ஞாயிற்றுக்கிழமை யாராவது பள்ளிக்குச் செல்வார்களா? அதுவும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிப்பவர்களே அன்று பள்ளிக்கு வரச் சொன்னால் சங்கடத்தோடுதான் வருவார்கள். ஆனால், மதுரையில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெருங்கூட்டமே பள்ளிக்கு விருப்பத்தோடு சென்று வருகின்றனர். ஒவ்வொரு வகுப்பையும் தவறவிடக்கூடாதென கங்கணம் கட்டிக்கொண்டு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.
கடந்த நான்கு வருடங்களாக நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு பசுமைநடை குழுவினர் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். அதிலும் இன்றைய பள்ளிகளுக்கெல்லாம் ஆதிப்பள்ளியான சமணப்பள்ளிகள் உள்ள மலைகளை நோக்கி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். வரலாற்று வகுப்புகள் பெரும்பாலானவர்களுக்கு அலுப்பூட்டலாம். தொன்மையான தலங்களில் அந்த வரலாற்றை கேட்கும் போது அனைவரும் ஆர்வமாகிவிடுகிறார்கள்.
சமணத்துறவிகள் தாங்கள் தங்கியிருந்த மலைக்குகைத்தளங்களில் அனைவருக்கும் கல்வி கற்றுத் தந்ததால் படிக்கும் இடங்களுக்கும் பள்ளி என்ற பெயர் வந்தது. மீனாட்சிபுரம் – மாங்குளம் ஓவாமலையிலுள்ள சமணப்பள்ளிக்கு 23.11.14 அன்று பசுமைநடையாக கிட்டத்தட்ட இருநூறுபேர் சென்றிருந்தோம். மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து குழுவாகச் சென்றோம். மலைகளின் அரசனான யானைமலையைப் பார்த்து வணக்கத்தைச் செலுத்தி வழியிலுள்ள வயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.
முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியதாலும், வைகையில் பாசனத்திற்கு நீர் வந்ததாலும் மதுரையில் பெரியளவில் மழை பெய்யாவிட்டாலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்கள் பச்சைப்பட்டு உடுத்தி அழகரைப் போல அழகாகயிருக்கிறது. ஓடை, கண்மாய், கால்வாய் என எங்கும் நீர்க்கோலம்.
சிலுசிலுவெனக் காற்று, அதற்கேற்ப அசைந்தாடும் இளங்கதிர்கள், சலசலக்கும் நீரோடை என சிட்டம்பட்டி பிரிவு திரும்பியதிலிருந்து மீனாட்சிபுரம் வரை வழிநெடுக இயற்கை செழித்து நிற்கிறது. பனைமரங்கள் அடந்திருக்க கண்மாய் பெருகி நிற்க அடிக்கிற காற்று ஆளையே தூக்குகிறது. கூட்டங்கூட்டமாய் வண்டியில் வருபவர்களைப் பார்த்து வியக்கும் கிராமத்து மக்கள். வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கடந்து கொண்டிருந்தேன். மலையெல்லாம் அறுக்குறாங்ங. ஆனா, ரோடெல்லாம் குண்டும் குழியுமாயிருக்கு.
மீனாட்சிபுரம் ஊரை அடைந்தோம். இருசக்கர வாகனங்களையும், மகிழுந்தையும் ஓரங்கட்டி விட்டு காலாற அந்த ஊர் இளவட்டங்கள் வழிகாட்ட மலையை நோக்கி நடந்தோம். வருபவர்களை வரவேற்கும் திண்ணைகள், ஓடு அல்லது கூரையென கிராமத்து வீடுகள் எளிமையானவை. மலைக்கு பின்னிருந்து சூரியன் மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். மலைக்குச் செல்லும் வழியில் மழையால் செடிகள் அடர்ந்து முளைத்திருந்தன. படிகள் அழகாய் செதுக்கப்பட்டிருந்தன.
