மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா

Posted: நவம்பர் 4, 2014 in நான்மாடக்கூடல், பகிர்வுகள், பார்வைகள்

blogersmeet

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்  
தான் வாட, வாடாத தன்மைத்தே – தென்னவன்  
நான்மாடக் கூடல் நகர்.  
– பரிபாடல்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. மற்ற ஊர்களில் நடைபெற்று வந்த வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் புத்தகக்கண்காட்சி எல்லாம் திருவிழாவானது மதுரையில்தான். நாள்தோறும் மதுரையில் திருவிழாதான்.  நான் வலைப்பதிவு எழுத வந்த கதையும், வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொண்டு மதுரை குறித்து பேசியதையும் குறித்த சிறுபதிவு.

வாசித்தலும், அலைதலும் தான் வாழ்க்கையாய் இருக்கிறது. நான்காம் வகுப்பு படிக்கையிலிருந்து நாட்குறிப்பேடு எழுதுகிறேன். வேண்டாத வேலையாக தோன்றி நடுநடுவே விட்டாலும் இன்று வரை நாட்குறிப்பேடு எழுதிக்கொண்டுதானிருக்கிறேன். புத்தக வாசிப்பு இளமையிலிருந்தே தொடர்கிறது. ஆனால், இணையத்தில் தமிழில் வாசிக்க இது போன்ற வலைதளங்கள் இருக்கிறது என்பதே 2009ல் தான் தெரியும். விகடன் வரவேற்பறையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளம் குறித்து வாசித்து பின் அவரது தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

மற்ற தளங்களை வாசித்த போது நாமும் எழுதலாமே என்று மனதுக்குள் கெவுளி அடித்தது. மதுரையையும், வாசித்ததையும் குறித்து பதிவு செய்ய வேண்டும் என்ற ஆவல் எனக்குத் தொற்றிக் கொண்டது. என்னுடைய கனவை சாத்தியமாக்கிய தமிழ்ச்செல்வ அண்ணனுக்குத்தான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். என்னுடைய பதிவுகளைப் படித்து தொடர்ந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி. 23.10.2010ல் சித்திரவீதிகள் என்ற பதிவோடு வலைப்பதிவு எழுதத் தொடங்கிய இந்த நாலாண்டுகளில் என் வாசிப்பும், பயணமும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறது.

தமிழ் வலைப்பதிவர் திருவிழாவில் மதுரை குறித்து பேச வேண்டுமென்று என்னிடம் சீனா அய்யாவும் அவரது துணைவியார் செல்விசங்கர் அம்மாவும் சொன்னார்கள். மதுரை குறித்து பேசுவது மகிழ்வான விசயம்தான். ஆனாலும், கிராமத்து பள்ளிநாட்களுக்குப் பிறகு எனக்கு மேடை வெகுதூரமாகிப் போனது. என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையில் சரியென்றிருந்தேன்.

26.10.2014 அன்று தெப்பக்குளத்தில் உள்ள கீதா நடன கோபால மந்திர் அரங்கில் தமிழ் வலைப்பதிவர் திருவிழா தொடங்கியது. தெப்பக்குளத்தில் பசுமைநடை முடிந்தவுடன் பசுமைநடை நண்பர்களுடன் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்டேன். தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. தமிழணங்குதான் அந்த அரங்கில் பலரையும் ஒருங்கிணைத்திருக்கிறது.

தெரிந்த வலைப்பதிவுலக நண்பர்களை சந்தித்தேன். புதிய நண்பர்களும் அறிமுகமானார்கள். சிலர் என்னுடைய பதிவுகளை வாசித்தேன் என்று சொன்னது மகிழ்வாகியிருந்தது. விழாவில் தருமி அய்யா, சீனா அய்யா, ரமணி அய்யா என மதுரையின் மூத்த பதிவர்கள் பேசினார்கள். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்வாசி பிரகாஷ், தமிழன் கோவிந்தராஜ் மற்றும் திண்டுக்கல் தனபாலன் அவர்களும் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள். தொழில்நுட்பப் பதிவர்களுக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்டது. மதுரை சரவணன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பசுமைநடை பயணத்தில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை எழுதிய பதிவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து காற்றின் சிற்பங்கள் என்ற நூல் தெப்பக்குளம் பசுமைநடையில் வெளியிடப்பட்டது. அதை தமிழ் வலைப்பதிவர் திருவிழாவிலும் வெளியிட்டு அந்நூல் அனைவருக்கும் இலவசமாய் வழங்கப்பட்டது. அச்சமயத்தில் மதுரை, தமிழ், பசுமைநடை குறித்து பேச எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. என்னை வாழ்த்தி செல்வி சங்கர் அம்மா அருமையாகப் பேசினார். அவரது வாழ்த்து எனக்கு பதட்டத்தைக் குறைத்து நம்பிக்கையை அளித்தது.

chithraveedhikkaranஎன்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே! – திருமந்திரம்
 
என்னை நன்றாக மதுரை காக்கிறது
தன்னை நன்றாகப் பதிவு செய்யுமாறே!

