நெடுஞ்சாலை – வாழ்க்கைப் பயணம்

Posted: திசெம்பர் 5, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்
குறிச்சொற்கள்:,

போய்க் கொண்டும்

வந்து கொண்டும்

இருக்கும்  

பேருந்துகள்                                                

திருவிழாவுக்குத்

திருவிழா                                         

வெளியே வரும் தேர்

–    கவிஞர் விக்ரமாதித்யன்

bus

பேருந்துப் பயணங்கள் எப்போதும் சுவாரசியமானவை. இன்னும் எங்க ஊருக்குப் பேருந்து வந்துபோவதை ஆச்சர்யமாகவே பார்க்கிறேன். 1998ற்கு பிறகுதான் எங்க கிராமத்திற்கென தனிப்பேருந்து வந்தது. அதற்குமுன் காலை, மதியம், மாலை, இரவு என நாலுவேளை மாத்திரை சாப்பிடும்வேளை போல வந்துபோனது.

800px-Bus_Bodies_in_Madurai_TNSTC_Bus_Depot

nedunsalaiஅடிக்கடி பழுதாகும் பேருந்து, எப்பவும் மெல்ல ஓட்டும் ஓட்டுனர்கள், வாடிவாசலில் மாடணைய காத்திருக்கும் வீரர்களைப் போல மந்தைக்கு வரும் பேருந்தில் சீட்டுப்போட முயலும் பயணிகள், காலை – மாலை பேருந்தை காதல் வாகனமாக மாற்றிய இளவட்டங்கள், எங்க ஊர் பேருந்தைப் பார்த்ததும் போடப்படும் இரயில்வே கேட், பலநேரங்களில் வராமல் ஒன்றரைமைல் நடந்துபோய் பேருந்து ஏறுவது, தொலைதூரத்தில் போய் படித்ததால் பேருந்துகளிலேயே பாதிநேரம் கடந்துபோன கல்லூரி நாட்கள் என பேருந்து குறித்த பல நினைவுகளைக் கிளறியது கண்மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ நாவல்.

விருத்தாச்சலம் அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் கம்மியராக (மெக்கானிக்) பணிபுரியும் கண்மணிகுணசேகரன் தன் பணிச்சூழலை மையமாகக் கொண்டு இந்நாவலை எழுதியிருக்கிறார். விருத்தாச்சலம் பகுதி மக்களின் வாழ்க்கைப் பாடுகளும் நாவலினூடாக பதிவாவதால் புதிய வட்டாரத்திற்குள் நெடுஞ்சாலையினூடாக பயணிக்க முடிகிறது. நடுநாடு என்றழைப்படும் தென்னாற்காடு பகுதியின் வழக்குச் சொற்களை தொகுத்து அகராதி ஆக்கிய கண்மணி குணசேகரன் தமிழின் முக்கிய படைப்பாளர்களுள் ஒருவர். நாஞ்சில்நாடனை சாகித்ய அகாடமி விருது பெற்றதற்காக பாராட்டி பேசிய ஒலிஒளிப் பதிவை யூடியூபில் பார்த்தேன். நகைச்சுவையான அந்த உரையை மிகவும் விரும்பி ரசித்துப்பார்த்தேன்.

kanmani

நிரந்தரத்தற்காலிகப் பணியாளரான எனக்கு இந்நாவல் மிகவும் பிடித்துப் போனது. ஏனென்றால், இந்நாவலின் நாயகர்கள் மூவரும் தற்காலிகப் பணியாளர்களே. விருத்தாச்சலம் அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் கம்மியரான அய்யனார், ஓட்டுனரான ஏழைமுத்து, நடத்துனரான தமிழரசன் இவர்களின் நெருக்கடி மிகுந்த பணிச்சூழல், குடும்ப பாரம், இவற்றோடு அவர்களின் காதல் அத்யாயங்களையும் சேர்த்து விறுவிறுப்பாக எழுதியுள்ளார்.

