தொல்குடிகளின் வாழிடங்களின் மடியில்…

Posted: ஜூன் 12, 2014 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்
குறிச்சொற்கள்:, ,

பசுமைநடை

பசுமைமலைகள் எப்போதும் மனதை மயக்குபவை. மலைவாழிடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் மனதில் உதிக்கும். திக்கெட்டும் மலைகள் சூழ அமைந்த மதுரைக்கருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலை சுற்றுலாத் தலமாகவும், கோடைவாழிடமாகவும்தான் இதுவரை அறிந்திருந்தேன். ஆனால், இம்மலைத்தொடரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்பதுக்கைகளும், கற்திட்டைகளும், முதுமக்கள் தாழிகளும் உள்ளதென அறிந்தபோது ஆச்சர்யமானேன்.

தொன்மையான இடங்களை நோக்கி பயணிக்கும் பசுமைநடைக்குழுவோடு மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பழமையான இடங்களைக் காணச் சென்றது மறக்கமுடியாத அனுபவம். கோடைக்காலத்தில் கொடைக்கானலை நோக்கி 17.05.2014 அன்று ஒரு பேருந்தில் குழுவாகச் சென்றோம்.

‘வளையோசை கலகலவென குளுகுளு தென்றல் காற்றும் வீசுதே’ என சூழலுக்கேற்ற பாடல்களோடு மலையேறினோம். மலைக்காற்றும், மரங்களின் நறுமணமும், தொலைவில் தெரியும் மஞ்சளாறும், உயர்ந்த மலைத்தொடர்களும், பறவைகளின் ஓசையும் ஐம்புலன்களுக்கும் விருந்தளித்தன. பண்ணைக்காட்டிலிருந்து தாண்டிக்குடி செல்லும்வழியிலுள்ள சங்கரன்பொத்து எனும் இடத்தில் காலை சிற்றுண்டியை உண்டோம். பின் அங்குள்ள கற்பதுக்கைகளைக் காண குழுவாகச் சென்றோம்.

தொல்லெச்சம்

மலையின்மீது கல்வீடு போல் காணப்பட்டதை கண்டதும் கிராமப்புறங்களில் பட்டியக்கல்லில் அமைந்த திண்ணைகளின் ஞாபகம் வந்தது. நாலுபக்கமும் கற்களை ஊன்றி மேலே ஒரு பெரிய கல்லில் மூடியிருக்கிறார்கள். இவைகளை கற்பதுக்கைகள் என்று அழைக்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை அடக்கம் செய்த இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த இடங்களை பழங்குடி மக்கள் வாலியர்வீடு, பேத்து, குகை என்றழைக்கின்றனர்.

எல்லோரும் கற்பதுக்கைகளைப் பார்த்து அதனருகில் கூடினோம். கோடைகால மலைக்கூட்டத்தொடர் அங்கு தொடங்கியது. எழுத்தாளரும் பசுமைநடை அமைப்பாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் இந்த இடங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்களை கூறினார்.

மலைவகுப்பு

கி.பி.1821ல் லெப்டினன்ட் பி.ச.வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவிலிருந்த அரசு பணியிலிருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என அவர் தேர்வு செய்து 1845ல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். முதலில் குதிரைகளில் வந்த ஆங்கிலேயர்கள் பின் 1914ல் முழுமையான சாலைவசதிகள் செய்தனர். பழங்குடிகள் வாழ்ந்த மலை அவர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியேறியவர்களால் இன்று வரை ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

கற்திட்டை

1928ல் ஆங்கிலேடு என்ற ஆங்கிலேயர் தாண்டிக்குடிப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈமச்சின்னங்கள் இருப்பதை கண்டறிந்தார். இவர் அக்காலத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தவர். கொடைக்கானல் மலையில் பல்வேறு காலகட்டத்தை சேர்ந்த ஈமக்குழி, கற்பதுக்கைகள், கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் காணப்படுகிறது. இவை கி.மு.2000 முதல் கி.மு.500 வரையான காலகட்டத்தை சார்ந்தவை. இம்மலையில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற கற்பதுக்கைகள் காணப்படுகிறது. இவைகளைத் தேடிப் பார்த்து ஆவணப்படுத்துவதும் நம் கடமை என எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் கூறினார்.

சங்கரன்பொத்திலிருந்து மச்சூர் என்ற மலைக்கிராமத்திற்கு சென்றோம். அங்கும் கற்பதுக்கைகளைப் பார்த்தோம். அதனருகில் பழங்குடி மக்களின் வழிபாட்டுத் தலம் உள்ளது. அதனருகில் நடுகல் ஒன்றும் உள்ளது. மிகத் தொன்மையான இடத்தில் நிற்கிறோம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் பரவியது. எல்லோரும் குழுவாக நிழற்படமெடுத்துக் கொண்டோம். அங்கிருந்து செண்பகனூர் அருங்காட்சியகத்திற்கு சென்றோம். அங்கு பல்வகையான உயிரினங்களை பாடம் செய்து வைத்துள்ளனர். மேலும், அரிய நாணயங்கள், முதுமக்கள்தாழி, கற்பதுக்கைகளின் மரச்சிற்பங்களை கண்டோம்.

தீ

அங்கிருந்து கொடைக்கானல் சென்றோம். மாலை வேளையில் படகுகுழாம் இருந்த ஏரியை சுற்றி வந்தோம். மிக இரம்மியமாகயிருந்தது.  இதை கி.பி.1860ல் சர்.லிவேன்ச் என்ற ஆங்கிலேயர் தனக்காக கட்டியிருக்கிறார். அதற்குமுன் காட்டு எருமைகள் தண்ணீர் குடித்த ஓடைதான் பின் ஏரியாகியிருக்கிறது. சைக்கிளில் சுற்றுபவர்கள், குதிரைகளில் வலம் வருபவர்கள், மாங்காய் கீத்துகளையும், இனிப்பு சோளக்கருதுகளை விற்பவர்களையும், புதிய முகங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தது தனி சுகம்.

பூங்கா

மறுநாள் நிறைய இடங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருந்தோம். போக்குவரத்து நெரிசலால் எங்கும் செல்ல முடியவில்லை. அதனால் பிரையண்ட் பூங்காவில் கூடினோம். குழுவிளையாட்டுகள் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள உதவியது. கடைவீதிகளில் எல்லோரும் அங்கு தயாரிக்கப்படும் சாக்லேட், யூகலிப்டஸ் எண்ணெய், குளிராடைகளை வாங்கினர். மீண்டுமொருமுறை இதுபோல வர வேண்டுமென்ற உணர்வோடு அங்கிருந்து கிளம்பினோம். மதுரை வந்ததும் தாய் மடியைக் கண்ட குழந்தை போல நிம்மதியாக வீடு திரும்பினேன்.

சஞ்சிகை சிற்றிதழுக்காக எழுதப்பட்டது

பின்னூட்டங்கள்
  1. ramani சொல்கிறார்:

    அறியாத பல அரிய தகவல்களை
    தங்கள் பதிவின் முலம் அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  2. aekaanthan சொல்கிறார்:

    கொடைக்கானல் பற்றிய புதிய தகல்வல்கள் நிறைந்த பதிவு. கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தோரின் காலச்சுவடுகள் அங்கு காணப்படுகின்றன என்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. அரிய தகவல்கள், படங்களுக்கு நன்றி.-ஏகாந்தன் http://aekaanthan.wordpress.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s