நினைவோ ஒரு பறவை

Posted: திசெம்பர் 31, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

காலம் மிகப்பெரிய காட்டாறு. அதை எதிர்த்தெல்லாம் நாம் பயணிக்க முடியாது. ஆனால், நினைவு கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் அதிசயப் பறவை. 2013ஐ ஒரு பறவைப் பார்வையில் சுற்றி வருவோம். சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே!

திருவிழா

2013 கொண்டாட்டங்கள் நிறைந்த வருடம். மாமதுரை போற்றுவோம், சோனைக்கருப்பணசாமி உற்சவவிழா, திருப்பரங்குன்றம் – மதுரை – அழகர்கோயில் தேரோட்டம், சித்திரைத் திருவிழா, பகல்வீடு புத்தகவெளியீடு, விருட்சத்திருவிழா, புத்தகத்திருவிழா, திருமணவிழா, ஐந்துகருடசேவை, திருக்கார்த்திகை என விழாக்கள் சூழ்ந்த வருடம். மதுரையை சிலப்பதிகாரம் ‘விழாமலி மூதூர்’ என்றழைப்பது எக்காலத்திற்கும் பொருந்தும்.

சித்திரவீதிக்காரன்ஜோ டி குருஸின் கொற்கை, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவின் மதுரையில் சமணம், பக்தவத்சலபாரதி தொகுத்த தமிழர்உணவு, தொ.பரமசிவன் அய்யாவின் நான் இந்துவல்ல நீங்கள்?, எஸ்.ராமகிருஷ்ணனின்  பறவைக்கோணம் மற்றும் கதாவிலாசம், அ.முத்துலிங்கத்தின் வியத்தலும் இலமே, வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு, கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை; இவை தவிர வரலாற்றுப்பார்வையில் மதுரை,  மதுரை மாவட்டத் தொல்லியல் தலங்கள், மதுர வரலாறு, மணா தொகுத்த கமல் நம்காலத்து நாயகன் உள்ளிட்ட புத்தகங்களை இவ்வாண்டு வாசிக்கமுடிந்தது.  பூமணியின் அஞ்ஞாடியை நானூறு பக்கம் வாசித்திருக்கிறேன். அடுத்தாண்டு மீண்டும் தொடக்கத்திலிருந்து வாசிக்க வேண்டும். குமார செல்வாவின் குன்னிமுத்து என்னும் நாவலையும் வாசிக்க அண்ணன் கொடுத்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வாசித்த புத்தகங்களை குறிப்பெடுக்க மறந்துவிட்டேன். ஆனந்தவிகடனில் தொடராக வந்த ராஜூமுருகனின் வட்டியும் முதலும், மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன் தொடர்கள் விரும்பிப் படித்தவை. சித்த மருத்துவர் சிவராமன் எழுதி வரும் ஆறாம் திணை மிகவும் பிடித்தத் தொடர் பகுதி. இந்தாண்டு நிறைய வாசிக்க விரும்பியும் கொஞ்சமே வாசிக்க முடிந்தது.

பசுமைநடை2010ல் யானைமலையில் விதையாய் விழுந்த பசுமைநடை 2013ல் கீழ்குயில்குடி சமணமலையடிவாரத்தில் விருட்சத்திருவிழாவாய் வளர்ந்தது இந்தாண்டுதான். இந்தாண்டு திருப்பரங்குன்றம், செல்லத்தம்மன் கோயில், இராமாயணச்சாவடி, புட்டுத்தோப்பு, கீழவளவு, கருங்காலக்குடி, அரிட்டாபட்டி, கீழ்குயில்குடி, திருவாதவூர், கொங்கர்புளியங்குளம், திருவேடகம், யானைமலை என நீண்டது. விருட்சத்திருவிழாவில் மதுரையில் உள்ள சமணத்தலங்களின் வரலாறு கூறும் நூலான ‘மதுர வரலாறு’ ஆயிரம் பிரதிகள் விற்று பெரும் சாதனை படைத்தது தனி வரலாறு.

மாமதுரை

மாமதுரை போற்றுவோம் விழாவில் இரண்டாம்நாள் நிகழ்வில் தேரோடும் வீதிகளில் ஊர்கூடும் திருவிழாவிற்காக மதுரைக் கல்லூரி மைதானத்திலிருந்து தமுக்கம் மைதானம் வரை நாட்டுப்புறக்கலைஞர்களுடன் நானும், நண்பர் இளஞ்செழியனும் நடந்து வந்தது மறக்க முடியாத விசயம். வைகையைப் போற்றுவோம் விழாவன்று வைகையே ஒளிவெள்ளத்தில் மிதந்தது.

வறண்டிருந்த மதுரையில் சித்திரைத் திருவிழாவிற்கு அழகுமலையான் வர பெய்த மழையில் தல்லாகுளமே குளமானது பகுத்தறிவிற்கு மிஞ்சிய அற்புதம். மழையில் அலைந்து திரிந்து அழகரைப் பார்த்தது மகிழ்ச்சி. ஆடித்தேரோட்டத்தின் போது அழகர்கோயிலில் கருப்பனுக்கு சந்தனக்குடம் கொண்டு வந்தவர்களை கண்டு மேனி சிலிர்த்தது மறக்க முடியாத நிகழ்வு.

