தொழில்நுட்பக் கல்வி

தாய்மொழி வழியாக தொழில்நுட்பம் பயிற்றுவிக்க மிகுந்த ஆராய்ச்சியும், முன்தயாரிப்பும் தேவைப்படும் என்று கூறப்படுவதை காந்தியடிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு கூறுபவர்களுக்கு நமது கிராமங்களின் வட்டார வழக்குகளில் சொல் வெளிப்பாடுகளும், சொலவடைகளுமாக எத்தகைய பெருஞ்செல்வம் புதைந்திருக்கிறது என்பது தெரியவில்லை என்று கருதினார். காந்தி அடிகளின் கருத்துப்படி கலைச்சொற்களைத் தேடி நாம் சமஸ்கிருதத்துக்கோ, பாரசீகத்துக்கோ போகத் தேவையில்லை. அவர் சம்பாரணில் இருந்தபோது அங்கிருந்த நாட்டுப்புற மக்கள் எந்த அந்நிய மொழிக் கலைச் சொல், மரபுச் சொல்லின் துணையின்றி எளிதாகவும், முழுமையாகவும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதைக் கண்டார். அவர்களது சமயோசிதத்துக்கு எடுத்துக் காட்டாக ஒன்றைச் சொன்னார்: மோட்டார் காரைக் குறிப்பதற்கு அவர்கள் ஹவாகாடி (காற்றுவண்டி) என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தினர்.

நன்றி: http://www.mkgandhi.org/towrds_edu/chap14.htm

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s