பேரையூரில் பாண்டியர்கால மலைக்கோயில்

Posted: ஜூலை 1, 2014 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம்
குறிச்சொற்கள்:, ,

பரந்தவெளி

நாம் இவ்வுலகில் வாழ்வது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் ‘காத்திருத்தல்’ போன்றது…!

–    கலீல் கிப்ரான்

பேருந்தில் பயணிக்கையில் வழியில் தெரியும் மலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதன்மீது ஏறிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குத் தோன்றும். அந்த ஆசையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது பசுமைநடைப்பயணங்களே! மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பெரும்பாலான மலைகளுக்கு பசுமைநடைப்பயணக்குழுவோடு சென்றிருக்கிறேன்.

கோயில்

பேரையூர் மொட்டைமலை மீதுள்ள பழமையான சிவன் கோயிலுக்கு பசுமைநடையாக இம்முறை 29.06.2014 அன்று சென்றோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டமொம்மன் சிலைக்கருகில் அதிகாலை கூடினோம். அங்கிருந்து பேருந்தில் பேரையூர் சென்றோம். வெயில் கூடவே வந்தது.

மலையேற்றம்

தொலைவில் சிறிதாகத் தெரிந்த மலை அருகில் சென்றதும் மிக உயரமாகத் தெரிந்தது. மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. பிடித்து நடப்பதற்கு வாகாக இரும்பு கைபிடியும் உள்ளது. மலையில் ஏறும்பாதை செங்குத்தாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தளரச் செய்தது.

மலைகள்

சிவன்மலையிருந்து பார்க்கும்போது தெரிந்த பரந்துவிரிந்த வெளியும், மலைக்கு பின்னால் தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலைத்தொடரும் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.

ஒற்றைக்கருவறையும் சிறிய முன்மண்டபமும் கொண்ட பழமையான கோயில். கருவறையில் சிவலிங்கமும் முன்மண்டபத்தில் பிள்ளையாரும் இருந்தனர். கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி கொஞ்சம் சிதைந்திருந்தது.

நந்திக்கு அருகிலிருந்த காவல்தெய்வத்தின் சிலையின் கரங்களில் அம்பு போன்ற ஆயுதம் இருந்தது.

காவல்தெய்வம்

சுனை

மலையில் இரண்டு சுனைகள் இருந்தன. வெயில்காலத்தில் அதில் நீரும் அல்லிப்பூக்களும் இருந்தது ஆச்சர்யமளித்தது. இரண்டு சுனைகளுக்கும் படிக்கட்டுகள் சிறிதாக அமைக்கப்பட்டு மிக அழகாகயிருந்தது. சுனைக்கருகில் கன்னிமார் சிலையிருந்தது. கோயிலுக்கு பின்புறம் உள்ள பாறையில் முப்பதிற்கு மேற்பட்ட வரியில் வெட்டப்பட்ட கல்வெட்டு உள்ளது.

கன்னிமார்

கல்வெட்டு

முத்துக்கிருஷ்ணன்சூரியனுக்கு பயந்து கோயிலுக்கு பின்புறம் விழுந்த நிழலில் அமர்ந்தோம். பசுமைநடை அமைப்பாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் மலை குறித்த வரலாற்றுத் தகவல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சமாவது:

எனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது. இப்பகுதியிலுள்ள மலைகளிலெல்லாம் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். இந்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மைக்கு சான்றாகும். மலையில் உள்ள இந்த சிவன் கோயில் மல்லிகார்சுனர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1280) 27ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.

இக்கல்வெட்டின் மூலம் இந்த ஊரின் பழைய பெயர் கடுங்கோ மங்கலம் என அறியலாம். சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்குப் பின் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. அவர்களை முறியடித்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆவான். அவனது பெயரால் அமைந்த ஊராக இருக்கலாம். இந்தஊர் செங்குடி நாட்டுப் பிரிவுகளுள் அடங்கியிருக்கிறது. இவ்வூர் நிலங்களையும் குளத்தையும் முத்துடையார் விக்கிரமச்சிங்கத்தேவன் என்பவர் இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

மலையடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. முன்னர் ஒருமுறை பெய்த மலையின் போது ஆலம்பட்டி நீர்நிலையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்ல இயலாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் இங்கேயே காட்சியளித்தாக ஐதீகம். மேலே உள்ள மலையிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் தெரியும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகளைக் காண இங்கு வந்தபோது இப்போது இருப்பதைப் போன்று படிக்கட்டுகள் இல்லை. மிகவும் சிரமப்பட்டு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவரைப் போன்ற அறிஞர்கள் நம்முடன் பசுமைநடையில் பயணிப்பது நமக்கு சிறப்பாகும். தொல்லியல் துறையிலிருந்து மதுரை மாவட்டத்தொல்லியல் கையேடு போன்ற புத்தகங்களில் இதுபோன்ற இடங்களைக் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவே தனி.