டிராக்டர் ஓட்டி பேருந்து ஓட்ட வரும் ஏழைமுத்து சந்திக்கும் பிரச்சனைகள். குறுகலான சாலைகள், அடிக்கடி பழுதாகும் வண்டிகள், தனியார் வண்டிக்காரர்களின் அத்துமீறல்கள், வீட்டுப்பிரச்சனைகள் சூழ வாழும் ஏழைமுத்து நம் மனங்கவர்ந்து விடுகிறார்.

கொளுத்துவேலை (கட்டிடவேலை) பார்த்துத் திரிந்த அய்யனார் தன் தொழிற்கல்வி படிப்பை வைத்து முந்திரிமூட்டைகளை லஞ்சமாக்கி கம்மியராக தற்காலிகப் பணிபெறுகிறார். மேலதிகாரிகளின் ஏவல்கள், ஆள்பற்றாக்குறை, கடினமான வேலை, இரவுப்பணி என வாழும் அய்யனார் நமக்கு மிகவும் நெருக்கமாகிறார்.

Jannal Oram

பலசரக்கு கடைச் செட்டியாரின் மகனான தமிழரசன் நடத்துனராகச் சேர்ந்து தொழில் திறமையால் தற்காலிகப் பணியாளர்களிடையே சிறந்த நடத்துனராகிறார். பள்ளி மாணவியான கலைச்செல்வியுடனான காதலில் பணிநிறுத்தம் செய்யுமளவு பாதிக்கப்படுகிறார். அய்யனார், ஏழைமுத்து, தமிழரசன் மூவரின் நட்பும் நம்மை ஈர்க்கிறது.

இந்நாவலின் ‘வீடு’ பகுதியில் மூவரின் வாழ்க்கையோடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் நிலையை அருமையாக பதிவு செய்திருக்கிறார். பயணங்களில் ஏற்படும் இடையூறுகள் பின்னாட்களில் சுவாரசியமான அனுபவமாகிறது. இந்நாவலின் ‘நாடு’ பகுதியில் அப்படியான பயணம் விவரிக்கப்பட்டுள்ளது.

Periya_Nayagi_Shrineஏழைமுத்துவும், தமிழரசனும் பணிநிறுத்தம் செய்யப்பட்டபின் தங்கள் உரிமத்தை (லைசன்ஸ்) வாங்குவதற்காக போக்குவரத்துக்கழகம் வர அங்கு ஒரு ஊருக்கு போவதற்கு ஓட்டுனர், நடத்துனர் இல்லாததால் இவர்கள் இருவரையும் அனுப்புகிறார்கள். அவர்கள் எடுத்துப்போகும் பேருந்து சரியான ஓட்டவண்டி. அதை வைத்து அன்றைய பொழுதை ஓட்டிமுடித்து போய்விடலாமென பார்க்கிறார்கள். ஆனால், இறுதிநடையாக கோணாங்குப்பத்தில் நடக்கும் தேர்திருவிழாவிற்கு இந்த பேருந்தை மாற்றிவிடுகிறார்கள்.

முற்காலத்தில் விருத்தாச்சலம் பகுதிக்கு வீரமாமுனிவர் வந்த போது அந்தப்பகுதியை ஆண்ட பரூர்பாளையக்காரர்களிடம் மாதாவை கோயில் கட்டி வழிபடச்சொல்கிறார். அவர்கள் கட்டிய பெரியநாயகி அம்மன் மாதாகோயில் பிரபலமடைகிறது. அத்தேவாலயத்தில் ஜனவரி 23ல் நடக்கும் தேர்திருவிழா மிகப்பிரசித்தி பெற்றது.

மக்கள் அதிகமிருப்பதால் தேர்திருவிழாவிற்கு வரும் பேருந்தை சென்னைக்கு மாற்றிவிடுகிறார்கள். ஏழைமுத்துவும், தமிழரசனும் வரும் ஓட்டை வண்டியையும் சென்னைக்கு மாற்றிவிடுகிறார்கள். இவர்கள் எவ்வளவோ போராடியும் கேட்காமல் சென்னைக்கு போகச் சொல்கிறார்கள். அவர்கள் சென்னை போய் திரும்புவதை மிகச் சுவாரசியமாகவும், நகைச்சுவையோடும் எழுதியிருக்கிறார்.