என்ற வரிகளுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லித் தொடங்கினேன். என்னைக் குறித்து அறிமுகத்தை ஓரிரு வார்த்தைகளில் முடித்துக்கொண்டு மதுரையின் தொன்மை, பரிபாடல், மதுரையில் உள்ள மலைகளின் வரலாறு, பசுமைநடை, திருவிழாக்கள், குடைவரைகள், மதுரையும் தமிழும் குறித்து ஐந்து நிமிடங்களுக்குள் பேசினேன். மதுரையின் பல பெயர்கள், மீனாட்சியம்மன் கோயில், மதுரையின் பன்முகத்தன்மை குறித்தெல்லாம் பேசணும் என்று நினைவில் இருந்தாலும் என்னையறியாமல் நன்றி சொல்லி முடித்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த சீனா அய்யாவிற்கும், மதுரை மற்றும் அனைத்து தமிழ் பதிவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

maduraivaasaganதமிழ் சிறப்பாக இருக்கும் வரை மதுரை இருக்கும் என்று பரிபாடல் சொல்கிறது. அதே போல மதுரை சிறப்பாக இருக்கும் வரை தமிழும் இருக்கும். இனி அகராதிகளில் மதுரை என்றால் தமிழ் என்றும் தமிழ் என்றால் மதுரை என்றும் சேர்த்துக் கொள்ளலாம் என்று பேசும்போது குறிப்பிட்டேன். நான் மதுரையையும், தமிழையும் தெய்வமாக வழிபடுபவன்.

எல்லோருக்கும் அருந்த குளிர்ந்த ‘மதுரைப்புகழ்’ ஜிகர்தண்டா கொடுத்தார்கள். பதிவர்கள் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நிகழ்வு தொடங்கியது. தாங்கள் எழுதும் பதிவுகள் குறித்து எல்லோரும் பேசினார்கள். இரத்னவேல் நடராஜன் அய்யாவைப் பார்த்தேன். ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து துணைவியாருடன் கலந்து கொண்டார். என்னுடைய பதிவுகளைப் படித்து மறுமொழியிட்டு அதை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்து கொள்வார். அன்றுதான் நேரடியாக சந்தித்தோம். திண்டுக்கல் தனபாலனையும் வெகுநாட்களுக்கு பிறகு பார்த்து பேசினேன். பதிவர்களின் நூல்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பத்திரிகை மற்றும் ஊடகத் தொடர்பை இன்றைய வானம் தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிருந்தார். திருமங்கலத்திலிருந்து நண்பர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது.

நெருங்கிய உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக மதுரை அலங்காநல்லூர் தாண்டி ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் மதியத்தோடு கிளம்பினேன். மதியத்திற்கு மேல் நடைபெற்ற விழா நிகழ்வுகளை மறுநாள் வலைப்பூக்களில் பார்த்தேன். தமிழ்முரசு மற்றும் தினகரன் நாளிதழ்களில் நான் பேசும்போது எடுத்த படம் வந்திருந்தது. தினகரன் நாளிதழ் குழுமத்திற்கு என் மனமார்ந்த நன்றி.

மதுரை உலகின் தொன்மையான நகரம் என்று கல்லூரி ஆண்டுவிழா மலரில் நான் எழுதிய கட்டுரையில் உள்ளதைத்தான் கொஞ்சம் பேசினேன். அந்தக் கட்டுரையைப் படத்தில் பார்க்கவும். அடுத்த பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில்.

படங்கள் உதவி – தினகரன் (நாளிதழ்), ரகுநாத், இளஞ்செழியன்

madurai

பின்னூட்டங்கள்
 1. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் கார,

  அன்றைய – மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா சிறப்புடன் நடை பெற்றது. அதிலும் உன்னுடைய பேச்சு அருமையிலும் அருமை. மிக மிக இரசித்தோம்.

  இன்னும் பல மேடைகளில் சிறப்புடன் பேசி பாராட்டுகள் பெற நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

 2. கலந்து கொண்டு சிறப்பித்ததில் மிக்க மகிழ்ச்சி…

  நன்றிகள்…

 3. ranjani135 சொல்கிறார்:

  மதுரையில் வலைப்பதிவர்கள் திருவிழா என்றவுடன் எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது. உங்களையும் டாக்டர் ராஜப்பாவையும் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்தேன். வரமுடியாமல் போயிற்று.

  உங்களின் பதிவு மூலம் உங்கள் பேச்சை கேட்டது போலவே இருந்தது.

 4. தி.தமிழ் இளங்கோ சொல்கிறார்:

  மதுரையில் நடந்த வலைப் பதிவர் நிகழ்ச்சியின் முற்பகல் நிகழ்ச்சிகளை செய்தித்தாள் தகவலோடு அருமையாகச் சொன்னீர்கள்! பகிர்வினுக்கு நன்றி அய்யா! உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

 5. rathnavelnatarajan சொல்கிறார்:

  மதுரையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா = சித்திரவீதிக்காரன் = அருமையான பதிவு. நிறைய காலங்கள் உங்கள் பதிவு படிப்பது விட்டுப் போய் விட்டது. உங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு சித்திரவீதிக்காரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s