மேலும், அதிகாலையில் இதுபோன்ற இடங்களுக்கு சீக்கிரம் வரவேண்டியதன் அவசியத்தையும், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கற்திட்டைகளைக் காணச் செல்வதற்கான ஒருநாள் பயண அறிவிப்பையும் கூறினார்.

Dargah

எல்லோரும் மலையை வெயிலோடு சுற்றிப்பார்த்தோம். மலையில் ஒரு தர்ஹாவும் இருந்தது. யாக்கோபு என்ற இஸ்லாமியப் பெரியவருக்கு எடுக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள். அதையும் பார்த்தோம். மெல்ல மலைமீதிருந்து கிறக்கத்தோடு இறங்கினோம். எல்லோருக்கும் எலுமிச்சைப் பழச்சாறு கொடுத்து தெம்பூட்டினர்.

மலையடிவாரம்

மேலப்பரங்கிரி முருகன் கோயிலில் கல்யாண முகூர்த்தம் என்பதால் நல்ல கூட்டம். உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. கோயிலுக்குள் இருந்த வளாகத்துக்குள் எல்லோரும் கூடி உணவருந்தினோம். அடுத்தமுறை இதைச்சுற்றியுள்ள மற்ற மலைகளுக்கும் வரவேண்டுமென்ற நினைவுடன் கிளம்பினோம்.

படங்கள் உதவி – க்ரூஸ் அந்தோணி ஹூபர்ட்

பின்னூட்டங்கள்
 1. மதுரக்காரன் சொல்கிறார்:

  நல்ல பதிவு சித்திரவீதிக்காரரே! இந்த முறை வர இயலவில்லை. ஆனாலும் உங்கள் பதிவின் மூலமும் ஹ்யூபர்ட்டின் படங்கள் மூலமும் மொட்டை மலை பார்த்து விட்டேன். நன்றி.

  • cheenakay சொல்கிறார்:

   அன்பின் சித்திர வீதிக்கார, அருமையான பயணம் – ஏற்கனவே அப்பகுதியில் உளள மலைகளீல் சுற்றித் திரிந்து மகிழ்ந்தவர் தானே ! இப்பொழுது செல்லும் போது இருமடங்கு மகிழ்ச்சியுடன் சுற்றி இருக்கலாம். கொடுத்து வைத்தவர்.

   படங்கள் அருமை – விளக்கமாக – சென்று வந்த பயணத்தினைப் பற்றிய பதிவு .எழுதப்பட்டுள்ளது. பாராட்டுகள் – நல்வாழ்த்துகள் சித்திர வீதிக்கார – நட்புடன் சீனா

 2. ரிஷி சொல்கிறார்:

  //எனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது.//

  எனக்கு சொந்த ஊர் பேரையூருக்கு அருகில் உள்ள S.M.அம்மாபட்டி. (சந்தையூர் பக்கத்தில் மேலப்பட்டி, அதன் அருகில் அம்மாபட்டி)

  உங்கள் ஊர்?

  நானும் இந்த மலைக்கு போயிருக்கிறேன். என் பெற்றோர் திருமணம் இந்தக் கோவிலில்தான் நடந்தது.

 3. Gnanasekar S சொல்கிறார்:

  நானும் பேரையூர் பக்கத்து ஊர்காரன்தான் எங்கள் ஊர் கூவலப்புரம். தங்கள் இடுகையை படிக்கும்போது தங்களுடன் பயனிப்பது போல் இருந்தது. மொட்டை மலையில் எங்கள் கால்படாத இடமே இல்லை என்று சொல்லலாம். பக்கத்தில் உள்ள மண்மலை கோவில் பக்கத்தில் உள்ள மலை எல்லா மலையிலும் ஏரி இறங்கியிருக்கிறோம். மலை மேல் உள்ள சுனை, கோவிலில் உள்ள சரவனப் பொய்கை அதில் பாறையில் உள்ள நீர் விழும் தூம்புவாவில் கோடைகாலத்தில் கூட தண்ணீர் வரும் அதன் சுவையே தனி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s