மலையில் பாறையில் நரந்தம்புற்கள் நிறைய வளர்ந்திருந்தது. பாறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில் அழகாய் காட்சி தந்தது. மலைமீது சமதளப்பகுதியில் அனைவரும் சற்று ஓய்வெடுத்தோம். நீளமான மலை. சமதளத்திற்கு அருகில் பழமையான செங்கல் கட்டிடத்தின் அடிப்பகுதி மட்டும் எஞ்சியுள்ளதைப் பார்த்தோம். அங்கிருந்து சமணப்படுகையிருந்த இடத்தை நோக்கி நடந்தோம்.
எல்லோரும் அங்கு குழுவாக அமர வரலாற்றுப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் உரையாற்றினார். அந்த உரையைக் கேட்பதற்கு பசுமைநடைப் பயணிகளைப் போல ஏராளமான தும்பிகளும் வந்தன. சமணம் தமிழ்நாட்டிற்கு வந்த கதை, சமணத்தின் கொள்கைகள், மதுரையில் சமணம் செழித்த வரலாறு, மீனாட்சிபுரம் மாங்குளம் மலையின் தொன்மை, கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட காலம், கல்வெட்டுகளில் உள்ள செய்திகள் என ஒவ்வொன்றையும் மிகத் தெளிவாக கூறினார். அதன்பின் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் இதுபோன்ற இடங்களை நோக்கி நாம் வரவேண்டியதன் அவசியத்தையும், நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டியதையும் குறிப்பிட்டார். பாண்டிச்சேரியில் வசிக்கும் ஶ்ரீதரன் அவர்கள் தன்னுடன் வந்தவாசிப் பகுதியிலுள்ள தமிழ்ச்சமணர்கள் கொஞ்சப்பேரை இந்நடைக்கு அழைத்து வந்திருந்தார். அங்கிருந்த தமிழ்பிராமிக் கல்வெட்டுக்களைப் பார்த்துவிட்டு இறங்கத் தொடங்கினோம்.
எழுத்தாளர் அர்ஷியாவுடன் பேசிக்கொண்டே மலையிலிருந்து கீழே இறங்கினேன். சமீபத்திய வாசிப்பு, மலைகளில் ஓரிரவு தங்கிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை, நரந்தம்புல் என எங்கள் உரையாடல் நீண்டு கொண்டேபோனது. மிளிர்கல் நாவலில் ஓரிரவு அந்தக்குழு இம்மலையில் தங்குவதாக கதையில் வரும்.
மலையிலிருந்து இறங்கி ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்தோம். அங்கிருந்த பாட்டி எங்களிடம் எப்படிய்யா இந்த பாதையில வந்தீங்க? ரோடெல்லாம் ஒக்குடச் சொல்லுங்கய்யா? என சொன்னாங்க. நான் அந்தப் பாட்டியிடம் டவுனுக்குள்ளையே ரோடெல்லாம் பேந்துதான் கிடக்கு என என்னால் ஒன்றும் செய்ய முடியாத கையறுநிலையை வேறுமாதிரி சொன்னேன்.
எல்லோரும் வர அங்கிருந்த நாடகமேடையில் ஒரு குழுவும், சிறுதோப்பில் ஒரு குழுவுமாக அமர அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மாங்குளத்தைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் வடை மற்றும் காபி எல்லோருக்கும் வழங்கினார். மதுர வரலாறு மற்றும் புத்தக விற்பனை செய்தோம்.
அங்கிருந்து மாங்குளம் வழியாக அழகர்கோயில் சாலையை அடைந்தோம். வழிநெடுக விவசாய வேலைகள் நடந்து கொண்டிருந்தது. ஞாயிறன்று ஓய்வெடுப்போம் என எண்ணாமல் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர்.
நிறைய இடங்களில் நெல், சில இடங்களில் யானைக்கரும்பு போட்டிருந்தனர். பார்க்க மிக அழகாகயிருந்தது. என்னுடன் வந்த சகோதரன் அதையெல்லாம் நிழற்படமெடுத்துக் கொண்டே வந்தான். அழகர்கோயில் சாலையிலிருந்து அலங்காநல்லூர் வழியாக இயற்கையெழிலை பார்த்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.
நன்றி – படங்கள் உதவி – அருண், பினைகாஸ், பிரசன்னா
தொடர்புடைய பதிவு: பாண்டியனின் சமணப்பள்ளியில்
நல்ல பதிவு…