நாங்கள் படித்த எங்க ஊர் கிராமத்து பள்ளிக்கு ஒரு புத்தகம் போடுவதற்காக முன்னாள் ஆசிரியர்களை சந்தித்தது, பகல்வீடு என்னும் அந்நூல் வெளியீடோடு உயிர்வாழ ஒரு மரம் என்ற தலைப்பில் பேச மரங்களின் காதலர் மா.யோகநாதன் அவர்கள் அவ்விழாவிற்கு வந்ததை எல்லாம் நினைத்தாலே இனிக்கும். கிராமத்து பள்ளிகளைப் போற்றுவோம்.

பகல்வீடு

விருட்சத்திருவிழாவிற்காக சமணமலை அடிவாரத்து ஆலமரத்தடியில் முதல்நாள் இரவு தங்கியது, வரவேற்பு பதாகைகள் கட்டுவதற்காக நண்பர்களுடன் நாகமலைப் புதுக்கோட்டையிலிருந்து கீழ்குயில்குடி வரை நடந்து வந்தது, ஆலமரத்தடியில் நூற்றுக்கணக்கான ஆர்வலர்களோடு விருட்சத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதை நெஞ்சம் மறப்பதில்லை.

விருட்சத்திருவிழா

விருட்சத்திருவிழா, புத்தகத்திருவிழா, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மைய நூல் வெளியீடு ஆகிய மூன்று விழாக்களிலும் தொ.பரமசிவன் அய்யாவின் உரையை கேட்கும் பாக்கியமும், அவருடன் ஓரிரு வார்த்தைகள் உரையாடவும் இந்தாண்டு வாய்ப்பு கிட்டியது. அந்த உரைகளை முடிந்தால் 2014ல் எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.

தொ.பரமசிவன்

புத்தகத்திருவிழா சமயம் எனக்கு திருமணமும் நடந்தது. இருப்பினும் நான்கு நாட்களுக்கும் மேல் புத்தகத்திருவிழாவில் சுற்றித் திரிந்தேன். எது இலக்கியம்? என்ற தலைப்பில் தொ.பரமசிவன் அய்யாவின் உரையையும், மாமதுரை போற்றுதும் என்ற தலைப்பில் சு.வெங்கடேசனின் உரையையும் ஒலிஒளிப்பதிவு செய்தேன். மதுர வரலாறு நூல் புத்தகத்திருவிழாவில் நல்வரவேற்பைப் பெற்றது.

மணவிழா

கமல்ஹாசன்பட்டயப்படிப்பு படித்த நாட்களில் பாலிடெக்னிக் சென்ற நாட்களுக்கு இணையாக இம்மையிலும் நன்மைதருவார் கோயிலுக்கும் சென்றிருப்பேன். நன்மைதருவார் முன்னிலையில் செப்டம்பர் 8 அன்று எனக்கும் ராணிமீனாட்சிக்கும் திருமணம் நடந்தது. ஜெயமோகனின் கொற்றவை, சில்பியின் தென்னாட்டுச் சித்திரங்கள் என நான் வாங்க நினைத்த பொக்கிஷங்களை கல்யாணப்பரிசாக தந்து நண்பர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் தடைகள் பல கடந்து இந்தாண்டு வெளியானது. இருமுறை திரையரங்கில் பார்த்தேன். சூதுகவ்வும் மற்றும் கண்ணா லட்டு தின்ன ஆசையா (பவருக்காக) படங்களை ஒருமுறை பார்த்தேன். மற்றபடி திரைப்படங்களுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.

வாசிக்க விரும்பிய புத்தகங்களும், எழுத நினைத்த பதிவுகளும் ஏராளம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம். என் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து என்னை ஊக்கமூட்டும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

புத்தாண்டு புத்தகங்களின் ஆண்டாகட்டும்.

பின்னூட்டங்கள்
 1. வணக்கம்

  பதிவு சிறப்பாக உள்ளது. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்…..இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்…..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. ranjani135 சொல்கிறார்:

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு புத்தகங்களின் ஆண்டாகட்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேறட்டும். திருமண நல்வாழ்த்துக்கள்!

 3. thanimaram.org சொல்கிறார்:

  சிறப்பான தொகுப்பு .

 4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

 5. velmurugan.k சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் சுந்தர், எழுதுங்கள் பிறருக்கு பிடிக்கிற மாதிரி எழுதுவது உங்களால் முடிகிறது , 2014 ல், திருமணவாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறட்டும்.

 6. தியாகராஜன் சொல்கிறார்:

  நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் “வரலாற்றுப்பார்வையில் மதுரை, மதுரை மாவட்டத் தொல்லியல் தலங்கள், மதுர வரலாறு”, இவற்றை மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணையிலும், மல்லிகை புக் சென்டரிலும் இன்று விசாரித்தேன். கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s