இந்நாவலில் எனக்கு மிகவும் பிடித்த விசயமே இறுதிப்பகுதிதான். அவர்கள் மூவரும் தற்காலிகப்பணியிலிருந்து அரசுப்பணி பெற்றார்கள் என சுபமாக முடிக்காமல் சென்னையிலிருந்து வரும் பேருந்து விருத்தாச்சலம் எல்லையில் பழுதாக அதைச் சரிசெய்ய அய்யனார் போக ஏழைமுத்தும், தமிழரசனும் மகிழ்வதோடு நாவலை முடித்திருக்கிறார். இந்நாவல் என் மனங்கவர்ந்த நாவல்களுள் ஒன்றாகிவிட்டது.

மனப்பாடம் பகுதிக்காக திருக்குறள் படித்தவர்களைவிட பேருந்துகளில் படித்தவர்களே அதிகம். இந்நாவலில் திருக்குறளை பொருத்தமான இடங்களில் சேர்த்திருப்பது அழகு. பணியாளர்கள் ஓய்வறையில்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை

என்ற குறளை இந்நாவலில்தான் முதலில் வாசித்தேன்.

பணியிடங்களில் நெருக்கடிகள் இருந்தாலும் சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழத்தானே செய்யும். அய்யனார் ஓட்டுனர் எழுதி வைத்துச் சென்ற லாக்சீட்டைப் படித்து பேருந்தை சரிசெய்வதற்காக எடுக்கையில் ஒரு வண்டி லாக்சீட்டில் ‘பிரேக் அடித்தால் முன்னால் பேய் நிற்கிறது’ என எழுதியதைப் படித்து குழம்பிப் போகிறான். முன்னால் போய் நிற்கிறது என எழுதுவதில் ஒரு துணைக்கால் போடாததால் வரும் சிக்கலை அங்கதச்சுவையோடு எழுதியிருக்கிறார்.

tvsbusstand

நம் மேல் அன்பு கொண்டவர்கள் நமக்கு பிடித்தமானதை பரிசாகத்தரும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. நெடுஞ்சாலை நாவலை எனக்கு கல்யாணப்பரிசாகத் தந்த பசுமைநடை சகோதரர் வேல்முருகன் அவர்களும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கம்மியராகப் பணிபுரிகிறார். ‘நெடுஞ்சாலை’ என்ற பெயரில் வலைப்பூ எழுதிவருகிறார். நல்ல வாசகர். நல்ல நண்பர். இந்நாவலை பரிசாகத் தந்த அவருக்கு நன்றிகள் பல.

வாழ்க்கை மரணத்தை நோக்கிய நெடும்பயணம். நடுவில் முடிவு கிடையாது. சில நிறுத்தங்கள் வேண்டுமானால் இருக்கலாம்.

–    சித்திரவீதிக்காரன்

படங்கள் உதவி – நன்றி:

 • என் மதுரை(முகநூல் பக்கம்) – மதுரையின் அரிய நிழற்படங்களைத் தொகுத்து வரும் மதுரைக்காரன் கார்த்திகேயன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
 •  தமிழினி பதிப்பகம்
 • தினகரன் தீபாவளி மலர் 2006
 • ‘ஜன்னல் ஓரம்’ திரைப்படம்
 • விக்கி[பீ/மீ]டியா
பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  ஒரு தீபாவளிக்கு சென்னையிலிருந்து திருச்சி வர இப்படித்தான் ஒரு சி(ரி)றப்பு வண்டி கிடைத்தது. வழக்கமாக பொன்னேரி போக வேண்டியது. அன்று நாங்கள் ஏறிப்போனோம். கன்னியாகுமரி பக்கத்துப் பையன் எப்படியோ இந்தக் கோட்டத்தில் சி.எல். ஓட்டுநராய் வந்தார். நான் முன்புறம் ஓட்டுநர் பக்கமிருந்த பெரிய இண்டக்ஸன் அடுப்புமீது சரிவாக உட்கார்ந்திருந்தேன். கலவையான மொழியில் கலகலப்பாகப் பேசிக் கொண்டு வந்தார். மோட்டல் எங்கிருக்கிறது என்று தெரியாமல் தாண்டித் தாண்டி வந்து தேடுவோம். சரி அடுத்துப் பார்க்கலாம் என்று அப்படியே திருச்சி வந்துவிட்டோம். பயணியின் முறுக்கை அவர் தின்ன, அவர் பாட்டில்நீரை நாங்கள் குடிக்க என்று எட்டு மணிநேரம் எப்படியோ ஓட்டினோம்.

  நெடுஞ்சாலை நாவல் நாம் அறியாத – அதே நேரத்தில் நன்கறிந்த – ஒரு உலகை நமக்குக் காட்டுகிறது. நாவலை வாசிப்பது மல்டி ஆக்ஸில் பஸ்ஸில் போவதுபோல் சொகுசாக இருந்தாலும் உள்ளூர் டவுன்பஸ்ஸில் தெரிஞ்சவுங்களோடு போவதுபோல நெருக்கமாகவும் இருக்கிறது.

  ஓட்டுநர்கள் சிறுவர்களுக்கு கதாநாயகர்கள் என்றால் ஓட்டுநர், நடத்துனர் இருவர் பாலுமே இளம்பெண்களுக்கு ஈர்ப்பு. கம்மியர்கள் பாவம். கரியும் மசியுமாய் கழற்றவும் மாற்றவும் திரிபவர்கள் நம் பார்வையில் படாமல் பணிமனைக்குள்ளேயே இருந்துவிடுகிறார்கள்.

  பின்னிணைப்பாக உள்ள அருஞ்சொற்பொருள் அகராதி மூலம் முக்கியமான கலைச்சொற்களைத் தெரிந்துகொள்கிறோம். ‘for want of diesel’ போன்ற ஒரு சாதாரணமான ஆங்கிலச் சொற்சேர்க்கைகூட குறிப்பிட்ட குழுவில் புழங்கும் கனமான கலைச்சொல் ஆகிவிடுகிறது. உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் காட்டிய புது மொழியுலகு போல. இப்படியே துணிக்கடை விற்பனையாளர்கள் புழங்கும் வி.எஸ்.பி போன்ற பதங்களும் தெரியக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  //வாழ்க்கை மரணத்தை நோக்கிய நெடும்பயணம். நடுவில் முடிவு கிடையாது. சில நிறுத்தங்கள் வேண்டுமானால் இருக்கலாம்.//

  நடுவில் முடிவு இருந்தால் அது நடுவு கிடையாது. முடிவு. வாழ்க்கைப் பயணத்தில் மரணம் இலக்கு கிடையாது. பயணமே இலக்கு. (இறக்கத்தில பிரேக் அடிச்சமாதிரி என்னா ஒரு தத்துவம்?!)

 2. நெடுஞ்சாலை நாவலை படிக்கத் தூண்டும் விமர்சனம்… பாராட்டுக்கள்…

 3. வணக்கம்

  பதிவை மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..தொடருகிறேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 4. k.velmurugan சொல்கிறார்:

  அருமையான பதிவு, நாவலை மீண்டும் படிக்க தூண்டும் நடை, நண்பனின் நாவலை இவ்வளவு அழகாக பதிவு செய்துள்ளீர்கள், ஆழ்ந்து படித்துள்ளீர்கள், நன்றி

 5. Pandian சொல்கிறார்:

  நல்ல தகவல் மதுரை மைந்தரே

 6. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர் வீதிக்கார

  நெடுஞ்சாலை நாவல் படிக்கத் தூண்டும்பதிவு – அருமையான பதிவு – மிக மிக இரசித்துப் படித்தேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s